The penance of Sagara and the boon of Siva! | Vana Parva - Section 106| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பிள்ளைக்காகத் தவம் இருந்த சகரன்; சகரனுக்குச் சிவன் வரமளித்தல்; சகரனின் ஒரு மனைவி அழகான குழந்தையைப் பெற்றெடுக்க, இன்னொரு மனைவி சுரைக்காயைப் பெற்றெடுத்தல்; சகரனுக்கு அசரீரியின் அறிவுரை...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அனைவரும் அப்படி ஒன்றுகூடிய போது, மனிதர்களின் பாட்டனாகிய பிரம்மன் அவர்களிடம், "தேவர்களே, எங்கே உங்களுக்கு இன்பம் கிடைக்குமோ அல்லது இன்பம் உங்களை எங்கு வழிநடத்துமோ அங்குச் செல்லுங்கள். கடல் மீண்டும் தனது கொள்ளளவை எட்ட நீண்ட காலம் ஆகும். பெரும் மன்னனான பகீரதனின் குலத்தவர் மூலம் அச்சந்தர்ப்பம் ஏற்படும்" என்று சொன்னான். (அண்டத்தின்) பெரும்பாட்டனின் வார்த்தைகளைக் கேட்ட தேவர்களில் முதன்மையானவர்கள் (எப்போது கடல் நிரம்பும் என்று எண்ணியபடி) தாங்கள் வந்த வழியே திரும்பிச் சென்றனர்.
யுதிஷ்டிரன், "ஓ! தவசியே {லோமசரே}, என்ன சந்தர்ப்பம் அது? பகீரதனின் குலத்தவர்கள் அதை எப்படி நிறைவேற்றினர்? பகீரதரனின் தலையீட்டின் பேரில் கடல் எப்படி நிரப்பப்பட்டது? ஓ தவசியே {லோமசரே}, தங்கள் அறப்பயிற்சிகளையே தங்கள் செல்வமாக நினைப்பவர்கள் யார்? ஓ புரோகிதர்கள் வகையைச் சார்ந்தவரே, நீர் சொன்ன அந்த மன்னனின் சாதனைகள் குறித்து நான் விவரமாகக் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இப்படி அந்தப் பெருந்தன்மைமிக்க அறம்சார்ந்த மன்னனால் {யுதிஷ்டிரனால்} கேட்கப்பட்ட புரோகிதர் வகை மனிதர்களின் தலைவர் {லோமசர்}, உயர் ஆன்ம {மன்னன்} சகரனின் சாதனைகளை உரைக்க ஆரம்பித்தார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அழகும், பலமும் நிறைந்து, பூமியை ஆண்ட சகரன் இக்ஷவாகு இன குடும்பத்தில் பிறந்திருந்தான். ஓ பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அச்சமூட்டும் பெயர் கொண்டிருந்த அவன் {சகரன்} மகனற்று இருந்தான். அவன் ஹைஹயர்களையும் தாலஜங்கர்களையும் {the Haihayas and the Talajanghas}அழித்து மொத்த படையணியினரையும் அடக்கி தனது நாட்டை ஆண்டு வந்தான்.
ஓ பாரதக் குலத்தோன்றல்களில் பெரிதும் புகழப்படுபவனே {யுதிஷ்டிரா}, ஓ பாரதக் குலத்தின் தலைவா, அழகில் கர்வம் கொண்டு இளமையுடன் இருந்த விதரப்ப்ப குல இளவரசியும், சிபியின் அரச பரம்பரையில் வந்த மற்றுமொருத்தியும் அவனது இரு மனைவியராக இருந்தனர். ஓ மன்னர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, மேலும் அதே மனித ஆட்சியாளன் {சகரன்}, தனது மனைவியரையும் அழைத்துக் கொண்டு, கடும் தவத்தின் மூலமாகப் பிள்ளை பெற கைலாச மலைக்குச் சென்றான். அங்கே கடும் தவமும் யோகமும் இருந்து, முக்கண்ணனும், திரிபுரன் என்ற பேயை அழித்தவனும், அனைத்து உயிருக்கும் அருள் வழங்குபவனும், நித்தியமாக நிலைத்திருப்பவனும், பிநாகம்யையும் திரிசூலத்தையும் தாங்கியவனும், நித்திய அமைதி கொண்டவனும், கடுமையானவர்களை ஆள்பவனும், பல உருவங்களை எடுக்க வல்லவனும், உமா தேவியின் தலைவனுமான பெருமைமிக்க தெய்வத்தின் {சிவனின்} காட்சியைப் பெற்றான்.
அந்தப் பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவன் {சகரன்} வரமருளும் அந்தத் தெய்வத்தைக் {சிவனைக்} கண்டதும், தனது ராணிகளுடன் அவனது பாதத்தில் விழுந்து, ஒரு மகனை விரும்பி வேண்டி நின்றான். அந்தச் சிவ தெய்வமும் அவனிடம் {சகரனிடம்} திருப்தி கொண்டு, இரு மனைவியரால் சேவிக்கப்பட்ட அந்த மனிதர்களின் நேர்மையான ஆட்சியாளனிடம் {சகரனிடம்}, "ஓ மனிதர்களின் தலைவா, என்னிடம் நீ வேண்டிக்கொண்ட கணத்தைக் (வானியல் கணிதத்தைக்) கருத்தில் கொண்டால், உனது ஒரு மனைவிக்கு, பெரும் கர்வமும், வீரமும் மிக்க அறுபதாயிரம் {60,000} மகன்கள் பிறப்பார்கள். ஆனால், ஓ பூமியை ஆள்பவனே, அவர்களை அனைவரும் ஒன்றாகவும் முற்றாகவும் அழிந்து போவார்கள். (இருப்பினும்) உனது இன்னொரு மனைவியிடம் ஒரு வீரமிக்க மகன் பிறப்பான். அவனே உனது குலத்தைத் தழைக்க வைப்பான்" என்றான் {சிவன்}.
இதைச் சொன்ன அந்த ருத்ர தெய்வம் {சிவன்}, பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த இடத்திலேயே மறைந்து போனான். பிறகு அந்த மன்னன் சகரன் தனது இரு மனைவியருடன் தனது வசிப்பிடத்திற்குப் பெரும் மகிழ்ச்சியுடன் திரும்பினான். ஓ மனுவின் மகன்களில் {மனிதர்களில்} பெரிதும் புகழப்படுபவனே {யுதிஷ்டிரா}, தாமரை இதழ் கண்கள் கொண்ட அவனின் {சகரனின்} மனைவியரான விதரப்ப்ப இளவரசியும் {வதர்ப்பி}, சிபியின் இளவரசியும் {சைப்பியை} விரைவில் பிள்ளையைப் பெற இருந்தனர். பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் விதரப்ப்ப இளவரசி சுரைக்காய் உருவத்தில் (ஏதோ ஒன்றை) பெற்றெடுத்தாள். சிபியின் இளவரசி தெய்வீக அழகுடன் கூடிய மகனைப் பெற்றெடுத்தாள்.
பிறகு அந்தப் பூமியின் அதிபதி அந்தச் சுரைக்காயை எறிந்துவிட மனதில் தீர்மானித்தான். அப்போது வானத்தில் இருந்து கடுமையும் உறுதியும் கொண்ட ஒரு குரல், "ஓ மன்னா {சகரா}, உனது அவசரச் செயலினால் குற்றவாளி ஆகாதே; நீ உனது மகன்களைக் கைவிடலாகாது. அந்தச் சுரைக்காயில் இருந்து விதைகளை எடுத்து, சுத்திகரிக்கப்பட்ட நெய் நிரப்பிய ஆவியுடன் கூடிய பாத்திரங்களில் பாதுகாத்து வை. ஓ பாரதக் குலக்வழித்தோன்றலே, பிறகு நீ அறுபதாயிரம் {60,000} மகன்களை அடைவாய். ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {சகரா}, பெருந்தெய்வம் {சிவன்} ஏற்கனவே சொன்னவாறு உனது மகன்கள் பிறப்பார்கள். ஆகையால் உனது மனம் வேறு விதமாக ஆக வேண்டாம்" என்றது {அசரீரி}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.