Entrance of Dwapara into dice | Vana Parva - Section 58 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
லோகபாலர்கள் கலியையும் துவாபரனையும் செல்லும் வழியில் கண்டது; தமயந்தி நளனைத் தேர்ந்தெடுத்ததை அறிந்த கலி துவாபரனின் துணையுடன் நளனை அவமதிப்பதாக உறுதி கூறுவது...
பிருகதஸ்வர் சொன்னார், "பீமன் மகள் {தமயந்தியின்} அந்த நிஷாதனை {நளனை}த் தேர்ந்தெடுத்தபிறகு, உலகங்களின் அந்தப் பிரகாசமிக்க பாதுகாவலர்கள் {லோகபாலர்கள்} திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்களின் {தேவர்களின்} வழியில் தங்களை நோக்கி வந்த துவாபரனையும் {துவாபர யுகம்}, கலியையும் {கலியுகம்} சந்தித்தனர்.
அதன்பிறகு கலி சக்ரனிடம் {இந்திரனிடம்}, "தமயந்தியின் சுயம்வரத்திற்கு சென்று, அந்த மங்கையை {மனைவியாக} அடையப்போகிறேன். எனது இதயம் அந்த மங்கை மீதே நிலைத்திருக்கிறது" என்றான். இதைக் கேட்ட இந்திரன் புன்னகையுடன், "சுயம்வரம் முடிந்துவிட்டது. எங்கள் கண் முன்பாகவே அவள் {தமயந்தி} நளனைக் கணவனாக வரித்தாள்" என்றான் {இந்திரன்}.
சக்ரனால் {இந்திரனால்} இப்படிச் சொல்லப்பட்ட தேவர்களில் தீயவனான கலி, கோபத்தால் நிறைந்து, அந்த தேவர்களிடம், "தேவர்களின் முன்னிலையில் ஒரு மனிதனை {இறந்து போகும் உயிரை - Mortal-ஐ} அவள் தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்ததால், அவள் கடும் வேதனையைச் சந்திப்பது உறுதி" என்றான். கலியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், "எங்களுடைய அனுமதியின் பேரிலேயே தமயந்தி நளனை வரித்தாள். அனைத்து அறங்களும் கொண்ட மன்னன் நளனை எந்த மங்கைதான் தேர்ந்தெடுக்கமாட்டாள்? கடமைகள் அனைத்தையும் அறிந்து, நேர்மையுடன் இருக்கும் நளன், அவன் புராணங்களை ஐந்தாவது வேதமாகக் கருதி நான்கு வேதங்களையும் படித்திருக்கிறான்.
அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கற்றவனாகவும், உறுதியான நோன்புகளுடன் உண்மை பேசுபவனாகவும், தனது வீட்டில் விதிப்படி செய்ய வேண்டிய வேள்விகளைச் செய்து எப்போதும் தேவர்களைக் கொண்டாடுபவனாகவும் வாழ்கிறான் {நளன்}. லோகபாலர்களைப் பிரதிபலிக்கும் அந்த மனிதர்களில் புலி, உண்மை, பொறுமை, அறிவு, சுத்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டு முழுமையான அமைதியடைந்த ஆன்மாவைக் கொண்டவனாக இருக்கிறான். ஓ கலியே, இத்தகு குணங்களைக் கொண்ட நளனைச் சபிக்க நினைக்கும் முட்டாள், தனது அச்செயலால் தன்னையே சபித்துக் கொண்டு அழித்துக் கொள்கிறான். மேலும், ஓ கலியே, இத்தகு அறங்களை முடிசூடிக்கொண்டிருக்கும் நளனைச் சபிக்க முயல்பவன், வேதனைகள் நிறைந்த அடியற்ற பரந்த நரகக்குழியில் மூழ்குவான்" என்றனர். இப்படி கலியிடமும் துவாபரனிடமும் சொல்லிவிட்டு, தேவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றனர்.
தேவர்கள் சென்றவுடன், கலி துவாபரனிடம், "ஓ துவாபரா, நான் எனது கோபத்தை அடக்க முடியாதவனாக இருக்கிறேன். நான் நளனைப் பீடித்து, அவனது நாட்டைப் பிடுங்கப் போகிறேன். அவன் இனிமேலும் பீமனின் மகளுடன் {தமயந்தியுடன்} விளையாட முடியாது. பகடைக்குள் நுழைந்து, நீ எனக்கு உதவுவாயாக" என்றான் {கலி-கலி யுகன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.