Nala won Pushkara! | Vana Parva - Section 78 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
நளன் சிறு படையுடன் தனது நாட்டுக்குத் திரும்பி புஷ்கரனை சூதுக்கு அழைப்பது; புஷ்கரனின் ஏளனம் மற்றும் பேராசை; நளன் புஷ்கரனை வெல்வது; புஷ்கரனுக்கு பாதி நாட்டைக் கொடுப்பது…
பிருகதஸ்வர் சொன்னார், "ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நிஷாதர்களின் ஆட்சியாளன் {நளன்} அங்கே {குண்டினத்தில்} ஒரு மாதம் தங்கிய பிறகு, பீமனின் அனுமதியுடன், சிலரை மட்டும் அழைத்துக் கொண்டு நிஷாதர்களின் நாட்டுக்குச் சென்றான். வெள்ளை நிறத்திலான தனித்தேருடன், பதினாறு {16} யானைகளும், ஐம்பது {50} குதிரைகளும், அறுநூறு {600} காலாட்படையுடனும் அந்த ஒப்பற்ற மன்னன் {நளன்} பூமியை நடுங்கச் செய்து, நேரத்தைக் கடத்தாமல் கோபத்துடன் அங்கு {நிஷாதர்களின் நாட்டுக்குள்} நுழைந்தான். வீரசேனனின் பலம்பொருந்திய மகன் {நளன்} புஷ்கரனை அணுகி, அவனிடம் {புஷ்கரனிடம்}, "நான் பெரும் செல்வம் ஈட்டியிருக்கிறேன். நாம் மீண்டும் {பகடை} விளையாடலாம்.
அனைத்தையும் சேர்த்து தமயந்தியையும் பந்தயப் பொருளாக வைக்கிறேன். ஓ புஷ்கரா நீ உனது நாட்டைப் பந்தயப் பொருளாக வை. விளையாட்டு ஆரம்பமாகட்டும். இதுவே எனது நிச்சயமான உறுதிப்பாடு. நீ அருளப்பட்டிரு, நம்மிடம் உள்ள அனைத்தையும் சேர்த்து நமது உயிரையும் பந்தயத்தில் வைப்போம். வென்ற பிறகு, ஒருவர் மற்றவரின் செல்வத்தையோ நாட்டையோ அடையலாம், உடைமையாளன் கேட்கும்போது அதைப் பந்தயம் வைப்பது உயர்ந்த கடமை என்று விதிநெறிகள் சொல்கின்றன. அல்லது பகடை விளையாடுவதில் உனக்கு மகிழ்ச்சி இல்லையென்றால், ஆயுதங்களால் ஆன விளையாட்டு தொடங்கட்டும். ஓ மன்னா {புஷ்கரா}, ஒற்றை ஆளாகப் போரிட்டு நீயோ நானோ அமைதியை அடைவோம். இந்த நாடு பரம்பரை பரம்பரையாக வருவதாகும். அதை எந்தச் சூழ்நிலையிலும், எந்த உபாயத்தைக் கைக்கொண்டாவது மீட்பதே சிறந்தது என்று பெரும் முனிவர்கள் சொல்கிறார்கள். ஓ புஷ்கரா இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடு. பகடையுடன் சூதா? அல்லது வில் வளைத்துப் போரா?" என்று கேட்டான்.
நிஷாதனால் {நளனால்} இப்படிச் சொல்லப்பட்ட புஷ்கரன், தனது வெற்றி குறித்த நிச்சயத்தோடு சிரித்துக் கொண்டே அந்த ஏகாதிபதியிடம் {நளனிடம்}, "ஓ நைஷாதா {நளா}, நற்பேறினாலேயே நீ மீண்டும் பந்தயம் செய்வதற்கான செல்வத்தைச் சம்பாதித்தாய். தமயந்தியின் தீயூழ் {துரதிர்ஷ்டம்} முடிவுக்கு வரப்போவதும் இந்த நற்பேறாலேயே. ஓ மன்னா {நளா}, நற்பேறாலேயே நீ உனது மனைவியுடன் இன்னும் உயிருடன் இருக்கிறாய். ஓ பெரும் பலம் பொருந்திய கரங்கள் கொண்டவனே {நளனே}, உனது செல்வத்தையும் தமயந்தியையும் வெல்வேன் என்றும், அவள் {தமயந்தி} சொர்க்கத்தில் இந்திரனுக்காகக் காத்திருக்கும் அப்சரஸ் போல எனக்காகக் காத்திருப்பாள் என்றும் தெளிவாகத் தெரிகிறது. ஓ நைஷாதா {நளா}, நான் தினமும் உன்னை நினைவு கூர்ந்தேன். நான் உனக்காகவே காத்திருந்தேன். ரத்த சம்பந்தமில்லாதவர்களுடன் சூதாடுவதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. குற்றமற்ற குணங்கள் கொண்ட அழகான தமயந்தியை இன்று வென்று, என்னை அதிர்ஷ்டசாலியாக நினைத்துக் கொள்வேன். உண்மையில், அவளே {தமயந்தியே} எனது இதயத்தில் எப்போதும் குடியிருந்தவள்" என்று பதில் சொன்னான் {நளனின் சகோதரனான தம்பி புஷ்கரன்}.
தெளிவற்று தற்பெருமை பேசுபவனின் {புஷ்கரனின்} வார்த்தைகளைக் கேட்ட நளன் கோபம் கொண்டு தனது வாளால் அவனது தலையை வெட்ட விரும்பினான். இருப்பினும், கண்கள் கோபத்தால் சிவந்திருந்தாலும் நளன் புன்னகையுடன், "நாம் விளையாடலாம். ஏன் இப்போது பேசுகிறாய்? என்னை வீழ்த்தி, நீ விரும்பும் எதையும் சொல்" என்றான். பிறகு புஷ்கரனுக்கும் நளனுக்கு இடையில் விளையாட்டுத் தொடங்கியது. ஒரே வீச்சில் தனது செல்வங்களையும், பொக்கிஷத்தையும், தனது தம்பியின் {புஷ்கரனின்} உயிரையும் பந்தயத்தில் வென்ற நளன் அருளப்பட்டவனே. வெற்றியடைந்த மன்னன் புஷ்கரனிடம் சிரித்துக் கொண்டே, "ஒரு முள்ளும் இல்லாத இந்த முழு நாடும் எந்தத் தடையும் இல்லாமல் எனதாயிற்று. ஓ மன்னர்களில் இழிந்தவனே, உன்னால் விதரப்ப்பத்தின் இளவரசி மீது பார்வையைக் கூடச் செலுத்த முடியாது. ஓ மூடனே, இப்போது நீயும் உனது குடும்பமும் அவளது அடிமைகளாகச் சுருக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் உனது கைகளால் எனக்கு ஏற்பட்ட முந்தைய தோல்வி உனது செயலால் ஏற்படவில்லை. ஓ மூடனே, அதை நீ அறியமாட்டாய். கலியே இவை அனைத்தையும் செய்தான். ஆகையால், மற்றவர்கள் குறையை நான் உன் மீது சுமத்தமாட்டேன். நீ தேர்ந்தெடுப்பது போல உனது வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள். நான் உனக்கு உனது உயிரைத் தருகிறேன். உனக்கு (பரம்பரைச் சொத்தில்) உனது பங்கையும், அனைத்துத் தேவைகளையும் அளிக்கிறேன். ஓ வீரனே, சந்தேகமற உன் மேல் நான் கொண்ட பாசம் முன்பு போலவே இருக்கும். உடன்பிறந்த பாசமும் என்னிடம் அழியாது. ஓ புஷ்கரா, நீ எனது தம்பி, நீ நூறாண்டு காலம் வாழ வேண்டும்" என்றான் {நளன்}.
கலங்கடிக்கமுடியாத பராக்கிரமம் கொண்ட நளன் இப்படி தனது தம்பிக்கு ஆறுதல் கூறி, மீண்டும் மீண்டும் அவனை அணைத்துக் கொண்டு, சொந்த நகரத்திற்குச் செல்ல அவனுக்கு அனுமதி கொடுத்தான். நிஷாத ஆட்சியாளனால் {நளனால்} ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இப்படி ஆறுதல் அளிக்கப்பட்ட புஷ்கரன், அந்த நீதிமானான மன்னனை வணங்கி, கரங்கள் கூப்பியபடி அவனிடம் {நளனிடம்}, "உமது புகழ் அழிவற்றதாக இருக்கட்டும். ஓ மன்னா, எனக்கு உயிரையும், புகலிடத்தையும் கொடுத்த நீ பத்தாயிரம் {10000} வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்" என்றான்.
பிறகு மன்னனால் {நளனால்} மகிழ்ச்சிப் படுத்தப்பட்ட புஷ்கரன் அங்கே ஒரு மாதம் வசித்து, பெரும் படையுடனும், கீழ்ப்படியும் பணியாட்களுடனும், தனது உறவினர்களுடனும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தனது சொந்த நகரத்திற்குச் சென்றான். பிறகு அந்த மனிதர்களில் காளை இரண்டாவது சூரியனைப் போலப் பிரகாசித்து அழகாக இருந்தான். அந்த அருளப்பட்ட நிஷாதர்களின் மன்னன் {நளன்}, புஷ்கரனுக்கு ஆட்சியைக் கொடுத்து அவனைச் செழிப்பாக்கி, பிரச்சனைகளில் இருந்து அவனை விடுவித்து, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட தனது அரண்மனைக்குள் நுழைந்தான். நிஷாதர்களின் ஆட்சியாளன் {நளன்} அப்படி தனது அரண்மனைக்குள் நுழைந்து தனது குடிமக்களுக்கு ஆறுதல் அளித்தான். அந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களும், தொண்டர்களும் பெரும் மகிழ்ச்சியால் மயிர்ச்சிலிர்த்து நின்றனர். நாட்டின் அதிகாரிகளைத் தலைமையாகக் கொண்ட மக்கள் தங்கள் கரங்களைக் கூப்பி, "ஓ மன்னா {நளரே}, இந்த நாடு மற்றும் நகரம் முழுவதும் இருக்கும் நாங்கள் உண்மையிலேயே இன்றுதான் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இன்று, நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனை} தலைவனாக அடைந்த தேவர்கள் போல, எங்களது ஆட்சியாளனை அடைந்துவிட்டோம்" என்றனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.