The deceitful may be killed decieitfully | Vana Parva - Section 52a | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வம்)-(Nalopakhyana Parva)
யுதிஷ்டிரனும் பீமனும் பேசிக்கொண்டிருக்கும்போது வந்த பிருகதஸ்வர் என்ற முனிவர் யுதிஷ்டிரனுக்கு நளன் கதையை சொல்ல ஆரம்பித்தது...
ஜனமேஜயன் சொன்னான், "உயர் ஆன்மா கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} ஆயுதங்களைப் பெறுவதற்காக இந்திரலோகம் சென்ற பிறகு, யுதிஷ்டிரனும், பாண்டுவின் மற்ற மகன்களும் என்ன செய்தனர்?"
வைசம்பாயனர் சொன்னார், "உயர் ஆன்மா கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} ஆயுதங்களைப் பெறுவதற்காக இந்திரலோகம் சென்ற பிறகு, அந்த பாரதக் காளைகள் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} தொடர்ந்து காம்யக வனத்திலேயே வசித்தனர். ஒருநாள், துயரத்தில் ஆழ்ந்து, அந்த பாரதர்களில் முதன்மையானவர்கள் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சுத்தமான தனித்த பசுமையான புல்வெளியில் அமர்ந்திருந்தனர். தனஞ்சயனுக்காக {அர்ஜுனனுக்காக} வருந்தி, துயரத்தில் மூழ்கி, அழுகையால் அவர்களின் {பாண்டவர்களின்} குரல் தடைப்பட்டு வெளிவந்தது. தனஞ்சயனின் பிரிவு அவர்களை {பாண்டவர்களைச்} சித்திரவதை செய்த அதே அளவு துன்பமும் அவர்களை வாட்டியது. அர்ஜுனன் பிரிவாலும், நாட்டை இழந்ததாலும் துன்புற்றிருந்த பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட பீமன் யுதிஷ்டிரனிடம், "ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, பாண்டு மகன்களின் உயிர்கள் யாரை நம்பியிருக்கிறதோ, யார் இறந்தால் நம்மைப் போன்றும் நமது பிள்ளைகளைப் போன்றும் பாஞ்சாலர்களும், சாத்யகியும், வாசுதேவரும் {கிருஷ்ணரும்} நிச்சயம் இறந்து போவார்களோ அந்த பாரதக்குலக் காளையான அர்ஜுனன், உமது கட்டளையின் பேரில் சென்றுவிட்டான். உமது கட்டளையின் பேரில், அவனது பல துயரங்களை நினைத்துக் கொண்டு அந்த அறம் சார்ந்த பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} சென்றுவிட்டான் என்பதைவிட சோகம் நிறைந்தது எது இருக்கிறது? அந்த சிறப்பு மிக்க வீரனுடைய {அர்ஜுனனுடைய} கரங்களின் பலத்தை நம்பியே, நாம் நமது எதிரிகளைப் போர்க்களத்தில் ஏற்கனவே தோற்கடித்தவிட்டோம் என்றும், முழு உலகத்தையும் அடைந்துவிட்டோம் என்றும் கருதி வருகிறோம்.
அந்த வீரன் {அர்ஜுனன்} சொன்னதன் நிமித்தமாகவே சபையின் நடுவே கூடியிருந்த சுபலர்களையும் திருதராஷ்டிரர்களையும் கொல்வதில் இருந்து பின்வாங்கினேன். பலம்வாய்ந்த கரங்களைக் கொடையாகக் கொண்டும், வாசுதேவனால் {கிருஷ்ணனால்} தாங்கப்பட்டும், நீரே எங்களது கோபத்திற்கான வேர்க்காரணம் என்பதால் எங்கள் கோபங்களைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. உண்மையில் கிருஷ்ணனின் உதவியுடன், கர்ணனின் தலைமையில் இருக்கும் நம் எதிரிகளைக் கொன்று, இந்த முழு உலகத்தையும் நம் கரங்களின் பலத்தால் அடையலாம். ஆண்மையுடன் கூடியவர்களாக இருந்தும், சூதாட்டத்தால் பேரிடரில் மூழ்கி இருக்கிறோம். அதே நேரம் வெற்று முட்டாள்களான திருதராஷ்டிரர்கள் (அவர்களை நம்பியிருக்கும் மன்னர்கள் கொடுக்கும்) காணிக்கைகளால் வளர்ந்து வருகின்றனர்.
ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, க்ஷத்திரியக் கடமைகளை மனதில் நிறுத்துவதே உமக்குத் தகும். ஓ பெரும் மன்னா, கானகத்தில் வாழ்வது க்ஷத்திரியக் கடமையல்ல {க்ஷத்திரிய தர்மம் அல்ல}. ஓ மன்னா, க்ஷத்திரிய அறநெறிகளை அறிந்தவர் நீர். ஆள்வதே க்ஷத்திரியர்களின் முதல் கடமை என்று ஞானமுள்ள விவேகிகள் கருதுகின்றனர். ஆகையால், கடமையின் பாதையில் இருந்து பிறழாதீர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உடனே நாம் இக்கானகத்தில் இருந்து கிளம்பி, பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} வரவழைத்து, பனிரெண்டு வருடங்கள் கழியுமுன்பே திருதராஷ்டிரர் மகன்களைக் கொன்றுவிடலாம்.
ஓ சிறப்பு வாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஓ மன்னர் மன்னா, அந்த திருதராஷ்டிரர்கள் வரிசையாக நிற்கும் பல போர்வீரர்களால் சூழப்பட்டிருந்தாலும், நான் தனியாளாக, எனது வலிமை மூலம் மட்டும் அவர்களை வேறு உலகத்திற்கு அனுப்பி வைப்பேன். நான் திருதராஷ்டிரன் மகன்கள் அத்தனை பேரையும் சுபலர்களுடன் சேர்த்து, துரியோதனன், கர்ணன் மற்றும் யாரெல்லாம் என்னோடு சண்டையிடுவார்களோ அத்தனை பேரையும் நிச்சயம் கொல்வேன். நான் அனைத்து எதிரிகளையும் கொன்ற பிறகு, நீர் கானகத்திற்கு திரும்பி வரலாம். இப்படிச் செயல்படுவதால், ஓ மன்னா, (அந்தப் போரால் ஏற்படும் பாவங்களால்) எந்த களங்கமும் உம் மேல் கற்பிக்கப்படாது. ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதியே, ஓ தந்தையே, பலவகையான வேள்விகளால் அவற்றைக் {பாவங்களைக்} கழுவி நாம் மேன்மையான சொர்க்கத்தை அடையலாம். அத்தகைய முழுமை எங்கள் மன்னர் {யுதிஷ்டிரன்}, விகேமற்றவராக இருந்தாலோ அல்லது காலந்தாழ்த்துபவராக இருந்தாலோ நம்மைக் கடந்து வரக்கூடும். ஆனால் நீரோ அறம்சார்ந்தவராக இருக்கிறீர். வஞ்சகர்களை நிச்சயம் வஞ்சகத்தாலேயே கொல்ல வேண்டும். வஞ்சகர்களை வஞ்சகத்தால் கொல்வது பாவமாகக் கருதப்படுவதில்லை.
ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, அறநெறிகளை நன்கு உணர்ந்தவர்களால், ஓ பெரும் இளவரசே {யுதிஷ்டிரரே}, ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்து ஒரு வருடத்திற்கு சமம் என்று சொல்லப்படுகிறது. மேன்மையானவரே, கடுமையான விரதங்கள் இருந்து கழிக்கப்படும் ஒரு நாள் ஒரு வருடத்திற்கு சமானம் என்று வேத வார்த்தைகளிலும் கேட்கப்படுகிறது. ஓ மங்காப் புகழ் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, வேதங்களின் அதிகாரத்தை நீர் ஏற்கிறீர் என்றால், ஒரு நாளையும், அதைவிட அதிகமாகவும் ஒரு காலத்தைத் தேர்ந்தெடுத்து அதை பதிமூன்று {13} வருடங்களுக்கு சமமாக கருதிக்கொள்ளும். ஓ எதிரிகளை ஒடுக்குபவரே, துரியோதனனையும் அவனைத் தொடர்பவர்களையும் கொல்வதற்கு இதுவே சமயமாகும். அல்லது, ஓ மன்னா, குறித்த காலத்திற்கு முன்னரே, அவன் அனைத்து உலகத்தையுத் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்துவிடுவான். ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவரே, இவையனைத்தும் நீர் சூதுக்கடிமையாக இருந்ததால் விளைந்த காரியங்களே.
ஒரு வருடம் யாரும் அறியாமல் தலைமறைவாக வாழ்வதாக நீர் உறுதி அளித்திருப்பதன் தொடர்ச்சியாக, நாம் ஏற்கனவே அழிவின் ஆரம்பத்தில் இருக்கிறோம். தீய மனம் கொண்ட துரியோதனன், தனது ஒற்றர்களைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாத எந்த நாட்டையும நான் காணவில்லை. அந்த இழிந்தவன் நம்மைக் கண்டுபிடித்து, மீண்டும் வஞ்சகமாக நாடு கடத்துவான். அந்தப் பாவியால் குறித்த காலத்திற்குள் நம்மைக் கண்டுபிடிக்க இயவில்லை என்றாலும், ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மை மீண்டும் பகடைக்கு அழைப்பான். மீண்டும் விளையாட்டு நடக்கும். மீண்டும் நீர் அழைக்கப்பட்டால், மீண்டும் பகடையாடி நீரே உம்மை துடைத்தழித்துக்கொள்வீர்.
நீர் பகடையில் திறம்படைத்தவர் அல்ல. அதை விளையாட ஆரம்பித்தால், நீர் உமது உணர்வுகளை இழந்துவிடுவீர். ஆகையால், ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா, நீர் மீண்டும் கானக வாழ்க்கையையே ஏற்க வேண்டி வரும். ஓ பெரும்பலம் வாய்ந்த மன்னா, வேதங்களின் விதிகளை முழுமையாக கடைபிடியும். இழிந்த வாழ்வை ஏற்பது உமக்குத் தகாது. வஞ்சகர்கள் கொல்லப்பட வேண்டும். உமது கட்டளையின் பேரில் நான் (ஹஸ்தினாபுரம்) சென்றால், புற்குவியலின் மேல் நெருப்பு விழுவது போல, எனது பலம் அனைத்தையும் செலுத்தி துரியோதனனைக் கொல்வேன். ஆகையால், எனக்கு அனுமதி கொடுப்பதே உமக்குத் தகும்" என்றான் {பீமன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.