Yudhishthira learnt dice lore | Vana Parva - Section 79 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
நளன் தமயந்தியைத் தனது நாட்டிற்கு அழைத்து வந்து மகிழ்ச்சியாக இருந்ததைச் சொன்ன பிருகதஸ்வர், யுதிஷ்டிரனும் அப்படியே இருப்பான் என்று சொன்னது; யுதிஷ்டிரனுக்கு பிருகதஸ்வர் பகடை அறிவைக் கொடுப்பது; யுதிஷ்டிரன் அர்ஜுனனின் கடும் தவத்தைக் கேள்விப்பட்டு துன்புறுவது; அந்தணர்களுடன் உரையாடியது...
பிருகதஸ்வர் சொன்னார், "நகரம் துயரமற்று மகிழ்ச்சியுடன் அங்கே விழா தொடங்கிய போது, பெரிய படையுடன் சென்று மன்னன் {நளன்} தமயந்தியை (அவளது தந்தை பீமனின் வீட்டிலிருந்து) அழைத்துவந்தான். பகைவர்களைக் கொல்லும் பயங்கர பராக்கிரமும், அளவிடமுடியா ஆன்மாவும் கொண்ட அவளது தந்தையான் பீமனும் தனது மகளுக்கு உரிய மரியாதைகளைச் செலுத்தி அனுப்பி வைத்தான். மகனுடனும் மகளுடனும் வந்த விதரப்ப்பத்தின் இளவரசியின் வருகையை அடுத்து, மன்னன் நளன் தனது நாட்களை, நந்தனம் எனும் சோலையில் இருக்கும் தேவர்கள் தலைவனைப் போல மகிழ்ச்சியாகக் கழித்தான்.
அழியாப் புகழ் கொண்ட அந்த மன்னன் {நளன்}, தனது நாட்டை மீட்டெடுத்து, ஜம்பு தீபகற்பத்தின் ஏகாதிபதிகளில் சிறந்தவனாக, அதை மீண்டும் ஆளத் தொடங்கினான். அவன் {நளன்} எண்ணிலடங்கா வேள்விகளைச் செய்து பரிசுகளை அந்தணர்களுக்குப் பெருமளவில் கொடுத்தான். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, நீயும் உனது இரத்த உறவுகளுடனும் சொந்தங்களுடனும் அதே போல விரைவில் பிரகாசிப்பாய். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, இப்படியே எதிரிகளின் நகரங்களை அடக்கும் மன்னன் நளன், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, பகடையாட்டத்தின் தொடர்ச்சியாக தனது மனைவியுடன் துன்பத்தில் மூழ்கினான். மேலும், ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்த துன்பங்கள் அனைத்தையும் நளன் தனியாகவே அனுபவித்து, தனது செழிப்பை மீட்டெடுத்தான். ஆனால் நீயோ!, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இதயத்தை அறத்தில் நிலைக்க வைத்து, உனது தம்பிகளுடனும், கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} இந்தக் கானகத்தில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறாய். ஓ ஏகாதிபதி, நீ தினமும் வேதங்களையும் அதன் கிளைகளையும் அறிந்த அருளப்பட்ட அந்தணர்களுடன் கலந்து கொள்வதால், துன்பத்திற்கான காரணம் உனக்கு சிறியதே.
நாகன் கார்க்கோடகன், தமயந்தி, நளன், அரச முனி ரிதுபர்ணன் ஆகியவர்களைத் தவிர்த்து இந்த வரலாறு தீமைகளை அழிக்கவல்லது. ஓ மங்காப் புகழ் கொண்டவனே, கலியின் ஆதிக்கத்தையும் அழிக்கும் இவ்வரலாறு, ஓ மன்னா, இதைக் கேட்கும் உன்னைப் போன்ற மனிதர்களுக்கு ஆறுதல் அளிக்கும். (வெற்றியில்) உறுதியற்ற மனித முயற்சியை நினைவுகூர்ந்து, நீ செழிப்பிலோ, துரதிர்ஷ்டத்திலோ மகிழ்ச்சியையோ துக்கத்தையோ அடைவது உனக்குத் தகாது. இந்த வரலாற்றைக் கேட்ட பிறகு, ஓ மன்னா, துன்பத்தை வளர்க்காமல் ஆறுதலடை. ஓ பெரும் மன்னா, துன்பமடைந்து ஏங்கிக் கொண்டிருப்பது உனக்குத் தகாது. உண்மையில், விதியின் தான்தோன்றித்தனத்தையும், முயற்சியின் கனியற்ற தன்மையையும் நினைவுகூரும் தன்னை அடக்கிய மனிதன் மன அழுத்தம் கொண்டு துன்புறமாட்டான்.
நளனின் இந்த உயர்ந்த வரலாற்றைத் திரும்பத் திரும்பச் சொல்பவனையோ, அல்லது சொல்லும்போது கேட்பவனையோ, தீயூழ் {துரதிர்ஷ்டம்} எப்போதும் அணுகாது. இந்தப் பழைய அற்புதமான வரலாற்றைக் கேட்கும் ஒருவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், விலங்குகள், மனிதர்களில் உயர்ந்த இடம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவதோடு, சந்தேகமற, தனது எல்லா காரியங்களிலும் வெற்றியடைந்து, புகழடைவான். மேலும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீ வளர்க்கும் பயத்தை (யாரும் தன்னை பகடைக்கு அழைத்துவிடுவார்களோ என்ற பயத்தை) ஒரே முறையில் நான் அகற்றிவிடுவேன். ஓ ஒப்பற்ற பராக்கிரமம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நான் பகடையின் அறிவியலை முழுமையாக அறிவேன். நான் உன்னிடம் திருப்தியடைந்துள்ளேன். ஓ குந்தியின் மகனே, அந்த அறிவைப் பெற்றுக்கொள். நான் உனக்குச் சொல்கிறேன்" என்றார் {பிருகதஸ்வர்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு மன்னன் யுதிஷ்டிரன், இதயத்தில் மகிழ்ந்து, பிருகதஸ்வரிடம், "ஓ சிறப்புமிக்கவரே, பகடையின் அறிவியலை நான் உம்மிடம் இருந்து அறிய விரும்புகிறேன்" என்றான். பிறகு அந்த முனிவர் {பிருகதஸ்வர்} பாண்டுவின் உயர் ஆன்ம மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} பகடையின் அறிவைக் கொடுத்தார். அப்படிக் கொடுத்துவிட்டு, அந்தப் பெரும் துறவி ஹயசீர்ஷம் என்ற புனிதமான நீர்நிலைக்கு குளிப்பதற்காகச் சென்றார்.
மாமல்லபுரத்தில் காணப்படும் "அர்ஜுனன் தவம" சிற்பம் |
பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} சரியான நோன்புகளுடனும், உறுதியான மனத்துடனும், மௌனமாக நீதிதேவனின் மனித உடலாக இருந்து பிரகாசித்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது அன்புத் தம்பியான குந்தியின் மகன் ஜெயன் {அர்ஜுனன்}, அந்தப் பெரும் வனத்தில் கடும் தவம் இருப்பதை அறிந்து மிகவும் துன்பமடைந்தான். துயரத்தால் எரியும் இதயத்துடன் இருந்த பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பெரும் வனத்தில் ஆறுதல் வேண்டி, அவனுடன் வாழ்ந்துவந்த, பலவகை ஞானம் கொண்ட அந்தணர்களிடம் கலந்துரையாடினான்.
******************நளோபாக்யான பர்வம் முற்றிற்று******************
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.