Damayanti met some ascetics | Vana Parva - Section 64c | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
ஆசிரமத்தை அடைந்த தமயந்தி, அங்கு வசித்த முனிவர்களிடம் நலன் விசாரித்தல்; அவள் வந்த காரணத்தை முனிவர்கள் கேட்டல்; தமயந்தி தனது கணவனைக் குறித்து சொல்லுதல்; முனிவர்கள் தீர்க்கதரிசனமாக சில சங்கதிகளைச் சொல்வது…
அந்தக் கானகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த துறவிகள், தமயந்தியிடம், "நல்வரவு!" என்று சொன்னார்கள். பிறகு அந்தத் துறவிகள் அவளுக்கு உரிய மரியாதை செலுத்தி, "அமர்ந்து கொள். நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்" என்று கேட்டனர். அதற்கு அந்த பெண்களில் சிறந்தவள் {தமயந்தி}, "பாவமற்றவர்களே, சிறந்த அருள் பெற்ற துறவிகளே, உங்கள் தவங்களும், வேள்வி நெருப்பும், அறச்சடங்குகளும், உங்கள் வகைக்குண்டான கடமைகளும் நன்றாக நடைபெறுகிறதா?" என்று கேட்டாள் {தமயந்தி}.
அதற்கு அவர்கள், "ஓ அழகான சிறப்புமிக்க பெண்மணியே, {மேற்கண்ட} எல்லாவிதத்திலும் செழிப்புடனே இருக்கிறோம். ஆனால், ஓ குற்றமற்ற அங்கங்கள் கொண்டவளே, நீ யார் என்பதையும், எதைத் தேடிக் கொண்டிருக்கிறாய் என்பதையும் எங்களுக்குச் சொல். உனது அழகான உருவத்தையும், பிரகாசமான காந்தியையும் கண்டு நாங்கள் மலைக்கிறோம். உற்சாகம் கொள். துயரப்படாதே. ஓ பழியற்றவளே, அருளப்பட்டவளே, நீ இந்தக் கானகத்தின் தேவதையா? அல்லது இந்த மலையின் தேவதையா? அல்லது இந்த நதியின் தேவதையா? என்பதை எங்களுக்குச் சொல்" என்றனர்.
தமயந்தி அந்தத் துறவிகளிடம், "ஓ அந்தணர்களே, நான் இந்த கானகத்துக்கோ, மலைக்கோ, ஓடைக்கோ தேவதையல்ல. ஓ துறவுச்செல்வம் பெற்ற முனிவர்களே, நான் மானுடப்பிறவி என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் எனது வரலாற்றை விவரமாகச் சொல்கிறேன். நீங்கள் கேளுங்கள். பீமன் என்ற பெயர் கொண்டு விதரப்ப்பத்தை ஆளும் பெரும் பலம்வாய்ந்த ஆட்சியாளராக ஒரு மன்னர் இருக்கிறார். ஓ மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} முதன்மையானவர்களே, நான் அவரது மகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பெரும் புகழ்வாய்ந்தவரும், வீரரும், போர்க்களத்தில் எப்போதும் வெற்றி பெறுபவரும், கற்றவரும், நிஷாதர்களின் ஞானமுள்ள ஆட்சியாளருமான நளன் என்ற பெயர் கொண்டவரே எனது கணவர். தேவர்களை வழிபடுவதில் ஈடுபட்டு, இரு பிறப்பாளர்களுக்கு {அந்தணர்களுக்குத்} தன்னை அர்ப்பணித்து, நிஷாதர்களின் குல வழியைக் காத்து, பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும், உண்மையுடன், அனைத்துக் கடமைகளையும் அறிந்தும், சத்தியத்தில் தடுமாற்றமில்லாமலும், எதிரிகளை வீழ்த்தியும், தேவர்களுக்கு சேவை செய்தும், எதிரியின் நகரங்களை வென்றும், அருள் நிறைந்தும் இருக்கும் நளன் என்ற பெயர் கொண்ட அந்த மன்னர்களில் முதன்மையானவர் தேவர்களின் தலைவனது பிரகாசத்துக்கு ஈடானவராவார். அந்த எதிரிகளை அழிக்கும், அகன்ற கண்களுடைய, முழு நிலவின் நிறத்தில் இருப்பவரே {நளரே} எனது கணவர்.
அவர் {நளர்} பெரும் வேள்விகளைச் செய்தார். அவர் வேதங்களையும் அதன் கிளைகளையும் கற்றவர், போர்க்களத்தில் எதிரிகளை அழிப்பவர், பிரகாசத்தில் சூரியனையும் சந்திரனையும் போன்றவர். உண்மைக்கும் அறத்திற்கும் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த மன்னர் {நளர்}, சூதாட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற குறுகிய மனம் படைத்த ஏமாற்றுக்கார மனிதர்களால் பகடை விளையாட அழைக்கப்பட்டு, செல்வத்தையும் நாட்டையும் இழந்தார். மன்னர்களில் காளையான அவரது மனைவியே நான் என்றும் எனது பெயர் தமயந்தி என்றும், (தொலைந்து போன) எனது தலைவனைக் {நளரை} கவலையுடன் தேடிவருகிறேன் என்றும் அறிந்து கொள்ளுங்கள். இதயத்தின் சோகத்தால், போரில் நிபுணத்துவம் வாய்ந்த, உயர் ஆன்மா கொண்ட, ஆயுதங்களை நன்கு பயன்படுத்தத் தெரிந்த எனது கணவர் நளரைத் தேடுவதற்காக கானகங்களையும், மலைகளையும், ஏரிகளையும், நதிகளையும், குளங்களையும், காடுகளையும் சுற்றி வருகிறேன். அந்த நிஷாதர்களின் தலைவரான மன்னன் நளர், உங்களுக்குச் சொந்தமான இந்த காண்பதற்கினிய துறவியில்லத்திற்கு வந்தாரா? ஓ அந்தணர்களே, புலிகளாலும் மற்ற விலங்குகளாலும் முற்றுகையிடப்படும் பயங்கரம் நிறைந்த இந்தக் காட்டின் வழியே அவருக்காகவே வந்தேன். இன்றும் சில பகல் மற்றும் இரவுகளுக்குள் நான் மன்னன் நளரைக் காணவில்லையென்றில், நான் எனது உடலைக் கைவிட்டு எனக்கு நன்மையைத் தேடிக் கொள்வேன். அந்த மனிதர்களில் காளை இல்லாத இந்த எனது வாழ்வு எதற்குப் பயன்படும்? எனது கணவரின் காரியமாக துன்பத்துடன் நான் வாழ்வது எவ்வாறு?" என்றாள்.
கதியற்று அந்தக் கானகத்தில் அழுது கொண்டிருந்த பீமனின் மகளான தமயந்தியிடம், அந்த உண்மை பேசும் துறவிகள், "ஓ அருளப்பட்டவளே, ஓ அழகானவளே, வருங்காலம் உனக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்பதை எங்கள் தவச்சக்தியால் நாங்கள் பார்க்கிறோம். நீ விரைவில் அந்த நைஷாதனைக் காண்பாய். ஓ பீமனின் மகளே, நீ நிஷாதர்களின் தலைவனும், எதிரிகளைக் கொல்பவனும், அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவனுமான நளன் துன்பங்களில் இருந்து விடுதலையடைவதை நீ காண்பாய். ஓ அருளப்பட்ட மங்கையே, உனது தலைவனான மன்னன் {நளன்}, அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு அனைத்து வகையான ரத்தினங்களையும் அணிந்து, எதிரிகளைத் தண்டித்து, எதிரிகளின் இதயத்தில் பயங்கரத்தை உணரச் செய்து, நண்பர்களின் இதயங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி, அனைத்து அருளாலும் முடிச்சூடப்பட்டு அதே நகரத்தை ஆள்வதை நீ காண்பாய்" என்றனர்.
நளனின் அன்புக்குரிய ராணியான அந்த {விதரப்ப்ப நாட்டு} இளவரசியிடம் இப்படிப் பேசிய அந்த துறவிகள், அவர்களது புனிதமான நெருப்புகளுடனும், ஆசிரமத்துடனும் அவள் {தமயந்தி} பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனார்கள். அந்தப் பெரும் அற்புதத்தைக் கண்ட மன்னன் வீரசேனின் மருமகளான குறையற்ற அங்கங்கள் கொண்ட தமயந்தி ஆச்சரியத்தில் மூழ்கினாள். அவள் தனக்குத் தானே, "நான் கண்டது கனவா? என்ன நிகழ்வு இப்போது நடந்தது? அந்தத் துறவிகள் அனைவரும் எங்கே? அந்த ஆசிரமம் எங்கே? மேலும், புனிதமான நீருடன் காண்பதற்கு இனிய பல வகையான கோழிகளின் {அல்லது வளர்ப்புப் பறவைகளின் என்றும் கொள்ளலாம்} ஓய்விடமாக இருந்த அந்த ஆறு எங்கே? பூக்களுடனும், கனிகளுடனும் இருந்த அந்த அழகிய மரங்கள் எங்கே" என்று நினைத்தாள் {தமயந்தி}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.