Celestials desired for Damayanti| Vana Parva - Section 54 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
நளன் குறித்த நினைவுகளால் தமயந்தி மெலிந்து போவது; அவளது நிலையை அவளது தந்தையான பீமன் உணர்ந்து சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்வது; தேவலோகத்தில் நாரதர் இந்திரனிடம் அச்சுயம்வரத்தைக் குறித்து சொல்லும்போது லோகபாலர்களும் அதைக் கேட்டுவிட்டு தமயந்தியை விரும்புவது; சுயம்வரத்திற்குச் செல்லும் வழியில் தேவர்கள் நளனைச் சந்திப்பது…
பிருகதஸ்வர் சொன்னார், "ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அன்னம் பேசிய வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து தமயந்தி நளனைக் குறித்து தனது மன அமைதியை இழந்தாள். அடிக்கடி பெருமூச்சுவிட்டபடி, பதட்டமடைந்து துக்கத்தில் மூழ்கியதால், முகம் வெளிறி, உடல் மெலிவடைந்தாள். அவள் இதயத்தை காதல் தேவன் அடைந்ததால், அவள் விரைவில் நிறம் இழந்து, விழி படபடத்து சுருங்கி விரிந்து, மனம் பிறழ்ந்தவள் போன்ற தோற்றத்தைப் பெற்றாள். படுக்கை, இருக்கைகள், இன்பநுகர் பொருட்கள் என்று எதிலும் ஆசையற்றவளாக இருந்தாள். பகலும் இரவும் கீழே படுத்து ஓ! என்றும் ஐயோ! எனும் ஆச்சரிய ஒலிகளுடன் அழுது கொண்டிருந்தாள்.
சஞ்சலமடைந்து வீழ்ந்த நிலையில் இருந்த அவளின் {தமயந்தியின்} நிலையைக் கண்ட பெண் பணியாட்கள், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவளது நோயைக் குறித்து விதரப்ப ஆட்சியாளனிடம் {பீமனிடம்} மறைமுக பொருளுடன் சொன்னார்கள். பெண் பணியாட்களின் மூலம் தமயந்தின் நிலையை கேள்விப்பட்ட மன்னன் பீமன், தனது மகளின் {தமயந்தியின்} விவகாரம் தீவிரமானது எனக் கருதினான். அவன் {பீமன்} தனக்குள்ளேயே, "ஏன் எனது மகள் இப்போது நோய்ப்பட்டவள் போலத் தெரிகிறாள்?" என்று கேட்டுக் கொண்டான். தனது மகள் பருவ வயது அடைந்ததை நினைவு கூர்ந்த மன்னன் {பீமன்}, தமயந்தியின் சுயம்வரம் நடக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தான்.
ஓ மேன்மையானவனே {யுதிஷ்டிரா}, பிறகு அந்த ஏகாதிபதி {பீமன்}, பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரிடமும் {அவர்களை அழைத்து}, "வீரர்களே, தமயந்தியின் சுயம்வரம் நடக்க இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்" என்றான். தமயந்தியின் சுயம்வரத்தைக் கேள்விப்பட்ட அனைத்து மன்னர்களும் பீமனிடம் வந்து, அவனது தூதை ஏற்கும் வகையில், பூமியை தங்கள் தேர்ச்சக்கரங்களின் ஒலியாலும், தங்கள் யானைகளின் பிளிறலாலும், தங்கள் குதிரைகளின் கனைப்பொலிகளாலும் நிறைத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு காண்பதற்கு அருமையானவையாக இருக்கும் தங்கள் படைகளுடனும், அருள் நிறைந்த மாலைகளுடனும் வந்தனர். பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட பீமனும் அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதிகளுக்கு உரிய மரியாதையை வழங்கினான். அவனால் {பீமனால்} முறைப்படி மரியாதைசெய்யப்பட்ட அவர்கள் {அந்த ஏகாதிபதிகள்}, அங்கேயே வசித்தார்கள்.
இந்தச் சூழ்நிலையில் தேவ முனிவர்களில் முதன்மையான பிரகாசம் மிக்கவர்களும், பெரும் விவேகிகளும், பெரும் நோன்புகள் நோற்பவர்களுமான நாரதரும் பர்வதரும், இந்திரலோகத்தில் பயணம் மேற்கொண்டிருந்த போது இறவாதவர்கள் தலைவனின் {இந்திரனின்} மாளிகைக்குள் நுழைந்து உரிய வழிபாட்டைப் பெற்றனர். அவர்களை மரியாதையுடன் வழிபட்ட மகவத் {இந்திரன்}, அவர்களின் சிதைவுறாத அமைதியைக் குறித்தும், அனைத்து விதமான நன்மைகள் குறித்தும் கேட்டான். அதற்கு நாரதர், "ஓ தலைவா, ஓ தெய்வீகமானவனே, எல்லாவிதத்திலும் அமைதி எங்களுடன் இருக்கிறது. ஓ மகவத் {இந்திரா}, ஓ மேன்மையானவனே, முழு உலகத்தில் இருக்கும் மன்னர்களிடத்திலும் அமைதி நிலவுகிறது" என்றார்.
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "பலனையும், விரித்திரனையும் {Vala and Vritra} கொன்றவன் {இந்திரன்), நாரதரின் வார்த்தைகளைக் கேட்டு, "அறம் அறிந்த பூமியின் ஆட்சியாளர்கள், வாழ்வின் அனைத்து விருப்பங்களையும் துறந்து சண்டையிட்டு, களத்தைவிட்டு புறமுதுகிட்டு ஓடாமல் ஆயுதங்களால் மரணத்தை அடைந்து, இந்த உலகத்தை அடைவார்கள். இந்த உலகம் {இந்திரலோகம்} எனக்கு எப்படி இருக்கிறதோ அவர்களுக்கும் அப்படியே அவர்கள் விருப்பங்களையெல்லாம் கொடுத்து நிரந்தரமானதாக இருக்கும். அப்படிப்பட்ட அந்த க்ஷத்திரிய வீரர்கள் எங்கே? அந்த மன்னர்கள் (இப்போது) என்னை அணுகுவதில்லையே. எனக்குப் பிடித்தமான அந்த விருந்தினர்கள் எங்கே?" என்று கேட்டான் {இந்திரன்}.
இப்படி சக்ரனால் {இந்திரனால்} கேட்கப்பட்ட நாரதர், "ஓ மகவத்தே {இந்திரனே}, ஏன் (இங்கே, இப்போது) நீ மன்னர்களைப் பார்ப்பதில்லை என்பதைக் கேள். விதரப்ப நாட்டை ஆளும் ஆட்யாளனுக்கு தமயந்தி என்று கொண்டாடப்படும் ஒரு மகள் இருக்கிறாள். பூமியில் உள்ள பெண்களின் அழகையெல்லாம் அவள் மீறி இருக்கிறாள். ஓ சக்ரா {இந்திரா}, அவளது சுயம்வரம் விரைவில் நடக்க இருக்கிறது. அங்கே எல்லா திசைகளில் இருந்தும் அனைத்து மன்னர்களும் இளவரசர்களும் செல்கிறார்கள். ஓ பலனையும், விரித்திரனையும் கொன்றவனே, அந்த பூமியின் முத்தான அவளை {தமயந்தியை} அடைய பூமியின் அனைத்து தலைவர்களும் ஆர்வத்துடன் விரும்புகிறார்கள்" என்று மறுமொழி கூறினார் {நாரதர்}.
அவர்கள் அப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, இறவாதவர்களில் முதன்மையானவர்களும், அக்னியைத் தங்கள் மத்தியில் கொண்டவர்களுமான லோகபாலர்கள், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} முன்னால் தோன்றினர். நாரதர் சொன்ன கனமான செய்திகள் அனைத்தையும் அவர்கள் அனைவரும் கேட்டனர். அதைக் கேட்ட உடனேயே "நாங்களும் அங்கு செல்லப்போகிறோம்" என்று அவர்கள் அனைவரும் பேரானந்தத்துடன் உரத்துச் சொன்னார்கள். ஓ பலமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அவர்கள் அனைவரும் தங்கள் பணியாட்களுடன் தங்கள் தங்கள் வாகனங்களில், மன்னர்கள் அனைவரும் எங்கிருக்கின்றனோ {எங்கு சென்றார்களோ} அந்த விதரப்ப நாட்டிற்குக் கிளம்பினர்.
ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, உயர் ஆன்மா கொண்ட மன்னன் நளனும் மன்னர்கள் கூட்டத்தைக் கேள்விப்பட்டு, தமயந்தியின் மீதான காதலாலும் மகிழ்ச்சியாலும் நிறைந்த இதயத்துடன் கிளம்பினான். பூமியின் மீது பயணித்துக் கொண்டிருந்த நளனைத் தேவர்கள் {காணும்படி நேர்ந்தது} கண்டனர். உருவ அழகில் காம தேவனைப் {மன்மதன்} போலவே இருந்தான். சூரியனைப் போன்று பிரகாசித்த அவனைக் கண்ட லோகபாலர்கள் அவனது அழகெனும் செல்வத்தைக் கண்டு வியப்பால் நிறைந்து, தாங்கள் விரும்பிய நோக்கத்தைக் கைவிட்டனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் தேர்களை வானத்திலேயே விட்ட சொர்க்கவாசிகள், ஆகாயத்தில் இருந்து இறங்கி, நிஷாதர்களின் ஆட்சியாளனிடம் {நளனிடம்}, "ஓ நிஷாதர்களை ஆளும் ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, ஓ நளனே, நீ உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறாய். நீ எங்களுக்கு உதவி செய். ஓ மனிதர்களில் சிறந்தவனே, நீ எங்களுக்குத் தூதுவனாகச் செயல்படு" என்றனர் {தேவர்கள்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.