Vritra slained! | Vana Parva - Section 101| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
விஷ்ணு, தேவர்கள் மற்றும் முனிவர்கள் ஆகியோர் இந்திரனுக்குத் தங்கள் பலங்களைக் கொடுப்பது; இந்திரன் வஜ்ரத்தை வீசி விருத்திரனைக் கொல்வது; தலைவனில்லாத தானவர்கள் பீதியில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொள்வது; அங்கிருந்து மூன்று உலகத்தையும் அழிக்க அவர்கள் சதி தீட்டுவது...
இரும்பாலான கைத்தடிகளை ஏந்தி, பொற்கவசம் பூட்டிய காலகேயர்கள் தேவர்களை எதிர்த்து, எதிரியும் நெருப்பில் நகர்ந்து செல்லும் மலைகளைப் போல ஓடினார்கள். மூர்க்கத்துடனும், கர்வத்துடனும் முன்னேறி வரும் எதிரிகளைக் கண்ட தேவர்கள் அதிர்ச்சியடைந்து பயத்தால் ஓடினர். தேவர்கள் பயத்தில் ஓடுவதையும், விருத்திரன் தைரியத்தால் வளர்ந்து வருவதையும் கண்ட ஆயிரம் கண் புரந்தரன் {இந்திரன்}, மிக வாட்டமடைந்தான். தேவர்களில் முதன்மையான அந்தப் புரந்தரன், காலகேயர்கள் மேல் இருந்த பயத்தால் ஒரு கணமும் தாமதிக்கமால் மேன்மையான நாராயணனின் அபயத்தை வேண்டினான்.
மிகுந்த துயரத்தில் இருந்த இந்திரனைக் கண்ட நித்தியமான விஷ்ணு, தனது சொந்த சக்தியை அவனுக்குக் கொடுத்தான். விஷ்ணுவால் இப்படிப் பாதுகாக்கப்பட்ட சக்ரனை {இந்திரனைக்} கண்ட தேவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் சக்தியையும் அவனுக்கு அளித்தனர். களங்கமற்ற பிரம்ம முனிவர்களும் தங்கள் சக்திகளைத் தேவர்கள் தலைவனுக்குக் கொடுத்தார்கள். விஷ்ணுவாலும், அனைத்து தேவர்களாலும், உயர் ஆன்ம முனிவர்களாலும் இப்படி உதவப்பட்ட சக்ரன் முன்பை விட மிகுந்த பலம் பெற்றான்.
தேவர்கள் தலைவன் {இந்திரன்} மற்றவர்கள் பலத்தால் நிறைந்திருக்கிறான் என்பதை அறிந்த விருத்திரன் பயங்கரமாகக் கர்ஜித்தான். அவனது கர்ஜனையால் பூமியும், திசைகளும், வானமும், தேவலோகமும், மலைகளும் நடுங்க ஆரம்பித்தன. அந்தப் பயங்கரமான கர்ஜனையைக் கேட்ட தேவர்கள் தலைவன் பெரும் குழப்பமடைந்து அச்சத்தால் நிறைந்து, விரைவாக அந்த அசுரனை {விருத்திரனைக்} கொல்ல விரும்பி பெரும் பலம் வாய்ந்த வஜ்ராயுதத்தை வீசினான். இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்குண்ட, மாலையும் தங்கமும் அணிந்த அந்தப் பெரும் அசுரன், பழங்காலத்தில் விஷ்ணுவின் கைகளில் இருந்து விழுந்த மந்தரப் பெருமலையென விழுந்தான். அந்தத் தைத்தியர்களின் இளவரசன் {விருத்திரன்} கொல்லப்பட்டாலும், பீதியில் இருந்த சக்ரன் {இந்திரன்}, வஜ்ரத்தை தான் விடுக்கவில்லை என்றும், விருத்திரன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறான் என்றும் எண்ணி, தடாகத்துக்குள் மறைந்திருக்க விரும்பி களத்தைவிட்டு ஓடினான்.
இருப்பினும் தேவர்களும் பெரும் முனிவர்களும் மகிழ்ச்சியில் நிறைந்து இந்திரனின் புகழைப் பாட ஆரம்பித்தனர். பிறகு ஒன்றுகூடிய தேவர்கள், தங்கள் தலைவன் {விருத்திரன்} இறந்த துக்கத்தில் இருந்த தானவர்களைக் கொல்ல ஆரம்பித்தனர். கூடி நின்ற தேவர்கள் கூட்டத்தைக் கண்டு பீதியடைந்த தானவர்கள் கடலின் ஆழங்களுக்குச் சென்றனர். மீன்களும் முதலைகளும் நிறைந்த அடியற்ற ஆழத்தில் இறங்கிய தானவர்கள் ஒன்றுகூடி கர்வத்துடன் மூன்று உலகங்களையும் அழிக்கச் சதி செய்யத் தொடங்கினர். அவர்களில் அனுமானங்களில் விவேகத்துடன் இருந்த சிலரில் ஒவ்வொருவரும் தங்கள் தீர்மானத்தின்படி செயல்களின் வழிகளைப் பரிந்துரைக்க ஆரம்பித்தனர்.
அப்படிச் சதி செய்து கொண்டிருந்த திதியின் மகன்கள் முதலில் தவ அறமும் ஞானமும் கொண்ட மனிதர்களை அழிக்க வேண்டும் என்ற பயங்கரமான தீர்மானத்திற்கு வந்தனர். இந்த உலகங்கள் அனைத்தும் தவச்சக்தியால்தான் நிலைக்கிறது. ஆகையால் அவர்கள் "தவச்சக்தியை அழிப்பதில் நேரத்தை விரையம் செய்யக் கூடாது. பூமியில் தவ அறங்களையும், அறநெறிகளையும், கடமைகளையும், பிரம்ம ஞானத்தையும் உடையவர்களைக் கொல்வதில் காலந்தாழ்த்தக் கூடாது. இவர்கள் {தவசிகள்} அழிந்தால் மொத்த அண்டமும் அழிந்துவிடும்" என்றனர். அண்டத்தை அழிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்த அனைத்து தானவர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமுதல், தங்கள் முற்றுகைத் தொடர, மலைகளைப் போன்ற உயரங்களை உடைய அலைகள் கொண்ட வருணனின் வசிப்பிடமான கடலைத் தங்கள் கோட்டையாக அமைத்துக் கொண்டனர்" என்றார் {லோமசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.