Nala saw his children! | Vana Parva - Section 75 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
தமயந்தி மீண்டும் கேசியினை அனுப்பி பாகுகனின் நடத்தையைக் கண்காணிக்கச் செய்தல்; பாகுகனின் இயல்புக்கு மிக்க செயல்களைக் கண்டு ஆச்சரியமடைந்த கேசினி விரைவாக வந்து அச்செய்தியை தமயந்தியிடம் சொல்லல்; தமயந்தி மீண்டு கேசினியை அனுப்பி சூடான இறைச்சியைக் கொண்டு வரச் செய்தல்; பாகுகனே நளன் என்று உறுதி செய்துகொண்டு, தனது பிள்ளைகளைக் கேசினியுடன் அனுப்பி வைத்தல்; பிள்ளைகளைக் கண்ட பாகுகன் பெருந்தொனியுடன் அழுதல்…
பிருகதஸ்வர் சொன்னார், "அனைத்தையும் கேட்ட தமயந்தி துயரத்தில் ஆழ்ந்து, அந்த மனிதரே நளன் என்று சந்தேகித்து, கேசினியிடம், "ஓ கேசினி, நீ மறுபடியும் சென்று பாகுகரின் நடத்தையை அமைதியாகக் குறித்துக் கொள். ஓ அழகானவளே, அவர் ஏதாவது நிபுணத்துவத்துடன் செய்தால், அவர் அதைச் செய்யும்போது நன்றாகக் கூர்ந்து கவனித்துக் கொள். மேலும், ஓ கேசினி, அவர் உன்னிடம் நீரோ நெருப்போ கேட்கலாம். அப்போது நீ அவரது காரியத்தைத் தடை செய்வதற்காக, அதைக் கொடுப்பதற்கு எந்த அவசரத்தையும் காட்டாதே. அவரது நடத்தைகளை நன்றாகக் குறித்துக் கொண்டு இங்கே வந்து என்னிடம் சொல். பாகுகரிடம் மனிதச் செயலையோ, மனிதர்களுக்கு மீறிய {தெய்வ} செயலையோ கண்டால் மற்ற அனைத்துடன் சேர்த்து எனக்கு வந்து தெரிவி" என்றாள்.
இப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட கேசினி, குதிரைகளின் மரபுகளை அறிந்த அந்த மனிதனின் நடத்தைகளைக் குறித்துக் கொண்டு திரும்பி வந்தாள். பிறகு, உண்மையில் அங்கு பாகுகனிடம் தான் கண்ட மனித செயலையும், மனிதர்களுக்கு அப்பாற்பட்ட {தேவ} செயல்கள் அத்தனையும் சொன்னாள். கேசினி, "ஓ தமயந்தி, அனைத்துக்கூறுகளிலும் இத்தகு கட்டுப்பாடும் ஆற்றலும் கொண்ட மனிதரை நான் இதுவரை கண்டதோ கேட்டதோ கிடையாது. தாழ்வான பாதைகளில் அவர் வரும்போது ஒரு போதும் குனிவதில்லை. ஆனால் அவர் வருவதைக் கண்டு அந்தப் பாதையே வளர்ந்து, அவரது உருவம் எளிதாகச் செல்லும் அளவிற்கு இடம் கொடுக்கிறது. அவர் அணுகும்போது நுழையமுடியாத குறுகிய துளைகளும் இவருக்காக வழிவிட்டு அகன்றுவிடுகின்றன.
மன்னர் பீமர் ரிதுபர்ணனின் உணவுக்காக பல வகையான விலங்குகளின் இறைச்சியை அனுப்பி வைத்தார். அங்கே இறைச்சியைச் சுத்தப்படுத்துவதற்காக பல பாத்திரங்கள் இருந்தன. அவர் {பாகுகன் -நளர்} அவற்றைப் பார்த்த உடனேயே அவை (நீரால்) நிரம்பின. பிறகு இறைச்சியைக் கழுவிய பிறகு, உணவைச் சமைக்க ஆரம்பித்தார். அவர் கை நிறைய புல்லை எடுத்துக் கொண்டு சூரியனுக்கு நேராகக் காட்டினார். அது தானாகவே திடிரென்று பற்றிக் கொண்டது. அந்த அற்புதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு நான் இங்கு வந்துவிட்டேன். மேலும், அவரிடம் நான் மேலும் ஒரு அற்புதத்தைக் கண்டேன். ஓ அழகானவளே, அவர் நெருப்பைத் தொடுகிறார். ஆனால், அது அவரைச் சுடவில்லை. அவர் சில மலர்களை எடுத்து மெதுவாக அவற்றை அழுத்தினார். அவரது கையால் அழுத்தப்பட்ட அம்மலர்கள் தங்கள் சுய உருவை இழக்கவில்லை. மாறாக அவை சாம்ப நிறம் {அதிக நிறம்} கூடி, மேலும் நறுமணமாயிற்று. இந்த அற்புதமான நிகழ்ச்சிகளைக் கண்டு நான் இங்கே விரைவாக வந்துவிட்டேன்" என்றாள்.
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "அறம்சார்ந்த நளனின் இச்செயல்களைக் கேட்டு, அவனது நடத்தைகளைக் கொண்டு அவனைக் கண்டுபிடித்த தமயந்தி அவனை மீட்டு விட்டதாகவே கருதினாள். இந்த அனைத்துக் குறிப்புகளாலும் பாகுகன்தான் தனது கணவன் என்று சந்தேகித்த தமயந்தி, மீண்டும் அழுதுகொண்டே கேசினியிடம் மென்மையான வார்த்தைகளால், "ஓ ஆழகானவளே, மீண்டும் ஒரு முறை சென்று, அடுக்களையில் {சமையல் செய்யும் இடம்} (அவரால்) சமைத்து சுத்தம் செய்து வைக்கப்பட்டிருக்கும் இறைச்சியை பாகுகன் அறியாமல் எடுத்துக் கொண்டு வா" என்றாள் {தமயந்தி}.
தமயந்திக்கு ஏற்புடையதை எப்போதும் செய்ய விழையும் கேசினி, இப்படிக் கட்டளையிடப்பட்டதும் பாகுகனிடம் சென்று, சூடான இறைச்சியை எடுத்துக் கொண்டு நேரம் கடத்தாமல் விரைவாக வந்தாள். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, அந்த இறைச்சியை கேசினி தமயந்தியிடம் கொடுத்தாள். நளனால் சுத்தம் செய்யப்பட்ட இறைச்சியை ஏற்கனவே உண்டிருக்கும் தமயந்தி, தனது பணிப்பெண்ணால் கொண்டுவரப்பட்ட இறைச்சியை சுவைத்துப் பார்த்தாள். அதன் பிறகு பாகுகன்தான் நளன் என்ற தீர்மானத்திற்கு வந்து, இதயத்தின் துயரத்தால் உரக்க அழுதாள். ஓ பாரதா {யுதிஷ்டிரா} துக்கத்தில் மூழ்கி, தனது முகத்தைக் கழுவிக் கொண்டு, தனது இரு பிள்ளைகளையும் கேசினியுடன் அனுப்பி வைத்தாள். பாகுகன் என்ற மாற்று உருவத்தில் இருந்த மன்னன் {நளன்}, இந்திரசேனையையும் அவளது சகோதரனையும் {இந்திரசேனனையும்} அடையாளம் கண்டு, விரைவாக முன்னேறி, அவர்களை வாரி அணைத்து, தனது மடியில் அமர்த்திக் கொண்டான்.
தேவர்கள் போன்று இருந்த தனது பிள்ளைகளை எடுத்துக் கொண்டு, பெரும் துக்கத்தால் இதயம் ஒடுக்கப்பட்டு, பெருந்தொனியில் உரத்த வார்த்தைகள் சொல்லி அழ ஆரம்பித்தான். தனது உள்ளப்போராட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய பின், திடீரென பிள்ளைகளை விட்டு விட்டு, கேசினியிடம், "ஓ அழகான மங்கையே, இந்த இரட்டையர்கள் எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்றே இருக்கின்றனர். எதிர்பாராமல் இவர்களைச் சந்தித்ததால் நான் கண்ணீர் விட நேர்ந்தது. நாங்கள் வேறு நிலத்தில் {நாட்டில்} இருந்து வந்திருக்கும் விருந்தாளிகள், நீ அடிக்கடி என்னிடம் வந்தால், மக்கள் தவறாக நினைப்பார்கள். ஆகையால், ஓ அருளப்பட்டவளே, சுகமாக செல்" என்றான் {நளன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.