Sudeva found Damayanti | Vana Parva - Section 68 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
மன்னன் பீமன் நளனையும் தமயந்தியையும் தேடச் சொல்லி அந்தணர்களை அனுப்பியது; சுதேவன் என்ற அந்தணன் சேதி நாட்டு அரண்மனையில் தமயந்தியைக் காண்பது; தமயந்தி அவனிடம் கண்ணீர்விட்டு அழுவது; இதைக் கண்ட சுனந்தை இது பற்றி அரசத்தாயிடம் {ராஜமாதாவிடம்} சொல்வது…
வைசம்பாயனர் சொன்னார், "நளனுடைய நாடு திருடப்பட்டு, அவன் தனது மனைவியுடன் காணாமல் போன பிறகு, பீமன் நளனைக் காண விரும்பி, அவனைத் தேட அந்தணர்களை அனுப்பி வைத்தான். அவர்களுக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்த பீமன் அவர்களிடம், "நளனையும் எனது மகள் தமயந்தியையும் தேடுங்கள். நிஷாதர்களின் ஆட்சியாளன் {நளன்} எங்கிருக்கிறான் என்பதை உறுதி செய்து, அவனுடன் சேர்த்து எனது மகளையும் {தமயந்தியையும்} இங்கே கொண்டு வாருங்கள். இப்பணியை யார் நிறைவேற்றுவார்களோ, அவர்கள் ஆயிரம் பசுக்களையும், வயல்வெளிகளையும், நகரத்தைப் போன்ற ஒரு கிராமத்தையும் என்னிடம் இருந்து பெறுவார்கள். நளனையும் தமயந்தியையும் இங்கே கொண்டு வருவதில் தோல்வியுற்றாலும், அவர்களைப் பற்றிய செய்தியைக் கொண்டு வருபவர்கள் என்னிடம் இருந்து செல்வத்தைப் பிரதிபலிக்கும் ஆயிரம் பசுக்களைப் பெறுவார்கள்" என்று அறிவித்தான் {பீமன்}.
இப்படிச் சொல்லப்பட்ட அந்த அந்தணர்கள், மகிழ்ச்சியுடன், நளனையும் அவனது மனைவியையும் தேடி, எல்லா புறங்களிலும் இருந்த நகரங்கள் மற்றும் மாகாணங்களில் தேடச் சென்றனர். ஆனால் நளனையோ அவனது மனைவியையோ அவர்கள் எங்கும் காணவில்லை. கடைசியாக சுதேவன் என்ற அந்தணன், சேதி நாட்டின் அழகான நகரத்திற்கு வந்த போது, {சேதிநாட்டு} மன்னன் {தெய்வங்களை} *வழிபடும் நேரத்தில், சுனந்தையுடன் அமர்ந்திருந்த விதரப்ப்பத்தின் இளவரசியை {தமயந்தியை} மன்னனின் அரண்மனையில் கண்டான். புகைச் சுருள்களால் மூடப்பட்ட நெருப்பு போன்று பிரகாசித்த அவளது ஒப்பற்ற அழகு, லேசாகக் கண்டடையக்கூடியதாக இருந்தது. அழுக்கடைந்து, மெலிந்திருந்த அகன்ற கண்களையுடைய அந்த மங்கையைக் கண்டதும், பல காரணங்களால் அது தமயந்திதான் என்ற முடிவுக்கு வந்தான் {அந்த அந்தணன் சுதேவன்}.
பிறகு சுதேவன், "நான் முன்பு கண்டதைப் போலவே இந்த மங்கை இப்போதும் இருக்கிறாள். ஓ, மூன்று உலகங்களின் கண்களுக்கும் இனிய ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போன்ற இந்த அழகானவள் மீது, எனது கண்கள் பட்டதால் நான் அருளப்பட்டவனே! முழு நிலவைப் போன்றும், மாறாத இளமையுடனும், அழகிய வட்டமான மார்புகளுடனும், எல்லாபுறங்களையும் தனது காந்தியால் பிரகாசிக்க வைத்துக் கொண்டும், அழகான தாமரைகளைப் போன்ற அகன்ற கண்களுடனும், காமனின் ரதியைப் போன்றும், அனைத்து உலகங்களின் கண்களுக்கும் இனியவளாக முழு நிலவின் கதிர்களைப் போலவும், பாதகமான அதிர்ஷ்டத்தால் இடம் மாற்றப்பட்ட விதரப்ப்பத்தின் தடாகத்தில் இருக்கும் தாமரைத் தண்டைப் போலவும் இருக்கிறாள். இவள் செயல்களால் ஏற்பட்ட ஏமாற்றத்தில் இருக்கிறாள்.
தனது கணவனைக் குறித்த வருத்தத்தால் பீடிக்கப்பட்டு, துயரத்துடன் இருக்கும் அவள், பவுர்ணமி இரவின் போது விழுங்கப்பட்ட முழு நிலவின் வெளிச்சம் போலவோ அல்லது ஊற்று வற்றிக் காய்ந்த நீரோடை போலவோ இருக்கிறாள். யானையின் துதிக்கையால் நசுக்கப்பட்ட தாமரை இதழ்களையும், யானையின் வருகையால் பயந்த பறவைகளையும், நீர்க்கோழிகளையும் கொண்ட நாசமடைந்த தடாகத்தைப் போல அவளது நிலை இருக்கிறது. உண்மையில் இந்தப் பெண், அழகான வடிவுடனும், அழகான அங்கங்களுடனும், ரத்தினங்கள் நிறைந்த மாளிகையில் வசிக்கும் தகுதியுடனும் இருக்கிறாள். ஆனால் இப்போதோ, சூரியனால் சுடப்பட்ட தாமரைத் தண்டைப் போல வேரறுந்து இருக்கிறாள். அழகு, தயை ஆகியவற்றுடன், பூணும் தகுதி இருந்தும் ஆபரணங்கள் ஏதுமற்று, புதிய புகலிடத்தை அடைந்த சந்திரன் கருப்பு மேகங்களால் மறைக்கப்பட்டது போல இருக்கிறாள்.
வசதிகளையும் ஆடம்பரங்களையும் இழந்து, அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களைப் பிரிந்து, தனது தலைவனைக் காணும் நம்பிக்கையில் துயரத்துடன் வாழ்கிறாள். உண்மையில், ஆபரணங்கள் அற்று இருந்தாலும், கணவனே ஒரு பெண்ணுக்குச் சிறந்த ஆபரணம். கணவன் இல்லாமல் இருப்பதால், இந்தப் பெண் அழகாக இருந்தாலும், ஒளி இழந்து இருக்கிறாள். இப்படிப்பட்ட மனைவியை இழந்து, அவன் {நளன்} துக்கத்திற்கு பலியாகாமல் இருந்தால், அந்தக் காரியம் நளனால் செய்யப்பட்ட கடும் சாதனையே.
கரிய கூந்தலும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களும் கொண்டு, அருளுக்கு
தகுதியிருப்பினும் துயரில் இருக்கும் இந்த மங்கையைக் கண்டு, எனது இதயம் கூட
வலிக்கிறதே. ஐயோ, கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்து, அனைத்து நற்குறிகளாலும் அருளப்பட்ட இந்தப்பெண், இந்தத் துன்பக்கடலைக் கடந்து, சந்திரனை மீண்டும் அடைந்த ரோகிணி {நட்சத்திரம்} போல, எப்போது தனது தலைவனின் துணையை அடையப்போகிறாளோ? இழந்த நாட்டை மீண்டும் பெறும் மன்னன் மகிழ்வதைவிட, நிச்சயம், இவளை {தமயந்தியை} மீண்டும் அடையும் நிஷாதர்களின் மன்னன் {நளன்} அதிகமாக மகிழ்வான். இவளது இயல்புக்கும், வயதுக்கும், ஒழுக்கத்துக்கும் சமமான நளன், கரிய கண்களைக் கொண்டவளும், விதரப்ப்பனின் மகளுமான இந்த மங்கையை அடையத் தகுதியுடையவனே. தனது கணவனைச் சந்திக்க எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறாள் இவள். அளவிடமுடியா வீரமும், சக்தியும், பலமும் கொண்ட அந்த வீரனைக் குறித்து துயருற்றிருக்கும் இந்த ராணிக்கு {தமயந்திக்கு}, நான் ஆறுதல் சொல்வதே தகும். தனது தலைவனை நினைத்தும், இதுவரை காணாத துன்பத்தையும் கண்டும் இருக்கும், சந்திரனைப் போன்ற முகம் கொண்டு, துயரத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்தப் பெண்ணுக்கு நான் ஆறுதல் சொல்வேன்" என்று நினைத்துக் கொண்டான் {அந்தணன் சுதேவன்}.
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "இப்படி பல்வேறு சூழ்நிலைகளையும் குறிப்புகளையும் நினைத்துப் பார்த்த சுதேவன் என்ற அந்த அந்தணன் {சுதேவன்} தமயந்தியை அணுகி, "ஓ விதரப்ப்ப இளவரசியே {தமயந்தியே}, நான் சுதேவன், உனது தமயனின் அன்பு நண்பன். நான் மன்னன் பீமரின் விருப்பத்தின் பேரில் உன்னைத்தேடியே இங்கு வந்திருக்கிறேன். உனது தந்தை, தாய் மற்றும் உனது சகோதரர்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள். நீண்ட ஆயுள் அருளப்பட்ட உனது மகனும் மகளும் அமைதியாக வாழ்கிறார்கள். உனது உறவினர்கள், உயிரோடு இருந்தாலும், உன்னை நினைத்து இறந்தவர்கள் போலவே இருக்கிறார்கள். உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அந்தணர்கள், உன்னைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்" என்றான் {சுதேவன்}.
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "ஓ யுதிஷ்டிரா, சுதேவனை அடையாளம் கண்டு கொண்ட தமயந்தி, தனது உறவினர்கள் மற்றும் அவளது இரத்த சம்பந்தமுடைய அனைவரின் நிலையையும் ஒருவர் பின் ஒருவராக அவனிடம் விசாரித்தாள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பிறகு, துயரத்தால் பீடிக்கபட்ட விதரப்ப்ப இளவரசி, தனது தமையனின் நண்பனும், அந்தணர்களில் முதன்மையானவனுமான சுதேவனை எதிர்பாராமல் கண்டதால், மிகவும் அழுதாள். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தமயந்தி அழுவதையும், சுதேவனிடம் தனிமையில் பேசுவதையும் கண்ட சுனந்தை, துன்பம் கொண்டு அரசத்தாயிடம் சென்று "ஒரு அந்தணனின் முன்னிலையில் சைரந்திரி கடுமையாக அழுகிறாள். நீ விரும்பினால், உன்னைத் திருப்திப்படுத்திக் கொள் {வேண்டுமானால் வந்து பார்}" என்றாள் {சுனந்தை}.
இதன்பேரில், சேதி நாட்டு மன்னனின் தாய், அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்துவெளியே வந்து, அந்தப் பெண்ணும் (தமயந்தியும்), அந்த அந்தணனும் இருந்த இடத்திற்கு வந்தாள். பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சுதேவனை அழைத்து, அவனிடம், "இந்த அழகானவள் யாருடைய மனைவி? இவள் யாருடைய மகள்? இந்த அழகான கண் கொண்ட மங்கை, தனது உறவினர்களையும், கணவனையும் எப்படி இழந்தாள்? இந்தத் துன்பத்தில் வீழ்ந்திருக்கும் இந்த மங்கையைக் காண நீ எப்படி வந்தாய்? இவை அனைத்தையும் நான் உன்னிடம் விவரமாகக் கேட்க விரும்புகிறேன். தெய்வீக அழகு கொண்ட இந்த மங்கையைப் பற்றி உன்னிடம் நான் கேட்பது அனைத்திற்கும் உண்மையைச் சொல்" என்றாள். பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி அரசத்தாயால் சொல்லப்பட்ட அந்தணர்களில் சிறந்தவனான சுதேவன், வசதியாக {சிரமம் இல்லாமல்} அமர்ந்து கொண்டு, தமயந்தியின் உண்மையான வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தான் {விதரப்ப்ப நாட்டு மன்னன் பீமனால் அனுப்பப்பட்ட அந்தணன் சுதேவன்}".
**************************************************************************
**************************************************************************
* அரசத்தாயால் பணிக்கப்பட்ட சைரந்திரி {தமயந்தி}, அந்தணர்களுக்கு அமுது படைக்கும்போது சுதேவன் கண்டதாகவும் வேறு கதைகளில் சொல்லப்படுகிறது.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.