http://venmurasu.in/2014/01/05/நூல்-ஒன்று-முதற்கனல்-5/
இந்தப் பகுதியில் வியாசர் குறித்த அறிமுகமும் செய்திகளும் வருகின்றன. மேலும் மஹாபாரதம் உரைக்க ஆரம்பிக்கிறார் வைசம்பாயனர்.
*********************************************************************************
வேள்வி முகம் - 5 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...
- மஹாபாரதம் ஆரம்பம் | ஆதிபர்வம் - பகுதி 60 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section60.html
- பாரதம் படிப்பது வேதம் படிப்பதற்குச் சமம் | ஆதிபர்வம் - பகுதி 62 - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section62.html
- உபரிசரன் (எ) வசு | ஆதிபர்வம் - பகுதி 63அ - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section63al.html
- சாபம் விலகிய மீன் | ஆதிபர்வம் - பகுதி 63ஆ - http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section63b.html
இப்பதிவில் வியாசர் தங்கியிருந்த இடம் வியாசவனம் என்று அழைக்கப்படுகிறது. வியாசர் ஒரு ஆலமரத்தடியில் தனது குடிலை அமைத்து தன்னந்தனியாக இருந்ததாகவும், பிறகு அவரது சீடர்களும் வந்து குடிலமைத்துக் கொண்டதாகவும் சொல்கிறார்.
வியாசரை கடும் முனிவராக கிட்டத்தட்ட செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் சோழ மன்னனின் குருவைப் போலத் தெரிகிறார். ஏனோ இந்தப் பதிவைப் படிக்கும்போது ஆயிரத்தில் ஒருவன் என் கண் முன்னே நிழலாடுகிறது.
விநாயகர் தனது தந்தத்தை ஒடித்து எழுதினார் என்பதைக் கேட்டிருக்கிறோம். அதை திரு.ஜெயமோகன் அவர்கள் ஏற்று புரிந்து கொள்ளும் விதம், வரலாறு குறித்த நமது மூடிய கண்களைத் திறக்கின்றன.
வியாசரை சீடர்கள் தூக்கிச் செல்லும் காட்சியும், அவர்களது பயணமும், வியாசர் தூங்கிய விதமும், வைசம்பாயனரின் தாய்ப்பாசம் போன்ற அன்பும், கண்முன் இல்லாத அந்த உலகத்திலேயே நம்மை வாழ வைக்கின்றன.
வியாசர் ஆஸ்தீகர் சந்திக்கும் இடமும், ஜனமேஜயனின் சீற்றமும், அதற்கு வியாசரின் பதிலுமெனக் கொடுத்து, அடுத்து என்ன என்று நம்மை ஏக்கப்பார்வை பார்க்க வைத்து இன்றைய பதிவை முடித்துவிட்டார்.
இந்தப் பதிவின் படம் அருமையாக வந்திருக்கிறது. இருப்பினும், இக்காட்சிக்கு பதிலாக அந்தக் கல் ஆலமரத்தில் வியாசர் தனது சீடர்களுடன் இருப்பது போன்று இருந்திருந்தாலோ, அல்லது காரிருளில் வியாசர் தனித்து கானகத்தில் நடப்பது போன்றோ இருந்திருந்தால் கூடுதல் சிறப்படைந்திருக்கும் எனக் கருதுகிறேன்.
இந்தப் பதிவில் எனக்குப் பிடித்த வரிகள்
* அதன்பின் வியாசர் குருஷேத்திரத்தை விட்டு விலகிச்செல்வதையே தன் இலக்காகக் கொண்டு பாரதவர்ஷமெங்கும் அலைந்தார். பனிமுடிகள் சூழ்ந்த இமையத்தின் சரிவுகளிலும் மழையும் வெயிலும் பொழிந்துகிடந்த தென்னகச்சமவெளிகளிலும் வாழ்ந்தார்.
கற்கக்கூடிய நூல்களையெல்லாம் கற்றார். மறக்கமுடிந்தவற்றையெல்லாம் மறந்தார். அத்தனைக்குப் பின்னரும் குருஷேத்திரத்தின் கனவுருத்தோற்றம் அவருக்குள் அப்படியேதான் இருந்தது. அவருக்குள்ளும் வெளியிலும் வீசிய எந்தக் கொடுங்காற்றும் அந்த ஓவியத்திரையை அசைக்கவில்லை.
* எதிர்ப்பால், பணிவால், நம்பிக்கையால், சினத்தால், குரோதத்தால், பழியால் அழிவின்மை கொண்ட அவர்கள் நடுவே கற்பனையால் காலத்தை வென்றவர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர்.
* வியாசரைக் குறித்த வர்ணனை //மரணத்தை வென்றாலும் மூப்பை வெல்லமுடியாத உடல் தசை வற்றி காட்டுத்தீயில் எரிந்து எஞ்சிய சுள்ளி போலிருந்தது. ஒருகாலத்தில் தாடியாகவும் தலைமயிராகவும் விழுதுவிட்டிருந்த கனத்த சடைக்கற்றைகள் முழுமையாகவே உதிர்ந்துபோய், தேமல்கள் பரவிச் சுருங்கிய தோல்மூடிய மண்டைஓடு தெரிந்தது. ஒன்றுடன் ஒன்று
ஏறிப்பின்னிய விரல்களில் நகங்கள் உள்நோக்கிச் சுருண்டிருக்க, கைகளிலும் கழுத்திலும் நரம்புகள் தளர்ந்த கொடிகள்போல் ஓடின. உள்ளடங்கிய வாயும் தொங்கிய நாசியும், சிப்பிகள்போன்று மூடிய கண்களுமாக அங்கே இருந்த அவருக்குள் அவர் வெகுதொலைவில் இருந்துகொண்டிருந்தார். வைசம்பாயனர் குருநாதரின் பாதங்களை வணங்கியபோது அவரது கண்கள் அதிர்ந்து பின்பு திறந்தன. கரிய உதடுகள் மெல்ல அசைந்தன.//
* இந்த நகரம் தோல்கிழிந்த பெருமுரசு போல எனக்குத் தோன்றியது. உங்களைத் தடுக்கவில்லை என்றால் இந்த உலகத்தையே இப்படி ஆக்கிவிடுவீர்கள் என்று அறிந்தேன். இந்தவேள்வியை நிறுத்த வேண்டியது என்கடமை என்று கொண்டேன்” என்றான்.
* சமரமுனிவர் “ஆதியிலிருந்தது ஒன்றே. முதல்முடிவற்ற, இதுஅதுவற்ற, முதலியற்கை. அது பிளவற்ற காலத்தில் இருந்தது. அதில் முதல் எண்ணமெனும் மஹத் உருவானது. அது இருப்பு எனும் அகங்காரமாகியது. அகங்காரம் முக்குணங்களாக மாறி அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டன. அண்டப்பேரியக்கம் தொடங்கியது” என்றார்.
* “இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்” என்றான்.
* மஹாபாரதம் முதல் அறிமுகம் //வைசம்பாயனர் சுவடியைப் பிரித்தார்.அனுஷ்டுப்பு சந்தத்தில் பதினெட்டு பர்வங்களாக இயற்றப்பட்டிருந்த பெருங்காவியத்தின் பெயர் ‘ஸ்ரீஜய’. அச்சுவடியை தன் தலைமேல் வைத்து வணங்கிய வைசம்பாயனர் ஓங்கிய குரலில் பாடினார். “நீரெனில் கடல், ஒளியெனில் சூரியன், இறையெனில் பிரம்மம், சொல்லெனில் வியாசனின் சொல்லேயாகும். அதுஅழியாது வாழ்க!”//
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.