Gods sought Narayana's refuge! | Vana Parva - Section 102| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
கடலுக்குள் ஒளிந்திருந்த காலகேயர்கள் இராப்பொழுதுகளில் முனிவர்களைக் கொன்று பகல் பொழுதில் மறுபடி கடலுக்குள் ஒளிதல்; இதை மனிதர்கள் அறிய இயலாதது; தேவர்கள் நாராயணனிடம் சென்று முறையிடல்...
இவையனைத்தையும் இரவின் இருளிலேயே செய்தனர், பகலில் கடலின் ஆழங்களுக்குள் நுழைந்தனர். பரத்வாஜர் ஆசிரமத்தில் ஆன்மாக்களை அடக்கி பிரம்மச்சரிய வாழ்வு வாழ்ந்து, நீரும் காற்றும் மட்டுமே உண்டு வாழ்ந்த அனைத்து அந்தணர்களையும் கொன்றனர். இப்படியே காலகேயர்கள் என்ற அந்தத் தானவர்கள் {அசுரர்கள்} தங்கள் கரங்களின் பலத்தால் போதையுண்டு, தங்கள் ஆயுள் தீர்வதை உணராமல், முனிவர்களின் ஆசிரமங்களில் இரவின் இருளில் நுழைந்து, எண்ணிலடங்கா அந்தணர்களைக் கொன்றனர். ஓ மனிதர்களின் சிறந்தவனே {யுதிஷ்டிரா} கானகத்தில் இருந்த தவசிகளிடம் இவ்வாறெல்லாம் தானவர்கள் நடந்து கொண்டாலும், அவர்களைக் குறித்த எதையும் அறிந்து கொள்வதில் மனிதர்கள் தோல்வியுற்றனர்.
தினமும் காலையில் மாண்ட முனிவர்களின் மிச்ச சொச்ச உடல்கள் தரையில் கிடப்பதை மக்கள் கண்டனர். அவற்றில் பல உடல்கள் சதையோ இரத்தமோ அற்றிருந்தன. எலும்புகளற்று, உறுப்புகளற்று கிடந்தன. சிப்பிகளின் குவியல் போலத் தரையெங்கும் எலும்புக் குவியல் அங்கும் இங்கும் கிடந்தன. பூமி முழுவதும் வேள்விக்காக முனிவர்கள் வைத்திருந்த ஜாடிகளும், நெய்யூற்றும் கரண்டிகளும் உடைந்து ஆங்காங்கே கிடந்தன. காலகேயர்கள் குறித்த பயத்தில் இருந்த அண்டத்தில் வேத கல்வியும் வஷத்துகளும், வேள்விச்சடங்குகளும், தர்மச் சடங்குகளும் நின்று போய் உற்சாகமற்றதாகச் சூழ்நிலை இருந்தது.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்கள் இப்படி அழிந்து கொண்டிருக்கையில், மீதம் இருந்தவர்கள் பயத்தால் எல்லாத் திக்குகளுக்கும் ஓடினர், சிலர் பெரிய குகைகளுக்கும், சிலர் மலை நீரூற்றுகளுக்கும் ஓடைகளுக்கும் சென்றனர். சிலர் செத்துவிடுவோமோ என்ற பயத்திலேயே ஏதுவும் நடக்காமலேயே இறந்தனர். வீரமும் பலமும் கொண்ட சில வில்லாளிகள் உற்சாகமாக அந்தப் பெரும் இக்கட்டில் தானவர்களத் தேடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்களால் கடலுக்கடியில் தஞ்சமடைந்திருந்த அசுரர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு, தேடுதலில் திருப்தியடைந்த பிறகு அந்த வீரர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர்.
ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அண்டம் இப்படி அழிந்து கொண்டிருந்தபோது, வேள்வி விழாக்களும், தர்மச் சடங்குகளும் நின்று போன போது, தேவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். இந்திரனை மத்தியில் கொண்டு கூடிய அவர்கள் பயத்தால் ஒருவர் ஆலோசனையை மற்றவர் கேட்டனர். பிறகு வைகுண்டத்தின் வீழ்த்தப்பட முடியாத, மேன்மையான, படைக்கப்படாத {சுயம்புவான} தெய்வமான நாராயணனின் பாதுகாப்பைத் தேவர்கள் நாடினர்.
அந்த மதுவைக் கொன்றவனை {மதுசூதனனை} வணங்கிய தேவர்கள் அவனிடம், "ஓ தலைவா, நீயே எங்களையும் அண்டத்தையும் படைப்பவன், காப்பவன், அழிப்பவனாக இருக்கிறாய். இந்த அண்டத்தில் இருக்கும் அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தையும் படைத்தவன் நீயே. ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே, பழங்காலத்தில் உயிர்களின் நன்மைக்காக நீயே கடலில் மூழ்கிய பூமியை பன்றி {Boar = பன்றி, வராகம்} ரூபமெடுத்து மீட்டுக் கொண்டு வந்தாய். ஓ! ஆடவரில் சிறந்தவனே, பிறகு பாதி மனிதனாகவும், பாதிச் சிங்கமாகவும் உரு கொண்டு பழங்காலத்தில் பெரும் பலமும் பராக்கிரமும் நிறைந்த ஹிரண்யகசிபு என்ற தைத்தியனை {அசுரனைக்} கொன்றாய். மேலும் பலி என்ற பெயர் கொண்ட யாராலும் அழிக்க முடியாத பெரும் அசுரனை, குள்ளனின் (Dwarf = குள்ளமனிதன், வாமனன்} உருவம் கொண்டு மூன்று உலகங்களில் இருந்தும் கடத்தினாய். ஓ! தலைவா, பெரும் வில்லாளியும் எப்போதும் வேள்விகளுக்குத் தடை ஏற்படுத்துபவனுமான ஜம்பன் என்ற தீய அசுரன் உன்னாலேயே கொல்லப்பட்டான். உன்னால் செய்யப்பட்ட இதுபோன்ற சாதனைகளை எண்ணிக்கையில் அடக்க முடியாது. ஓ மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, நாங்கள் பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறோம். நீயே எங்களுக்குப் புகலிடம், ஓ தேவர்களுக்குத் தேவா இதன் காரணமாகவே நாங்கள் தற்போதைய இடர்களை உனக்குத் தெரிவித்தோம். உலகங்களையும், தேவர்களையும், சக்ரனையும் பெரும்பயத்திலிருந்து காப்பாயாக" என்றனர் {தேவர்கள்}"
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.