The feats of Arjuna are marvelous! | Vana Parva - Section 49 | Mahabharata In Tamil
(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)
திருதராஷ்டிரன் சொன்ன துரியோதனின் தீய நடத்தைகளை சஞ்சயன் ஆமோதிப்பது; சிவன் அர்ஜுனன் சந்திப்பு பற்றி சஞ்சயன் கூறுவது; அர்ஜுனனின் சாதனைகளையும், துரியோதனின் தீமைகளையும் திருதராஷ்டிரன் சஞ்சனிடம் சொல்வது…
சஞ்ஜயன் சொன்னான், "ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனைக் குறித்து நீர் சொன்னது அனைத்தும் உண்மையே. ஓ பூமியின் அதிபதியே {திருதராஷ்டிரரே}, நீர் சொன்னதில் எதுவும் பொய் இல்லை. அளவிடமுடியா சக்தி கொண்ட பாண்டவர்கள், தாங்கள் மணந்த புனிதமான புகழ் கொண்ட மனைவியான கிருஷ்ணை {திரௌபதி}, சபை நடுவே இழுத்து வரப்பட்டதைக் கண்டதால் மிகுந்த கோபத்தில் உள்ளனர். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனன் மற்றும் கர்ணனின் கொடும் வார்த்தைகளையும் கேட்டு அவர்கள் {பாண்டவர்கள்} ஆத்திரமடைந்திருக்கின்றனர்.
அதனால் அவர்கள் {பாண்டவர்கள்} என் கணக்குப்படி {குருக்களை} மன்னிக்கமாட்டார்கள் என்றே கருதுகிறேன். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பதினோரு {11} உருவங்களில் இருக்கும் தேவர்களுக்குத் தேவனான ஸ்தானுவை {சிவனை} அர்ஜுனன் எப்படிப் போர்க்களத்தில் திருப்திப்படுத்தினான் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தேவர்களின் சிறப்புமிக்க தலைவனான கபதர்தின் {சிவன்}, பல்குனனைச் {அர்ஜுனனைச்} சோதிக்க எண்ணி, வேடன் {கிராதன்} உரு கொண்டு அவனுடன் போரிட்டான். லோகபாலர்களும், தங்கள் ஆயுதங்களை அந்த குரு குல காளைக்கு {அர்ஜுனனுக்கு} கொடுக்க வேண்டி, அந்த அழிவில்லா சக்தி கொண்டவனுக்கு {அர்ஜுனனுக்கு} காட்சியளித்தனர்.
பல்குனனைத் {அர்ஜுனனைத்} தவிர உலகத்தில் வேறு எந்த மனிதன், சொந்த உருவங்களில் இருக்கும் அந்தத் தேவர்களைக் காண முயற்சி செய்வான்? எட்டு {8} உருவங்கள் கொண்ட மகேஸ்வரனாலேயே போர்க்களத்தில் அர்ஜுனனை பலவீனப்படுத்த முடியாதபோது, வேறு எவரால்தான் அவனைப் பலவீனப்படுத்த முடியும்? திரௌபதியை இழுத்து வந்ததால் கோபமூட்டப்பட்ட பாண்டுவின் மகன்களால் உமது மகன்கள் பயங்கரமான அச்சமூட்டும் பேரிடரை தாங்களாகவே வரவழைத்துக் கொண்டனர். திரௌபதிக்குத் தனது தொடைகள் இரண்டையும் காட்டிய துரியோதனனைக் கண்ட பீமன் நடுங்கும் உதடுகளுடன், "இழிந்தவனே, பதிமூன்று {13} வருடங்கள் கழிந்து, உனது அந்தத் தொடைகளை, கடுமையாக இறங்கும் எனது கதைகளைக் கொண்டு சிதைப்பேன்" என்று சொன்னான்.
பாண்டுவின் மகன்கள் அனைவரும் அடிப்பதில் முதன்மையானவர்கள்; அவர்கள் அனைவரும் அளவற்ற ஆற்றல்படைத்தவர்கள்; அவர்கள் அனைவரும் அனைத்து விதமான ஆயுதங்களையும் அறிந்திருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் தேவர்களாலும் வீழ்த்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் மணந்த மனைவியின் {திரௌபதியின்} அவமானத்தைக் கண்டு ஆத்திரமுற்ற பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்களான பாண்டவர்கள்}, கோபத்தால் உந்தப்பட்டு, போர்களத்தில் உமது மகன்களைக் கொல்வார்கள் என்று நான் கருதுகிறேன்" என்றான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் சொன்னான், "ஓ தேரோட்டியே {சஞ்ஜயனே}, பாண்டுவின் மகன்களிடம் அத்தகு கொடும் வார்த்தைகளைப் பயன்படுத்திய கர்ணன் எப்படிப்பட்ட கலக்கத்தை ஏற்படுத்துவிட்டான். கிருஷ்ணையைச் சபைக்கு இழுத்து வந்ததே பகைக்குப் போதுமான காரணியாக இல்லையா? அண்ணனும் குருவுமானவன் நேர்மையான பாதையில் நடக்காத போது எனது தீய மகன்கள் எப்படி உயிருடன் இருக்க முடியும்? பார்வையற்றவனாகவும், சுறுசுறுப்பாக இயங்கமுடியாதவனாகவும் என்னைக் கண்ட எனது இழிந்த மகன் {துரியோதனன்}, ஓ தேரோட்டியே {சஞ்சயா}, என்னை முட்டாள் என்று நம்பி எனது வார்த்தைகளைக் கேளாதிருக்கிறான். இழிந்தவர்களான கர்ணன், சுபலன் {சகுனி} மற்றும் அவனது {துரியோதனனின்} பிற ஆலோசகர்கள், எதையும் சரியாகப் புரிந்து கொள்ளத் திறனற்ற எனது மகனின் தீமைகளுக்கும் கீழ்த்தரமான இச்சைகளுக்கும் இடம் கொடுக்கிறார்கள் {அவனை ஊக்கப்படுத்துகிறார்கள்}.
அளவற்ற ஆற்றல் கொண்ட அர்ஜுனன் கோபத்துடன் அடிக்கும் கணைகளை விட்டு விட்டால் கூட, அவன் மெதுவாக அடிக்கும் கணைகளே எனது மகன்களை உட்கொண்டு விடும். மந்திரங்களால் தெய்வீகக் கணையாக மாற்றப்படும் பலம்வாய்ந்த அர்ஜுனனின் கணைகள் அவனது பெரிய வில்லில் இருந்து கிளம்பும் போது, தேவர்களைக் கூட அது தண்டித்துவிடுமே. மூவுலகங்களுக்குத் தலைவனும் ஹரியும் ஆனவனை {கிருஷ்ணனை} தனது ஆலோசகனாகவும், பாதுகாப்பாளனாகவும், நண்பனாகவும் கொண்டிருப்பவனான, பாவிகளை அடிப்பவன் {அர்ஜுனன்}, தன்னால் வெற்றிகொள்ள முடியாத எதையும் சந்திக்க மாட்டான். ஓ சஞ்சயா, மகாதேவனின் கரங்களால் அவன் அணைத்துக் கொள்ளப்பட்டான் என்று அர்ஜுனன் குறித்து நாம் கேள்விப்படுவது மிகவும் அற்புதமானதாகும்.
தாமோதரனால் உதவி செய்யப்பட்ட அர்ஜுனன், காண்டவ வனத்தை எரிப்பதில் அக்னிக்கு துணை செய்தது இந்த உலகத்தால் சாட்சியாகக் காணப்பட்டது. ஆகையால், பீமன், பார்த்தன் {அர்ஜுனன்}, சத்துவத குலத்தைச் சார்ந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகியோர் கோபம் கொண்டால், நிச்சயம் எனது மகன்களும், அவர்களது {எனது மகன்களின்} நண்பர்களும், சுபலர்களும் போரில் அவர்களுக்கு {பீமன், அர்ஜுனன், கிருஷ்ணனுக்கு} இணையாக மாட்டார்கள்" என்றான் {திருதராஷ்டிரன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.