Kali came out of Nala! | Vana Parva - Section 72 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
வேகமாக நளன் தேரை ஓட்டிச் சென்ற போது, ரிதுபர்ணனின் மேலாடை விழுவது; நளன் ரிதுபர்ணனை அம்மேலாடையை எடுக்க அனுமதியாதது; ரிதுபர்ணன் தனது திறமையைச் சொல்வது; நளன் நம்பாதது; ரிதுபர்ணன் தான்றி மரத்தின் இலைகளையும் கனிகளையும் எண்ணிச் சொல்வது; நளன் அதை நம்பாது எண்ணி உண்மை கண்டறிந்து அதிசயிப்பது; நளன் ரிதுபர்ணனிடம் இருந்து பகடையின் ரகசியத்தை அறிவது; கலி நளனை விட்டு அகலுவது…
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "வானத்தில் பறந்து செல்லும் பறவையைப் போல நளன் விரைவாக ஆறுகளையும், மலைகளையும், கானகங்களையும், தடாகங்களையும் கடந்து சென்றான். அப்படி அவன் {நளன்} சென்று கொண்டிருக்கும்போது, எதிரிகளின் நகரங்களைக் கைப்பற்றும் பங்காசூரனின் மகனது {ரிதுபர்ணனின்} மேலாடை தரையில் விழுந்தது. அப்படி அவனின் {ரிதுபர்ணனின்} மேலாடை விழுந்ததும், அந்த உயர்ந்த மனம் கொண்ட ஏகாதிபதி நேரத்தைக் கடத்தாமல் உடனேயே நளனிடம், "நான் அதை {விழுந்த மேலாடையை} எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ஓ ஆழ்ந்த புத்திகூர்மை கொண்டவனே {பாகுகனே-நளனே}, மிகுந்த வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இந்தக் குதிரைகளை நிறுத்து. நான் வார்ஷ்ணேயனைக் கொண்டு அந்த ஆடையை எடுத்து வரச் செய்கிறேன்" என்றான்.
அதற்கு நளன் அவனிடம் {ரிதுபர்ணனிடம்}, அந்த ஆடை வெகுதூரத்தில் விழுந்து கிடக்கிறது. நாம் ஒரு யோஜனை தூரம் {எட்டு மைல்கள் அல்லது 13 கிலோமீட்டர்கள்} கடந்து வந்துவிட்டோம். ஆகையால் அதை நம்மால் மீட்டெடுக்க முடியாது" என்றான். ஓ மன்னா {யுதிஷ்டிரா} நளன் இப்படிச் சொன்னதும், அந்த பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்}, அக்கானகத்தில் கனிகள் நிறைந்த தான்றி {Vibhitaka tree = தான்றி மரம்} மரத்தைக் கண்டான். அந்த மரத்தைக் கண்டதும் அம்மன்னன் பாகுகனிடம் விரைவாக, "ஓ தேரோட்டியே, கணக்கீட்டில் {எண்ணிக்கை அறிவில்) எனது உயர்ந்த திறமையைப் பார். எல்லா மனிதர்களும் அனைத்தையும் அறிந்துவிடுவதில்லை. அனைத்து அறிவியலிலும் நிபுணத்துவம் வாய்ந்த எவரும் கிடையாது. ஓ பாகுகா, ஞானம் முழுவதும் {உலகத்தின் மொத்த ஞானத்தையும்} ஒரே மனிதனிடம் காணப்படுவதில்லை. இந்த மரத்தில் இருக்கும் இலைகளும் கனிகளையும் விட, தரையில் உதிர்ந்து கிடக்கும் அந்த மரத்தின் இலைகளும் கனிகளும் நூற்றி ஒரு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது {இலைகளில் நூறும், கனிகளில் ஒன்றும் அதிகம் என்றும் கதைகளில் கேட்டிருக்கிறேன்}. அந்த மரத்தின் இரு கிளைகளில் ஐம்பது லட்சம் (5 million} இலைகளும், இரண்டாயிரத்து தொண்ணூற்று ஐந்து கனிகளும் இருக்கின்றன. வேண்டுமானால் இந்த இரு கிளைகளையும் மற்ற கிளைகளையும் ஆராய்ந்து பார்" என்றான்.
அதற்கு நளன் தேரை நிறுத்தி அம்மன்னனிடம், "ஓ எதிரிகளை நசுக்குபவரே {ரிதுபர்ணரே}, எனது அறிவுக்கு எட்டாத ஒரு காரியத்தைச் சொல்லி, நீரே உம்மைப் புகழ்ந்து கொள்கிறீர். ஆனால், ஓ ஏகாதிபதி, அந்தத் தான்றி மரத்தை வெட்டி நான் எனது புலன்களால் கிடைக்கும் சாட்சிகளைக் கொண்டு {எண்ணிப் பார்த்து} அதை உறுதி செய்வேன். ஓ மன்னா, அப்படி உண்மையிலேயே நான் எண்ணிப் பார்த்தால் அது ஊகங்களின்படி இருக்காது {உண்மையாகக் கூட இருக்கலாம்}. ஆகையால், உமது முன்னிலையிலேயே, ஓ ஏகாதிபதி {ரிதுபர்ணரே}, நான் இந்த தான்றியை வெட்டுவேன். அது {நீர் சொன்னது போலச்} சரியாக இருக்குமா இருக்காதா என்று எனக்குத் தெரியாது. ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {ரிதுபர்ணரே}, உமது முன்னிலையிலேயே நான் அதன் கனிகளையும் இலைகளையும் எண்ணுவேன். அதுவரை வார்ஷ்ணேயன் இந்தக் குதிரைகளின் கடிவாளத்தைச் சிறிது நேரம் பிடிக்கட்டும்" என்றான் {பாகுகனாக இருக்கும் நளன்}.
அந்தத் தேரோட்டியிடம் {பாகுகன் என்ற நளனிடம்} அம்மன்னன் {ரிதுபர்ணன்}, "விரையமாக்குவதற்கு நேரம் இல்லை" என்றான். ஆனால் பாகுகன் பணிவுடன், "சிறிது நேரம் காத்திருக்கவும். நீர் அவசரத்தில் இருக்கிறீர் எனில், வார்ஷ்ணேயனை தேரோட்டியாகக் கொண்டு செல்லும். சாலை நேராகவும் சமமாகவுமே இருக்கிறது" என்றான். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இதற்கு பாகுகனைச் சமாதானப்படுத்த ரிதுபர்ணன், "ஓ பாகுகா, நீயே ஒரே தேரோட்டி, உனக்கு இணையானவன் இந்த உலகத்தில் இல்லை. மேலும், நீ குதிரைகளின் மரபுகளை அறிந்திருக்கிறாய். நான் விதரப்ப்பத்திற்குச் செல்வது உனது உதவியின் மூலம்தான் ஆகும் என்று நினைக்கிறேன். நான் என்னை உனது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன். நீ எனக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்துவது உனக்குத் தகாது. மேலும், ஓ பாகுகா, நீ இன்றே என்னை விதரப்ப்பத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு சூரிய உதயத்தைக் காணச் செய்தாயானால், நீ விரும்பும் எதையும் நான் உனக்குக் கொடுப்பேன்" என்றான் {அயோத்தி மன்னன் ரிதுபர்ணன்}.
அதற்கு பாகுகன், "நான் உமது வார்த்தைகளை ஏற்கிறேன். இந்தத் தான்றியை (அந்த மரத்தின் இலைகளையும் கனிகளையும்} எண்ணி முடித்ததும், விதரப்ப்பத்திற்கு முன்னேறுவேன்" என்று பதில் சொன்னான். பிறகு அந்த மன்னன் {ரிதுபர்ணன்}, அவனிடம் {நளனிடம்} தயக்கத்துடன், "எண்ணிப்பார். இந்தக் கிளையின் பகுதியில் இருக்கும் இலைகளையும் கனிகளையும் எண்ணியதும், நீ எனது உறுதியை {எண்ணிக்கையை} ஏற்று திருப்தியடைவாய்" என்றான். அதன்பிறகு பாகுகன் {நளன்} விரைவாகத் தேரில் இருந்து இறங்கி அந்த மரத்தைச் சாய்த்தான். அப்படி எண்ணி முடித்ததும் கனிகளின் எண்ணிக்கை, அம்மன்னன் சொன்னது போலச் சரியாக இருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்து, "ஓ ஏகாதிபதி, இந்த உமது சக்தி அற்புதமானது. ஓ இளவரசரே, நீர் எதைக் கொண்டு இதை உறுதி செய்தீரோ அந்தக் கலையை அறிய விரும்புகிறேன்" என்று கேட்டான் {பாகுகன் என்ற நளன்}.
விரைவாகச் செல்ல நினைத்த மன்னன் {ரிதுபர்ணன்} பாகுகனிடம் {நளனிடம்}, "எண்ணிக்கையில் உள்ள நிபுணத்துவத்தைப் போல நான் பகடையிலும் நிபுணன் என்பதை அறிந்து கொள்" என்றான். அதற்கு பாகுகன் {நளன்}, "ஓ மனிதர்களில் காளையே, இந்த அறிவை எனக்குக் கொடும். பதிலுக்கு குதிரைகளின் அறிவை நான் உமக்குக் கொடுக்கிறேன்" என்றான். பாகுகனின் நல்லெண்ணத்தில் இருக்கும் முக்கியத்துவத்தைக் கருதிய மன்னன் ரிதுபர்ணன், {அந்தத் தேரோட்டி கொண்டிருந்த) குதிரைகளின் மரபு ஞானத்தில் இருந்த மயக்கத்தால், "அப்படியே ஆகட்டும்" என்றான். "உன்னால் பரிந்துரைக்கப்பட்ட படி, நீ பகடை அறிவியலை என்னிடம் இருந்து பெற்றுக் கொள். ஓ பாகுகா, நான் பெற வேண்டிய குதிரை அறிவியலைக் குறித்து நீ சொன்னதில் உறுதியோடு இரு" என்று சொன்னான். இப்படிச் சொன்ன ரிதுபர்ணன், நளனுக்கு அந்த அறிவைப் {நளன் விரும்பிய பகடை அறிவியலை} போதித்தான். நளன் பகடை அறிவியலைக் கற்றுக் கொண்டதும், அவனது உடலில் இருந்து {பாம்பு} கார்க்கோடகனின் கடும் விஷத்தைக் கக்கிக் கொண்டு, கலி {கலி யுகம்} வெளியேறினான்.
பிறகு, (தமயந்தியின் சாபத்தால்) பாதிக்கப்பட்ட கலி (நளனின் உடலில் இருந்து) வெளியேறியபோது, அந்தச் சாபத்தின் நெருப்பும் கலியை விட்டது. உண்மையில், நெடுங்காலம் கலியால் பாதிக்கப்பட்ட மன்னன் {நளன்} கீழான உடலைப் பெற்றிருந்தான். இதனால் நிஷாதர்களின் ஆட்சியாளனான அந்தக் கலா [Kala = கலா (அ) காலன்] {நளன்}, கோபத்தில் கலியைச் சபிக்க எண்ணினான், ஆனால் அதற்குள் பயந்து போன கலி, நடுக்கத்துடனும், கூப்பி கரங்களுடனும், "ஓ மன்னா {நளா}, உனது கோபத்தைக் கட்டுப்படுத்து. உனக்கு நான் சிறப்பைத் {புகழைத்} தருவேன். இந்திரசேனனின் தாய் {தமயந்தி}, நீ அவளைக் கைவிட்டபோதே, என்னைக் கோபத்தில் சபித்துவிட்டாள். அப்போதிருந்து உனக்குள் இருந்து நான் துன்பத்தை அனுபவித்து வருகிறேன். ஓ பெரும் பலம் வாய்ந்த ஏகாதிபதியே, ஓ வீழ்த்தப்பட முடியாதவனே, நான் தினமும் இரவும் பகலும் அந்த பாம்புகளின் இளவரசன் {கார்க்கோடகன்} விஷத்தால் எரிந்து வருகிறேன். நான் உனது பாதுகாப்பைக் கோருகிறேன். பயந்து போய், உனது பாதுகாப்பைக் கோரும் என்னை நீ சபிக்காமல் இருந்தால், உனது கதையைக் {நளனின் கதையைக்} கவனத்துடன் உரைக்கும் மனிதர்கள், என்னைக் குறித்த {கலியின்-கலிகாலத்தின்} பயத்தில் இருந்து நிச்சயம் விடுபடுவார்கள் {மனிதர்களுக்கு} என்னைக் {கலிகாலத்தைக்} குறித்த பயம் உண்டாகாது}" என்றான் {கலி என்ற கலிகாலம்}.
இப்படி கலியால் சொல்லப்பட்ட மன்னன் நளன், தனது கோபத்தை அடக்கிக் கொண்டான். இப்படி பயந்துபோயிருந்த கலி விரைவாக அந்தத் தான்றி மரத்துக்குள் நுழைந்தான். கலி அந்த நைஷாதனுடன் பேசிக் கொண்டிருந்த போது, மற்றவர்களின் பார்வைக்கு தெரியாதவாறு {தன்னை மறைத்து அரூபமாக} இருந்தான். தனது பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, மரத்தின் கனிகளை எண்ணி முடித்திருந்த அம்மன்னன் {நளன்}, பெரும் மகிழ்ச்சியில் மூழ்கி, உயர்ந்த சக்தியை அடைந்து, அந்தத் தேரில் ஏறி, குதிரைகளை விரைவாகச் செலுத்தி, பெரும் சக்தியுடன் முன்னேறினான். கலியின் தொடுதலால், அந்தத் தான்றி மரம், அந்நேரத்திலிருந்தே {மனிதர்களால்} விலக்கப்பட்ட மரமானது.
மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் நளன் அந்த குதிரைகளில் முதன்மையானவற்றை விரைவுப்படுத்தினான். அவை சிறகுகள் கொண்ட உயிரினங்களைப் போல மீண்டும் காற்றில் ஏறியது. நளன் சென்ற பிறகு, கலியும் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கலியால் கைவிடப்பட்ட அந்த பூமியின் தலைவனான் மன்னன் நளன், தனது சொந்த உருவத்தை ஏற்கவில்லையென்றாலும் அந்தப் பேரிடரில் இருந்து விடுபட்டான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.