Gods glorified Agastya! | Vana Parva - Section 103| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
முனிவர்கள் எப்படி இறக்கின்றனர் என்பதைத் தேவர்களுக்கு விஷ்ணு சொல்லல்; கடலை வற்ற செய்ய அகஸ்தியரை அணுகும்படி விஷ்ணு தேவர்களுக்கு அறிவுறுத்தல்; அகஸ்தியரிடம் சென்ற தேவர்கள் அவரைத் துதிபாடல்….
தேவர்கள் {விஷ்ணுவிடம்}, "உனது கருணையாலேயே நான்வகைப் பிறவிகளும் வளர்கின்றன. அப்படிப் படைக்கப்பட்டவர்கள், தேவர்களுக்கும், இறந்து போன தங்களது முப்பாட்டன்களுக்கும் காணிக்கைகள் {படையல்கள்} கொடுப்பதன் மூலம் சொர்க்கத்தில் வசிப்பவர்களைச் சாந்தப்படுத்துகின்றனர். உன்னால் காக்கப்பட்ட மக்கள், ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்து, பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வளர்கிறார்கள். இப்போது இப்படிப்பட்ட பயம் மக்களைப் பாதிப்படைய வைக்கிறது. இரவு நேரங்களில் அந்தணர்கள் யாரால் எதற்காகக் கொல்லப்படுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
அந்தணர்கள் அழிக்கப்பட்டால், இந்தப் பூமி அழிவைச் சந்திக்கும். இப்பூமிக்கு ஒரு முடிவு ஏற்பட்டால், சொர்க்கமும் அழியும். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே, ஓ அண்டத்தின் தலைவா, உன்னால் காக்கப்படும் உலகங்களுக்கு ஒரு முடிவு வரக்கூடாது என்று உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்" என்றனர் {தேவர்கள்}.
அதற்கு விஷ்ணு, "தேவர்களே! பிறந்த பிறவிகள் அழிவைச் சந்திக்கும் காரணத்தை நான்றிவேன். அது குறித்து உங்களுக்கு நான் சொல்கிறேன். சலனமற்ற மனதுடன் நான் சொல்வதைக் கேளுங்கள். காலகேயர்கள் என்ற பெயரில் கடுமை நிறைந்த ஒரு படை இருக்கிறது. அவர்களே விருத்திரனின் தலைமையில் முழு அண்டத்தையும் பாழாக்கிக் கொண்டிருந்தனர். அறிவுநுட்பமும், ஆயிரம் கண்களும் கொண்ட இந்திரனால் விருத்திரன் கொல்லப்பட்டதைக் கொண்ட அவர்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள வருணனின் உறைவிடமான கடலுக்குள் புகுந்தனர்.
சுறாக்களும், முதலைகளும் நிரம்பிய கடலுக்குள் இறங்கிய அவர்கள், இரவு வேளையில் வெளியே வந்து, தவசிகளைக் காணும் இடத்திலேயே கொன்று போடுகின்றனர். அவர்கள் கடலுக்குள் தஞ்சம் அடைந்திருப்பதால், அவர்களைக் கொல்ல இயலாது. ஆகையால், கடலை வற்ற செய்ய ஏதாவது ஒரு உபாயத்தை நீங்கள் கைக்கொள்ள வேண்டும். அகஸ்தியரை விட வேறு யாரால் கடலை வற்ற செய்ய முடியும். கடலை வற்ற செய்யாமல், வேறு வழிகளில் அவர்களைத் (அந்தப் பேய்களைத்) தாக்க முடியாது" என்றான் {விஷ்ணு}.
விஷ்ணுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் பிரம்மனின் அனுமதியைப் பெற்று, பகுதிகளிலேயே சிறந்த பகுதியில் இருக்கும் அகஸ்தியரின் ஆசிரமத்திற்குச் சென்றனர். அவர்கள் வருணனின் மகனான உயரான்ம அகஸ்தியர் அங்கே பிரகாசித்துக் கொண்டிருப்பதையும், அவருக்காகப் பிரம்மனுக்காகக் காத்திருக்கும் தேவர்கள் போலப் தவசிகள் காத்து நிற்பதையும் கண்டனர். அவர்கள் மித்ரா வருண மைந்தனான அவரை {அகஸ்தியரை}அந்த ஆசிரமத்தில் அணுகி அவரது பெருமை நிறைந்த, நேரான சாதனைகளைச் சொல்லி துதித்தனர்.
அந்தத் தேவர்கள் {அகஸ்தியரிடம்}, "பழங்காலத்தில் நகுஷனால் {நஹுஷன்} ஒடுக்கப்பட்ட போது தேவர்களுக்கு நீரே புகலிடமாக இருந்தீர். உலகத்தின் முள்ளாக இருந்த அவன் தேவலோக அரியணையில் இருந்து தூக்கியெறியப்பட்டும் தேவலோகத்தில் இருந்து கீழே விழுந்தான். சூரியனிடம் கோபம் நிறைந்த போட்டியில் இருந்த மலைகளில் முதன்மையான விந்தியன் {விந்திய மலை} (சூரியனைவிட உயரம் பெற வேண்டும் என்று) திடீரெனத் தனது உயரத்தில் வளர்ந்து கொண்டிருந்தான். ஆனால் உமது உத்தரவை மீற முடியாததால் அவன் தனது வளர்ச்சியை நிறுத்தினான். உலகத்தை இருள் சூழ்ந்த போது, பிறந்த பிறவிகள் மரணத்தால் துன்புற்றன. ஆனால் உம்மைக் காப்பாளராகப் பெற்ற அவர்கள் போதுமான பாதுகாப்பை அடைந்தார்கள். நாங்கள் எப்போதெல்லாம் துயரத்திற்கு ஆட்படுகிறோமோ அப்போதெல்லாம் நீரே எங்களுக்கு மதிப்புக்குரிய புகலிடமாக இருந்திருக்கிறீர். அதன் காரணமாகவே நங்கள் உம்மிடம் ஒரு வரத்தைப் பெற வந்திருக்கிறோம். நீர் எப்போதும் நாங்கள் கேட்கும் வரங்களை அருளியிருக்கிறீர்" என்றனர் {தேவர்கள்}" என்றார் {லோமசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.