Unknown Pasupata is yours! | Vana Parva - Section 40 | Mahabharata In Tamil
(கைராத பர்வத் தொடர்ச்சி)
அர்ஜுனனின் முற்பிறவியை எடுத்துக் கூறிய சிவன், அவனை வரம் கேட்க பணித்தல்; அர்ஜுனன் பிரம்மசிரம் வேண்டுதல்; சிவன் அர்ஜுனனுக்கு பாசுபதத்தை அளித்தல்; ஏற்கனவே பறித்த காண்டீவத்தையும் அளித்து, விண்ணுலகம் செல்லப் பணித்தல்...
மகாதேவன் {சிவன்} சொன்னான், "உனது முற்பிறவியில் நீ நாராயணனின் நண்பனான நரனாக இருந்தாய். பதரியில் [1] ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நீ கடுந்தவத்தில் இருந்தாய். உன்னிலும், ஆண்மக்களில் முதன்மையான விஷ்ணுவிலும் பெரும் பலம் வசிக்கிறது. நீங்கள் இருவரும் உங்கள் பலத்தால் இந்த முழு அண்டத்தையும் தாங்குகிறீர்கள். ஓ தலைவா {அர்ஜுனா}, உனது கடுமையான வில்லின் நாணொலி சத்தம் . நீயும், கிருஷ்ணனும், இந்திரனின் முடிசூட்டலின் போது தானவர்களைத் தண்டித்தீர்கள்.
[1] இங்கு பதரி என்று குறிக்கப்படுவது, பத்ரிநாத் ஆகும். பத்ரிநாத் நரன் மலை, நாராயணன் மலை என்ற இரு சிகரங்களுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கு ஆகும். இதன் வழியாகவே பாண்டவர் சொர்க்கம் சென்றனர். பத்ரி நாத்தில் திரௌபதி இறந்து வீழ்ந்தாள். இங்கு அமர்ந்தே வியாசர் மஹாபாரதம் சொன்னதாகவும், அருகில் ஓடிய சரஸ்வதி நதியை சத்தமிடாமல் இருக்கச் சொல்ல நதி பூமிக்கடியில் சென்று பிறகு குகைவழியாய் வெளிப்பட்டு அலக்நந்தாவில் கலக்கிறது.
ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, உனது கைகளுக்குப் பொருந்தும் இந்த வில்லான காண்டீவம் அப்போதும் உன் கையில் இருந்தது. ஓ ஆண்மக்களில் முதன்மையானவனே, எனது மாய சக்தியைப் பயன்படுத்தியே நான் அதை {காண்டீவத்தை} உன்னிடம் இருந்து பறித்தேன். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, உனக்குச் சரியாகப் பொருந்தும் இந்த இரட்டை அம்பறாத்தூணிகள் மீண்டும் வற்றாததாக ஆகும். ஓ குரு குலத்தின் மகனே {அர்ஜுனா}, உனது உடல், வலியில் இருந்தும் நோயில் இருந்தும் விடுபடும். உனது வீரம் கலங்கடிக்கப்பட முடியாததாக இருக்கும். நான் உன்னிடம் திருப்தி கொண்டுள்ளேன். ஓ ஆண்மக்களில் முதல்வனே, நீ விரும்பும் வரத்தை என்னிடம் கேள். ஓ அனைத்து எதிரிகளையும் தண்டிப்பவனே, ஓ சரியான (தகுதி வாய்ந்தவர்களுக்கு) மரியாதை கொடுப்பவனே, உனக்கு ஈடான ஆண்மகன் தேவலோகத்தில் கூட இல்லை. எந்த க்ஷத்திரியனும் உன்னைவிட மேன்மையானவன் இல்லை" என்றார் {சிவ பெருமான்}.
அர்ஜுனன் சொன்னான், "ஓ காளையைக் குறியீடாகக் கொண்டிருக்கும் சிறப்புமிக்க தெய்வமே, நீ நான் விரும்புவதை அருள்வதாக இருந்தால், ஓ தலைவா, உன்னால் தாங்கப்படும் தெய்வீகமான ஆயுதமான பிரம்மசிர ஆயுதத்தைப் பெற விரும்புகிறேன். யுக முடிவில் மொத்த அண்டத்தையே அழிக்கும் சக்தி கொண்ட அந்த ஆயுதத்தின் துணை கொண்டு, ஓ தேவர்களுக்குத் தேவா {சிவனே}, நான் ஒரு புறமும், கர்ணன், பீஷ்மர், கிருபர் மற்றும் துரோணர் ஆகியோர் மறு புறமும் நின்று கடும்போரிடும்போது உமது கருணையால் நான் வெற்றியை அடைவேன். தானவர்கள், ராட்சசர்கள், தீய ஆவிகள், பிசாசுகள், கந்தர்வர்கள், நாகர்கள் என அனைவரையும் உட்கொள்ளும் அந்த ஆயுதத்தை ஏவும் போது அதில் இருந்து ஆயிரக்கணக்கான கடும் கதாயுதங்களும், கடும் விஷம் கொண்ட பாம்புகள் போன்ற கணைகளையும் உற்பத்தி செய்யும். அந்த ஆயுதத்தைக் கொண்டு நான் பீஷ்மர், துரோணர், கிருபர், எப்போதும் இழிவாகவே பேசும் கர்ணன் ஆகியோருடன் நான் போரிடுவேன். ஓ பகனின் கண்களை அழித்த சிறப்புமிக்கவனே, அவர்களுடன் சண்டையிட்டு வெற்றி பெறுவதே எனது முதன்மையான விருப்பமாகும்" என்றான்.
பவன் {சிவன்}, "ஓ பலம் மிக்கவனே {அர்ஜுனனே}, எனக்குப் பிடித்த எனது ஆயுதமான பாசுபதத்தை {பாசுபதாயுதத்தை} நான் உனக்குத் தருகிறேன். ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீ அதைத் தாங்கவும், விடுக்கவும், திரும்பப்பெறவும் தகுதி வாய்ந்தவன். தேவர்கள் தலைவனோ {இந்திரனோ}, யமனோ, யக்ஷர்களின் மன்னனோ, வருணனோ அல்லது வாயுவோ இது குறித்து {இந்த ஆயுதம் குறித்து} அறியமாட்டார்கள். அப்படி இருக்கும்போது மனிதர்கள் இதுகுறித்து எவ்வாறு அறிவார்கள்? ஆனால், ஓ பிருதையின் மகனே {அர்ஜுனா}, பலம் குறைந்த எதிரியின் மேல் இதை விடுத்தால் இந்த முழு அண்டமும் அழிந்துவிடும். ஆகையால், சரியான காரணம் இல்லாமல் இந்த ஆயுதத்தை விடுக்கக்கூடாது. இந்த மூன்று உலகிலும் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றில், இந்த ஆயுதத்தால் அழிக்க முடியாதவர் யாரும் இல்லை. இந்த ஆயுதத்தை மனதாலும், கண்ணாலும், வார்த்தைகளாலும், வில்லாலும் தொடுக்கலாம்" என்றார் {சிவ பெருமான்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, தன்னைச் சுத்திகரித்துக் கொண்டான். பிறகு அண்டத்தின் தலைவனை {சிவபெருமானை} அணுகி, மிகவும் கவனத்துடன், "எனக்கு அதை உணர்த்தும்" என்றான். பிறகு மகாதேவன் {சிவன்}, யமனின் சீற்றத்துடன் கூடிய அந்த ஆயுத ஞானத்தை பாண்டுவின் மகன்களில் சிறந்தவனுக்கு {அர்ஜுனனுக்கு}, அதைத் தொடுப்பது திரும்பப் பெறுவது ஆகிய புதிர்களுடன் கொடுத்தான். பிறகு அந்த ஆயுதம், இதற்கு முன் உமையின் தலைவனான சங்கரனிடம் காத்திருந்தது போல அர்ஜுனனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தது. அர்ஜுனன் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான்.
அந்தக் கணத்தில் மலைகள், சோலைகள், மரங்கள், கடல்கள், கானகங்கள், கிராமங்கள், நகரங்கள், சுரங்கங்களுடன் கூடிய முழு உலகமும் நடுங்கியது. ஆயிரக்கணக்கான சங்குகள், பேரிகைகள், துந்துபி ஆகியவற்றின் ஒலி கேட்டது. அந்தக் கணத்தில் சூறாவளியும் சுழற்காற்றும் வீசத்தொடங்கியது. அளவற்ற சக்தி கொண்ட அர்ஜுனனிடம் தங்கி அந்த ஆயுதத்தின் சீற்றத்தைக் கண்டு தேவர்களும், தானவர்களும் அஞ்சினர். அளவற்ற சக்தி கொண்ட பல்குனனின் {அர்ஜுனனின்} உடலில் இருந்த அனைத்துத் தீமைகளையும், தனது தீண்டலால் அந்த முக்கண் தெய்வம் {சிவன்} விரட்டினான். அந்த முக்கண் தெய்வம் அர்ஜுனனிடம் "விண்ணுலகம் செல்" என்று கட்டளையிட்டான். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு, அர்ஜுனன் அந்த தெய்வத்தை வழிபட்டு, தலைவணங்கி, கரங்கள் கூப்பி அவனைப் {சிவனைப்} பார்த்தான். பிறகு, தேவலோகவாசிகளின் தலைவன் {சிவன்}, மலையின் மார்பில் தனது வசிப்பிடத்தை வைத்திருக்கும் அந்தப் பிரகாசமிக்க தெய்வம், அந்த உமையின் கணவன், ஆசைகளை முழு கட்டுக்குள் வைத்திருந்து அனைத்து அருளுக்கு ஊற்றக்கண்ணாக இருக்கும் அந்த தெய்வமான பவன் {சிவன்}, தானவர்களையும் பிசாசுகளையும் அழிக்கவல்ல காண்டீவம் என்ற வில்லை மனிதர்களில் முதன்மையான அர்ஜுனனுக்குக் கொடுத்தான். அந்த மனிதர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பனி நிறைந்த சமவெளிகளையும், குகைகளையும், சாய்வான நிலங்களையும், தன்னகத்தே கொண்டு, வானத்தில் உலவும் பெரும் முனிவர்களுக்கு ஓய்விடமாக இருக்கும் அந்த மலையை விட்டு, அந்த தேவர்களுக்குத் தேவன் {சிவன்} உமையுடன் சேர்ந்து வானத்தில் உயர்ந்து சென்றான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.