Arjuna acquired more weapons | Vana Parva - Section 41 | Mahabharata In Tamil
(கைராத பர்வத் தொடர்ச்சி)
யமன், வருணன், குபேரன் ஆகியோரிடம் இருந்து அர்ஜுனன் ஆயுதங்களைப் பெறுவது….
வைசம்பாயனர் சொன்னார், "காளையைக் குறியீடாகக் கொண்ட பிநாகத்தைத் தாங்குபவன் {சிவன்}, உலகம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சூரியன் மறைவதைப் போல, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே இப்படி மறைந்து போனான். எதிரி வீரர்களைக் கொல்லும் அர்ஜுனன் இதைக் கண்டு வியந்து, "ஓ, நான் பெரும் தேவனான தேவர்களுக்குத் தேவனை {சிவனை} நான் கண்டுவிட்டேன். நான் பிநாகத்தைத் தாங்கும் முக்கண்ணனான ஹரனை {சிவனை} அருள் வழங்கும் கோலத்தில், எனது கண்களால் கண்டும், கைகளால் தொட்டுமிருக்கிறேன். நான் நிச்சயம் பேறுபெற்றவன்தான். நான் நிச்சயம் வெற்றியடைவேன். நான் ஏற்கனவே பெருமைவாய்ந்தவன் ஆகிவிட்டேன். எனது எதிரிகள் என்னால் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டனர். எனது காரியங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டது" என்று நினைத்துக் கொண்டான் {அர்ஜுனன்}.
அளவிடமுடியாத சக்தி கொண்ட பிருதையின் {குந்தியின்} மகன், இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, அங்கே அந்த இடத்திற்கு நீர்க்கடவுளான வருணன், அனைத்து விதமான நீர் மிருகங்களுடன், வைடூரியத்தைப் போன்று பிரகாசித்துக் கொண்டு, அந்தச் சூழ்நிலையையே தனது பிரகாசத்தால் நிறைத்து அழகுடன் வந்தான். ஆண் நதிகளையும், பெண் நதிகளையும், நாகர்களையும், தைத்தியர்களையும், சத்யர்களையும், சிறு தெய்வங்களையும் அழைத்துக் கொண்டு அந்த நீர் மிருகங்களின் தலைவனும் நிர்வாகியுமான வருணன் அந்த இடத்திற்கு வந்தான். மேலும், சுத்தமான தங்கத்தைப் போன்ற உடல் கொண்டு தலைவன் குபேரன், தனது பிரகாசமிக்க தேரில் அமர்ந்து, எண்ணிலடங்கா யக்ஷர்களுடன் அங்கே வந்தான். அந்தக் கருவூலத் தலைவன் {குபேரன்}, பெரும் அழகுடன், அந்தச் சூழ்நிலையைத் தனது பிரகாசத்தால் நிறைத்து அங்கே அர்ஜுனனைக் காண வந்தான். மேலும், உலகங்களை அழிக்கும் சக்தி கொண்ட பெரும் அழகு கொண்ட யமன், படைப்புத் தலைவர்களான பித்ருகளையும் உடன் அழைத்துக் கொண்டு வந்தான். சூரியனின் மகனும், அனைத்து உயிர்களை அழிப்பவனுமான, அந்த புத்திக்கெட்டாத ஆன்மா கொண்ட அறத்தேவன் {யமன்}, கையில் கதாயுதத்துடன், தனது தேரில், குஹ்யர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் ஆகிய பகுதிகளையும் சேர்த்து மூன்று உலகத்திற்கும் ஒளியூட்டி, யுகத்தின் முடிவில் எழும் இரண்டாவது சூரியனைப் போல இருந்தான்.
அங்கே வந்த அவர்கள், சுடரொளி வீசிக்கொண்டு, பலவண்ண வேறுபாடுகளுடன் இருந்த அந்தப் பெரும் மலையின் உச்சியில் கடுந்தவத்தில் இருந்த அர்ஜுனனைக் கண்டார்கள். மேலும், மறு கணத்தில் சிறப்புமிகுந்த சக்ரன் {இந்திரன்}, தனது ராணியுடன், (தெய்வீக யானையான) ஐராவதத்தில் அமர்ந்து, அனைத்து தேவர்களும் சூழ அங்கே வந்தான். தனது தலைக்கு மேலே வெண்குடை பிடிக்கப்பட்டதால், மேகங்களில் இருந்து எட்டிப் பார்க்கும் சந்திரனைப் போல இருந்தான் அவன் {இந்திரன்}. கந்தர்வர்களாலும், தவத்தை செல்வமாகக் கொண்ட முனிவர்களாலும் வாழ்த்தப்பட்ட அந்த தேவர்களின் தலைவன் {இந்திரன்} , அந்த மலையின் உச்சியில் இரண்டாவது சூரியனைப் போல இறங்கினான்.
அறத்தை முழுதும் அறிந்து பெரும் புத்திகூர்மை கொண்ட யமன், அந்த மலை உச்சியின் தெற்கே இறங்கி, மேகங்களை ஒத்த ஆழ்ந்த குரலில், "அர்ஜுனா, உலகப் பாதுகாவலர்களான நாங்கள் இங்கு வந்திருப்பதைப் பார். நீ எங்களைக் காணும் தகுதியைப் பெற்றிருப்பதால், நாங்கள் உனக்குப் {தெய்வீகப்} பார்வையைத் தருகிறோம். நீ உனது முற்பிறவியில் அளவிடமுடியா ஆன்மாவும், பெரும் பலமும் கொண்ட நரன் என்ற முனிவனாக இருந்தாய். ஓ குழந்தாய், பிரம்மனின் கட்டளைக்கிணங்க, நீ மனிதர்களுக்கு மத்தியில் பிறந்தாய்! ஓ பாவமற்றவனே, வசுக்களின் மைந்தனும், குருக்களின் அறம்சார்ந்த பாட்டனுமான பெரும் சக்தி கொண்ட பீஷ்மன் போர்க்களத்தில் உன்னால் வீழ்த்தப்படுவான். போர்க்களத்தில் பரத்வாஜரால் {துரோணரால்} கட்டளையிடப்பட்ட கடும் சக்தி படைத்த அனைத்து க்ஷத்திரியர்களையும் வீழ்த்துவாய். மனிதர்கள் மத்தியில் பிறந்திருக்கும் கடும் வீரம் கொண்ட தானவர்களையும் {அசுரர்களையும்}, நிவாதகவசர்கள் என்ற பெயர்பெற்ற தானவர்களையும் வீழ்த்துவாய்.
ஓ குருகுலத்தின் மகனே {அர்ஜுனா}, ஓ தனஞ்சயா, தனது சக்திக்காக உலகங்களால் கொண்டாடப்படுபவனும் எனது தந்தையின் {சூரியனின்} பகுதியுமான கடும் வீரம் கொண்டவனுமான கர்ணனை நீ கொல்வாய். ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, எதிரிகளை அடிப்பவனே, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள் ஆகியோரின் பகுதிகளைக் கொண்டு பூமியில் அவதரிப்பவர்களையும் கொல்வாய். உன்னால் கொல்லப்படும் இவர்கள், தங்கள் செயல்களால் எந்த உலகங்களை அடைய வேண்டுமோ அந்த உலகங்களை அடைவார்கள். ஓ பல்குனா {அர்ஜுனா}, உனது சாதனைகளால், உலகம் உள்ளளவும் உனது புகழ் நிலைத்திருக்கும். போரில் நீ மகாதேவனையே {சிவனையே} திருப்தி செய்துவிட்டாய். நீ விஷ்ணுவுடன் சேர்ந்து, பூமியின் பாரத்தைக் குறைப்பாய். யாராலும் கலங்கடிக்க முடியாது எனது ஆயுதமான இந்த கதாயுதத்தைப் பெற்றுக் கொள். இந்த ஆயுதத்தால் நீ பெரும் சாதனைகளைச் செய்வாய்” {என்றான் எமன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ ஜனமேஜயா, பிறகு பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, உரிய மந்திரங்கள் மற்றும் சடங்குகளுடனும், அந்த கதா ஆயுதத்தை விடுப்பதற்கும் திரும்பப் பெறுவதற்குமான புதிர்களுடனும் யமனிடம் இருந்து முறையாகப் பெற்றுக் கொண்டான். பிறகு மேகங்களைப் போல நீல நிறம் கொண்ட நீர் வாழ்வனவற்றின் தலைவனான வருணன், அந்த மலை உச்சியின் மேற்கு பாகத்தில் அமர்ந்து, "ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, க்ஷத்திரியம் பயிலும் க்ஷத்திரியர்களில் முதன்மையானவன். ஓ அகன்ற தாமிரக் கண்கள் உடையவனே, என்னைப் பார், நானே நீர்த்தலைவனான வருணன், என்னால் வீசப்படும் சுருக்குக் கயிறு தாங்கமுடியாததாக இருக்கும். ஓ குந்தியின் மகனே, நீ என்னிடம் இருந்து இந்த வருண ஆயுதங்களை அதை விடுப்பதற்கும், திரும்ப அழைப்பதற்குமான புதிர்களுடன் பெற்றுக் கொள். ஓ வீரனே, இந்த ஆயுதங்களைக் கொண்டு, தாரகைக்காக {பிருஹஸ்பதி மனைவியின் காரணமாக} நடைபெற்ற யுத்தத்தால் பெரும் பலம் வாய்ந்த ஆயிரக்கணக்கான தானவர்கள் கட்டப்பட்டு பிடிபட்டனர். நீ அவற்றை என்னிடம் இருந்து பெற்றுக் கொள். யமனே உனது எதிரியானாலும், இதை நீ உனது கைகளில் வைத்திருந்தால், அவனால் உன்னிடம் இருந்து தப்ப முடியாது. நீ இதை வைத்துக் கொண்டு போர்க்களத்தில் உலாவும் போது, அந்த நிலம் க்ஷத்திரியர்களற்றதாகவிடும்." என்றான் {வருணன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "வருணன், யமன் ஆகிய இருவரும் தங்கள் தெய்வீக ஆயுதங்களைக் கொடுத்தபிறகு, கைலாசத்தின் உயரங்களில் தனது இல்லத்தைக் கொண்டுள்ள கருவூலத் தலைவன் {குபேரன்}, "ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உன்னுடனான எனது இந்தச் சந்திப்பு, கிருஷ்ணனை நான் சந்தித்தது போன்ற மகிழ்ச்சியை எனக்குக் கொடுக்கிறது. ஓ இடது கையால் வில்லைத்தாங்குபவனே, ஓ பலம்வாய்ந்த கரங்களுடையவனே, நீ முன்பு (மற்ற தேவர்களைப் போல) நித்தியமான தேவனாக இருந்தவன். பழங்கால கல்பங்களில், நீ தினமும் எங்களுடன் தவச்சடங்குகளில் ஈடுபட்டுள்ளாய். ஓ மனிதர்களில் சிறந்தவனே, நான் உனக்கு தெய்வீகப் பார்வையைத் தருகிறேன். ஓ பலம்வாய்ந்த கரங்களுடையவனே, நீ ஒப்பந்த தைத்தியர்களையும் தானவர்களையும் கூட வீழ்த்துவாய். நேரத்தையிழக்கமால், என்னிடமிருந்தும் நீ ஒரு தெய்வீக ஆயுதத்தைப் பெற்றுக் கொள். இதைக் கொண்டு நீ திருதராஷ்டிரனின் படைகளை வீழ்த்த முடியும். எனக்குப் பிடித்தமான இந்த அந்தர்த்தானாயுதத்தைப் பெற்றுக் கொள். சக்தியும், பராக்கிரமும், பிரகாசமும் கொண்ட இந்த ஆயுதம் எதிரிகளைத் துக்கத்தில் ஆழ்த்தும் வல்லமைபெற்றது. சிறப்புமிக்க சங்கரரால் {சிவனால்} திரிபுரம் அழிக்கபட்ட போது, பெரும் பலம் வாய்ந்த அசுரர்கள் இந்த ஆயுதத்தாலேயே உட்கொள்ளப்பட்டார்கள். ஓ ஒப்பற்ற வீரம் கொண்டவனே, உனக்கு கொடுப்பதற்காக நான் அதை எடுக்கிறேன். மேருவைப் போன்ற கண்ணியம் பொருந்திய நீ, இதைத் தாங்குவதற்குத் தகுதி வாய்ந்தவனே" என்றான். இந்த வார்த்தைகள் பேசப்பட்ட பிறகு, பெரும் பலம் பொருந்திய குரு இளவரசனான அர்ஜுனன், குபேரனிடம் இருந்து அந்த தெய்வீக ஆயுதத்தை முறைப்படி பெற்றுக் கொண்டான்.
பிறகு தேவர்களின் தலைவன் {இந்திரன்}, தடையற்ற சாதனைகள் செய்த பிருதையின் மகனிடம் {அர்ஜுனனிடம்} இனிமையான வார்த்தைகளாலும், பேரிகைகளைப் போன்றதும், மேங்களின் கர்ஜனை போன்றதுமான ஆழ்ந்த குரலில், "ஓ பெரும்பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட குந்தியின் மகனே, நீ பழங்கால தேவனாவாய். நீ ஏற்கனவே உயர்ந்த வெற்றியையும், தேவனின் தன்மையையும் பெற்றுவிட்டாய். ஆனால், ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, நீ இன்னும் தேவர்களின் காரியங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நீ விண்ணுலகத்திற்கு வர வேண்டும். ஆகையால், ஓ பெரும் ஒளிவீசும் வீரனே, தயாராக இரு. மாதலியைத் தேரோட்டியாகக் கொண்ட எனது தேர் விரைவில் பூமியில் இறங்கப் போகிறது. ஓ கௌரவனே {அர்ஜுனா}, உன்னை விண்ணுலகம் அழைத்துச் சென்று, அங்கே எனது தெய்வீக ஆயுதங்களை உனக்குக் கொடுப்பேன்" என்றான் {இந்திரன்}.
இமய மலையின் உயரங்களில், ஒன்றாகக் கூடியிருந்து உலகப் பாதுகாவலர்களைக் {லோகபாலர்களைக்} கண்ட, பெரும் சக்தி கொண்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, மிகவும் வியந்து, அங்கே கூடியிருந்த லோகபாலர்களை வார்த்தைகளாலும், நீராலும், பழங்களாலும் முறைப்படி வழிபட்டான். அந்த தேவர்களும் பதில் மரியாதை செய்து திரும்பிச் சென்றனர். விரும்பிய இடத்திற்கு செல்லும் சக்தி படைத்த தேவர்கள் மனோ வேகத்தால் தங்கள் எங்கிருந்து வந்தனரோ அந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றனர்.
மனிதர்களில் காளையான அர்ஜுனன், இப்படி ஆயுதங்களை அடைந்து, மகிழ்ச்சியால் நிறைந்தான். விருப்பம் நிறைவேறு வெற்றி மகுடம் தரித்தவனாக அவன் தன்னைக் கருதினான்.
******************கைராத பர்வம் முற்றிற்று******************
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.