Search for Nala began! | Vana Parva - Section 69 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
அரசத் தாய் சுதேவனிடமிருந்து தமயந்தியைப் பற்றிய உண்மைகளை அறிதல்; தமயந்தியின் மச்சத்தைக் கொண்டு, அவள் தனது சகோதரியின் மகள் என்பதை அரசத்தாய் அறிதல்; தமயந்தியை அவளது சொந்த நாட்டுக்கு அனுப்புதல்; தமயந்தியின் வற்புறுத்தலாம் பீமன் நளனைத் தேடி அந்தணர்களை மீண்டும் அனுப்புதல்…
சுதேவன் சொன்னான், "பீமன் என்ற பெயரில், அறம் சார்ந்து, விதரப்ப்பத்தின் சிறப்புமிக்க ஆட்சியாளராக ஒருவர் இருக்கிறார். இந்த அருளப்பட்ட மங்கை, அவரது மகளாவாள். இவள் தமயந்தி என்ற பெயரால் பரந்து அறியப்பட்டிருக்கிறாள். வீரசேனன் மகனும், நிஷாதர்களை ஆளும் மன்னனுமான ஒருவன், நளன் என்ற பெயரில் இருக்கிறான். இந்த அருளப்பட்ட மங்கை {தமயந்தி}, ஞானமும், நீதியும் கொண்ட அந்த ஏகாதிபதியின் {நளனின்} மனைவியாவாள். தனது தம்பியால் {புஷ்கரனால்} பகடையில் வீழ்த்தப்பட்டு, நாட்டை இழந்த அந்த மன்னன் {நளன்}, தமயந்தியுடன் சேர்ந்து யாரும் அறியாமல் சென்றுவிட்டான். நாங்கள் தமயந்தியை இந்த உலகம் முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறோம். கடைசியாக இந்தப் பெண், உமது மகனின் இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டாள்.
இவளின் {தமயந்தியின்} அழகை விஞ்ச இந்த உலகில் வேறு எந்தப் பெண்ணும் கிடையாது. எப்போதும் இளமையுடன் இருக்கும் இந்த மங்கையின் {தமயந்தியின்} புருவத்திற்கு மத்தியில், தாமரையைப் பிரதிபலிக்கும் ஒரு அற்புதமான மச்சம், பிறப்பில் இருந்தே இருக்கிறது. (முன்) நாங்கள் பார்த்தபோது, மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் சந்தினைப் போல, (முன்னெற்றி) தூசியால் (பூசப்பட்டு) அது மறைந்திருந்தது. செழிப்பையும், செல்வத்தையும் குறிப்பதற்கு படைப்பாளனால் {பிரம்மனால்} அங்கே வைக்கப்பட்ட குறியீடான அது, வளர்பிறையின் முதல் நாள் {பிரதமையன்று} தோன்றும் சந்திரன் மேகத்தால் மறைக்கப்பட்டது போல, லேசாகத் தான் தெரிந்தது. உடல் தூசியால் மூடியிருந்தாலும், இவளது அழகு மறையவில்லை. இவள் தன்னைக் கவனித்துக் கொள்ளவில்லையெனினும், அது {மச்சம்} இன்னும் வெளிப்படையாக இருந்து தங்கம் போல மின்னுகிறது. தேவதையைப் போன்ற இந்தப் பெண்ணை {தமயந்தியை}, வெப்பத்தை வைத்தே நெருப்பைக் கண்டுபிடிப்பது போல், இவளது உருவத்தையும், அந்த மச்சத்தையும் வைத்தே நான் கண்டுபிடித்தேன்" என்றான் {பிராமணன் சுதேவன்}.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சுதேவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சுனந்தை, தமயந்தியின் புருவங்களுக்கு மத்தியில் இருந்த மச்சத்தில் படிந்திருந்த தூசியைத் துடைத்தாள். அதன்பிறகு அது {அந்த மச்சம்}, மேகத்தில் இருந்து வெளிப்பட்டு வானத்தில் தெரியும் சந்திரனைப் போலத் தெரிந்தது. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்த மச்சத்தைக் கண்டதும், சுனந்தையும், அரசத்தாயும் அழத்தொடங்கி, தமயந்தியை வாரி அணைத்தபடி சிறிது நேரம் அமைதியாக நின்றனர். கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த அரசத்தாய், மென்மையான வார்த்தைகளால், "இந்த மச்சத்தை வைத்து, நீ எனது சகோதரியின் மகள் என்பதை அறிந்தேன். ஓ அழகான பெண்ணே {தமயந்தியே}, உனது அன்னையும் நானும், தசார்ண நாட்டு ஆட்சியாளரான சுதாமனின் மகள்களாவோம். அவள் மன்னர் பீமனுக்கு {விதரப்ப்ப நாட்டு மன்னனுக்கு} அளிக்கப்பட்டாள். நான் வீரபாகுவுக்குக் {சேதி நாட்டு மன்னனுக்குக்} கொடுக்கப்பட்டேன். தசார்ண நாட்டில் இருக்கும் எங்களது தந்தையின் அரண்மனையில் நான் உனது பிறப்பைக் கண்டேன் {சேதி நாட்டு அரசத்தாய் தமயந்தியின் சித்தி}. ஓ அழகானவளே {தமயந்தி} உனக்கு, எனது வீடும் உன் தந்தையின் வீடு போன்றதே. ஓ தமயந்தி, இந்த செல்வங்கள் எனக்கு எப்படியோ அதபோலத்தான் உனக்கும்" என்றாள்.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதைக் கேட்டதும், தனது அன்னையின் சகோதரியை வணங்கி, "அறியப்படாமல் இருந்தும், நான் இங்கே உம்முடன் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். எனது விருப்பங்கள் அனைத்தும் திருப்தியாகச் செய்யப்பட்டன. என்னை நீங்கள் நன்றாகப் பார்த்துக் கொண்டீர்கள். நான் தங்கியிருந்தவரை எப்படி மகிழ்ந்தேனோ அப்படியே இனிமேலும் சந்தேகமற இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் தாயே, நெடுநாளாக நாடு கடந்து இருக்கிறேன். ஆகையால், (நான் செல்வதற்கு) எனக்கு நீங்கள் உத்தரவு வழங்க வேண்டும் எனது மகனும் மகளும் எனது தந்தையின் அரண்மனையில் வாழ்ந்து வருகிறார்கள். தந்தையையும் தாயையும் பிரிந்து, துயருடன் அவர்கள் எவ்வாறு தங்கள் நாட்களைக் கடத்துகிறார்களோ? எனக்கு ஏற்புடையதை நீங்கள் செய்ய வேண்டுமென்றால், நேரங்கடத்தாமல், ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்யுங்கள். நான் விதரப்ப்பத்திற்குச் செல்ல விரும்புகிறேன்" என்றாள்.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதனால் (தமயந்தியின்) அன்னையின் சகோதரி {அரசத்தாய்}, இதயத்தில் மகிழ்ந்து, "அப்படியே ஆகட்டும்" என்றாள். ஓ பாரதர்களின் தலைவனே {யுதிஷ்டிரா}, அந்த அரசத்தாய் தனது மகனிடம் அனுமதி பெற்று, அதிகமான மெய்க்காவலர்களுடனும், முதல்தரமான ஆடைகள், பானங்கள் மற்றும் உணவும் கொடுத்து, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் அனுப்பி வைத்தாள். விரைவாக அவள் {தமயந்தி} விதரப்ப்ப நாட்டை அடைந்தாள். அவளது உறவினர்களை அனைவரும் (அவளது வரவால்) மகிழ்ந்து, அவளை மரியாதையுடன் வரவேற்றனர். தனது உறவினர்களும், பிள்ளைகளும், தனது பெற்றோர் இருவரும், பணிப்பெண்கள் அனைவரும் நலமாக இருப்பதைக் கண்ட சிறப்புமிக்க தமயந்தி, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களையும், அந்தணர்களையும் மேன்மையான முறையில் வழிபட்டாள். தனது மகளை {தமயந்தியைக்} கண்ட மன்னன் {பீமன்}, மிகவும் மகிழ்ந்து, சுதேவனுக்கு ஆயிரம் பசுக்களையும், பல செல்வங்களையும், ஒரு கிராமத்தையும் கொடுத்தான்.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த இரவைத் தனது தந்தையின் மாளிகையில் கழித்து களைப்பில் இருந்து மீண்ட தமயந்தி தனது அன்னையிடம், "ஓ தாயே, உனக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் வாழ வேண்டும் என்று நீ விரும்பினால், மனிதர்களில் வீரரான நளரைக் கொண்டு வர (அக்கறையுடனும், சிரமம் பாராமலும்) முயற்சிக்க வேண்டும்" என்றாள். இப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட வணக்கத்திற்குரிய ராணி சோகத்தில் ஆழ்ந்தாள். கண்ணீரால் குளித்த அவளால் {ராணியால்} பதில் சொல்ல இயலவில்லை. அவளது {தமயந்தியின்} துயர்நிலையைக் கண்டு, அந்த உள் அறைகளில் {அந்தப்புரத்தில்} இருந்தவர்கள் அனைவரும் "ஓ" என்றும், "ஐயோ" என்றும் உரக்க அழுதனர். பிறகு ராணி பலம்பொருந்திய ஏகாதிபதியான பீமனிடம், "உமது மகள் தமயந்தி, தனது கணவனை நினைத்து {அழுது} புலம்புகிறாள். ஓ மன்னா {பீமரே}, தனது நாணம் அனைத்தையும் விட்டு, தனது மனதில் இருப்பதை அவளே என்னிடம் தீர்மானமாகச் சொன்னாள். அந்த நீதிமானை (நளனை), உமது மக்கள் {பணியாட்கள்} தேடட்டும்" என்றாள்.
அவளால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {பீமன்} அந்தணர்களிடம் "நளனைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயலுங்கள்" என்று சொல்லி எல்லாப்புறங்களுக்கு அனுப்பினான். விதரப்ப்ப ஆட்சியாளனால் {நளனைத் தேட} உத்தரவிடப்பட்ட அந்த அந்தணர்கள், தமயந்தியின் முன் தோன்றி, தாங்கள் மேற்கொள்ளப்போகும் பயணத்தைக் குறித்து அவளிடம் சொல்லினர். அவர்களிடம் அந்த பீமனின் மகள் {தமயந்தி}, "நீங்கள் சென்று, அனைத்து நாடுகளிலும், அனைத்து சபைகளிலும் "ஓ அன்புக்குரிய சூதாடியே, அர்ப்பணிப்பும் அன்பும் கொண்ட உமது மனைவியான நான் கானகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது எனது பாதி ஆடையை வெட்டி எடுத்துக் கொண்டு என்னைக் கைவிட்டு எங்கே சென்றீர்? அந்தப் பெண், உம்மால் உத்தரவிடப்பட்டபடியே உம்மை எதிர்பார்த்து, பாதி ஆடையுடனும், எரியும் துயரத்துடனும் உமக்காகக் காத்திருக்கிறாள்! ஓ மன்னா {நளரே}, ஓ வீரரே, எப்போதும் துயரத்துடன் அழுது கொண்டே இருக்கும் அவளிடம் கருணை கொண்டு பதிலளியும்." என்று சொல்லுங்கள். காற்றின் துணையால் நெருப்பு கானகத்தை உட்கொண்டுவிடும். ஆகையால், அவர் என் மீது பரிதாபம் கொள்ளும் வகையில் இதையும் இதற்கு மேலும் சொல்லுங்கள்.
(மேலும்) "மனைவியாகப்பட்டவள் எப்போதும் கணவனால் பாதுகாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் இருக்க வேண்டும். கடமைகள் அனைத்தையும் அறிந்து, நல்லவராக இருக்கும் தாங்கள், ஏன் அந்த இரு கடமைகளையும் {பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் [உணவு அளித்தல்]} புறக்கணித்தீர்? புகழும், ஞானமும், நல்ல பிறப்பும், அன்பும் உடைய நீர் ஏன் இப்படி அன்பில்லாமல் நடந்து கொண்டீர்? இவையெல்லாம் எனது நற்பேறுகள் தொலைந்ததனால் நடக்கின்றன என்று அஞ்சுகிறேன்" என்று சொல்லுங்கள். இப்படி நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, யாராவது உங்களுக்கு பதிலளித்தால், அந்த மனிதரைக் குறித்து அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள். அவர் யார்? அவர் எங்கு வசிக்கிறார்? என்பதை அறிந்து கொள்ளுங்கள். மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்களே, இந்தப் பேச்சைக்கேட்டு யார் உங்களிடம் பதில் பேச விழைகிறாரோ, அவரின் அந்த வார்த்தைகளை என்னிடம் {எனது கவனத்திற்கு} கொண்டு வாருங்கள். நீங்கள் உச்சரிக்கும் வார்த்தைகளைக் கேட்கும் யாரும், இது என்னால் உத்தரவிடப்பட்ட வார்த்தைகள் என்றோ அல்லது நீங்கள் என்னிடம் திரும்ப வருவீர்கள் என்றோ அறிந்து கொள்ளாதவாறு பேசுங்கள். பதில் சொல்லும் அவர், செல்வந்தரா, அல்லது ஏழையா, அல்லது சக்தியற்றவரா, என்றும் அறிந்து கொள்ளுங்கள். உண்மையில் அவர் குறித்த அத்தனையும் அறிந்து கொள்ளுங்கள்" என்று {அந்த அந்தணர்களிடம்} சொன்னாள் {தமயந்தி}.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி தமயந்தியால் உத்தரவிடப்பட்ட அந்தணர்கள் அனைவரும், பேரழிவில் சிக்கியிருக்கும் நளனைத் தேடி, எல்லாத் திக்குகளுக்கும் சென்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நகரங்களிலும், நாடுகளிலும், கிராமங்களிலும், துறவிகள் இருக்கும் இடங்களிலும், இடையர்கள் இருக்கும் இடங்களிலும் {இடைச்சேரிகளிலும்} அந்த அந்தணர்கள் அவனை {நளனைத்} தேடினர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் தமயந்தி சொல்லியபடி செய்தனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.