Damayanti's speech unto a mountain | Vana Parva - Section 64b | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
தமயந்தி நளன் குறித்து மலையிடம் புலம்புவது; பிறகு மூன்று நாட்கள் நடந்து ஒரு ஆசிரமத்தை அடைந்து துறவிகளைக் காண்பது…
அழுது கொண்டிருந்த தமயந்தி, மலையை நோக்கி, "இந்தக் கானகத்தில் எனது புலம்பலைக்கேட்டுக்கொண்டிருக்கும் மலைகளின் அரசனிடம் கேட்கிறேன், கடலை நோக்கி ஓடும் சுத்தமான நீர் கொண்ட பல நதிகளை கிரீடமாக அணிந்து, உயர்ந்த புனிதமான மலைகளையும், சொர்க்கத்தை முத்தமிடும் பல வண்ண அழகிய சிகரங்களையும், பல தரப்பட்ட தாதுகளும், பல தரப்பட்ட மன்னர்களின் ரத்தினங்களாலும் நிறைந்து இந்த அகன்ற கானகத்தின் பதாகை {Banner} போல இருக்கும் இந்த மலையிடம் கேட்கிறேன்.
சிங்கங்களாலும், புலிகளாலும், யானைகளாலும், காட்டுப்பன்றிகளாலும், மான்களாலும், எல்லாப்புறமும் (இன்னிசையை) எதிரொலிக்கும் பல வகை பறவைகளாலும், கின்குசம் {பலாசு}, அசோகம், வாகுலம் {மகிழம்}, புன்னகம் {புன்னை}, பூத்திருக்கும் கர்ணிகரம் {கோங்கு மரம்}, தவம், பிலாக்ஷம், போன்ற மரங்களாலும் நிறைந்து, நீர்க்கோழிகளால் மொய்க்கப்படும் நீரோடைகளையும், முகடுகளையும், உச்சிகளையும் கொண்டிருக்கும் புனிதமானவனே {மலையே}, ஓ மலைகளில் சிறந்தவனே, ஓ அற்புதக் காட்சி தருபவனே, ஓ கொண்டாடப்படுபவனே உன்னிடம் கேட்கிறேன்.
ஓ மங்களகரமானவனே {மலையே}, ஓ பூமியின் தூணே, நான் உன்னை வணங்குகிறேன். உன்னை அணுகும் நான், உன்னை வணங்குகிறேன். ஒரு மன்னனின் {பீமனின்} மகளென்றும், ஒரு மன்னனின் {வீரசேனனின்} மருமகள் என்றும், ஒரு மன்னனின் {நளனின்} மனைவியென்றும், தமயந்தி என்ற பெயர் கொண்டவள் என்று என்னை அறிந்து கொள். நால்வகை மனிதர்களையும் காத்து, விதரப்ப்பர்களை ஆளும் பூமியின் அதிபதியான பீமன் என்ற பெயர் கொண்டவரே எனது தந்தை. ராஜசுயம், அசுவமேதம் ஆகிய வேள்விகளைச் செய்து அந்தணர்களுக்கு நிறைந்த பரிசுகளைக் கொடுத்தவரே அந்த மன்னர்களில் சிறந்தவர் {பீமர்}, அழகான அகன்ற கண்களை உடையவரும், வேதங்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவருமான அவர் {பீமர்}, உண்மை பேச்சு கொண்டு, அப்பழுக்கற்ற குணம் கொண்டு, சூழ்ச்சியற்று, மென்மையானவராக, வலிமை நிறைந்து, பெரும் செல்வத்தைக் கொண்டு, அறநெறிகள் அறிந்து, தூய்மையாக இருந்து, அனைத்து எதிரிகளையும் வீழ்த்தி, விதரப்ப்ப நாட்டு குடிமக்களை காத்து வருகிறார் {பீமர்}. ஓ புனிதமானவனே {மலையே}, உன்னிடம் இப்படிவந்து நிற்கும் நான் அவரின் {பீமரின்} மகள் என்பதை அறிந்து கொள்.
மனிதர்களில் சிறந்த, நிஷாதர்களின் கொண்டாடப்படும் ஆட்சியாளர், உயர் புகழ் கொண்ட வீரசேனன் என்ற பெயர் கொண்டவரே எனது மாமனார். அந்த மன்னரின் மகனும், வீரரும், அழகரும், குழப்ப முடியாத ஆற்றல் கொண்டவரும், தனது தந்தையின் வழி வந்த நாட்டை ஆட்சி செய்பவரான நளன் என்ற பெயர் கொண்டவர். ஓ மலையே, அந்த எதிரிகளைக் கொல்பவரும், புண்ணியஸ்லோகா என்ற பெயராலும் அழைக்கப்படுபவரும், தங்க நிறம் கொண்டவரும், அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், வேதங்களை அறிந்தவரும், நாநலம் மிக்க நீதிமானும், சோமத்தைப் பெருமடக்காகக் குடிப்பவரும், நெருப்பை வழிபடுபவருமாகிய அந்த மன்னர் {நளர்}, வேள்விகளைக் கொண்டாடுபவராவார். அவர் தாராளவாதியாகவும், போர்க்குணமுள்ளவராகவும், (குற்றவாளிகளைப்) போதுமான அளவு தண்டிப்பவராகவும் இருக்கிறார். நான் அவரின் {நளரின்} அப்பாவி மனைவி, அவரது ராணிகளில் தலைமையானவள் (the chief of his queens) [1], உனது முன்னிலையில் நிற்கிறேன். ஓ மலைகளில் சிறந்தவனே, செல்வத்தை இழந்து, கணவரையும் இழந்து, பாதுகாப்பற்று, துயரத்தால் பீடிக்கப்பட்டு, எனது கணவரைத் தேடி நான் இங்கு வந்திருக்கிறேன்.
[1] சம்ஸ்க்ருத மூலத்தில் ராணிகளில் தலைமையானவள் என்ற வார்த்தை இல்லை என்று விவாத மேடையில் நண்பர் தாமரை அவர்கள் விளக்கியிருக்கிறார். அந்தச் சுலோகத்தின் பொருள்: "மிக உயர்ந்தவரும், போர்க்குணமுள்ளவரும், உரைக்கப்பட்ட நீதி வழிகளிலே நடப்பவருமான அவருடைய {நளரின்} அதிர்ஷ்டமற்ற அப்பாவி மனைவி இங்கே வந்திருக்கிறேன். அனைத்தையும் இழந்து, கணவனால் கைவிடப்பட்டு, அனாதையாகிப் பாதுகாப்பற்று பாரதர்களில் காளையும், மனிதர்களில் சிறந்துவருமான அவரை நாலாபுறங்களிலும் அலைந்து திரிந்து தேடிக் கொண்டிருக்கிறேன்" என்றும் அவர் அங்கு விளக்கியிருக்கிறார்.
ஓ மலைகளில் முதன்மையானவனே, (வானத்தை நோக்கி) உயர்ந்த கோபுரங்கள் போன்ற நூறு சிகரங்கள் கொண்ட நீ, இந்தப் பயங்கரக் கானகத்தில் மன்னன் நளரைக் கண்டாயா? பெரும்பலம் வாய்ந்த யானையின் நடை கொண்ட, பெரும் புத்திகூர்மை கொண்ட, நீண்ட கரங்கள் கொண்ட, கடும் சக்தி கொண்ட, பராக்கிரமும், பொறுமையும், வீரமும், உயர்ந்த புகழும் கொண்ட நிஷாதர்களின் ஆட்சியாளரும் எனது கணவருமான சிறப்புவாய்ந்த நளரைக் கண்டாயா? ஓ மலைகளில் சிறந்தவனே, இப்படித் தனியாக துக்கப்பட்டு, துயரத்தில் மூழ்கிய என்னை, துயரத்தில் இருக்கும் உனது மகளாகக் கருதி, இன்று எனக்கு ஆறுதல் வார்த்தை சொல்லமாட்டாயா?" என்று புலம்பினாள்.
மீண்டும் அவள் {தமயந்தி}, "ஓ வீரரே {நளரே}, ஓ பராக்கிரமம் நிறைந்த போர்வீரரே, ஓ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, ஓ உண்மைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரே, ஓ பூமியின் தலைவா, நீர் இந்தக் கானகத்தில் இருந்தால், ஓ மன்னா {நளரே}, உம்மை என்னிடம் வெளிப்படுத்திக் கொள்ளும்" என்றும் "ஓ மென்மையான, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த, அமிர்தம் போன்ற இனிய குரலுடன் "விதரப்ப்பரின் மகளே" என்று தனித்துவமான உச்சரிப்புடன், வேதங்களின் இனிய நாதத்தைப் போன்று வளமையான பரிசுத்தமான வார்த்தைகளை இனி நான் என்று கேட்பேனோ? ஓ மன்னா {நளரே}, நான் பயந்திருக்கிறேன். ஓ அறம்சார்ந்தவரே, எனக்கு ஆறுதல் அளியும்" என்றாள் {தமயந்தி}.
இப்படி மலைகளின் முதன்மையான மலையிடம் பேசிய தமயந்தி, பிறகு வடக்கு நோக்கி சென்றாள். இப்படியே மூன்று பகலும், மூன்று இரவும் நடந்த அந்தப் பெண்களில் சிறந்தவள், தேவலோகச் சோலை போன்று இருந்த துறவிகளின் ஒப்பற்ற ஒரு தவச்சோலையை அடைந்தாள். வசிஷ்டர், பிருகு, அத்ரி போன்ற கடும் உணவுக்கட்டுபாடு கொண்டவர்களும், மனங்களை முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களும், புனிமானவர்களுமான துறவிகள் வசித்த ஒரு அழகிய ஆசிரமத்தைக் கண்டாள். அத்துறவிகளில் சிலர் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். சிலர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். சிலர் (உதிர்ந்த) இலைகளை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். அத்துறவிகள் அனைவரும் ஆசையைக் கடந்து, மேம்பட்ட அருளை அடைந்து, மரப்பட்டைகளையும், மான் தோல்களையும் ஆடையாக அணிந்து, உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவர்களாகவும் இருந்தனர். துறவிகள் வசித்த அந்தத் துறவில்லத்தைக் {ஆசிரமத்தைக்} கண்டும், அங்கே நிறைந்திருந்த மான் கூட்டம் மற்றும் குரங்களுகளைக் கண்டும் தமயந்தி மகிழ்ந்தாள். அழகான புருவங்களும், நீண்ட கூந்தலும், அழகான இடையும், பருத்த மார்பும், முகத்தை அலங்கரித்த அழகான பற்களும், கருத்த பெரிய அழகான கண்களும் கொண்ட அப்பாவியும் அருள்நிறைந்தவளுமான அந்தப் பெண்களில் சிறந்த தமயந்தி, பிரகாசத்துடனும் பெருமையுடனும் அந்த துறவில்லத்திற்குள் நுழைந்தாள். கடுந்தவங்கள் பயின்று முதிர்ந்த அந்த துறவிகளை வணங்கி, பணிவுடன் நின்றாள்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.