The doubt of Varshneya | Vana Parva - Section 71 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
தமயந்தியின் சுயம்வரத்திற்கு ஒரே நாளில் செல்ல ரிதுபர்ணன் பாகுகனைப் பணித்தது; பாகுகன், வார்ஷ்ணேயன் மற்றும் ரிதுபர்ணன் ஆகிய மூவரும் விதரப்ப்பம் நோக்கி தேரில் சென்றது; பாகுகன் தேரோட்டும் திறனைப் பார்த்து இவன் நளனாக இருப்பானோ என்று வார்ஷ்ணேயன் சந்தேகித்தது…
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "சுதேவனின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ரிதுபர்ணன், பாகுகனிடம் மென்மையான வார்த்தைகளில், "ஓ பாகுகா {நளனே}, குதிரைகளைப் பழக்குவதிலும், அவற்றை வழிநடத்துவதிலும் நீ அதி நிபுணனாக இருக்கிறாய். இது உனக்கு விருப்பமானால், நான் தமயந்தியின் சுயம்வரத்திற்கு ஒரே நாளில் செல்ல விரும்புகிறேன்" என்றான். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படிச் சொல்லப்பட்ட நளன், தனது இதயம் வெடித்துவிடுவது போன்ற துயரத்தில் ஆழ்ந்தான். அந்த உயர்ந்த ஆன்மா கொண்ட மன்னன் துன்பத்தால் எரிந்தான். அவன் தனக்குள்ளேயே, "துன்பத்தால் குருடாகியே தமயந்தி இப்படிச் செய்கிறாளோ! அல்லது இந்த அற்புதமானத் திட்டத்தை அவள் {தமயந்தி} என் பொருட்டு உருவாக்கியிருக்கிறாளோ!
ஐயோ, புத்தியற்ற எனது பாவத்தால் ஏமாற்றப்பட்ட விதரப்ப்பத்தின் அப்பாவி இளவரசி {தமயந்தி} செய்யும் இந்தச் செயல் கொடூரமாக இருக்கிறதே. இந்த உலகத்தில் பெண்களின் இயல்பு நிலையற்றதாகவே காணப்படுகிறது. எனது குற்றமும் பெரியதுதான்; அல்லது எனது பிரிவால் துயரடைந்ததால் என்னை வெறுத்து இப்படிச் செய்கிறாளோ. உண்மையில், அந்தக் கொடியிடை கொண்ட பெண் {தமயந்தி}, என்னால் துன்பத்துக்கும் நம்பிக்கையின்மைக்கும் ஆளாகியிருந்தாலும், நிச்சயமாக இவ்வகை செயலைச் செய்யக் கூடியவள் அல்ல. அதுவும் குறிப்பாக (என்மூலமாக) குழந்தைகள் இருக்கும்போது அப்படிச் செய்ய மாட்டாள். இருப்பினும், இது உண்மையா? பொய்யா? என்று நான் அங்கே சென்று உறுதி செய்த பிறகு அறிந்து கொள்வேன். ஆகையால், நான் ரிதுபர்ணன் காரியத்தையும் மற்றும் எனது காரியத்தையும் {ஒரே நாளில் விதரப்ப்பம் செல்வது என்ற ரிதுபர்ணன் காரியத்தையும் எனது மனைவியைக் காண்பது என்ற எனது காரியத்தையும்} சாதிப்பேன்" என்று நினைத்துக் கொண்டான்.
இப்படி மனதுக்குள் தீர்மானித்துக் கொண்ட பாகுகன் {நளன்}, இதயத்தில் துயரத்துடன் மன்னன் ரிதுபர்ணனிடம் கரங்கள் கூப்பி, "ஓ ஏகாதிபதி, நான் உமக்கு அடிபணிகிறேன். ஓ மனிதர்களில் புலியே, ஓ மன்னா {ரிதுபர்ணரே} நான் விதரப்ப்ப நகரத்திற்கு ஒரே நாளில் செல்வேன்" என்றான். பிறகு ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னன் பங்காசூரனின் மகனின் {ரிதுபர்ணனின்} கட்டளையின் பேரில் பாகுகன் {நளன்} கொட்டிலுக்குச் {குதிரை லாயத்திற்குச்} சென்று குதிரைகளைப் பரிசோதித்தான். விரைந்து செய்யுமாறு ரிதுபர்ணனால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பாகுகன் {நளன்}, தீவிர ஆராய்ச்சிக்கும், கவனமான யோசனைக்கும் பின்னர், சதைப்பற்றற்று மெலிந்திருந்தும், வலிமையுடையதும், நீண்ட பயணத்துக்கு தகுதியானதும், உயர்ந்த இனம் மற்றும் பண்புகளால் பலம்வாய்ந்ததும், அமங்களமான குறிகளற்றதும், அகலமான நாசிகளும், வீங்கிய கன்னங்களும், முடி சார்ந்த பத்து சுழிகளால் குறைகளற்றதும், சிந்து நாட்டில் பிறந்ததும், காற்றைப் போன்ற வேகம் கொண்டதுமான சில குதிரைகளைத் தேர்ந்தெடுத்தான்.
அந்தக் குதிரைகளைக் கண்ட மன்னன் {ரிதுபர்ணன்} சிறிது கோபம் கொண்டு, "நீ செய்ய விரும்பிய இந்தக் காரியம் என்ன? நீ எங்களைக் கேலி செய்யக்கூடாது. பலத்திலும் மூச்சிலும் பலவீனமான இந்த எனது குதிரைகள் எப்படி நம்மைச் சுமந்து செல்லும்? இவற்றின் உதவியைக் கொண்டு இந்த நெடும்பாதையில் எப்படிச் செல்ல முடியும்?" என்று கேட்டான். அதற்கு பாகுகன் {நளன்}, "இந்தக் குதிரைகள் ஒவ்வொன்றும் தனது நெற்றியில் ஒரு சுழியும், நெற்றிப்பொட்டில் இரண்டும், இரு பக்க உடலிலும் நான்கும், மார்பில் ஒன்றும், முதுகில் ஒன்றும் என சுழிகளைக் கொண்டிருக்கின்றன. சந்தேகமற, இந்தப் புரவிகளால் விதரப்ப்ப நாட்டிற்குச் செல்ல முடியும். ஓ மன்னா {ரிதுபர்ணரே}, நீர் மற்றவைகளைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், அவற்றைக் குறித்துக் காட்டும், அந்தப் புரவிகளை நான் உமக்காக விரட்டி ஓட்டுகிறேன்" என்றான். பிறகு விடைகொடுத்த ரிதுபர்ணன், "ஓ பாகுகா, நீ குதிரைகளைப் பற்றிய அறிவியலை அறிந்தவன். நீ அவற்றில் (அவற்றை வழிநடத்துவதிலும்) நிபுணனாக இருக்கிறாய். எவை தகுதியுடையவை என்று நீ நினைக்கிறாயோ அவற்றை விரைவாக விரட்டு" என்றான்.
அதன் பிறகு திறன் வாய்ந்த நளன் தேரில், அதிவேகமாகச் செல்லும் நான்கு அற்புதமான உயர்சாதிக் குதிரைகளைப் பூட்டினான். குதிரைகள் பூட்டப்பட்டதும், மன்னன் {ரிதுபர்ணன்} நேரத்தைக் கடத்தாமல் அந்தத் தேரில் ஏறினான். அப்போது அந்தச் சிறந்த குதிரைகள் முழங்கால் மடக்கி பூமியில் விழுந்தன. பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த மனிதர்களில் முதன்மையான மன்னன் நளன், சக்தியும் பலமும் கொண்ட அந்தக் குதிரைகளைத் தேற்றினான். பிறகு கடிவாளத்தை இழுத்து அவற்றை எழுப்பி, தேரோட்டியான வார்ஷ்ணேயனையும் தேரில் அமர்த்தி, மிகுந்த வேகத்தில் செல்ல ஆயத்தமானான். அந்த குதிரைகளில் சிறந்தவை, பாகுகனால் {நளன்} தூண்டப்பட்டு, வாகனத்தில் இருப்பவர்க்ள ஆச்சரியம் அடையும் வகையில் வானத்தில் எழுந்தன.
காற்றின் வேகத்தைக் கொடையாகக் கொண்டு அந்த தேரை இழுத்துச் சென்ற அக்குதிரைகளைக் கண்டு, அருள்நிறைந்த அயோத்தியா மன்னன் {ரிதுபர்ணன்} மிகுந்த ஆச்சரியம் கொண்டான். தேர்ச்சக்கரங்களின் ஒலியையும், குதிரைகளின் நிர்வாகத்தையும் கண்ட வார்ஷ்ணேயன், குதிரைகளை வழிநடத்துவதில் பாகுகனின் {நளனின்} திறமையைக் குறித்துச் சிந்தித்தான். அவன் {வார்ஷ்ணேயன்} தனக்குள், "இவன், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} தேரோட்டியான மாதலியா? அதே அற்புதமான குறிகளை நான் இந்த வீரன் பாகுகனிடம் காண்கிறேன். அல்லது அழகான மனித உடலை அடைந்தவனும், புரவிகளின் அறிவியலை அறிந்தவனுமான சாலிஹோத்ரனோ {குதிரை சாஸ்திரம் என்கிற அஸ்வசாஸ்திரம் இயற்றிய முனிவரே சாலிஹோத்ரர் என்று அறிகிறோம்}. அல்லது எதிரிகளின் நகரத்தை அழிக்கும் மன்னன் நளர்தான் இங்கு வந்துவிட்டாரா? அல்லது அந்த நளர் அறிந்த அறிவியலை இந்த பாகுகனும் அறிந்திருக்கிறானா? நளருக்கு இணையான அறிவை இந்த பாகுகன் பெற்றிருப்பதை நான் காண்கிறேனே.
மேலும் பாகுகனுக்கும் நளருக்கும் ஒரே வயது தான் இருக்கும். மேலும், இவன் பெரும் பராக்கிரம் கொண்ட நளனாக இல்லாவிட்டாலும், அவருக்கு இணையான அறிவு கொண்டவனே. இருப்பினும், துரதிர்ஷ்ட காலத்தில் சிறப்புமிக்க மனிதர்கள்கூட சாத்திரங்களின் விதிகளுக்கு மாற்றுருவில் உலவுவார்கள். இந்த மனிதனின் பார்க்கச் சகியாத தோற்றத்தில் எனது எண்ணம் மாறத் தேவையில்லை; நளன் கூட தனது தனிப்பட்ட குணங்களை அழித்துக் கொண்டார். வயதைப் பொறுத்தவரை இவன் நளருக்குச் சமமாகவே இருக்கிறான். இருப்பினும் தோற்றத்தில் வித்தியாசம் இருக்கிறது. பாகுகனும் {நளனும்} அனைத்து சாதனைகளுக்கும் சொந்தக்காரனாக இருக்கிறான். அகையால், இவனை நளர் என்றே நினைக்கிறேன்" என்று நினைத்துக் கொண்டான்.
ஓ பலம் வாய்ந்த ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, இப்படி நீண்ட நேரம் தனது மனதில் சிந்தித்த, நீதிமானான நளனின் (முன்னாள்) தேரோட்டியான வார்ஷ்ணேயன், இப்படியே சிந்தனையில் ஆழ்ந்தான். மேலும், மன்னர்களில் முதன்மையான ரிதுபர்ணன், குதிரைச்சவாரி அறிவியலில் பாகுகனின் திறமையைக் கண்டு, தனது தேரோட்டியான வார்ஷ்ணேயனுடன் சேர்ந்து பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தான். மேலும் பாகுகனின் திறனையும், தீவிரத்தையும், கடிவாளத்தைப் பிடிக்கும் முறையையும் நினைத்த மன்னன் {ரிதுபர்ணன்} பெரும் மகிழ்ச்சியடைந்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.