The fear of Dhritarashtra | Vana Parva - Section 48 | Mahabharata In Tamil
(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)
அர்ஜுனன் குறித்த அச்சங்களை திருதராஷ்டிரன் சஞ்சனிடம் சொல்வது…
ஜனமேஜயன் சொன்னான், "அளவிடமுடியாத சக்தி படைத்த பிருதை மகனின் {குந்தி மகன் அர்ஜுனனின்} இந்த சாதனைகள் நிச்சயம் அற்புதமானவையே. ஓ அந்தணரே {வைசம்பாயணரே}, பெரும் விவேகம் கொண்ட திருதராஷ்டிரன இவற்றைக் கேள்விப்பட்ட போது என்ன சொன்னான்?"
வைசம்பாயனர் சொன்னார், "அம்பிகையின் மகனான மன்னன் திருதராஷ்டிரன், இந்திரலோகத்திற்கு அர்ஜுனனின் வருகையையும், இந்திரனின் வசிப்பிடத்தில் அவன் வசித்ததையும் முனிவர்களில் முதன்மையான துவைபாயனர்{வியாசர்} மூலம் அறிந்து சஞ்சயனிடம், "ஓ தேரோட்டியே, புத்திகூர்மையுள்ள அர்ஜுனனின் செயல்களை ஆதி முதல் அந்தம் வரை நான் கேட்டதுபடி நீ அறிவாயா? ஓ தேரோட்டியே {சஞ்சயா}, இழிந்த பாவியான எனது மகன் {துரியோதனன்} இப்போதும், மிக மோசமான கொள்கைகளிலேயே ஈடுபட்டுள்ளான். தீய ஆன்மா படைத்த அவன், நிச்சயம் பூமியின் மக்கள்தொகையைக் குறைத்துவிடுவான். எந்தச் சிறப்பு வாய்ந்த மனிதனின் கேலிப்பேச்சு கூட உண்மையாக இருக்கிறதோ, யாருக்காக தனஞ்சயன் {அர்ஜுனன்} போரிடுவானோ, அவன் {யுதிஷ்டிரன்} நிச்சயம் மூவுலகையும் வெல்வான். கல்லில் கூராக்கப்பட்ட கூர்முனைக் கணைகளை அர்ஜுனன் சிதறடிக்கும்போது, மரணத்திற்கும் சிதைவுக்கும் அஞ்சாத யார் தான் அவன் முன்னிலையில் நிற்க முடியும்?
வெல்லப்பட முடியாத பாண்டவர்களுடன் போரிட வேண்டிய எனது இழிந்த மகன்கள், நிச்சயமாக அழிந்து போவார்கள். இரவும் பகலும் இதுகுறித்தே சிந்தித்தும், காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்} முன்னால் நிற்கப் போகும் வீரனை நம்மில் ஒருவரிலும் நான் காணவில்லை. துரோணரும், கர்ணனும், பீஷ்மரும் அவனுக்கு எதிராகப் போர்க்களம் புகுந்தால், இந்தப் பூமியைப் பேரிடர் தாக்கும். கர்ணன் மறதியும் அன்பும் கொண்டிருப்பவனாதலால் அவன் {கர்ணன்} வழி வெற்றியை நான் காணவில்லை. குருவான துரோணர் முதிர்ந்தவராக இருக்கிறார். ஆனால் அந்த அர்ஜுனனின் ஆசான் {துரோணர்}, கோபம் கொண்டவராகவும், பலம் வாய்ந்தவராகவும், பெருமை கொண்டவராகவும், உறுதியான வீரம் கொண்டவராகவுமே இருக்கிறார். இந்த வீரர்கள் அனைவரும் ஒப்பற்றவர்களாக இருப்பதால், நடக்கப் போகும் சண்டை மிகப் பயங்கரமானதாக இருக்கும். அவர்கள் அனைவருமே ஆயுதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவும், பெரும் புகழ்வாய்ந்தவர்களாகவுமே இருக்கிறார்கள். உலகத்தின் ஆட்சியுரிமை தோல்வியால் பெறுவதாக இருந்தால் அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள்.
இவர்களின் மரணத்தாலோ அல்லது பல்குனனின் {அர்ஜுனனின்} மரணத்தாலோ மட்டுமே அமைதியை மீட்டெடுக்க முடியும். இருப்பினும், அர்ஜுனனை வெல்லக்கூடிய ஒரு மனிதன் இருக்கிறனோ இல்லையோ தெரியவில்லை. என்னைக் காரணமாகக் கொண்டு அவன் கொண்டிருக்கும் கோபத்தை எப்படித் தணிக்க முடியும்? தேவர்கள் தலைவனுக்குச் சமமான அந்த வீரன் {அர்ஜுனன்}, காண்டவத்தில் அக்னியைத் திருப்திப்படுத்தியதாலேயே, அந்தப் பெரும் ராஜசூய வேள்வியின் போது பூமியின் அனைத்து ஏகாதிபதிகைளயும் அவனால் வீழ்த்த முடிந்தது. ஓ சஞ்சயா, மலைமேல் விழும் வஜ்ராயுதம் {இடி} கூட அந்த மலையின் எந்தப் பகுதியையாவது உட்கொள்ளமால் மீதம் வைக்கும், ஆனால், ஓ குழந்தாய் {சஞ்சயா}, கீர்த்தியினால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட கணைகள் எதையும் மீதம் வைக்காது. சூரியனின் கதிர்கள் இந்த அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதவற்றை வெப்பமூட்டுவது போல, அர்ஜுனனின் கைகளால் அடிக்கப்பட்ட கணைகள் எனது மகன்களை எரித்துவிடும். சவ்யஸாசியான அர்ஜுனனுடைய அந்தத் தேரின் ஒலியால் உண்டான பயத்தால் பீடிக்கப்பட்ட பாரதர்களின் சாமூஸ் {சைனியம்} நான்கு பக்கங்களிலும் பிளக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. விதத்திரி {துர்கை}, எல்லாவற்றையும் அழிப்பவனாக அர்ஜுனனைப் படைத்திருக்கிறாள். எதிரியாகக் களத்தில் நிற்கும் அவன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான கணைகளை இறைப்பவனாக இருக்கிறான். அவனை {அர்ஜுனனை} வெல்லக்கூடிய யார் இருக்கிறார்?" என்று சொன்னான் {திருதராஷ்டிரன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.