Rituparna knows about Nala! | Vana Parva - Section 77 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
நளன் தமயந்தியுடன் சேர்ந்துவிட்டான் என்பதை மன்னன் ரிதுபர்ணன் அறிவது; பிறகு நளனிடம் இருந்து குதிரை மரபின் அறிவியலை அறிந்து கொண்டு தனது சொந்த நகரத்திற்குத் திரும்புவது…
பிருகதஸ்வர் சொன்னார், "அந்த இரவைக் கழித்த பிறகு, மன்னன் நளன் ஆபரணங்கள் பூண்டு, தமயந்தியைத் தன் அருகில் கொண்டு, தன்னை மன்னனின் முன்பு நிறுத்திக் கொண்டான். நளன் தனது மாமனாரைப் பணிவுடன் வணங்கினான். அவனுக்குப் பிறகு தமயந்தியும் தனது மரியாதையை தனது தந்தைக்குச் செலுத்தினாள். மேன்மையான பீமனும் பெருமகிழ்ச்சியுடன், அவனை {நளனைத்} தனது மகனாக வரவேற்று, அவனையும் {நளனையும்}, அவனுக்கு தன்னை அர்ப்பணித்திருக்கும் அவனுடைய மனைவியையும் {தமயந்தியையும்} சரியான வார்த்தைகளால் ஆறுதல் கூறி மதிப்பளித்தான். அவனுக்கு அளிக்கப்பட்ட மரியாதையை முறையாக ஏற்றுக் கொண்ட மன்னன் நளன், மாமனாருக்கு {மன்னர் பீமருக்குத்} தனது சேவைகளை உரித்தாக்கினான்.
நளன் வந்ததைக் கண்ட குடிமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கே அந்த நகரத்தில் மகிழ்ச்சியால் பெருத்த ஒலி எழுந்தது. குடிமக்கள் அந்த நகரத்தைக் கொடிகளாலும், மாலைகளாலும், பதாகைகளாலும் அலங்கரித்தனர். தெருக்கள் நீர் தெளிக்கப்பட்டு, தரை மலர்களாலும் மற்ற பொருட்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. குடிமக்கள், தங்கள் வீட்டு வாயில்களில் மலர்களை மலைபோல் குவித்து வைத்தனர், கோயில்களையும் புனித இடங்களையும் மலர்களால் அலங்கரித்தனர். பாகுகன் {நளன்} தமயந்தியுடன் ஏற்கனவே இணைந்துவிட்டான் என்று ரிதுபர்ணன் கேள்விப்பட்டான். அந்த மன்னனும் {ரிதுபர்ணனும்} இவற்றைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தான். பிறகு மன்னன் {ரிதுபர்ணன்} நளனின் முன்பு வந்து, அவனின் {நளனின்} மன்னிப்பைக் கோரினான். புத்திசாலியான நளனும் ரிதுபர்ணனிடம் பல காரணங்களைக் காட்டி மன்னிப்பைக் கோரினான்.
பேசுபவர்களில் முதன்மையானவனும், உண்மையை அறிந்தவனுமான மன்னன் ரிதுபர்ணன், நளனால் இப்படி மரியாதை செய்யப்பட்ட பிறகு, முகத்தில் ஆச்சரியத்துடன், நிஷாதர்களின் ஆட்சியாளனிடம் {நளனிடம்}, "உமது நற்பேறாலேயே நீர் உமது மனைவியைத் திரும்ப அடைந்து, மகிழ்ச்சியை அடைந்தீர். ஓ நைஷாதரே {நளரே}, நீர் எனது இல்லத்தில் மாற்றுருவில் இருந்த போது, ஓ பூமியின் தலைவா, நான் உமக்கு எந்தத் தீங்கையும் செய்யவில்லை என நம்புகிறேன். தெரிந்தோ தெரியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் நீங்கள் மன்னிக்க வேண்டும்" என்றான். இதைக் கேட்ட நளன், "ஓ ஏகாதிபதியே {ரிதுபர்ணரே}, நீர் எனக்கு சிறு காயத்தையும் ஏற்படுத்தியதில்லை. அப்படியே நீர் செய்திருந்தாலும், அது எனது சினத்தைத் தூண்டியதில்லையாதலால் அது என்னால் மன்னிக்கப்பட வேண்டும். நீர் முன்பே எனது நண்பர், ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {ரிதுபர்ணரே}, நீர் எனக்கு உறவினரும் கூட. ஆகையால், நான் உம்மிடம் பெரும் மகிழ்வு கொள்கிறேன். ஓ மன்னா, எனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி உமது வசிப்பிடத்தில் நான் வாழ்ந்தேன். இன்னும் சொல்லப்போனால், எனது சொந்த வீட்டிலிருந்ததை விட நான் அங்கு மகிழ்ச்சியாக இருந்தேன். உமது {உமக்குத் தரவேண்டிய} குதிரை மரபுகளின் ஞானம் என்னிடம் இருக்கிறது. ஓ மன்னா {ரிதுபர்ணரே}, நீர் விருப்பப்பட்டால் நான் அதை உமக்குக் கொடுக்கிறேன்" என்றான்.
இதைச் சொன்ன அந்த நைஷாதன் ரிதுபர்ணனுக்கு அந்த அறிவியலைக் கொடுத்தான். ரிதுபர்ணன் அதை உரிய சடங்குகளுடன் பெற்றுக் கொண்டான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, நிஷாத ஆட்சியாளனுக்கு {நளனுக்கு} ஏற்கனவே பகடையின் புதிர்களை விளக்கியிருந்த பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்}, குதிரை மரபுகளின் அறிவியலை அதன் புதிர்களுடன் நளனிடம் இருந்து பெற்றுக் கொண்டான். பிறகு வேறு ஒருவனைத் தனது தேரோட்டியாக நியமித்துக் கொண்ட ரிதுபர்ணன் தனது நகரத்திற்குச் சென்றான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ரிதுபர்ணன் சென்றதும், மன்னன் நளன் வெகு நாளைக்கு அந்தக் குண்டின நகரத்தில் தங்கவில்லை.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.