Shiva clasped Arjuna | Vana Parva - Section 39 | Mahabharata In Tamil
(கைராத பர்வத் தொடர்ச்சி)
சிவன் வேடனாக வந்து அர்ஜுனனுடன் மோதுவது; அர்ஜுனன் சிவனிடம் தோற்பது; அர்ஜுனன் செய்த துதியால் மகிழ்ந்த சிவன் அவனைத் தேற்றுவது...
வைசம்பாயனர் சொன்னார், "அந்த சிறப்புமிக்க தவசிகள் அனைவரும் சென்ற பிறகு, பிநாகத்தைத் தாங்குபவனும், பாவங்களை அழிப்பவனுமான சிறப்புமிகுந்த ஹரன் {சிவன்}, பெரும் உருவமும் இரண்டாவது மேருவைப் போன்ற தீரமும், தங்க மரம் போன்று ஒளிவீசும் வேடனின் {கிராத = வேடன்} உருவெடுத்து, கைகளில் அழகான வில்லையும், கடும் விஷம் கொண்ட பாம்புகள் போலிருக்கும் பல கணைகளையும் எடுத்துக் கொண்டு, தீ போன்ற உருவத்துடன் இமயத்தின் மார்புக்கு கீழிறங்கி வந்தான். அந்த அழகான தேவர்களுக்குத் தேவன் {சிவன்}, வேடுவப் பெண்ணுரு கொண்டிருந்த உமையுடனும், பலவிதமான உருவங்களிலும், ஆடைகளிலும் இருந்த மகிழ்ச்சி பொங்கும் பூதங்களுடனும், வேடுவ ஆடைகள் அணிந்த ஆயிரக்கணக்கான பெண்களுடனும் வந்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படிப்பட்ட துணைகளுடன் தேவர்களுக்குத் தேவன் {சிவன்} வந்ததன் தொடர்ச்சியாக, திடீரென அந்தப் பகுதி முழுவதும் அழகானது. விரைவில் அந்த இடம் முழுவதும் பவித்திரமான அமைதி பரவியது. நீரூற்றுகள், நீரோடைகள் மற்றும் பறவைகளின் ஒலிகள் சட்டென நின்றன.
தேவர்களுக்குத் தேவன் {சிவன்} பழியில்லா செயல் புரியும் பிருதையின் {குந்தியின்} மகனை அணுகியபோது, அங்கே பன்றி வடிவில் இருந்த மூகன் என்ற தானவன் {அசுரன்} அர்ஜுனனைக் கொல்ல முயற்சிக்கும் அற்புதமான காட்சியைக் கண்டான். தன்னைக் கொல்ல முனையும் எதிரியைக் கண்ட பல்குனன் {அர்ஜுனன்}, காண்டீவத்தையும், கடும் விஷம் கொண்ட பாம்புகள் போன்ற கணைகளையும் எடுத்தான். தனது வில்லின் நாணைச் சுண்டிவிட்டு, அந்த நாணொலியால் அந்தச் சூழ்நிலையை நிறைத்து அந்த பன்றியிடம், "நான் இங்கே வந்து உனக்கு எந்தக் காயத்தையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும் நீ என்னைக் கொல்ல முயற்சிக்கிறாய். ஆகையால், நான் நிச்சயம் உன்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன்" என்றான் {அர்ஜுனன்}.
வில்லை உறுதியாகப் பிடித்திருக்கும் பல்குனன் {அர்ஜுனன்}, அந்தப் பன்றியைக் கொல்ல எத்தனிக்கும்போது, வேடன் உருவில் இருந்த சங்கரன் {சிவன்} திடீரென அவனைத் {அர்ஜுனனைத்} தடுத்து, "இந்திரகீல மலையைப் போன்ற நிறத்தில் இருக்கும் இந்தப் பன்றியை நானே முதலில் குறி வைத்தேன்" என்றான். இருப்பினும் இவ்வார்த்தைகளை மதிக்காத பல்குனன் {அர்ஜுனன்}, அந்தப் பன்றியை அடித்தான். பிரகாசத்துடன் இருந்த வேடனும் நெருப்பைப் போன்றதும், இடியைப் போன்றதுமான தனது கணையை அதே பொருளின் {பன்றியின்} மீது அடித்தான். இருவராலும் அடிக்கப்பட்ட கணைகள் ஒரே நேரத்தில், மூகனின் {பன்றி உருவில் இருந்த அசுரனின்} பரந்த மேனியில் கடுமையாகத் தைத்தன. அந்த இரு கணைகளும், இந்திரனின் இடியும் {வஜ்ராயுதமும்}, மேகங்களில் உள்ள இடியும் சேர்ந்து மலையின் மார்பில் விழுவது போன்று பெரும் சத்தத்துடன் அந்தப் பன்றியின் மேல் விழுந்தன. பல கணைகளை ஒத்த அந்த எரியும் வாய் கொண்ட பாம்புகள் போன்ற இரு கணைகளின் தாக்கத்தால் மூகன் {பன்றி உருவில் இருந்த அசுரன்} தனது உயிரை விட்டு, மீண்டும் ராட்சச உரு எடுத்தான்.
எதிரிகளைக் கொல்லும் ஜிஷ்ணு {அர்ஜுனன்}, தேவனைப் போன்ற பிரகாசத்துடனும், வேடுவ உடையுடனும், பல பெண்களுடனும் இருந்த அந்த மனிதனைத் {சிவனைத்} தன் முன் கண்டான். அவனைக் கண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் புன்னகை பூத்தவாறு, "பெண்கள் சூழ தனிமையில் இந்தக் கானகத்தில் சுற்றித்திரியும் நீ யார்? தங்கத்தைப் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் நீ, இந்தப் பயங்கரமான கானகத்தைக் கண்டு அஞ்சவில்லையா? என்னைக் கொல்லும் நோக்கோடு வந்த இந்த ராட்சசனை நானே முதலில் குறி வைத்தேன். என்னால் முதலில் குறிபார்க்கப்பட்ட பன்றியை நீ ஏன் அடித்தாய்? இதன் காரணமாக, நீ என்னிடம் இருந்து உயிருடன் தப்ப முடியாது. என்னிடம் நீ நடந்து கொண்ட விதம் துரத்தல் சடங்கின் படி இல்லை {வேட்டை தர்மத்தின்படி இல்லை}. ஆகையால், ஓ மலைவாசியே, நான் உனது உயிரை எடுப்பேன்" என்றான் {அர்ஜுனன்}.
பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்த வேடன் {வேடன் உருவில் இருந்த சிவன்}, புன்னகைத்தபடியே, இடது கையால் தனது வில்லைத் தாங்கி, மென்மையான வார்த்தைகளால், "ஓ வீரனே, நீ என்னைக் குறித்து கவலைப்படாதே. கானகவாசிகளான எங்களுக்கு இந்தக் கானக நிலமே சரியான வசிப்பிடம். உன்னை மதிக்கும் அதே வேளையில், உன்னை ஒரு கேள்வியும் கேட்கிறேன். இவ்வளவு சிரமங்களுக்கு இடையில் நீ ஏன் இந்த இடத்தை உனது வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்தாய். ஓ தவசியே, மிருகங்கள் நிறைந்த இந்தக் கானகமே எங்கள் வீடு. ஆனால், மென்மையாகவும், வசதியாகவும் வளர்க்கப்பட்டு நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் நீ, ஏன் இந்தத் தனிமையான பகுதியில் தனியாக வசிக்கிறாய்?" என்று கேட்டான் {வேடன் உருவில் இருக்கும் சிவன்}.
அர்ஜுனன் சொன்னான், "காண்டீவத்தையும், நெருப்பு போன்ற ஒளிவீசும் கணைகளையும் நம்பியே நான் இந்தப் பெரும் கானகத்தில் இரண்டாவது பாவகி {அக்னி} போல வாழ்கிறேன். மிருக உரு கொண்டு வந்த இந்தக் கொடூரமான ராட்சசன் என்னால் எப்படிக் கொல்லப்பட்டான் என்பதைக் கண்டாய்" என்றான். அதற்கு அந்த வேடன் {சிவன்}, "இந்த ராட்சசன், எனது வில்லில் இருந்து அடிக்கப்பட்ட கணையாலேயே கொல்லப்பட்டு என்னால் யமனுலகு அனுப்பப்பட்டான். அவன் என்னாலேயே முதலில் குறிவைக்கப்பட்டான். எனது அடியாலேயே அவன் {ராட்சசன் மூகன்} உயிரும் பிரிந்தது. உனது பலத்தில் கர்வம் கொண்டு, உனது சொந்த தவறுகளுக்காக மற்றவர்களைக் குறை சொல்கிறாய். ஆகையால், ஓ இழிந்தவனே, உனது குறைக்காக நீ என்னிடம் இருந்து உயிருடன் தப்ப மாட்டாய். அப்படியே நில். நான் உன் மீது வஜ்ரத்தைப் போன்ற கணைகளை அடிக்கிறேன். நீயும் உனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, உனது கணைகளை என் மீது அடிக்க முயற்சி செய்" என்றான் {வேடன் உருவில் இருந்த சிவன்}.
வேடனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன் மிகவும் கோபம் கொண்டு கணைகளால் அவனை {சிவனைத்} தாக்கினான். இருப்பினும் அந்த வேடன் {சிவன்} மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அந்தக் கணைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக, "இழிந்தவனே, இழிந்தவனே, எனது {முக்கிய} உள்ளுறுப்புகளைத் துளைக்குமாறு உனது சிறந்த கணைகளை என் மீது அடி" என்றான் {சிவன்}. இப்படிச்சொல்லப்பட்ட அர்ஜுனன் தனது கணைகளை மழையெனப் பொழிந்தான். இருவரும் மிகுந்த கோபமடைந்து கடும் போரில் ஈடுபட்டு, ஒருவர் மீது ஒருவர் கடும் விஷம் கொண்ட பாம்புகள் போன்ற கணைகளை மழையாகப் பொழிந்தனர். பிறகு அர்ஜுனன் வேடன் மீது கணைமழையை நன்றாகப் பொழிந்தான். இருப்பினும் சங்கரன் {சிவன்}, அந்தப் பெரு மழையை மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் தாங்கிக் கொண்டான். பிநாகத்தைத் தாங்குபவன் {சிவன்}, அந்தக் கணைமழையை சிறிது நேரம் தாங்கிக் கொண்டு, காயமற்று அசையாத மலையென நின்றான்.
தனது கணைமழை பலனற்றுப் போவதைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, மிகவும் வியந்து, திரும்பத் திரும்ப, "அற்புதம், அற்புதம், ஐயோ நுண்மையான உறுப்புகள் கொண்ட இந்த மலைவாசி, நடுங்காமல் காண்டீவத்தில் இருந்து செல்லும் கணைகளைத் தாங்கிக் கொள்கிறானே. யார் இவன்? இவன் ருத்திரனா? அல்லது வேறு ஏதாவது தேவன், அல்லது யக்ஷன், அல்லது அசுரனாக இருப்பானா? சில நேரங்களில் தேவர்களும் இமயத்தின் உயரங்களுக்கு இறங்கி வருவார்களே. பிநாகத்தைத் தாங்கியிருக்கும் தேவனைத் {சிவனைத்} தவிர, வேறு யாராலும், என்னால் அடிக்கப்பட்டு காண்டீவத்தில் இருந்து தொடர்ச்சியாக புறப்படும் ஆயிரக்கணக்கான கணைகளைத் தாங்க முடியாதே. அவன் தேவனோ, யக்ஷனோ, ருத்திரனை {சிவனைத்} தவிர அவன் வேறு யாரோ, அது எப்படியிருந்தாலும், எனது கணைகள் மூலம் அவனை யமனுலகு அனுப்புவேன்" என்று நினைத்துக் கொண்டான். ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படி யோசித்த அர்ஜுனன் மகிழ்ச்சியான இதயத்துடன், சூரியனின் கதிர்களைப் போல ஒளிவீசும் நூற்றுக்கணக்கான கணைகளை அடித்தான். இருப்பினும், உலகங்களைப் படைத்த அந்த சிறப்புமிக்கவன், திரிசூலத்தைத் தாங்குபவன் {சிவன்}, கல்மழையைத் தாங்கிக் கொள்ளும் மலையைப் போல, கணைகளின் அந்தப் பெருமழையை மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் தாங்கிக் கொண்டான்.
விரைவில், பல்குனனின் கணைகள் தீர்ந்து போயின. இதைக் கவனித்த அர்ஜுனன் மிகவும் அச்சமுற்றான். அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, *காண்டவ வனம் எரிந்த போது வற்றாத அம்பறாத்தூணியைக் கொடுத்த சிறப்புமிகுந்த தேவனான அக்னியை நினைக்க ஆரம்பித்தான். அவன் {அர்ஜுனன்}, "ஐயோ, எனது கணைகள் தீர்ந்துவிட்டனவே. இனி எனது வில்லில் வைத்து எதை அடிப்பது? எனது கணைகளையெல்லாம் விழுங்கும் இந்த மனிதன் யார்? ஈட்டிகளால் கொல்லப்படும் யானைகளைப் போல, எனது வில்லின் நுனியை வைத்து அடித்து கொன்று, அவனை கதாயுதம் தாங்கும் யமனின் உலகத்திற்கு அனுப்பி வைப்பேன்" என்று எண்ணினான் {அர்ஜுனன்}.
பிறகு சிறப்பு வாய்ந்த அர்ஜுனன் தனது வில்லை எடுத்துக் கொண்டு, அந்த வேடனை தனது வில்லின் நாணினால் இழுத்து, இடியைப் போன்று இறங்கும் கடும் அடிகளை அடித்தான். எதிரி வீரர்களைக் கொல்லும் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, வில்லின் நுனியை வைத்து சண்டையிட்ட போது, அந்த மலைவாசி {சிவன்} அவன் {அர்ஜுனன்} கையில் இருந்த அந்த தெய்வீக வில்லைப் பறித்தான். தன்னிடம் இருந்த வில் பறிக்கப்பட்டதைக் கண்ட அர்ஜுனன், தனது வாளை எடுத்து, சண்டையை முடிக்க எண்ணி எதிரியை நோக்கி ஓடினான். பிறகு அந்தக் குரு இளவரசன் {அர்ஜுனன்}, தனது கைகளின் மொத்த பலத்தையும் பயன்படுத்தி கடும் கற்களாலும் தாங்கிக் கொள்ள முடியாத அந்தக் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு அந்த வேடனின் தலையில் அடித்தான். ஆனால் வாள்களில் முதன்மையான அந்த வாள், அந்த வேடனின் {சிவனின்} தலையைத் தொட்டவுடன் துண்டுகளாகச் சிதறிப் போயிற்று.
பிறகு பல்குனன் {அர்ஜுனன்} மரங்களைக் கொண்டும் கற்களைக் கொண்டும் சண்டை செய்தான். பெரும் உடல் படைத்த வேடனின் வேடத்தில் இருந்த அந்தச் சிறப்பு மிகுந்த தேவன் {சிவன்}, மரங்கள் மற்றும் கற்களின் மழையை பொறுமையாகத் தாங்கிக் கொண்டான். பிறகு, பிருதையின் {குந்தியின்} பலம் பொருந்திய மகன், கோபத்தில் வாயில் இருந்து புகை வர, மடக்கிய கை முட்டியைக் கொண்டு வேடன் உருவில் வந்திருந்த வெல்லப்பட முடியாத கடவுளை {சிவனை} இடி போன்ற அடிகளால் அடித்தான். வேடன் உருவில் இருந்த கடவுள் {சிவ பெருமான்} பல்குனனின் {அர்ஜுனனின்} அடிகளுக்கு பதிலாக இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்ற கடுமையான அடிகளைக் கொடுத்தான். பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, அந்த வேடனுக்கும் {சிவனுக்கும்} இடையில் நடந்த அந்த சண்டையில் விழுந்த அடிகளால் அந்த இடம் முழுவதும் பயங்கர சத்தம் எழுந்தது. பழங்காலத்தில் விரித்திரனுக்கும் வாசவனுக்கும் இடையே நடந்த சண்டையைப் போன்று இருந்த அடிகளால் ஆன அந்தக் கடும் சண்டை சிறிது நேரமே நீடித்தது.
பலம்பொருந்திய ஜிஷ்ணு {அர்ஜுனன்}, அந்த வேடனைக் கட்டிப்பிடித்து, தனது மார்பால் அவனை {சிவனை} நசுக்க ஆரம்பித்தான். ஆனால் பெரும் பலம் பொருந்திய அந்த வேடன், உணர்வற்ற பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} மிகக் கடுமையாக நசுக்கினான். அவர்கள் இருவர் கரங்கள் மற்றும் மார்புகளின் அழுத்தத்தின் காரணமாக, நெருப்பில் எரியும் கரி போல, அவர்கள் உடல் புகையைக் கக்கத் தொடங்கின. பிறகு அந்தப் பெரும் தெய்வம் {சிவன்}, ஏற்கனவே அடிபட்ட பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} மேலும் அடித்தும், கோபத்துடன் தனது முழு பலத்தைப் பயன்படுத்தி, அவனை உணர்விழக்கச் செய்தான். பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த தேவர்களுக்குத் தேவனால் நசுக்கப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, காயம்பட்டு சிதைந்த உறுப்புகளால் அசையும் தன்மையை இழந்து, சதைப் பிண்டமானான். அந்தச் சிறப்புமிக்க தெய்வத்தால் {சிவ பெருமானால்} அடிக்கப்பட்ட அவன் {அர்ஜுனன்}, அசையும் தன்மையை இழந்து, செத்தவனைப் போல மூச்சற்று பூமியில் விழுந்தான்.
இருப்பினும், விரைவில் உணர்வை அடைந்து, கிடந்த நிலையில் இருந்து எழுந்து, உடல் முழுதும் இரத்தத்தால் நனைந்து, மிகவும் துக்கத்துக்குள்ளானான். மானசீகமாக அந்த தேவர்களுக்குத் தேவனை {சிவனைப்} பணிந்து, களிமண்ணால் அந்த தெய்வத்தை {சிவனைச்} செய்து மலர் மாலைகளால் வழிபட்டான். பவனின் {சிவனின்} களிமண் சிலைக்கு தான் சாற்றிய மாலை, அந்த வேடனின் தலையை அலங்கரிப்பதைக் கண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மிகவும் மகிழ்ந்து இயல்பு நிலையை அடைந்தான். பிறகு அவன் {அர்ஜுனன்} பவனின் {சிவனின்} பாதத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான். அந்தத் தெய்வமும் அவனிடம் திருப்தி கொண்டான்.
அர்ஜுனனின் அற்புதத்தைக் கண்ட ஹரன் {சிவன்}, கடும் தவத்தால் அவனது {அர்ஜுனனது} உடல் மெலிந்திருப்பதைக் கண்டு, அவனிடம் ஆழ்ந்த குரலில் மேகங்கங்களைப் போன்ற கர்ஜனையுடன், "ஓ பல்குனா {அர்ஜுனா}, இணையற்ற உனது செயலைக் கண்டு நான் திருப்தியடைந்தேன். வீரத்திலும், பொறுமையிலும் உனக்கு ஈடான இன்னொரு க்ஷத்திரியன் யாருமில்லை. ஓ பாவமற்றவனே, உனது பலமும் வீரமும் கிட்டத்தட்ட எனக்கு சமமாகவே இருக்கிறது. ஓ பலம் வாய்ந்த கரம் கொண்டவனே {அர்ஜுனனே}, நான் உன்னிடம் திருப்தி அடைந்தேன். ஓ பாரத குலத்தின் காளையே {அர்ஜுனனே}, ஓ அகன்ற கண் உடையவனே, நான் உனக்கு {ஞானக்} கண்களைக் கொடுக்கிறேன். என்னைப் பார் {எனது உண்மையான உருவத்தைப் பார்}. முன்பு நீ முனிவனாக இருந்தவன். நீ உனது எதிரிகளையும், சொர்க்கத்தில் வசிப்பவர்களையும் வீழ்த்துவாய். நான் உன்னிடம் திருப்தியடைந்ததால், யாராலும் தடுக்கமுடியாத ஆயுதத்தை நான் உனக்கு கொடுக்கிறேன். விரைவில், நீ எனது ஆயுதத்தைத் தாங்கும் தகுதியை அடைவாய்" என்றார் {சிவ பெருமான்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிநாகத்தைத் {வில்} தாங்குபவனும், மலைகளை {கைலாசம்} வசிப்பிடமாகக் கொண்டவனும், நெருப்பு போல ஒளிவீசும் தெய்வமுமான மகாதேவனை {சிவனை} உமையுடன் {பார்வதியுடன்} கண்டான் பல்குனன் {அர்ஜுனன்}. எதிரிகளின் நகரங்களைக் கைப்பற்றும் பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, முழங்காலில் நின்று தலைவணங்கி, ஹரனை {சிவனை} வழிபட்டு அருள் பெற்றான். பிறகு அர்ஜுனன், "ஓ கபர்தின் {சடைமுடியுள்ளவனே}, ஓ தேவர்களுக்குத் தலைவனே, ஓ பகனின் கண்களை அழித்தவனே, ஓ தேவர்களுக்குத் தேவா, ஓ மகாதேவா, ஓ நீலத் தொண்டை கொண்டவனே {நீலகண்டா}, ஓ சடாமுடி தரித்தவனே, நீயே அனைத்து காரியங்களுக்கும் காரணம் என்பதை நான் அறிவேன். ஓ முக்கண்ணனே, ஓ அனைவருக்கும் தலைவனே, நீயே அனைத்து தேவர்களுக்கும் அடைக்கலம் ஆவாய். இந்த அண்ட ம் உன்னில் இருந்தே ஊற்றெடுத்தது. தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் ஆகியோர் இருக்கும் மூன்று உலகத்திலும் நீ வீழ்த்தப்பட முடியாதவன். நீயே விஷ்ணுவாக இருக்கும் சிவன். நீயே சிவனாக இருக்கும் விஷ்ணு. பழங்காலத்தில் தக்ஷனின் வேள்வியை நீயே அழித்தாய். ஓ ஹரியே, ஓ ருத்ரா, நான் உன்னை வணங்குகிறேன். உனது நெற்றியில் ஒரு கண் கொண்டவன் நீ. ஓ சர்வனே, ஓ ஆசைக்குந்த பொருட்களை அருள்பவனே, ஓ திரிசூலத்தைத் தாங்குபவனே, ஓ பிநாகத்தைத் தாங்குபவனே, ஓ சூரியா, ஓ சுத்தமான உடல் கொண்டவனே, ஓ அனைத்தையும் படைத்தவனே, நான் உன்னை வணங்குகிறேன். ஓ படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் தலைவனே, உனது அருள் கிடைக்க நான் உன்னை வணங்குகிறேன். அண்ட அருளின் ஊற்றான கணங்களின் தலைவன் நீயே, அண்டத்தின் காரணங்களுக்கு காரணமாயிருப்பவன் நீயே. ஆண்மக்களில் முதன்மையானவர்களை விஞ்சி நிற்பவனே, ஓ ஹரனே, நீயே உயர்ந்தவன், நீயே நுட்பமானவன். ஓ சிறப்புமிக்க சங்கரனே, எனது தவறை மன்னிப்பாயாக. உன்னைக் காணவே, உனக்கு அன்பானதும், தவசிகளின் அற்புதமான வசிப்பிடமுமான இந்தப் பெரும் மலைக்கு நான் வந்தேன். அனைத்து உலகங்களாலும் வழிபடப்படுபவன் நீ. ஓ தலைவா, உனது அருள் பெறவே நான் உன்னை வணங்குகிறேன். அறியாமையால் உன்னுடன் போரிட்ட எனது கடுஞ்செயல்களைத் தவறாக எண்ணாதே. ஓ சங்கரா, நான் உனது பாதுகாப்பைக் கோருகிறேன். நான் செய்த அனைத்திற்காகவும் என்னை மன்னித்துவிடு" என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "காளையைத் தனது குறியாகக் {குறியீடாகக்} கொண்ட அந்தப் பலம் பொருந்திய தெய்வம், அர்ஜுனனின் அழகான கரங்களைத் தனது கரங்களால் பற்றி, புன்னகைத்து, "நான் உன்னை மன்னித்துவிட்டேன்" என்று சொல்லி, தனது கரங்களால் அர்ஜுனனை வாரி அணைத்து, மீண்டும் அர்ஜுனனைச் சமாதானப் படுத்தினார் {சிவ பெருமான்}.
* கிருஷ்ணனுக்குக் கிடைத்த சக்கரம் - ஆதிபர்வம் பகுதி 227
அந்த நான்காவது லோகபாலன் {அக்னி}, அந்த நிலைத்த தேவர்களுக்குத் தேவனிடம் {வருணனிடம்}, "நேரத்தைக் கடத்தாமல் மன்னன் சோமனிடம் பெற்ற வில்லையும் {வில் -காண்டீவம் - Gandiva}, அம்பறாத்தூணியையும் {quiver அம்பினை வைக்கும் பேழை (கூடை)யையும்} , குரங்கு கொடி கொண்ட ரதத்தையும் எனக்குக் கொடு.
பார்த்தன் {அர்ஜுனன்} காண்டீவத்தைக் கொண்டும், வாசுதேவன் {கிருஷ்ணன்} சக்கரத்தைக் கொண்டும் பெரிய சாதனைகளைச் சாதிப்பார்கள். ஆகவே, அவை இரண்டையும் இன்று என்னிடம் கொடு," என்றான் {அக்னி}. இந்த வார்த்தைகளைக் கேட்ட வருணன் பவகனிடம் {அக்னியிடம்}, "நன்று, நான் அவற்றைக் கொடுக்கிறேன்," என்று சொன்னான்.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Adiparva-Section227.html
---------------------------------------------------------------
அந்த நான்காவது லோகபாலன் {அக்னி}, அந்த நிலைத்த தேவர்களுக்குத் தேவனிடம் {வருணனிடம்}, "நேரத்தைக் கடத்தாமல் மன்னன் சோமனிடம் பெற்ற வில்லையும் {வில் -காண்டீவம் - Gandiva}, அம்பறாத்தூணியையும் {quiver அம்பினை வைக்கும் பேழை (கூடை)யையும்} , குரங்கு கொடி கொண்ட ரதத்தையும் எனக்குக் கொடு.
பார்த்தன் {அர்ஜுனன்} காண்டீவத்தைக் கொண்டும், வாசுதேவன் {கிருஷ்ணன்} சக்கரத்தைக் கொண்டும் பெரிய சாதனைகளைச் சாதிப்பார்கள். ஆகவே, அவை இரண்டையும் இன்று என்னிடம் கொடு," என்றான் {அக்னி}. இந்த வார்த்தைகளைக் கேட்ட வருணன் பவகனிடம் {அக்னியிடம்}, "நன்று, நான் அவற்றைக் கொடுக்கிறேன்," என்று சொன்னான்.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Adiparva-Section227.html
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.