Nala and Pushkara gambled | Vana Parva - Section 59 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
கலியால் உபதேசிக்கப்பட்ட புஷ்கரன், தமயந்தியின் முன்னிலையில் நளனைச் சூதாட அழைத்தல்; நளனும் புஷ்கரனும் பல மாதங்களுக்குச் சூதாடியது...
பிருகதஸ்வர் சொன்னார், "இப்படி துவாபரனுடன் {துவாபர யுகத்துடன்} உடன்பாடு செய்து கொண்ட கலி {கலியுகம்} நிஷாத மன்னன் {நளன்} இருந்த அரண்மனைக்கு வந்தான். அவனிடம் ஏதாவது ஓட்டையைக் {குறையைக்} கண்டுபிடிப்பதற்காக, அந்த நிஷாதர்களின் நாட்டில் பல காலம் தொடர்ந்து வசித்தான். இப்படி காத்திருந்த கலி, பனிரெண்டாவது {12} வருடத்தில்தான் ஒரு ஓட்டையைக் கண்டுபிடித்தான். ஒருநாள், இயற்கையின் அழைப்புக்கு பதில் சொல்லிவிட்டு {ஜலமோஜனம் = சிறுநீர் கழித்துவிட்டு}, காலைக்கழுவாமல், நீரை மட்டும் தொட்டுவிட்டு, தனது சந்தி கால வழிபாட்டைச் செய்தான்.
இதனால் {இந்தப் புறக்கணிப்பால்}, கலி அவனது உடலுக்குள் புகுந்தான். நளனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, புஷ்கரன் முன்பு தோன்றி, அவனிடம், "வா வந்து நளனுடன் பகடை விளையாடு. எனது உதவியின் பேரில் நீ நிச்சயம் வெல்வாய். மன்னன் நளனை வீழ்த்தி, அவனது நாட்டை அடைந்து, நிஷாதர்களை நீ ஆட்சி செய்வாய்" என்றான் {கலி}.
கலியால் இப்படி உபதேசிக்கப்பட்ட புஷ்கரன் நளனிடம் சென்றான். முக்கியமான பகடைக்காயாகி, விருஷன் {காளை} என்ற பெயரோடு புஷ்கரனை அணுகினான் துவாபரன். எதிரிவீரர்களைக் கொல்லும் போர்க்குணமுள்ள நளன் முன்பாக புஷ்கரன் தோன்றி, திரும்பத் திரும்ப அவனிடம் {நளனிடம்}, "நாம் இருவரும் சேர்ந்து பகடை விளையாடுவோம்" என்று கேட்டான். தமயந்தியின் முன்னால் இப்படி சவால்விடப்பட்ட அந்த உயர்ந்த எண்ணம் கொண்ட மன்னனால் {நளனால்} அதை நிராகரிக்க முடியவில்லை. அதன் தொடர்ச்சியாக அவன் ஆட்டத்துக்கான நேரத்தைக் குறித்தான்.
தனது பந்தயப் பொருட்களான தங்கம், வெள்ளி, தேர்கள், ஆடைகள் ஆகிவற்றை கலியினால் பீடிக்கப்பட்ட நளன் இழக்க ஆரம்பித்தான். பகடையில் வெறிபிடித்த அந்த எதிரிகளை ஒடுக்குபவனை {நளனை}, அவனது நண்பர்களால் கூட அந்த விளையாட்டில் இருந்து விலக்க முடியவில்லை. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, துயரத்தில் இருந்த அந்த ஏகாதிபதியைப் {நளனைப்} பார்ப்பதற்கும், அவனை விளையாட்டில் இருந்து தடுப்பதற்காகவும், குடிமக்கள் அனைவரும் முதலமைச்சர்களுடன் சேர்ந்து அங்கே வந்தனர். ஒரு தேரோட்டி தமயந்தியிடம், "ஓ மங்கையே, குடிமக்களும், நாட்டின் அதிகாரிகளும் வாயிலில் காத்திருக்கின்றனர். அறத்தையும் செல்வத்தையும் கொண்ட தங்கள் மன்னன் பேரிடரில் வீழ்ந்ததைத் தாங்கிக் கொள்ள இயலாத குடிமக்கள் இங்கே வந்திருக்கின்றனர் என்று நிஷாதர்களின் மன்னனிடம் {நளனிடம்} தெரிவிப்பாயாக" என்றான் {தேரோட்டி}.
அதனால் பீமனின் மகள் {தமயந்தி}, துயரத்தில் மூழ்கி, கிட்டத்தட்ட தனது நினைவை இழக்கும் நிலையில், தடைபட்ட சொற்களுடன் நளனிடம், "ஓ மன்னா, குடிமக்களும் நாட்டின் முதலமைச்சர்களும் உம்மீது கொண்ட விசுவாசத்தால், உம்மைக் காணவிரும்பி வாயிலில் நிற்கின்றனர். அவர்களுக்கு உம்மைக் காணும் வாய்ப்பை அருளும்" என்றாள். ஆனால் கலியால் பீடிக்கப்பட்ட மன்னன் {நளன்}, இப்படிப் புலம்பிக் கொண்டிருந்த அருள்நிறைந்த பார்வை கொண்ட தனது ராணிக்கு {தமயந்திக்கு} ஒரு வார்த்தையும் மறுமொழி கூறாதிருந்தான். இதனால், நாட்டின் அமைச்சர்களும், குடிமக்களும் துயரமும் அவமானமும் அடைந்து "இவன் வாழ மாட்டான்" என்று சொல்லி தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். ஓ யுதிஷ்டிரா, இப்படியே அறம்சார்ந்தவனான நளன் முழுவதும் மோசம்போகும்வரை அவனும் {நளனும்} புஷ்கரனும் பல மாதங்களுக்கு ஒன்றாகச் சூதாடினர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.