"I saw Nala!" said Parnada | Vana Parva - Section 70 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
பர்ணாதன் என்ற அந்தணன், அயோத்தி சென்று பாகுகனைச் சந்தித்துப் பேசியதாகவும், அவன் நளனாக இருக்கக்கூடும் என்றும், தமயந்தியிடம் வந்து சொல்வது; சந்தேகத்தின் அடிப்படையில் தமயந்தி சுதேவனை ரிதுபர்ணனின் நாட்டுக்கு அனுப்பவது; சுதேவனிடம் நளன் தமயந்திக்கான சமாதானத்தைச் சொல்வது…
பிருகதஸ்வர் சொன்னார், "பிறகு நீண்ட காலம் கடந்ததும், பர்ணாதன் என்ற அந்தணன் ஒருவன் {விதரப்ப்ப} நகரத்திற்குத் திரும்பி பீமனின் மகளிடம் {தமயந்தியிடம்}, "ஓ தமயந்தி, நிஷாதர்களின் மன்னனான நளனைத் தேடி, அயோத்தி நகருக்குச் சென்று, பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்) முன் நின்றேன். ஓ பெண்களில் சிறந்தவளே, நான் உனது வார்த்தைகளை அந்த அருளப்பட்ட ரிதுபர்ணன் முன்னிலையில் திரும்பச் சொன்னேன். ஆனால், நான் திரும்பத் திரும்ப அவற்றைச் சொன்னாலும், அதைக் கேட்ட அந்த மனிதர்களின் ஆட்சியாளனோ {ரிதுபர்ணனோ}, அல்லது அங்கிருந்த அரசவையினரோ எதற்கும் பதில் சொல்லவில்லை. பிறகு, நான் அந்த ஏகாதிபதியால் {ரிதுபர்ணனால்} அனுப்பப்பட்ட பிறகு, ரிதுபர்ணனின் சேவையில் ஈடுபட்டிருக்கும் பாகுகன் என்ற பெயர் கொண்ட மனிதன் என்னை அணுகி அழைத்தான்.
குட்டைக் கைகளுடன், காணச்சகியாத் தோற்றம் கொண்ட அந்த பாகுகன், மன்னனின் {ரிதுபர்ணனின்} தேரோட்டியாக இருக்கிறான். அவன் வேகமாக வண்டி ஓட்டுவதில் நிபுணனாகவும், சமையற்கலையை நன்கு அறிந்தவனாகவும் இருக்கிறான். அப்படிப்பட்டவன், அடிக்கடி பெருமூச்சுவிட்டபடி, திரும்பத் திரும்ப அழுது, எனது நலத்தை விசாரித்து, பிறகு என்னிடம், "என்னதான் துயரத்தில் விழுந்தாலும், கற்புடைய மங்கையர் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள். கற்புடைய பெண்கள், அறம்சார்ந்த நடத்தை என்ற கவசத்துடன் தங்களது வாழ்வை நடத்துவதால், அவர்கள் தங்கள் தலைவர்களால் கைவிடபட்டாலும், அதன் காரணமாக அவர்கள் {அவன் மீது} கோபங்கொள்ள மாட்டார்கள். அனைத்து அருளையும் இழந்து, துயரத்தில் மூழ்கிய பிறகே அவன் {நளன்} அவளை {தமயந்தியைக்} கைவிட்டதால், அவள் கோபம் கொள்ளக்கூடாது. வாழ்வாதாரத்தைப் பெற முயன்றபோது, பறவைகளால் ஆடை களவாடப்பட்டு துயரத்தில் மூழ்கியவன் மீது அழகு நிறைந்த அறம்சார்ந்த பெண் கோபமடையக்கூடாது. தான் நன்றாக நடத்தப்பட்டாலும், இல்லையென்றாலும், நாடிழந்து, செழிப்பெல்லாம் இழந்து, பசியால் ஒடுக்கப்பட்டு, பேரிடரில் மூழ்கிய தனது கணவனை அந்த இழிந்த நிலையில் கண்டும், அப்படிப்பட்ட {அறம்சார்ந்த} ஒரு மனைவி, ஒருபோதும் தன்னைக் {அவனுக்கெதிரான} கோபத்தில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது" என்று சொன்னான். அவனது வார்த்தைகளைக் கேட்டதும், நான் விரைந்து இங்கு வந்துவிட்டேன். இப்போது நீ அனைத்தையும் கேட்டுவிட்டாய். மன்னனுக்கு {பீமருக்கு} இது குறித்துச் சொல்லிவிட்டு, உனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்" என்றான் {பர்ணாதன்}.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பர்ணாதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தமயந்தி, கண்கள் நிறைந்த கண்ணீருடன் தனது தாயிடம் வந்து, "ஓ தாயே, மன்னர் பீமரிடம், எனது இந்தக் காரியம் குறித்து எதுவும் தெரியப்படுத்தக்கூடாது. உனது முன்னிலையில், நான் அந்தணர்களில் சிறந்த சுதேவனை {இக்காரியத்தில்} நியமிக்கப் போகிறேன். நீ எனது நன்மையில் விருப்பமுள்ளவளாக இருந்தால், மன்னர் பீமர் எனது காரியத்தை அறியாதவாறு நடந்து கொள். என்னை எப்படி எனது நண்பர்களுக்கு மத்தியில் கொண்டு வந்து சேர்த்தானோ அப்படியே நளரைக் கொண்டு வரும் காரியத்திற்காக, உரிய அறம் சார்ந்த சடங்குகளைச் செய்த பிறகு, காலந்தாழ்த்தாமல் சுதேவன் அயோத்தியா நகரத்திற்குச் செல்லட்டும்" என்றாள். பர்ணாதன் களைப்பில் இருந்து மீண்டதும், விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி}, அவனை வணங்கி, நிறைந்த செல்வத்தைக் கொடுத்து, "ஓ அந்தணரே, நளர் இங்கு வந்ததும், நான் உனக்கு இன்னும் அதிகமான செல்வத்தை அளிப்பேன். ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே, நான் விரைந்து எனது (தொலைந்த) தலைவனை மீட்க ஏதுவாக, நிச்சயம் யாராலும் செய்ய முடியாத செயற்கரிய சேவையை எனக்காக நீ செய்திருக்கிறாய்" என்றாள்.
இப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட உயர்ந்த மனம் கொண்ட அந்தணன் {பர்ணாதன்}, அவளுக்கு ஆறுதல் கூறி, ஆசீர்வாதங்கள் செய்து, தனது காரியம் வெற்றியடைந்ததெனக் கருதி தனது இல்லத்திற்குச் சென்றான். அவன் சென்ற பிறகு, துன்பத்தால் ஒடுக்கபட்ட தமயந்தி, ஓ யுதிஷ்டிரா, தனது தாயின் முன்னிலையில் சுதேவனை அழைத்து, "ஓ சுதேவா, பறவையென நேராக அயோத்தியா நகரத்திற்குச் சென்று, மன்னன் ரிதுபர்ணனிடம், "பீமனின் மகளான தமயந்திக்கு மற்றொரு சுயம்வரம் நடக்கப் போகிறது. அனைத்து மன்னர்களும், இளவரசர்களும் அங்கே செல்கின்றனர். நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்ததில், அந்த விழா நாளை நடைபெறப் போகிறது என்று காண்கிறேன். ஓ எதிரிகளை அடக்குபவரே {ரிதுபர்ணா}, உம்மால் முடியும் என்றால், காலந்தாழ்த்தாமல் செல்லும். வீரனான நளன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பது தெரியாததால், நாளை சூரியன் உதித்ததும் அவள் {தமயந்தி}, தனது இரண்டாவது கணவனைத் தேர்ந்தெடுப்பாள்" என்று சொல்" என்றாள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அவளால் இப்படிச் சொல்லப்பட்ட சுதேவன் கிளம்பினான். அவன் என்ன சொல்ல {தமயந்தியால்} வழிநடத்தப்பட்டானோ, அதை ரிதுபர்ணனிடம் சொன்னான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.