http://venmurasu.in/நூல்-ஒன்று-முதற்கனல்-11/
இப்பகுதியில் காசியின் இளவரசியர் சுயம்வரத்திற்கு தயாராவதும், அவ்விளவரசிகளுடைய தாயின் மன ஓட்டங்களையும் படம்பிடித்திருக்கிறார் ஆசிரியர்
*********************************************************************
எரியிதழ்-2 | முதற்கனல்-11 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவு...
- காசியில் நடந்த சுயம்வரம் | ஆதிபர்வம் - பகுதி 102 - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section102.html
நமது கருத்து:
//அங்கம், வங்கம், கலிங்கம், மாளவம், மாகதம், கேகயம், கோசலம், கொங்கணம், சோழம், பாண்டியம் என்னும் பத்து நாட்டுமன்னர்களும் அவருடன் கைகோர்த்திருக்கிறார்கள். காசியுடன் உறவை உருவாக்கிக் கொண்டபின்பு அஸ்தினபுரியை கைப்பற்றவேண்டுமென்று எண்ணியிருக்கிறார்கள்.//இது போன்ற ஒரு செய்தி மஹாபாரதத்தில் இல்லை என்று நினைக்கிறேன்.
சால்வன், சிவனிடம் இருந்து பெற்ற சௌபம் என்ற ரதத்தைக் கொண்டிருந்ததால் சௌபன் என்ற பெயரும் கொண்டான். அவனது தலைநகரும் சௌபம் என்று அழைக்கப்பட்டது என்பது மஹாபாரதச் செய்தி. இந்தச் செய்தி வெண்முரசில் பின்னர் வந்தால்கூட நன்றாக இருக்கும்.
//அவர்கள் சால்வரின் பெருமையை பாடிப்பாடி மூத்த இளவரசியின் மனதுக்குள் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். பட்டுத்திரைச்சீலையில் வரையப்பட்ட ஓர் ஒவியம்கூட நம் இளவரசியிடம் அளிக்கப்பட்டிருக்கிறது” என்றாள்.//
என்றும்
//ஏதும் எழுதப்படவில்லை. வெறும் தாழைமடல். அதைத்தான் இளவரசி அம்பாதேவி தன் ஆடைக்குள் இப்போது வைத்திருக்கிறாள். அதை அவ்வப்போது எடுத்து முகர்ந்துகொள்கிறாள். மற்ற இளவரசியர் அதைத்தான் சொல்லி சிரித்துக்கொள்கிறார்கள்” என்றாள்.//
என்றும்
//அம்பையின் கண்கள் தன்னைத்தேடுவதை சால்வன் கண்டுகொண்டான். அவள் கண்களைச் சந்திக்க அஞ்சி அவன் தலையை திருப்பிக்கொள்வதை புராவதி கவனித்தாள். அவனைக் கண்டுவிட்ட அம்பை புன்னகையுடன் தலைகுனிவதையும் கண்டாள்.//
என்றும்
சால்வன் அம்பை காதலைக் குறித்து மஹாபாரதத்தில் இவ்வளவு தெளிவான செய்தி கிடையாது. இது தேவி பாகவதத்திலோ அல்லது வேறு புராணங்களில் இருந்தோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றாலும் இது அருமையான புனைவே. கதைக்கு அவசியமும் கூடத்தான் என்று நினைக்கிறேன்.//அவர்கள் உள்ளே சென்றதும் ஆலயத்திலிருந்த ஆண்களெல்லாம் வெளியே அனுப்பப்பட்டனர். விஸ்வநாதனை வணங்கியபின் அரசியும் இளவரசியரும் விசாலாட்சியின் சன்னிதியில் இருந்த அணிமண்டபத்தில் அமர்ந்ததும் பூசகர்களும் வெளியேறினர். முதிய பூசகிகள் மூவர் ஆலயக்கருவறைக்குள் சென்று வழிபாடுகளைத் தொடர்ந்தனர்.//பெண்கள் ஆலயக்கருவறைக்குள் சென்றனர் என்பது நல்ல செய்தியாக இருக்கிறது.
//“சற்றுத்தாமதமானாலும்தான் என்ன அமாத்யரே? இந்த நாளில் அவர்கள் அணிசெய்வதைப்போல இனி எப்போது நிகழப்போகிறது?” என்றாள் பிரதமை. “அணிசெய்வதை வேகமாகச் செய்யலாமே” என்றார் ஃபால்குனர். “எக்காலத்திலும் அதை ஆண்களுக்கு புரியவைக்க முடியாது” என்றாள் பிரதமை.//பெண்களின் அலங்கார மோகத்தை வர்ணிக்கும் அழகான வரிகள்.
//ஆர்ஷ்டிசேனன் என்னும் பெருமைமிக்க அரசர் வரிசையில் பிறந்த மாமன்னன் காசனை வணங்குவோம். காசனின் மைந்தர்களின் நாடு என்ற பொருளிலேயே இந்தப் புனிதபூமி காசி என்றழைக்கப்படுகிறது. அது வாழ்க!”//தேடற்கரிய தகவல்
//காவல்தெய்வமான கரியநாய் வடிவம்கொண்ட தேவனை வணங்குகிறேன்.//பைரவன் என்று சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பொதுவாக பைரவனின் வாகனம் நாய் என்று சொல்வார்கள். இருப்பினும் மறுவாசிப்பில் அந்தக் காவல்தெய்வத்தை பைவர் என்றே சொல்லியிருக்கலாம்.
அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரின் தனித்திறமைகளைப் பட்டியலிட்டிருப்பது நன்றாக இருக்கிறது. இவற்றைத் தேடினாலும் எங்கும் கண்டடைய முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஆசிரியரின் உழைப்பு, இதுபோன்ற தகவல்களில்தான் நன்றாக வெளிப்படுகிறது.
நல்ல சூழ்நிலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஓவியர்.
நல்ல சூழ்நிலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஓவியர்.
எனக்குப் பிடித்த வரிகள்
* ஒவ்வொரு சொல்லுக்கும் அம்பையின் உடலில் காற்று அசைக்கும் செம்பட்டுத் திரை போல நாணம் நெளிந்துசென்றது.
* அவர்கள் பேசிக்கொள்ளும் அத்தனை சொற்களுக்கும் ஒரே பொருள்தான் என புராவதி அறிவாள். பிறந்த கன்று துள்ளிக்குதிப்பதன் பொருள்.
* கன்னியின் மனம் எரியக்காத்திருக்கும் காடுபோன்றது. ஒரு மூங்கில் உரசினாலே போதும் என்று என் அன்னை சொல்வதுண்டு”
* கன்னியரே உங்களை இதுவரை காத்துவந்த தேவர்கள் அனைவரும் இங்கே தங்களுக்கான பலிகளை வாங்கிக்கொண்டு விடைபெறுகிறார்கள். இனிமேல் உங்கள் கற்பே உங்களுக்குக் காவலாக ஆகும். இன்றுவரை காசியின் பெருங்குலத்தின் உறுப்பினராக இருந்த நீங்கள் கனிகள் மரங்களிலிருந்து உதிர்வது போல விலகிச்செல்கிறீர்கள்.
* இருபதாண்டுகளுக்கு முன்பு அவளும் அக்கணத்தில்தான் சென்றுமறைந்தது என்ன என்பதை அறிந்தாள். மீண்டுவராத ஒரு வசந்தம். ஆனால் அந்த வசந்தகாலத்தின் ஒவ்வொரு கணத்திலும் அதைத் தாண்டுவதைப்பற்றிய துடிப்பே நிறைந்திருந்தது. அந்த வேகமே அதை வசந்தமாக ஆக்கியது. அந்த எல்லையைத் தாண்டிய கணம்தான் அது எத்தனை அபூர்வமானது என்று புரிந்தது. அந்த ஏக்கம் வசந்தத்தை மகத்தானதாக ஆக்கியது. ஏக்கங்களுக்கு நிகராக இனியவை என மண்ணில் ஏதுமில்லை என பின்னர் அறிந்து முதிர்வதே வாழ்க்கை என்றாகியிருக்கிறது என அப்போது உணர்ந்துகொண்டாள்.
* பாரதவர்ஷத்தின் அத்தனை பெண்களும் நாகர்குலத்தவரே என்பது நூல்நெறிக்குள் எழுதப்படாத ஆசாரநம்பிக்கையாக இருந்தது. அவர்களனைவருக்கும் புனிதத் தலம் கங்காத்வாரத்தின் தாட்சாயணிகுண்டம்.
* அவை திரள் கலையும் ஒலியைக் கேட்டபோது அதைத்தான் அவள் எதிர்பார்த்திருந்தாள் என்று அறிந்தாள்.
* அவளுக்கு அப்போது ஏற்பட்டது அம்புவிடுபட்ட வில்லின் நிம்மதிதான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.