Swan as love messenger | Vana Parva - Section 53 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
நளன், பீமன், தமயந்தி குறித்து பிருகதஸ்வர் வர்ணிப்பது; அன்னம் நளனிடம் பேசுவது; அன்னம் தமயந்தியிடம் பேசுவது...
பிருகதஸ்வர் சொன்னார், "வீரசேனன் மகனான நளன் என்றொரு மன்னன் இருந்தான். அவன் {நளன்} பலம் வாய்ந்தவனாகவும், அழகனாகவும், குதிரைகளை (குதிரைகள் பற்றிய அறிவை) அறிந்தவனாகவும், விரும்பிய அனைத்து சாதனைகளைச் செய்தவனாகவும் இருந்தான். அவன் {நளன்} தேவர்களுக்குத் தலைவனைப் போல மன்னர்களுக்குத் தலைமையானவனாக இருந்தான். எல்லோருக்கும் மேம்பட்டவனான அவன், புகழில் சூரியனைப் போல இருந்தான். அவன் நிஷாதர்களுக்கு மன்னனாக இருந்து, வேதமறிந்த அந்தணர்களின் நன்மையில் எண்ணம் உள்ளவனாகவும், பெரும் வீரத்தைக் கொண்டவனாகவும் இருந்தான். அவன் {நளன்} உண்மை பேசுபவனாகவும், பகடையில் விருப்பம் உள்ளவனாகவும், பெரும் பலம் வாய்ந்த படைக்குத் தலைவனாகவும் இருந்தான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அன்பால் விருப்பமுள்ளவனாகவும், பெரும் ஆன்மாவால் ஆசைகளை அடக்கியும் வாழ்ந்தான். அனைவரையும் காத்து, வில்லாளிகளில் முதன்மையானவனாக இருந்து, மனுவைப் போன்றவனாக இருந்தான்.
அவனை {நளனைப்} போலவே விதரப்பர்கள் {விதரப்ப நாட்டு மக்கள்} மத்தியில், பீமன் என்றொருவன் (பீமன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன்) இருந்தான். அவனும் {பீமனும்} பயங்கரமான பராக்கிரமும், வீரமும் கொண்டவனாகவும், குடிமக்களுக்கு நன்மை செய்பவனாகவும், அனைத்து அறங்கள் கொண்டவனாகவும் இருந்தான். ஆனால், (இவையெல்லாம் இருந்தும்), பிள்ளையில்லாதிருந்தான். அவன் நிலைத்த மனதோடு, ஒரு பிள்ளையைப் பெறுவதற்காக தன்னால் ஆன அளவு முயன்றான்.
ஓ பாரதா {யுதிஷ்டிரா}, (ஒரு நாள்), அவனிடம் தமனர் என்ற பிரம்ம முனிவர் {பிரம்மரிஷி}, வந்தார். ஓ மன்னர் மன்னா {யுதிஷ்டிரா}, அறநெறிகளை அறிந்த பீமன், பிள்ளை பெற விரும்பி, தனது மனைவியுடன் சேர்ந்து அந்த சிறப்புமிக்க முனிவரை மரியாதையுடன் வரவேற்று திருப்தி செய்தான். இதனால் மிகவும் மகிழ்ந்த தமனர், அந்த மன்னனுக்கும் {பீமனுக்கும்} அவனது மனைவிக்கும் ரத்தினம் போன்ற மகளையும், உயர்ந்த ஆன்மாவும், பெரும் புகழையும் கொண்ட மூன்று மகன்களையும் வரமாகக் கொடுத்தார். அவர்கள் {அந்தக் குழந்தைகள்) முறையே தமயந்தி, தமன், தாந்தன், தமனன் ஆவர். அந்த மூன்று மகன்களும் அனைத்து சாதனைகளையும் செய்பவர்களாகவும், கொடூரமான முகத்தோற்றம் கொண்டவர்களாகவும், கடும் பராக்கிரம் கொண்டவர்களாகவும் இருந்தனர். கொடியிடை கொண்ட தமயந்தி, அழகாலும், பிரகாசத்தாலும், அருளாலும், அதிர்ஷ்டத்தாலும், உலகத்தால் கொண்டாடப்படுபவள் ஆனாள். அவள் பருவ வயதை அடைந்த போது, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான பெண் பணியாட்களும், பெண் அடிமைகளும், சச்சிக்காக {இந்திரனின் மனைவிக்காக} காத்திருப்பதைப் போல அவளுக்காக காத்திருந்தனர்.
பீமனின் மகளான அந்தக் களங்கமற்றவள் {தமயந்தி}, அனைத்து ஆபரணங்களும் பூண்டு, மேகங்களில் இருக்கும் பிரகாசமான மின்னல் போல, தனது பணிப்பெண்களுக்கு மத்தியில் பிரகாசித்தாள். அகன்ற விழி கொண்ட அந்த மங்கை {தமயந்தி}, ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போலவே பெரும் அழகு படைத்திருந்தாள். தேவர்களுக்கு மத்தியிலோ, யக்ஷர்களுக்கு மத்தியிலோ, மனிதர்களுக்கு மத்தியிலோ அதைப்போன்ற அழகு கொண்ட பெண்ணை அதற்கு முன்னர் யாரும் கேள்விப்பட்டதோ, பார்த்ததோ கிடையாது. அந்த அழகான மங்கை, மகிழ்ச்சியால் தேவர்களின் இதயத்தைக் கூட நிறைத்தாள்.
மனிதர்களில் புலியான நளன், மூன்று உலகத்திலும் தனக்கு இணை இல்லாதவனாக இருந்தான். அவன் அழகில் மனித உரு கொண்ட கந்தர்பன் {மன்மதன்} போல இருந்தான். இவற்றால் வியப்படைந்த கட்டியக்காரர்கள் திரும்பத் திரும்ப நளனின் பெருமைகளைக் கொண்டாடி தமயந்தியிடத்திலும், தமயந்தியின் பெருமைகளை நிஷாத ஆட்சியாளன் {நளன்} இடத்திலும் புகழ்ந்தார்கள். திரும்பத் திரும்ப ஒருவர் நற்குணங்களை மற்றவர்கள் கேள்விப்பட்டு ஒருவர் மேல் ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே ஈர்க்கப்பட்டனர். அந்த ஈர்ப்பு, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா} வளர ஆரம்பித்தது.
பிறகு, நளன் தனது இதயத்தில் இருந்த காதலைக் கட்டுப்படுத்த முடியாதவனானான். அவன் நீண்ட நேரத்தைத் நந்தவனத்துடன் சேர்ந்த தனது உள் அறையில் {அரண்மனையில்} கழிக்க ஆரம்பித்தான். அங்கே {நந்தவனத்தில்}, அந்த வனத்தில் தங்க இறகுகள் கொண்ட அன்னங்கள் பல உலவுவதைக் கண்டான். அவற்றில் ஒன்றைத் தன் கரங்களால் பற்றினான். அதன் காரணமாக அந்த விண்ணதிகாரி {அன்னம்}, நளனிடம், "உன்னால் நான் கொல்லப்படலாகாது. ஓ மன்னா, நான் உனக்கு ஏற்புடைய ஒரு காரியத்தைச் செய்வேன். ஓ நிஷாதர்களின் மன்னா {நளனே}, உன்னைத் தவிர வேறு யாரையும் (தனது தலைவனாக அடைய) தமயந்தி விரும்பாதவாறு, அவளிடம் நான் உன்னைக் குறித்துப் பேசுவேன்" என்றது.
இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {நளன்}, அந்த அன்னத்தை விடுவித்தான். அந்த அன்னப்பறவைகள் தங்கள் சிறகுகளை விரித்து விதரப்ப நாட்டுக்குச் சென்றன. விதரப்ப நாட்டுக்கு வந்த அந்தப் பறவைகள், அவற்றைக் கண்ட தமயந்தியின் முன் பறந்தன. பணிப்பெண்களுக்கு மத்தியில் இருந்த தமயந்தி, இயல்புக்கு மிக்க தோற்றம் கொண்ட அந்தப் பறவைகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, நேரத்தைக் கடத்தாமல் அந்த விண்ணதிகாரிகளைப் {அன்னங்களைப்} பிடிக்க முயன்றாள். இதன் காரணமாக, அந்த அன்னங்கள், அந்த அழகான மங்கையர் கூட்டத்திற்கு முன்பு, எல்லா திசைகளிலும் பறந்தன. அந்த மங்கையரும் ஒவ்வொருவரும் ஒரு அன்னத்தின் பின்னாக அந்தப் பறவைகளைத் தொடர்ந்து சென்றனர். தமயந்திக்கு முன் ஓடிய அன்னம், அவளை {தமயந்தியைத்} தனிமையான இடத்திற்குப் பிரித்து அழைத்துச் சென்று, மனிதக் குரலில் அவளிடம், "ஓ தமயந்தி, நிஷாதர்களில் நளன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன் இருக்கிறான். அவன் அசுவினிகளின் அழகுக்கு நிகராக, மனிதர்களுக்கு மத்தியில் தனக்கு இணை இல்லாதவனாக இருக்கிறான். உண்மையில் அவன் மனித உரு கொண்ட கந்தர்பன் {மன்மதன்} போல இருக்கிறான். ஓ அழகான நிறம் கொண்டவளே, ஓ கொடியிடையாளே, நீ அவனுக்கு மனைவியானால், நீ வாழ்வதற்கும், உனது அழகுக்கும் ஒரு காரணம் இருக்கும். நாங்கள் தேவர்களையும், கந்தர்வர்களையும், நாகர்களையும், ராட்சசர்களையும், மனிதர்களையும் கண்டிருக்கிறோம். ஆனால் நளனைப் போன்ற ஒருவனை நாங்கள் இதுவரை கண்டதில்லை. ஆண்களில் நளன் தலைமையானவன் ஆனது போல, நீயும் உனது பாலினத்தில் {பெண்ணினத்தில்} ரத்தினம் தான். சிறந்தவர்களுடன் சிறந்தவர்கள் சேரும் போதே மகிழ்ச்சி ஏற்படுகிறது" என்றான் {அன்னப்பறவை}.
ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, அன்னத்தால் இப்படிச் சொல்லப்பட்ட தமயந்தி, அவனிடம் {அன்னத்திடம்}, "நீ இதே போல நளனிடமும் {அவரிடமும்} சொல்" என்றாள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, "அப்படியே ஆகட்டும்" என்று விதரப்பனின் மகனிடத்தில் சொன்ன அந்த முட்டையிடும் இனத்தைச் சேர்ந்தவன் {அன்னப்பறவை}, நிஷாதர்களின் நாட்டிற்குத் திரும்பி, அனைத்தையும் நளனிடம் கூறினான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.