The Merchants going to Chedi | Vana Parva - Section 64d | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
தமயந்தி பயங்கரமான காட்டைக் கடந்து ஒரு அகலமான பாதையை அடைந்து அங்கே ஒரு பெரிய வணிகர் கூட்டத்தைக் கண்டது.
துறவிகள் மறைந்ததைச் சிறிது நேரம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த இனிய புன்னகை கொண்ட பீமனின் மகளான தமயந்தி, தனது கணவனை {நளனை} நினைத்து துயரத்தால் பீடிக்கப்பட்டு, தனது முகத்தின் நிறத்தை இழந்தாள். அக்கானகத்தின் வேறொரு பகுதிக்குச் சென்று ஒரு அசோக மரத்தைக் கண்டாள். அந்தக் கானகத்தில் அடர்த்தியான இலைகளுடன் அழகாகப் பூத்துக் குலுங்கிய அந்த மரங்களில் முதன்மையான மரத்தில் பறவைகள் இன்னிசை பாடிக் கொண்டிருக்கும்போது, கண்களில் கண்ணீருடனும், துயரத்தால் தடைபட்ட குரலுடனும் அந்த மரத்திடம், தமயந்தி, "கானகத்தின் இதயப்பகுதியில் இருக்கும் அருள் நிறைந்த மரமே, பூக்களால் அலங்கிக்கப்பட்டு இந்த மலைகளின் மன்னன் மேல் அழகாக இருக்கிறாய். ஓ அழகான அசோகமே, நீ என்னை இந்தத் துயரில் இருந்து விரைவாக விடுவிக்க மாட்டாயா? எதிரிகளைக் கொல்பவரும், தமயந்தியின் அன்புக்குரிய கணவருமான மன்னன் நளர், அச்சத்திலிருந்தும் துயரத்திலிருந்தும், தடைகளிலிருந்தும் விடுபட்டவராக இருப்பதை நீ கண்டாயா?
பாதி ஆடையுடுத்தி, கண்ணுக்கினிய நிறத்துடன் இருக்கும் துயரத்தால் தாக்கப்பட்டு கானகத்துக்கு வந்த அந்த வீரரும், நிஷாதர்களின் ஆட்சியாளரும் எனது அன்புக்குரியவருமான எனது கணவரைக் கண்டாயா? ஓ அசோக மரமே, என்னை இந்தத் துயரத்தில் இருந்து விடுவி! ஓ அசோகமே, அசோகம் என்றால் துயரை அழிப்பவன் என்று பொருள் ஆகையால் உனது பெயரை நிலைநிறுத்து" என்று கேட்டாள். பிறகு அந்த மரத்தை மூன்று முறை வலம் வந்து, துயரம் நிறைந்த இதயத்துடன் இருந்த அந்த பெண்களில் சிறந்தவளான பீமனின் மகள் {தமயந்தி}, அந்தக் கானகத்தின் பயங்கரமான பகுதிக்குள் நுழைந்தாள். தனது தலைவனைத் தேடியவாறு சுற்றி வந்த அந்த பீமனின் மகள் {தமயந்தி} பல மரங்களையும், ஓடைகளையும், பார்ப்பதற்கு இனிய மலைகளையும், பல விலங்குகளையும், பறவைகளையும், குகைகளையும், செங்குத்தான பாறைகளையும், அற்புதமான தோற்றம் கொண்ட பல ஆறுகளையும் கண்டாள். அப்படியே முன்னேறிச் சென்ற போது, ஒரு அகலமான பாதையை அடைந்து ஒரு வணிகர்க்குழு அங்கே குதிரைகளுடனும், யானைகளுடனும் குளிர்ந்த தெளிந்த நீரைக் கொண்ட நதியின் கரையில் இறங்குவதைக் கண்டாள். அந்த நதி பார்ப்பதற்கு அழகானதாகவும், அகலமானதாவும், பிரம்புப் புதர்களால் மூடியபடியும், கொக்குகள், சக்கிரவாகப் பறவைகள், மீனுண்ணும் பறவைகள் ஆகிவற்றின் ஒலியால் நிறைந்தும், ஆமைகள், முதலைகள், மீன்கள் ஆகியவற்றுடன் ஏராளமான தீவுகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது.
அந்தக் கவிகைகளைக் {நாடோடிகளின் வண்டி} கண்டவுடன் அந்த அழகானவளும், நளனின் கொண்டாடப்பட்ட மனைவியும், பைத்தியம் பிடித்த காட்டுவாசி போல இருந்தவளுமான தமயந்தி, துயரத்தால் ஒடுக்கப்பட்டு, பாதி ஆடையுடன், மெலிந்து, நிறம் மங்கி, அழுக்கடைந்து, தூசு போர்த்திய கூந்தலுடன், அதன் {வண்டியின்} அருகில் சென்று அதற்கு மத்தியில் நுழைந்தாள். அவளைக் கண்ட சிலர் பயத்தால் ஓடினர், சிலர் ஆர்வத்துடன் பார்த்தனர், சிலர் சத்தம் போட்டனர், சிலர் அவளைப் பார்த்துச் சிரித்தனர், சிலர் அவளை வெறுத்தனர். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அவள் மேல் பரிதாபப்பட்டு, அவளிடம் {தமயந்தியிடம்}, "ஓ அருளப்பட்டவளே, யார் நீ? யாருக்குச் சொந்தமானவள்? இந்தக் கானகத்தில் எதைத் தேடுகிறாய்? உன்னைக் கண்டு நாங்கள் அஞ்சுகிறோம். நீ மானுடப்பிறவிதானா? ஓ அருளப்பட்டவளே, உண்மையைச் சொல். நீ இந்த வனத்திற்கோ, அல்லது அந்த மலைக்கோ அல்லது சொர்க்கத்தின் திக்குகளுக்கான தேவதையா? நாங்கள் உனது பாதுகாப்பைக் கோருகிறோம். நீ யக்ஷப் பெண்ணா? அல்லது ராட்சசப் பெண்ணா? அல்லது தேவலோக மங்கையா? ஓ குற்றமற்ற குணங்கள் கொண்டவளே, எங்களுக்கு அருள் வழங்கி எங்கைக் காப்பாற்று. ஓ அருளப்பட்டவளே, இந்தக் கவிகைகள் விரைவாகச் சென்று செழிப்பை அடையவும், நாங்கள் நன்றாக பாதுகாப்புடன் இருக்கவும் தக்க செயலைச் செய்" என்றனர்.
இப்படி அந்தக் கவிகைக்காரர்களால் சொல்லப்பட்டதும், கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்த, துயரத்தால் ஒடுக்கப்பட்ட இளவரசி தமயந்தி, "ஓ கவிகையின் தலைவா, வணிகர்களே, இளைஞர்களே, முதியவர்களே, குழந்தைகளே, இந்தக் கவிகைகளுக்குச் சொந்தக்காரர்களான நீங்கள் என்னை மானுடப்பிறவி என்று அறிந்து கொள்ளுங்கள். நான் ஒரு மன்னனின் {மன்னன் பீமனின்} மகள், ஒரு மன்னனின் {மன்னன் வீரசேனனின்} மருமகள், ஒரு மன்னனின் {மன்னன் நளனின்} மனைவியுமாவேன். நான் எனது தலைவனின் காட்சியைக் காண ஆவலுடன் இருக்கிறேன். விதரப்ப்பத்தின் ஆட்சியாளர் எனது தந்தையே, எனது கணவர் நிஷாதர்களின் தலைவனான நளன் என்ற பெயர் கொண்டவர். வீழாத அருள் உடைய அவரை நான் இப்போது தேடிக் கொண்டிருக்கிறேன். எனது அன்புக்குரியவரான மன்னன் நளரை, அந்த மனிதர்களில் புலியை, எதிரிப் படையை அழிப்பவரை நீங்கள் காண நேர்ந்திருந்தால் எனக்கு விரைவாகச் சொல்லுங்கள்" என்றாள் {தமயந்தி}.
அதன்பிறகு அந்தப் பெரும் கவிகைகளின் தலைவனான சுசி என்ற பெயர் கொண்டவன், குற்றமற்ற அங்கங்கள் கொண்ட தமயந்தியிடம், "ஓ அருளப்பட்டவளே, எனது வார்த்தைகளைக் கேள். ஓ இனிய புன்னகை கொண்டவளே, நான் ஒரு வணிகன். நானே இந்தக் கவிகைகளுக்குத் தலைவனாக இருக்கிறேன். ஓ ஒப்பற்ற மங்கையே, நளன் என்ற பெயர் கொண்ட எந்த மனிதனையும் நான் காணவில்லை. மனிதர்கள் வசிக்காத இந்தப் பரந்த கானகத்தில், யானைகளும், சிறுத்தைகளும், எருமைகளும், புலிகளும், கரடிகளும், மற்ற விலங்குகளும் மட்டுமே இருக்கின்றன. உன்னைத்தவிர, நான் வேறு எந்த மனிதனையோ பெண்ணையோ இங்கு காணவில்லை. ஆகவே, யக்ஷர்களின் மன்னனான * மணிபத்ரன் எங்களுக்கு உதவி செய்வதாக" என்றான். இப்படி அவர்களால் சொல்லப்பட்ட அவள் {தமயந்தி} அந்த வணிகர்களிடமும், அந்தக் கூட்டத்தின் தலைவனிடமும், "இந்தக் கவிகைகள் எங்கு செல்கின்றன என்று எனக்குச் சொல்வீராக" என்று கேட்டாள். அதற்கு அந்தக் குழுவின் தலைவன், "ஓ பெரும் மன்னனின் மகளே, சேதியை ஆளும் உண்மை பேசும் சுபாஹுவின் நகரத்திற்கு லாபம் கருதி இந்தக் கவிகைகள் செல்கின்றன" என்றான் {வணிகர் தலைவன் சுசி}.
*மணிபத்ரன் - குபேரனுக்கு அடுத்த யக்ஷர் தலைவன். அவன் காடு மற்றும் மலைகளைக் கடக்கும் வணிகர்களைக் காக்கும் தேவனாவான்}
------------------------------------------------------------------------
*மணிபத்ரன் - குபேரனுக்கு அடுத்த யக்ஷர் தலைவன். அவன் காடு மற்றும் மலைகளைக் கடக்கும் வணிகர்களைக் காக்கும் தேவனாவான்}
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.