The sacrifices of Gaya! | Vana Parva - Section 95| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரனும் அவனைத் தொடர்பவர்களும் பிரம்மசிரசை அடைவது; யுதிஷ்டிரனுக்கு ஷாமந்தர், கயனின் வேள்விகளைக் குறித்துச் சொல்வது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டுவின் வீர மகன்கள், தங்களைத் தொடர்பவர்களுடன் ஒரு இடம் விட்டு மறு இடம் முன்னேறி கடைசியாக நைமிசத்தை அடைந்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, கோமதியை {கோமதி நதியை} அடைந்த பாண்டவர்கள், அந்த ஓடையிலிருக்கும் புனித தீர்த்தத்தில் நீராடி, நீர்க்கடன் செலுத்தி ஓ! பாரதா பசுக்களையும், செல்வங்களையும் தானம் அளித்தனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, கன்யா, அஸ்வ, கோ தீர்த்தங்களில் தொடர்ச்சியாகத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும், அந்தணர்களுக்கும் நீர்க்கடன்கள் செலுத்தி, காலகோடியிலும் மற்றும் விஷப்பிரஸ்த மலைகளிலும் தங்கிய கௌரவர்கள் {பாண்டவர்கள்}, ஓ! மன்னா, பாகுதா {நதியை} அடைந்து அந்த ஓடையில் தங்கள் நீர்க்கடன்களைச் செலுத்தினர்.
ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, அடுத்ததாக, தேவர்களின் வேள்விப்பகுதியான பிரயாகைக்குச் சென்று, கங்கை யமுனையின் சங்கமத்தில் நீராடி பெரும் பலன்களைக் கொடுக்கும் தவ நோன்புகளைப் பயின்றார்கள். உண்மை நிறைந்த சத்தியங்களுடைய பாண்டவர்கள் அத்தீர்த்தத்தில் நீராடி தங்களுடைய அனைத்துப் பாவங்களையும் கழித்துக் கொண்டனர். ஓ! பாரதக் குலத்தின் மன்னா {ஜனமேஜயா}, பிறகு பாண்டுவின் மகன்கள் அந்தணர்களுடன் சேர்ந்து, படைப்பாளனுக்கே {பிரம்மாவுக்கே} புனிதமானதும், தவசிகளால் வழிபடப்படுவதுமான வேதி என்ற தீர்த்தத்திற்குச் சென்றனர். அங்கே சிறிது காலம் தங்கி அந்தணர்களுக்குப் பழங்களும், கிழங்குகளும், தெளிந்த நெய்யும் கொடுத்து திருப்தி செய்த அந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, பெரும் பலன்கள் தரக்கூடிய தவ நோன்புகளை அங்கே பயின்றனர்.
பிறகு அவர்கள், ஒப்பற்ற பிரகாசம் கொண்ட அறம்சார்ந்த அரச முனி கயனால் புனிதப்படுத்தப்பட்ட {பிரதிஷ்டை செய்யப்பட்ட} மஹிதரத்திற்குச் சென்றனர். அந்தப் பகுதியில் கயசிரஸ் என்ற மலையும், பிரம்பு புதர்கள் நிறைந்த அழகிய கரைகளுடைய காண்பதற்கினிய நதியான மஹாநதியும் இருக்கின்றன. அந்தத் தெய்வீக மலையின் புனிதமான சிகரங்களில் தவசிகளால் பெரிதும் வழிபடப்படும் பிரம்மசிரஸ் என்ற புனிதமான தீர்த்தம் இருக்கிறது. அங்கிருக்கும் தடாகத்தின் கரைகளில், பழங்காலத்தில், தர்மத்தின் நித்திய தேவன் {தர்ம தேவன் = யமன்} வசித்தான். அங்கேதான் சிறப்புமிக்க முனிவரான அகஸ்தியர் அந்தத் தெய்வத்தைக் {யமனைக்} காண வந்தார். அந்தத் தடாகத்தில்தான் அனைத்து ஆறுகளும் உற்பத்தியாகின்றன. அந்தத் தீர்த்தத்தில்தான் பிநாக தாங்கியான மகாதேவன் {சிவன்} வசித்திருக்கிறான்.
அந்தப் பகுதிக்கு வந்த பாண்டுவின் வீர மைந்தர்கள், ரிஷியக்ஞப் பெரு வேள்விக்கான முறைப்படியும் சடங்குகளின் படியும் சாதுர்மாஸ்ய நோன்பைப் பயின்றனர். அங்கேதான் நித்திய ஆலம் என்று அழைக்கப்படும் ஒரு பெரும் மரம் நிற்கிறது. அங்கே செய்யப்படும் எந்த வேள்வியும் நித்தியமான பலன்களை அளிக்கிறது. நித்திய பலன்களை அருளும் தேவர்களின் அந்த வேள்வி மேடையில், ஒருமித்த ஆன்மாவுடன் பாண்டவர்கள் உண்ணா நோன்பிருக்க ஆரம்பித்தனர். மேலும் அங்கே தவத்தைச் செல்வமாகக் கொண்ட அந்தணர்கள் நூற்றுக்கணக்கில் வந்து சேர்ந்தனர். முனிவர்களால் அருளப்பட்ட விதிப்படி சாதுர்மாஸ்ய வேள்வியை அங்கு வந்த அந்தணர்களும் மேற்கொண்டனர். வேதமறிந்தவர்களும், ஞானத்திலும் தவப்பயன்களிலும் முதிர்ந்தவர்களுமான அந்தணர்கள், பாண்டவர்கள் முன்னிலையில் புனிதமான காரியங்கள் குறித்த விவரங்களை அத்தீர்த்தத்தில் வைத்து விவாதித்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த இடத்தில்தான், நோன்பு நோற்பவரும் கற்றவரும், பிரம்மச்சாரியுமான புனிதமான ஷாமந்தர் அவர்களிடம் ஆமூர்த்தராயனின் மகன் கயனைக் குறித்துப் பேசினார்.
ஷாமந்தர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஆமூர்த்தராயனின் மகனான கயன் அரச முனிகளில் முதன்மையானவனாக இருந்தான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நான் சொல்லப்போகும் அவனது நற்செயல்களைக் குறித்துக் கேள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இங்கேதான் கயன் (விநியோகிப்பதற்கு) அபரிமிதமான உணவுடனும் (அந்தணர்களுக்கு) பெரும் பரிசுகளுடனும் பல வேள்விகளைச் செய்தான். அந்த வேள்விகளில், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சமைத்த அரிசி {சோறு} நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மலைகளாகவும், தெளிந்த நெய் தடாகமாகவும், தயிர் நூற்றுக்கணக்கான ஆறுகளாகவும், ஆடம்பரமான குழம்புகள் ஓடைகளாகவும் இருந்தன. நாளுக்கு நாள் இவை அனைத்து மூலைகளுக்கும், அந்தணர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டன. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அனைவரும் சுத்தமான உணவைப் பெற்றனர். (அனைத்து வேள்விகளின்) முடிவில் அந்தணர்களுக்குப் பரிசுகள் கொடுக்கப்பட்ட போது, வேத ஒலி சொர்க்கத்தை அடைந்தது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அவ்வளவு சத்தமாக வேத மந்திரங்களைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படியே அந்தப் புனிதமான ஒலி அனைத்துப் புள்ளிகளையும், பூமியையும், விண்ணையும், ஏன் சொர்க்கத்தையும் கூட நிறைத்தன.
சிறப்புமிக்கக் கயனால் அளிக்கப்பட்ட அற்புதமான உணவுப்பொருட்களாலும், பானங்களாலும் திருப்தியடைந்த மனிதர்கள், ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இந்த வரிகளைப் பாடிக் கொண்டே சென்றனர். "கயனின் பெரும் வேள்வியில் இன்று இருக்கும் எந்த உயிரினம் தான் இன்னும் உண்ண விரும்புகின்றன? அனைவரும் உண்ட பிறகும், இன்னும் இருபத்தைந்து மலைகள் உணவு இருக்கின்றன! மகத்தான பிரகாசமிக்க அரச முனி கயனால் அடையப்பட்ட வேள்விப் பயனை இதுவரை எந்த மனிதனும் அடைந்ததில்லை. இனி அடையப்போவதுமில்லை. கயன் அளித்த தெளிந்த நெய்யால் தெவிட்டிப் போய் இருக்கும் தேவர்கள், இனியும் யார் கொடுக்கும் படையலையும் ஏற்கும் நிலையில் இல்லை. பூமியில் மணற்துகள்களைப் போல, ஆகாயத்தில் நட்சத்திரங்களைப் போல, மழையால் நிறைந்திருக்கும் மேகங்கள் பொழியும் துளிகளைப் போல, வேள்வியில் கயன் அளிக்கும் பரிசுகளை ஒருவனால் எண்ண முடியாதே" என்று பாடினர்.
"ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இந்த வர்ணனைகளுக்கு ஏற்ற பல வேள்விகளை மன்னன் கயன், இந்தப் பிரம்மசிரசின் அருகில் செய்திருக்கிறான்" என்றார் {ஷாமந்தர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.