http://venmurasu.in/2014/01/12 /நூல்-ஒன்று-முதற்கனல்-12/
இப்பகுதியில் பீஷ்மர் சுயம்வரப் பந்தலுக்கு வந்து மூன்று இளவரசியரையும் கடத்திச் செல்வதும்; சால்வன் தொடர்ந்து சென்று போரிடுவதும், அம்பை தன் காதலை பீஷ்மரிடம் வெளிப்படுத்துவதும்; பீஷ்மர் அம்பையை விடுவிப்பதும் வருகிறது.
*********************************************************************
எரியிதழ்-3 | முதற்கனல்-12 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...
- குழந்தைகளைக் கொன்றாள் கங்கை - பகுதி 98 - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section98.html
- உண்மையை வெளிப்படுத்தினாள் கங்கை - பகுதி 99 - http://mahabharatham.arasan.info/2013/05/99.html
- காசியில் நடந்த சுயம்வரம் | ஆதிபர்வம் - பகுதி 102 - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section102.html
நமது கருத்து
1. // தமகோஷன் குனிந்து சால்வனிடம் “வயோதிகம் ஆசைக்குத் தடையல்ல என்று இதோ பிதாமகர் நிரூபிக்கிறார்” என்றான். சால்வன் “அவர் ஏன் வந்திருக்கிறார் என்று எனக்கு ஐயமாக இருக்கிறது” என்றான். “எங்கு வந்து அமர்ந்திருக்கிறார் என்று பார்த்தாலே தெரியவில்லையா என்ன?நைஷ்டிகபிரம்மசாரி என்று அவரைச் சொன்னார்கள்.//
இப்படி ஒரு கருத்து மஹாபாரதத்தில் அந்தப் பகுதி நடைபெறும் இடத்தில் இல்லை. வேறு புராணங்களில் இருக்கலாம். அல்லது புனைவாகவும் இருக்கலாம்.
2. //வேட்டையில் இரையை நெருங்கும் வேங்கையைப்போல மெல்லிய தாழ்நடையுடன் கையில் மாலையுடன் அம்பை சால்வனை மட்டும் நோக்கி அவனைப்பார்த்து சென்றாள். அக்கணமே அங்கிருந்த அனைவருக்கும் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பது புரிந்தது.//
இது முழு மஹாபாரதத்தில் ||தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுக்கக் காத்திருக்கும் மூன்று மங்கையரையும் கண்டார். அங்கே கூடியிருந்த மன்னர்களின் பெயர்களை சபையில் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, பீஷ்மர் தனது தம்பியின் சார்பாக, அந்த மங்கையரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ரதத்தில் ஏற்றினார்.|| என்று வருகிறது. அம்பை சால்வனுக்கு மாலையிட எத்தனிக்கும்போது பீஷ்மர் தடுத்து அழைத்து வந்தார் என்பது வேறு புராணங்களிலோ அல்லது புனைவாகவோ இருக்கும்.
3. //அவரது எட்டு மாணவர்கள் கைகளில் அம்புகளும் விற்களுமாக உள்ளே வந்தனர். “இளவரசிகளை நம் ரதங்களில் ஏற்றுங்கள்” என்று பீஷ்மர் ஆணையிட்டார்.//
பீஷ்மர் தனித்து வந்ததாகவே மகாபாரதம் கூறுகிறது.
4. //மாணவர்கள் அம்பையை அணுகியதும் அவள் மாலையை கீழே போட்டு அருகே இருந்த கங்கநாட்டு மன்னனின் உடைவாளை உருவி முதலில் தன்னைத் தொடவந்தவனை வெட்டி வீழ்த்தினாள். பிறமாணவர்கள் வாளுடன் அவளை எதிர்கொண்டனர்.//
பெண்களுக்கு எதிராக வாளெடுக்காத காலம் அது. இருப்பினும் அம்பையை வீரப் பெண்மணியாகக் காட்ட இப்படி ஒரு புனைவைச் செய்திருக்கிறார் ஆசிரியர் என்று நினைக்கிறேன்.
5. //கங்கைக்கரை குறுங்காட்டை அடைந்தபோது வனப்பாதையில் சால்வனின் ரதம் மட்டுமே பின்னாலிருந்தது. அவன் தேரின் தூணிலும் கூரையிலும் முழுக்க அம்புகள் தைத்து நின்று அதிர்ந்தன. அவன் கவசத்தில் தைத்த அம்புகள் வில்லின் நாண்பட்டு உதிர்ந்தன. மரணத்தையே மறந்துவிட்டவன் போல சால்வன் அம்புகள் நடுவே நெளிந்தும் வளைந்தும் கூந்தல் பறக்க விரைந்து வந்துகொண்டிருந்தான்.//
மஹாபாரதத்தில் சல்லியன் தொடர்ந்ததாகவே வருகிறது. கடைசிவரை பீஷ்மருடன் அவனே போரிட்டான். சௌபன் என்று அழைக்கப்படும் சால்வ மன்னன் கடைசி வரை நின்று போரிட்டதாக மகாபாரதத்தில் இல்லை.
6. // “கங்கை மீது ஆணையாகச் சொல்கிறேன்….நான் சால்வனின் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுப்பேன். வேறு எக்குழந்தை என் வயிற்றில் பிறந்தாலும் இந்த கங்கை நீரில் அவற்றை மூழ்கடிப்பேன்.”
பீஷ்மர் மின்னல்தாக்கிய மரம்போல அதிர்ந்துகொண்டு அப்படியே சுருண்டு அமர்வதை திகைப்புடன் அம்பை பார்த்தாள். நடுங்கும் இரு கைகளாலும் தலையைத் தாங்கிக்கொண்டு “போ…போய்விடு…இனி என் முன் நிற்காதே…” என பீஷ்மர் கூவினார். “யாரங்கே…இந்தப்பெண்ணை இவள் விரும்பியபடி உடனே அனுப்பிவையுங்கள்…இவள் கேட்பதையெல்லாம் கொடுங்கள். உடனே…இப்போதே..” என்று கூச்சலிட்டார்.//
இதே பகுதி மஹாபாரதத்தில் || சத்தியவதியின் ஆலோசனையின்படி திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பீஷ்மரால் செய்யப்பட்ட பிறகு, காசி மன்னனின் மூத்த மகள், மெல்லிய புன்னகையுடன், அவரிடம் இந்த வார்த்தைகளைக் கூறினாள் "இதயத்தால் நான் மன்னன் சௌபாவைக் {சால்வ மன்னனைக்} கணவராகத் தேர்ந்தெடுத்துவிட்டேன். அவரும், தனது இதயத்தால் என்னை மனைவியாக ஏற்றுக் கொண்டார். இது எனது தந்தையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த சுயம்வரத்தில் நான் அவரையே எனது தலைவனாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தேன். அறத்தின் அனைத்து விதிகளையும் அறிந்தவர் நீர், இதையும் அறிந்து, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும்." என்றாள்.
அந்தணர்கள் முன்னிலையில் அந்த மங்கை இப்படிச் சொன்னதும், பீஷ்மர் என்ன செய்யப்பட வேண்டும் என்பது குறித்து சிந்தித்தார். அவர் அறத்தின் விதிகளை நன்கு அறிந்திருந்தார். வேதமறிந்த அந்தணர்களிடம் ஆலோசித்து, காசி மன்னனின் மூத்த மகள் அம்பாவை, அவள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள அனுமதி கொடுத்தார். ஆனால் மற்ற இரு மங்கையரான அம்பிகா மற்றும் அம்பாலிகாவை, தனது இளைய தம்பி விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
|| என்று வருகிறது
நான் ரசித்த வரிகள்
* வேட்டையில் இரையை நெருங்கும் வேங்கையைப்போல மெல்லிய தாழ்நடையுடன் கையில் மாலையுடன் அம்பை சால்வனை மட்டும் நோக்கி அவனைப்பார்த்து சென்றாள். அக்கணமே அங்கிருந்த அனைவருக்கும் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பது புரிந்தது.
* பீஷ்மரின் வில்வித்தை ஒரு நடனம் போலிருந்தது. அவர் குறிபார்க்கவில்லை, கைகள் குறிகளை அறிந்திருந்தன. அவர் உடல் அம்புகளை அறிந்திருந்தது. அவரது கண்கள் அப்பகுதியின் புழுதியையும் அறிந்திருந்தன.
* அவை மிகமெல்லிய ஆனால் உறுதியான புல்லால் ஆனவை. புல்லால் வாலும் இரும்பால் அலகும் கொண்ட பறவைகள். மீன்கொத்திகள் போல அவை வானில் எழுந்து மிதந்து வந்து சரேலென்று சரிந்து கொத்த அந்த புல்நுனிகளே காரணம் என்று புரிந்துகொண்டான்.
* “எதைத்தாங்குவது? குயவன் களிமண்ணைக் கையாள்வதுபோல அன்னிய ஆணொருவன் நம் உடலைக் குழைப்பதையா? நம்மில் நாம் விரும்பாத ஒன்றை அவன் வடித்தெடுப்பதையா?” என்றாள் அம்பை.
* “தேவி, நான் முடிவெடுத்தவற்றை அவ்வாறே செய்யக்கூடியவன். இந்த முடிவை எடுத்துவிட்டேன். நீங்கள் என்னுடன் அஸ்தினபுரிக்கு வந்து அரசியாவதை எவராலும் தடுக்கமுடியாது….நீங்களோ உங்களைச் சேர்ந்தவர்களோ என்னைக் கொன்றபின்னர் வேண்டுமென்றால் உங்கள் வழியில் செல்லமுடியும்….என்னை மன்னியுங்கள். நான் பெண்களுடன் அதிகம் பேசுபவனல்ல” என்று சொல்லி பீஷ்மர் எழுந்தார்.
* “பெண்கள் கண்வழியாக ஆண்களை அறியமுடியாது. கருப்பை வழியாக மட்டுமே அறியமுடியும். அதுவே இயற்கையின் நெறி…அவனை மறந்துவிடுங்கள்.”
* “அவருக்கும் கங்கைக்கும் என்ன உறவு?” என்று கேட்டாள். “அவர் கங்கையின் மைந்தர். கங்கை உண்ட ஏழு குழந்தைகளுக்குப்பின் பிறந்த எட்டாமவர்” என்றான் சீடன்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.