Nala and Damayanti united! | Vana Parva - Section 76 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
சுருக்கம் : கேசினி பாகுகனின் உள்ளப் போராட்டத்தை தமயந்தியிடம் சொன்னது; வந்திருப்பது நளனே என்று ஒருவாறு அறிந்து கொண்ட தமயந்தி, தனது தாயிடம் நளனைச் சந்திக்க அனுமதி கோருவது; தமயந்தி பாகுகனிடம் கேள்விக் கேட்பது; நளன் தனது நிலையைச் சொல்லி, அறம்சார்ந்த பெண் இரண்டாவது திருமணம் செய்யலாமா என்று கேட்பது; தன்னைச் சந்தேகிப்பது தகாது என்று நளனுக்கு தமயந்தி உணர்த்துவது; வாயுத்தேவன் சாட்சி சொல்வது; தம்பதிகள் இணைவது…
பிருகதஸ்வர் சொன்னார், "அறம்சார்ந்த ஞானம் கொண்ட நளனின் உள்ளப்போராட்டத்தை அறிந்த கேசினி, தமயந்தியிடம் சென்று அனைத்தையும் கூறினாள். இதனால் இதயத் துயரம் கொண்ட தமயந்தி நளனைக் காணும் ஆவல் கொண்டு, கேசினியைத் தனது தாயிடம் தன் சார்பாக, "பாகுகரே - நளர் என்று நான் சந்தேகிக்கிறேன். நான் பல வழிகளில் அவரைச் சோதித்துப் பார்த்துவிட்டேன். அவரது தோற்றம் குறித்து மட்டுமே எனக்குச் சந்தேகம் இருக்கிறது. நானே அவரைச் சோதித்துப் பார்க்க நினைக்கிறேன். ஓ தாயே, ஒன்று அவர் அரண்மனைக்குள் நுழைய அனுமதி கொடு, அல்லது நான் அவரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடு. இவற்றை எனது தந்தையின் {மன்னன் பீமனின்} கவனத்திற்கு கொண்டு சென்றோ அல்லது கொண்டு செல்லாமலோ செய்" என்று பேசு" என்று {கேசினியிடம்} சொன்னாள் {தமயந்தி}.
இப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட அந்த மங்கை {தமயந்தியின் தாய்}, தனது மகளின் நோக்கத்தை பீமனிடம் தெரிவித்தாள். அம்மன்னனும் அவற்றை அறிந்து தனது சம்மதத்தைத் தெரிவித்தார். ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் சம்மதத்தையும் பெற்ற தமயந்தி, நளனை தனது அறைக்கு கொண்டுவரச் செய்தாள். எதிர்பாராத வகையில் தமயந்தியைச் சந்தித்த மன்னன் நளன் துன்பத்திலும் துயரத்திலும் மூழ்கி கண்ணீரில் குளித்தான். பெண்களில் சிறந்த அந்த தமயந்தியும் மன்னன் நளனை அந்த நிலையில் கண்டு, துன்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டாள்.
ஓ ஏகாதிபதி, சிவப்பு நிற ஒற்றையாடை அணிந்து, சடை விழுந்த கூந்தலுடனும், அழுக்கடைந்த மேனியுடனும் இருந்த தமயந்தி பாகுகனிடம், "ஓ பாகுகரே, கடமையை நன்கு அறிந்த ஒரு மனிதர், கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தனது மனைவியை கைவிட்டுச் செல்வதை நீர் எங்காவது கண்டிருக்கிறீரா? களைப்பால் பாதிக்கப்பட்ட, எக்குற்றமும் இழைக்காத தனது அன்புக்குரிய மனைவியைக் கைவிடும் செயலை அறம் சார்ந்த நளரைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும்? அந்த ஏகாதிபதியின் {நளரின்} கண்களில் குற்றவாளியாகத் தெரிய, என் இளம் வயதில் இருந்து நான் என்ன குற்றம் செய்தேன்? எதற்காகத் கானகத்தில் தூங்கிக் கொண்டிருந்த என்னைக் கைவிட்டு அவர் சென்றார்? முன்பு தேவர்களையும் புறக்கணித்து அவரை {நளரைத்} தேர்ந்தெடுத்து, அவரது பிள்ளைகளுக்கும் தாயாகி அவருக்கே என்னை அர்ப்பணித்து, அவருக்கு அன்பான மனைவியாக இருந்த என்னை ஏன் அவர் கைவிட்டார்? நெருப்புக்கு எதிராகவும், தேவர்களுக்கு முன்னிலையிலும் எனது கைகளைப் பற்றி, "நிச்சயமாக நான் உனதே" என்று உறுதி ஏற்றார். ஓ, என்னைக் கைவிட்ட போது அவரது அந்தச் சபதம் என்ன ஆயிற்று" என்று கேட்டாள்.
தமயந்தி இவற்றையெல்லாம் சொன்னபோது, துயரத்தால் அவளது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. துயரால் பாதிக்கப்பட்டு, அவளது சிவந்த கண்களின் கருவிழிகளில் இருந்து பெருகி வரும் நீரைக் கண்டு, நளனும் கண்ணீர் சிந்தி, "ஓ மருட்சி கொண்டவளே, நாட்டை இழந்ததோ, உன்னைக் கைவிட்டதோ எனது செயல் இல்லை. அவை இரண்டும் கலியால் ஏற்பட்டவை. ஓ அறம்சார்ந்த பெண்களில் முதன்மையானவளே, கானகத்தில் பகலும் இரவும் எனக்காக அழுது, சோகத்தில் மூழ்கி, கலியைச் சபித்தாய். அதன் காரணமாக அவன் எனது உடலிலேயே தங்கி, உனது சாபத்தின் தொடர்ச்சியாக எரிந்து கொண்டிருந்தான். உண்மையில் உனது சாபத்தில் எரிந்த அவன், நெருப்புக்குள் இருக்கும் நெருப்பென என்னுள் வாழ்ந்தான்.
ஓ அருளப்பட்ட பெண்ணே, நான் செய்த சடங்குகளாலும், தவங்களாலும் அந்த இழிந்தவனை வென்றேன். ஆகையால், நமது துயரங்கள் முறிந்து போகும். அந்த இழிந்த பாவி {கலி} என்னைவிட்டு சென்றுவிட்டான். அதனாலேயே நான் இங்கு வந்திருக்கிறேன். ஓ அழகான மங்கையே, நான் உனக்காகவே இங்கு வந்திருக்கிறேன். எனக்கு வேறு எதுவும் நோக்கம் கிடையாது. ஆனால் ஓ மருட்சியுடையவளே, அர்ப்பணிப்புடன் அன்பாக இருக்கும் கணவனைக் கைவிட்டு எந்தப் பெண்ணாவது உன்னைப் போல இரண்டாவது தலைவனைத் தேர்ந்தெடுப்பாளா? மன்னரின் {பீமரின்} உத்தரவின் பேரில், தூதுவர்கள், "பீமரின் மகள் {தமயந்தி}, தனது விருப்பத்துடன், சுயமாக, தகுதியான இரண்டாவது கணவரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள்" என்று சொல்லி இந்த முழு உலகத்தையும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டவுடன், பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்} இங்கு வந்திருக்கிறார்" என்றான்.
நளனின் இந்தப் புலம்பலைக் கேட்ட தமயந்தி, பயந்து நடுங்கி, கரங்களைக் கூப்பி, "ஓ அருளப்பட்டவரே, என்னிடம் எந்தக் குறையும் கண்டு என்னைச் சந்தேகிப்பது உமக்குத் தகாது. ஓ நிஷாதர்களின் ஆட்சியாளரே {நளரே}, தேவர்களையும் புறக்கணித்து, நான் உம்மைத் தலைவராகக் கொண்டேன். உம்மை இங்கு கொண்டு வரவே, எல்லாப்புறங்களிலும் அலைந்து, கீழ்வானத்தின் எல்லா இடங்களுக்கும் சென்று, எனது வார்த்தைகளை பாடல்களாக்கி பாடிக்கொண்டிருக்கிறார்கள் கற்ற அந்தணர்கள். ஓ மன்னா, பர்ணாதன் என்ற கற்ற அந்தணன் உம்மை கோசலத்தில் ரிதுபர்ணனின் அரண்மனையில் கண்டுபிடித்தான். நீர் அந்த வார்த்தைகளுக்குத் தகுந்த விடையை மறுமொழியாய்ப் பகர்ந்த போதே, ஓ நைஷாதரே {நளரே}, நான் உம்மை மீட்க இந்தத் திட்டத்தை உருவாக்கினேன்.
ஓ பூமியின் தலைவரே, உம்மைத் தவிர இந்த உலகத்தில் குதிரைகளைக் கொண்டு நூறு {100} யோஜனை தூரத்தைக் கடந்து வர யாரும் கிடையாது. ஓ ஏகாதிபதி {நளரே}, உமது பாதத்தைத் தொட்டுச் சத்தியமாகச் சொல்கிறேன், நான் நினைவால் கூட எந்தப் பாவமும் செய்யாதவள். நான் எந்தப் பாவமாவது செய்திருந்தால், அனைத்தையும் சாட்சியாகக் கண்டு, இந்த உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் காற்று எனது உயிரை எடுக்கட்டும். நான் எந்தப் பாவமாவது செய்திருந்தால், வானத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் சூரியன் எனது உயிரை எடுக்கட்டும். நான் எந்தப் பாவமாவது செய்திருந்தால், எல்லா உயிரிலும் வசித்து சாட்சியாக இருக்கும் சந்திரன் எனது உயிரை எடுக்கட்டும். மூன்று உலகங்களையும் முழுமையாக நிலைத்திருக்கச் செய்யும் அந்த மூன்று தேவர்களும் {வாயு, சூரியன், சந்திரன்} இன்று உண்மையை அறிவிக்கட்டும். அல்லது அவர்கள் இன்று என்னைக் கைவிடட்டும்" என்றாள் {தமயந்தி}.
அவளால் {தமயந்தியால்} இப்படிச் சொல்லப்பட்டதும், காற்றின் தேவன் {வாயுத்தேவன்} வானத்தில் இருந்து, "ஓ நளா, அவள் {தமயந்தி} எந்தத் தவறும் செய்யவில்லை என்ற உண்மையை நான் உனக்குச் சொல்கிறேன். ஓ மன்னா {நளா}, தமயந்தி தனது குடும்பத்தின் மரியாதைக் காப்பாற்றியும், அந்த மரியாதையை உயர்த்தியும் இருக்கிறாள். இதற்கான சாட்சி நாங்களே. இந்த மூன்று {3} வருடங்களிலும் நாங்களே இவளுக்குப் பாதுகாவலர்களாக இருந்தோம். இந்த நிகரற்ற திட்டத்தை அவள் உனக்காகவே உருவாக்கினாள். உன்னைத்தவிர, நூறு யோஜனைகள் தூரத்தை ஒரே நாளில் கடக்கும் திறன், இந்த உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது. ஓ ஏகாதிபதி, நீ பீமனின் மகளை அடைந்துவிட்டாய். அவளும் உன்னை அடைந்து விட்டாள். நீ எந்தச் சந்தேகத்தையும் ஊக்குவிக்கும் அவசியம் இல்லை. உனது துணைவியுடன் சேர்ந்திருக்கக் கடவாய்" என்றான்.
காற்றின் தேவன் இப்படிச் சொன்னதும் அங்கே மலர் மாரி பொழிந்தது. தேவதுந்துபிகள் முழங்கின. மங்களகரமாக காற்றும் வீசத்தொடங்கியது. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, இந்த அற்புதங்களைக் கண்ட எதிரிகளை ஒடுக்குபவனான மன்னன் நளன், தமயந்தி குறித்த தனது சந்தேகங்களையெல்லாம் தூக்கி எறிந்தான். பிறகு அந்த பூமியின் தலைவன் {நளன்}, பாம்புகளின் மன்னனை {கார்க்கோடகனை} நினைவுகூர்ந்து, அந்த சுத்தமான ஆடையை அணிந்து தனது சொந்த உருவத்தை அடைந்தான். தனது நீதிமானான தலைவன் சுய உரு அடைந்ததைக் கண்ட, குற்றமற்ற அங்கங்கள் கொண்ட பீமனின் மகள் {தமயந்தி}, அவனை வாரி அணைத்தபடி, உரத்த சத்தத்துடன் அழ ஆரம்பித்தாள். மன்னன் நளனும், தனக்காக அர்ப்பணித்திருந்த பீமனின் மகளையும் {தமயந்தியையும்}, தனது பிள்ளைகளையும் முன்பைப் போல அணைத்துக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.
அகன்ற கண்கள் கொண்ட தமயந்தி, அவனது மார்பில் தனது முகத்தைப் புதைத்து, பெருமூச்சுவிட்டபடி தனது துயரங்களை நினைவு கூர்ந்தாள். துன்பத்தில் மூழ்கிய அந்த மனிதர்களில் புலி {நளன்}, அழுக்கடைந்திருந்த, இனிய புன்னகை கொண்ட தமயந்தியை அணைத்தபடி சிறிது நேரம் அப்படியே நின்றான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அரசத்தாய் {Queen mother - பீமனின் தாய்}, இதயத்தில் மகிழ்ந்து, பீமனிடம், நளன் மற்றும் தமயந்திக்கிடையே நடந்த நிகழ்ச்சியைச் சொன்னாள். அதற்கு அந்த பலம் பொருந்திய ஏகாதிபதி, "இன்றையப் பொழுதை நளன் அமைதியுடன் கழிக்கட்டும், நாளை அவனது குளியலும், இறவணக்கமும் முடிந்த பின்னர், தமயந்தியுடன் இருக்கும் அவனை நான் காண்பேன்" என்றான்.
ஓ மன்னா, அவர்கள், தங்கள் கானக வாழ்வையும், கடந்தகால நிகழ்ச்சிகளையும் ஒருவருக்கொருவர் உரைத்து, அந்த இரவை மகிழ்ச்சியாகக் கழித்தனர். விதரப்ப்பத்தின் இளவரசியும் {தமயந்தியும்}, நளனும், மகிழ்ச்சியால் நிறைந்த இதயங்களுடன், ஒருவரை ஒருவர் மகிழச் செய்து, மன்னன் பீமனின் அரண்மனையில் தங்கள் நாட்களைக் கழிக்கத்தொடங்கினர். (நாட்டை இழந்து) நான்காவது வருடத்திலேயே நளன், தனது விருப்பங்கள் நிறைவேறி, தனது மனைவியுடன் சேர்ந்து, உயர்ந்த அருளை மறுபடியும் அனுபவித்தான். வயலில் இருக்கும் இளஞ்செடிகள் மழையைப் பெற்று மகிழ்வது போல, தனது தலைவனை {நளனை} மீட்டதில் மகிழ்ச்சி அடைந்தாள் தமயந்தி. தனது தலைவனை மீட்ட பீமனின் மகள் {தமயந்தி}, தனது விருப்பத்தை அடைந்து, களைப்பு நீங்கி, துயரங்கள் விலகி, அழகில் பிரகாசித்து, சந்திரனால் பிரகாசித்த இரவு போல மகழ்ச்சியில் திளைத்தாள்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.