Arjuna saw Indra | Vana Parva - Section 37 | Mahabharata In Tamil
(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரன் அர்ஜுனனுக்கு பிரதிஸ்மிருதியை உபதேசித்து, அனைத்து ஆயுதங்களையும் பெறுவதற்காக வடக்கு நோக்கி அனுப்புதல்; அர்ஜுனன் இந்திரனை அடைவது; இந்திரன் அர்ஜுனனை சிவனை நோக்கித் தவம் இருக்குமாறு ஆலோசனை கூறுவது...
வைசம்பாயனர் சொன்னார், "சிறிது நேரம் கழித்து, நீதிமானான யுதிஷ்டிரன் முனிவரின் {வியாசரின்} கட்டளையை நினைவுகூர்ந்து, மனிதர்களில் காளையும், பெரும் ஞானியுமான அர்ஜுனனைத் தனிமையில் அழைத்தான். மலர்ந்த முகத்துடன் அர்ஜுனனின் கரங்களைப் பற்றிக்கொண்ட எதிரிகளைத் தண்டிக்கும் அறம் சார்ந்த யுதிஷ்டிரன், சிறிது நேரம் சிந்தித்தப்பிறகு, தனிமையில் தனஞ்செயனிடம் {அர்ஜுனனிடம்} தெளிவான மென்மையான வார்த்தைகளால், "ஓ பாரதா {அர்ஜுனா}, மொத்த ஆயுத அறிவியலும் பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரிடம் இருக்கிறது. அவர்கள் அனைத்துவிதமான பிரம்ம, தேவ, மனித, வயவ்ய {வாயு வசிக்கும் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த [அல்லது] வாயு} ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்தும், அதை திரும்ப அழைப்பது குறித்தும் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} சமாதானப்படுத்தப்பட்டு, மதிக்கப்பட்டு, திருப்திசெய்யப்பட்டு, ஒரு குருவிடம் ஒருவன் நடந்து கொள்ளும் முறைப்படி நடத்தப்படுகிறார்கள். திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} தனது படை வீரர்கள் அனைவரிடமும் மிகவும் பாசத்துடன் நடந்து கொள்கிறான். அவனால் {துரியோதனனால்} அனைத்துத் தலைவர்களும் மதிக்கப்பட்டு, திருப்தி செய்து அவர்களிடம் மறு நன்மையை எதிர்பார்த்து இருக்கிறான். இப்படி அவனால் {துரியோதனனால்} மதிக்கப்பட்டவர்கள், தங்கள் பலத்தைப் {நமக்கு எதிராகப்} பயன்படுத்தத் தவறமாட்டார்கள்.
ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, கிராமங்கள், நகரங்கள், கானகங்கள், சுரங்கங்கள் மற்றும் கடல்களுடன் கூடிய மொத்த பூமியும் துரியோதனனின் ஆட்சிக்குட்பட்டு இருக்கிறது. நீ மட்டுமே எங்களது ஒரே அடைக்கலம். உன் மீது பெரும் பாரம் இருக்கிறது. ஆகையால், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, நான் இப்போது நீ என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். நான் கிருஷ்ண துவைபாயனரிடம் {வியாசரிடம்} இருந்து ஒரு அறிவியலைப் பெற்றிருக்கிறேன். அந்த அறிவியலை நீ பயன்படுத்தினால், முழு அண்டத்தின் அறிவும் உனக்கு வெளிப்படும். ஓ குழந்தாய், கவனமாக அந்த அறிவியலை என்னிடம் இருந்து பெற்று, குறித்த நேரத்தில் (அந்த அறிவியலின்) துணை கொண்டு தேவர்களின் கருணையைப் பெறு. ஓ பாரத குலத்தின் காளையே, கடுமையான தவத்திற்கு உன்னை நீ அர்ப்பணித்துக் கொள். ஓ குழந்தாய் {அர்ஜுனா}, வில், வாள், கவசம் ஆகியவற்றைப் பூண்டு, நோன்பு மற்றும் நல்ல உறுதிகளை மேற்கொண்டு, யாருக்கும் வழி கொடாமல் வடதிசை நோக்கிச் செல். ஓ தனஞ்செயா {அர்ஜுனா}, தேவ ஆயுதங்கள் அனைத்தும் இந்திரனிடம் இருக்கின்றன. விரித்திரன் மீதிருந்த பயத்தால் தேவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் பலங்கள் அனைத்தையும் சக்ரனிடம் {இந்திரனிடம்} கொடுத்தனர். ஒரே இடத்தில் கூடி இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் நீ பெறுவாய். நீ சக்ரனிடம் {இந்திரனிடம்} செல். அவன் {இந்திரன்}, அவனது அனைத்து ஆயுதங்களையும் உனக்குத் தருவான். வில்லை எடுத்துக் கொண்டு இன்றே புரந்தரனைக் {இந்திரனைக்} காண செல்" என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைச் சொன்ன மேன்மையுள்ள நீதிமானான யுதிஷ்டிரன், அந்த அறிவியலை அர்ஜுனனுக்குக் கொடுத்தான். உரிய சடங்குகளுடன், பேச்சு, உடல், மனம் ஆகியவற்றை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, தம்பிக்கு {அர்ஜுனனுக்கு} அந்த அறிவியலைக் கொடுத்த அண்ணன் {யுதிஷ்டிரன்}, தம்பியை {அர்ஜுனனை} உடனே செல்ல கட்டளையிட்டான். யுதிஷ்டிரனின் கட்டளையின் பேரில், பலம்வாய்ந்த கரம் கொண்ட அர்ஜுனன், காண்டீவத்தையும், வற்றாத ஆம்பறாத்தூணிகளையும் எடுத்துக் கொண்டு, கவசம், கையுறை, உடும்புத்தோலால் செய்யப்பட்ட விரலுறை ஆகியவற்றைப் பூண்டு, நெருப்பில் நெய்யூற்றி {அக்னி ஹோமம் செய்து}, அந்தணர்களுக்கு பரிசுகள் கொடுத்து அவர்களைத் தன்னை ஆசீர்வதிக்கச் செய்து, இந்திரனைக் காணும் நோக்கோடு (காம்யக வனத்தைவிட்டு) வெளியேறினான்.
வில்தாங்கிய அந்த வீரன் {அர்ஜுனன்}, வெளியேறும் போது உருக்கத்துடன் பெருமூச்சு விட்டபடி, திருதராஷ்டிரன் மகன்களுக்கு மரணத்தைக் கொடுக்க மேல்நோக்கிப் பார்த்தான். குந்தியின் மகன் {அர்ஜுனன்} ஆயுதந்தரித்து வெளிக்கிளம்புவதைக் கண்ட அந்தணர்களும், சித்தர்களும், அரூபமான ஆவிகளும் அவனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீ விரும்பியதை விரைவில் அடைவாய்" என்றனர். அந்தணர்கள் தங்கள் ஆசீர்வாதங்களைச் சொல்லி, "நீ கொண்டிருக்கும் நோக்கத்தை அடைவாய். வெற்றி உண்மையில் உனதாகட்டும்" என்றனர்.
சால மரம் போன்ற பருமனான தொடைகள் கொண்ட வீரனான அர்ஜுனன், அனைவரின் இதயங்களையும் கவர்ந்து செல்வதைக் கண்ட கிருஷ்ணை {திரௌபதி} அவனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ வலுத்த கரம் கொண்டவரே {அர்ஜுனரே}, உம்மைப் பெற்ற போது குந்தி என்னவெல்லாம் விரும்பினாளோ, நீர் என்னவெல்லாம் விரும்புகிறீரோ அவற்றை எல்லாம் சாதியும். ஓ தனஞ்செயரே {அர்ஜுனரே}, நாம் யாரும் இனி எப்போதும் க்ஷத்திரிய குலத்தில் பிறவாதிருப்போமாக. பிச்சையெடுத்து வாழும் அந்தணர்களை நான் எப்போதும் வணங்கி வருகிறேன். இளவரசர்களின் சபையில் என்னைக் கண்ட இழிந்த துரியோதனன் என்னை மாடு என்று சொல்லி பரிகரித்தது எனக்கு பெரும் துயரத்தைக் கொடுக்கிறது. இதையும் தவிர்த்து அவன் {துரியோதனன்} பல கடுஞ்சொற்களை அந்தச் சபையில் வைத்து சொன்னான். நான் இதுவரை உணர்ந்த அவமானங்களைவிட, உம்மைப் பிரியும் இந்த சோகம் பெரிதாக இருக்கிறது. நீர் இல்லாத போது, நிச்சயமாக உமது சகோதரர்கள் மணிக்கணக்காக உமது வீரச் சாகசங்களையே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனரே}, நீ வெகு காலத்திற்கு வெளியே இருந்துவிட்டால், எங்களுக்கு எந்த இன்பமும் செல்வமும் கிடையாது. அப்படிக் கிடைத்தாலும் அது எங்களுக்குச் சுவை தராது. ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனரே}, நமது செழுமை, நமது துன்பம், வாழ்வும் மரணமும், நமது நாடு, செழிப்பு ஆகியவை அனைத்தும் உம்மை நம்பியே இருக்கின்றன. ஓ பாரதரே {அர்ஜுனரே}, வெற்றி உமதாகட்டும் என்று நான் உம்மை வாழ்த்துகிறேன். ஓ பாவமற்றவரே, இப்போது நீர் செய்யப்போகும் காரியத்தால் பலம் நிறைந்த எதிரிகளைக்கூட உம்மால் எதிர்க்க முடியும். ஓ பெரும் பலம் உடையவரே, வெற்றியை அடைய விரைவாகச் செல்லும். ஆபத்துகள் உமைத்தாக்காதிருக்கட்டும். நான் தத்ரியையும் {ஆதித்யர்களில் ஒருவன் [ஆரோக்கியத்திற்கானவன்]} விதத்ரியையும் {துர்கையையும்} வணங்குகிறேன். நாம் உம்மை ஆசீர்வதிக்கிறேன் {I bless thee}. செழிப்பு உமதாகட்டும். ஓ தனஞ்செயரே {அர்ஜுனரே}, நீர் எப்போதும் உமது அண்ணனை வழிபட்டு, அவரது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிவதால், ஹ்ரீ, ஸ்ரீ, கீர்த்தி, தித்ரி, புஷ்டி, உமை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உமது வழியில் உம்மைக் காப்பார்கள். ஓ பாரத குலத்தின் காளையே {அர்ஜுனரே}, நான், வசுக்களையும், ருத்திரர்களையும், ஆதித்தியர்களையும், மணிலர்களையும், விஸ்வதேவர்களையும், சத்யர்களையும் உமது நன்மைக்காக வழிபடுவேன். ஓ பாரதரே {அர்ஜுனரே}, வானம், நிலம், சொர்க்கம் ஆகியவற்றில் இருக்கும் தொல்லை கொடுக்கும் ஆவிகளிடம் இருந்தும் மற்ற பல ஆவிகளிடமிருந்தும் பாதுகாப்பாக இரும்" என்று சொன்னாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "யக்ஞசேனனின் {துருபதனின்} மகளான கிருஷ்ணை {திரௌபதி} ஆசீர்வாதங்களைக் கூறி நிறுத்திக் கொண்டாள். பாண்டுவின் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட மகன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களை வலம் வந்து, தௌமியரை வலம் வந்து, தனது அழகான வில்லை எடுத்துக் கொண்டு கிளம்பினான். இந்திரனைக் காணும் ஆவலால் சென்று கொண்டிருந்த பெரும் சக்தியும் வீரமும் கொண்ட அர்ஜுனன் சென்ற வழியை விட்டு அனைத்து உயிரினமும் கிளம்பத் தொடங்கின.
அந்த எதிரிகளைக் கொல்பவன் தவசிகள் வசித்த பல மலைகளைக் கடந்து, தேவர்கள் ஓய்வெடுக்கும் புனிதமான இமய மலையை அடைந்தான். தவ நோன்புகளின் தொடர்ச்சியாக, காற்றைப் போல, மனோ வேகத்தைக் கொடையாகக் கொண்ட அந்த உயர் ஆன்மா {அர்ஜுனன்}, ஒரே நாளில் அந்த புனிதமான மலையை அடைந்தான். இமய மலையையும், கந்தமாதனாவையும் கடந்து, பல சமமற்ற ஆபத்தான பகுதிகளை, இரவு பகல் பாராமல், களைப்படையாமல் கடந்து சென்றான். இந்திரகீலத்தை {மலை} அடைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்} சிறிது நேரம் தங்கினான்.
அங்கே அவன் {அர்ஜுனன்} வானத்தில் இருந்து "நில்!" என்ற ஒரு குரலைக் கேட்டான். அக்குரலைக் கேட்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} சுற்றிலும் தனது பார்வையைச் செலுத்தினான். வலக்கையின் திறனை இடக்கையிலும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட அர்ஜுனன், தனக்கு எதிரே மர நிழலில் பிரம்மாவின் பிரகாசத்துடன் பழுப்பு மஞ்சள் நிறத்தில் {of tawny colour}, சடாமுடியும் மெலிதான உடலுடன் ஒரு தவசி நிற்பதைக் கண்டான். அப்படி அர்ஜுனனை நிறுத்திய அந்த வலிமைவாய்ந்த தவசி அவனிடம், "வில், அம்புகளுடனும், கவசத்துடனும், வாள் உறை மற்றும் கையுறையுடனும் க்ஷத்திரிய வகைக்குரிய குறிகளுடன் இருக்கும் நீ யார் குழந்தாய்? இங்கே ஆயுதங்களுக்கான தேவை இல்லை. இந்த இடம், கோபமோ இன்பமோ அற்று தவ நோன்புகளுக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் அமைதியான அந்தணர்களின் வசிப்பிடமாகும். இங்கே எந்த விதமான சச்சரவும் இல்லாததால், வில்லின் அவசியம் இங்கு இல்லை. ஆகையால், ஓ குழந்தாய், உனது வில்லைத் தூக்கி எறி. நீ இங்கு வந்த ஒரே காரணத்திலேயே வாழ்க்கையின் புனித நிலையை அடைந்துவிட்டாய். ஓ வீரனே, உன்போன்ற வீரமும் சக்தியும் கொண்ட மனிதர்கள் யாரும் இல்லை" என்றார். இப்படியே அந்த அந்தணர் பலமுறை புன்னகை கொண்ட முகத்துடன் அர்ஜுனனை வலியுறுத்தினார். ஆனால் தனது காரியத்தில் உறுதியாய் இருந்த அர்ஜுனனை அவரால் அசைக்க முடியவில்லை.
இதைக்கண்ட அந்த மறுபிறப்பாளர் {அந்தணர்}, இதயத்தில் மகிழ்ந்து, அர்ஜுனனிடம் மீண்டும், "ஓ எதிரிகளைக் கொல்பவனே, நீ அருளப்பட்டிரு! நானே சக்ரன் {இந்திரன்}, நீ விரும்பும் வரத்தை என்னிடம் கேள்" என்றார். இப்படிச் சொல்லப்பட்ட குரு குலத்தை நிலை நிறுத்துபவனான வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிரம் தாழ்த்தி, கைகளைக் கூப்பி, அந்த ஆயிரம் கண் உடையவனிடம் {இந்திரனிடம்}, "ஓ சிறப்பு மிக்கவரே, நான் அனைத்து ஆயுதங்களையும் உம்மிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். இதுவே எனது விருப்பத்திற்குரிய பொருள்; இந்த வரத்தை எனக்கு அருளும்" என்று கேட்டான். அந்த தேவர்களின் தலைவன் {இந்திரன்}, சிரித்துக் கொண்டே, அவனிடம் {அர்ஜுனனிடம்} மகிழ்ச்சியாக, "ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, நீ இந்த இடத்தை அடைந்த பிறகு, ஆயுதங்களுக்கான தேவை என்ன இருக்கிறது? நீ ஏற்கனவே வாழ்க்கையின் புனித நிலையை அடைந்து விட்டாய். நீ விரும்பும் அருள் நிறைந்த உலகங்களைக் கேள்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆயிரம் கண்ணுடையவனிடம் {இந்திரனிடம்}, "அருள் நிறைந்த உலகங்களையும், இன்பம் நுகர் பொருட்களையும், தெய்வீக உலகங்களையும் நான் விரும்பவில்லை. ஓ தேவர்கள் தலைவா {இந்திரா}, அனைத்து தேவர்களின் செழிப்பை நான் விரும்பவில்லை. எனது சகோதரர்களை கானகத்தில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். பகைவர்களைப் பழிதீர்க்காமல், அனைத்து உலகங்களில் அனைத்து காலங்களிலும் அழியா பழியை அடைவேன். மகிழ்ச்சியைப் பற்றிய இந்தப் பேச்சு எதற்கு?" என்று கேட்டான். இப்படிச் சொல்லப்பட்ட அனைத்து உலகங்களாலும் வழிபடப்படுபவனான விரித்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, மென்மையான வார்த்தைகளால் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைச்} சமாதானப் படுத்த எண்ணி, "நீ எப்போது அனைத்து உயிரினங்களின் தலைவனான திரிசூலம் தாங்கும், முக்கண் சிவனைக் காண்கிறாயோ, ஓ குழந்தாய், அப்போது, நான் உனக்கு அனைத்து தேவ ஆயுதங்களையும் தருகிறேன். ஆகையால், தேவர்களில் உயர்ந்த தெய்வத்தைப் பார்க்கும் தகுதியைப் பெற முயற்சி செய். அப்படி அவரை நீ கண்ட பிறகுதான், ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீ உனது அனைத்து விருப்பங்களையும் அடைய முடியும்" என்றான். பல்குனனிடம் {அர்ஜுனனிடம்} இப்படிச் சொன்ன சக்ரன் {இந்திரன்} உடனே மறைந்து போனான். தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அர்ஜுனன் அதே இடத்தில் தங்கினான்.
******************அர்ஜுனாபிகமன பர்வம் முற்றிற்று******************
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.