Terrible battle will take place | Vana Parva - Section 51 | Mahabharata In Tamil
(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)
அர்ஜுனன் இல்லாத ஐந்து வருடங்களுக்கு அந்தணர்களுக்குப் பாண்டவர்கள் எப்படி உணவு கொடுத்தார்கள் என்பது பற்றி விவரிப்பு...
வைசம்பாயனர் சொன்னார், "மனிதர்களில் காளையான அம்பிகையின் மகன் திருதராஷ்டிரன், பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} அற்புதமான வாழ்க்கைமுறையைக் கேள்விப்பட்டு துன்பத்தில் ஆழ்ந்தான். துயரத்தில் மூழ்கிய அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, சூடாக பெருமூச்சுவிட்டபடி, தனது தேரோட்டியான சஞ்சயனிடம், "ஓ தேரோட்டியே {சஞ்சயா}, பழைய சூதாட்டத்தின் தொடர்ச்சியாக எனது மகன்களின் தீய நடத்தைகளையும், பாண்டு மகன்களின் பொறுமை, பெரும் புத்திகூர்மை, தாங்கிக்கொள்ளமுடியாத பராக்கிரமம், ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் இயல்புக்கு மிக்க அன்பு, வீரம் ஆகியவற்றையும் இரவும் பகலும் நினைத்து ஒருக் கணமும் நிம்மதியில்லாமலே இருக்கிறேன்.
பாண்டவர்களில், தெய்வீகப் பிறவிகளான சிறப்புமிக்க நகுலனும் சகாதேவனும் பிரகாசத்தில் தேவர்கள் தலைவனுக்கு நிகராகவும், போர்க்களத்தில் ஒப்பற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஆயுதங்களைக் கையாள்வதில் உறுதியாகவும், நீண்ட தூரத்திற்கும் கணையடிக்கும் திறனுடனும், போர்க்களத்தில் திடமாகவும், குறிப்பிடத்தக்க வகையில் கை லாவகமும், எளிதாக அடக்க முடியா கோபம் கொண்டவர்களாகவும், பெரும் உறுதியுடனும், சுறுசுறுப்புடனும் அவர்கள் இருக்கிறார்கள். சிங்கத்தின் வீரம் கொண்ட யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத அந்த அசுவினிகள் {நகுல சகாதேவ இரட்டையர்கள்}, போர்க்களத்தில் பீமனையும் அர்ஜுனனையும் முன்னே விட்டு வரும்போது, ஓ சஞ்சயா, எனது வீரர்கள் யாரும் மீதம் இல்லாமல் கொல்லப்படுவார்கள். போர்க்களத்தில் யாருக்கும் நிகரற்றவர்களும் தெய்வீகப் பிறவிகளுமான அந்த வீர்கள், திரௌபதிக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி கோபத்துடன் வரும்போது யாருக்கும் மன்னிப்பைக் காட்ட மாட்டார்கள்.
பெரும் பலம் வாய்ந்த விருஷ்ணி குல வீரர்களும், பெரும் சக்தி வாய்ந்த பாஞ்சாலர்களும், பிருதையின் மகன்களும் {பாண்டவர்களும்}. குழப்ப முடியா வீரம் கொண்ட வாசுதேவனின் தலைமையில் வரும்போது, எனது படையணியினரை வெடித்துச் சிதறடிப்பர். ஓ தேரோட்டியே {சஞ்சயா}, ராமனாலும் {பலராமனாலும்}, கிருஷ்ணனாலும் வழிநடத்தப்பட்ட மூர்க்கமான விருஷ்ணிகளை மட்டுமே கூட எனது பக்கம் கூடியிருக்கும் அனைத்து வீரர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்களில் பெரும் வீரனான பயங்கரமான சக்தி கொண்ட பீமன், அனைத்து வீரர்களையும் கொல்லும் தகுதி படைத்த தனது இரும்பு கதாயுதத்தை உயர்த்திப் பிடித்தபடி வருவான். கடும் இரைச்சலுக்கு மேலே வானத்தில் உள்ள இடியைப் போன்ற சத்தத்துடன் காண்டீவத்தின் நாணொலி கேட்கும். மூர்க்கமான பீமனின் கதாயுதத்தையும், காண்டீவத்தின் சத்தமான நாணொலியையும் எனது பக்கத்தில் இருக்கும் மன்னர்களால் எதிர்த்து நிற்க முடியாது. இதன்காரணமாகவே, ஓ சஞ்சயா, இதுவரை துரியோதனின் குரலுக்குக் கீழ்ப்படிந்த நான், இதற்கு முன் நான் மறுத்த, ஆனால் அந்த நேரத்தில் கடைப்பிடித்திருக்க வேண்டிய எனது நண்பர்களின் ஆலோசனைகளைத் திரும்ப நினைவுகூர்கிறேன்" என்றான்.
சஞ்சயன், "ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உம்மால் செய்ய முடிந்தும், உமது பிள்ளையின் மேல் கொண்டிருந்த பாசத்தினால் அதைச் செய்யாமல் விட்டது உமது பெருந்தவறு. மங்கா புகழ் கொண்ட வீரனான மதுவைக் கொன்றவன் {மதுசூதனன் = கிருஷ்ணன்}, பாண்டவர்கள் பகடையில் தோற்கடிக்கப்பட்டனர் என்பதைக் கேள்விப்பட்டு, விரைவாக காம்யக வனத்திற்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினான். திருஷ்டத்யும்னன் தலைமையில் வந்த திரௌபதியின் மகன்களும், விராடனும், திருஷ்டகேதுவும், பெரும் வீரர்களான கேகயர்களும் அங்கே சென்றனர். பாண்டு மகன்களின் பார்வையில் அந்த வீரர்கள் சொன்னதையெல்லாம் நமது ஒற்றர்கள் மூலமாக நான் அறிந்தேன். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவற்றை முழுமையாக உம்மிடம் சொல்லியிருக்கிறேன். மதுசூதனன் பாண்டவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் அவனை {கிருஷ்ணனை} போர்க்களத்தில் பல்குனனுக்கு {அர்ஜுனனுக்குத்} தேரோட்டியாக இருக்கும்படி கேட்டனர். ஹரியும் {கிருஷ்ணனும்}, "அப்படியே ஆகட்டும்" என்றான்.
பிருதையின் மகன்கள் மான் தோலை உடுத்தியிருப்பதைக் கண்ட கிருஷ்ணன் மிகவும் கோபம் கொண்டு யுதிஷ்டிரனிடம், "பிருதையின் மகன்கள் இந்திரப்பிரஸ்தத்தில் கொண்டிருந்த யாராலும் பெற முடியாத செல்வங்களை ராஜசுயத்தின் போது நான் கண்டிருக்கிறேன். அங்கே வங்கர்களையும், அங்கர்களையும், பௌந்தரர்களையும், ஓத்ரர்களையும், சோழர்களையும், திராவிடர்களையும், அந்தகர்களையும், பல தீவுகளின் தலைவர்களையும், சிங்கள ஆட்சியாளர்களையும் சேர்த்து கடலில் உள்ள பல நாடுகள் மற்றும் அதன் எல்லை மாநிலங்களின் தலைவர்கள், காட்டுமிராண்டி மிலேச்சர்கள், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், மேற்கில் உள்ள நூற்றுக்கணக்கான மன்னர்கள், கடற்கரைத் தலைவர்கள் அனைவரும், பாஹ்ல்வ மன்னன், தரதர்கள், பல்வேறு இனங்களான கிராதர்கள் {வேடர்கள்}, யவனர்கள், சக்ரர்கள், ஹரஹுனர்கள், சீனர்கள், துகாரர்கள், சிந்தவர்கள், ஜாகுடர்கள், ராமடர்கள், முண்டர்கள், பெண்ணரசு நடைபெறும் நாட்டில் வசிப்பவர்கள், தங்கணர்கள், கேகயர்கள், மாளவர்கள், காஷ்மீரத்துவாசிகள் ஆகியோர் உமது ஆயுதங்களின் பராக்கிரமத்திற்கு அஞ்சி, உமது அழைப்புக்குக் கீழ்ப்படிந்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது அலுவல்களை ஏற்றுச் செய்தனர். உறுதியற்ற அந்தச் செல்வங்கள் இப்போது எதிரியிடம் காத்திருக்கின்றன. எதிரியின் உயிரை மாய்த்து நான் உமக்கு அதை மீட்டுக் கொடுப்பேன்.
ஓ குருக்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, ராமன் {பலராமன்}, பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள், அக்ரூரர், கதன், சாம்பன், பிரதியும்னன், அஹூகர், வீரனான திருஷ்டத்யும்னன், சிசுபாலனின் மகன் ஆகியோரது உதவியைக் கொண்டு, துரியோதனன், கர்ணன், துச்சாசனன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரையும், நம்மை எதிர்த்துப் போரிடும் அனைவரையும் ஒரே நாளில் நான் கொல்வேன். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நீர் உமது தம்பிகளுடன் ஹஸ்தினாபுரத்தில் வாழ்ந்து, திருதராஷ்டிரன் கட்சியில் இருந்த பறித்த செல்வங்களை அனுபவித்து, இந்தப் பூமியை ஆள்வீர்" என்றான் {கிருஷ்ணன்}. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இவையே யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் பேசிய வார்த்தைகள். கிருஷ்ணனின் பேச்சின் இறுதியில் பேசிய யுதிஷ்டிரன், "ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நீ சொன்ன வார்த்தைகளை உண்மையாக ஏற்கிறேன். ஓ பலம்பொருந்திய கரங்கள் கொண்டவனே {கிருஷ்ணா}, பதிமூன்று {13} வருடங்கள் கழித்து நீ எனது எதிரிகளைக் கொன்றால் போதும். ஓ கேசவா {கிருஷ்ணா}, இதை எனக்கு சத்தியமாகச் சொல். நான் இப்போது கானகத்தில் வாழ்வதைப் போல வாழ்வேன் என்று மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} முன்னிலையில் சத்தியம் செய்திருக்கிறேன்" என்றான்.
நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் வார்த்தைகளுக்குச் சம்மதம் தெரிவித்து, திருஷ்டத்யும்னனின் தலைமையில் இருந்த ஆலோசகர்கள் அனைவரும் கோபம் கொண்ட கேசவனை {கிருஷ்ணனை} இனிமையான வார்த்தைகளையும், அந்தச் சூழ்நிலைக்கேற்ற உணர்வுகளையும் கொண்டு சமாதானம் செய்தனர். அவர்கள் அனைவரும் வாசுதேவனின் காதுபட தூய செயல்கள் கொண்ட திரௌபதியிடம், "ஓ மங்கையே, உனது கோபத்தின் தொடர்ச்சியாக துரியோதனன் தனது உயிரை விடுவான். ஓ அழகான நிறம் கொண்டவளே, அதை நாங்கள் உனக்கு சத்தியம் செய்து தருகிறோம். எனவே, மேலும் துயரங்கொள்ளாதே. ஓ கிருஷ்ணா {திரௌபதி}, பகடையில் வெல்லப்பட்ட உன்னைக் கண்டு கேலி பேசியவர்கள் அனைவரும் தங்கள் செயல்களுக்கான கனியை அறுவடை செய்வார்கள். இரை தேடும் விலங்குகளும், பறவைகளும் அவர்களின் சதைகளை உண்டு அவர்களை கேலி செய்யும். ஓநாய்களும் கழுகுகளும் அவர்களின் ரத்தத்தைக் குடிக்கும். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, உனது கூந்தலைப் பிடித்து இழுத்து வந்த அந்த இழிந்தவர்களின் உடல்களை பிணந்திண்ணி விலங்குகள் இழுத்துச் சென்று உண்ணும். உனக்கு வலியைக் கொடுத்தவர்களும், உன்னை அவமதித்தவர்களும், தலையற்றவர்களாக பூமியில் சாய்வார்கள். பூமியும் அவர்களது ரத்தத்தைக் குடிப்பாள்" என்றனர்.
ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த பாரத குலத்தின் காளைகளால், இவையும், பலதரப்பட்ட பேச்சுகளும் அங்கு பேசப்பட்டன. அவர்கள் அனைவரும் சக்தி வாய்ந்த வீரர்களாகவும், போர்க்காயங்களுடன் கூடியவர்களாகவும் இருந்தார்கள். பதிமூன்று {13} வருடங்கள் சென்றதும், யுதிஷ்டிரனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பலம்பொருந்திய வீரர்கள் அனைவரும் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தலைமையில் (போர்க்களத்திற்கு) வருவார்கள். ராமன் {பலராமன்}, கிருஷ்ணன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, பிரத்யும்னன், சாம்பன், யுயூதனன், பீமன், மாத்ரியின் மகன்கள், கேகய இளவரசர்கள், பாஞ்சால இளவரசர்கள், மத்ஸ்ய மன்னன் ஆகியோருடனும், இன்னும் சிறப்புமிக்க, கொண்டாடப்படும் ஒப்பற்ற வீரர்களுடனும், அவர்களின் வழி நடப்பவர்களுடனும், அவர்களது படையினரோடும் வருவார்கள். பிடரிமயிர் நிமிர்ந்து கோபத்துடன் இருக்கும் சிங்கத்தைப் போன்றவர்களுடன், உயிர் வாழ விரும்பும் யார்தான் போர்க்களத்தில் எதிர்த்து நிற்பார்கள்?" என்று கேட்டான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரன், "பகடையாட்டம் நடைபெறும் போது விதுரன் என்னிடம், "ஓ மன்னா, பாண்டவர்களை (பகடையில்) வீழ்த்த நினைத்தீரென்றால், அது நிச்சயம் பெரும் ரத்த சிந்தலுக்கும், குருக்களின் அழிவுக்கும் வழி வகுக்கும்" என்று சொன்னான். நான் அதை உணராதிருந்தது குறித்து சிந்திக்கிறேன். முன்பு விதுரன் என்னிடம் சொன்னது போல, பாண்டவர்களின் சபதம் முடியும் காலத்தில் சந்தேகமற பயங்கமான போர் நடக்கப்போகிறது" என்றான் {திருதராஷ்டிரன்}.
******************இந்திரலோகாபிகமன பர்வம் முற்றிற்று******************
******************இந்திரலோகாபிகமன பர்வம் முற்றிற்று******************
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.