Lomasa bade adieu! | Vana Parva - Section 175 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
கந்தமாதனத்தில் இருந்து இறங்க யுதிஷ்டிரனுக்கு பீமன் அறிவுறுத்தல்; பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்ட லோமசர் தேவலோகம் சென்றது...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "அவ்வீரர்களில் பிரதானமானவன் {அர்ஜுனன்}, ஆயுதங்களை அடைந்த பின் விரித்திரனைக் கொன்றவனின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் இருந்து திரும்பிய பிறகு, போர்க்குணமுள்ள அந்தத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} துணையுடன் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} என்ன செய்தார்கள்?" என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்திரனுக்கு நிகரானவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனனின் துணை கொண்டு, அந்த அழகான அற்புதமான வனத்தில் (உள்ள) கருவூலத்தலைவனின் {குபேரனின்} நந்தவனத்தில் அவர்கள் இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தனர். மனிதர்களின் தலைவனான கிரீடி {அர்ஜுனன்}, ஆயுதங்களையே நோக்கமாகக் கொண்டு, கையில் வில்லுடன், மரங்கள் நிறைந்த ஒப்பற்ற இன்பமான நிலங்களை ஆராய்ந்தபடி உலாவினான். மன்னன் வைஸ்ரவணனின் {குபேரனின்} அருளால் ஒரு வசிப்பிடத்தை அடைந்த இறையாண்மையின் மகன்கள் {பாண்டவர்கள்}, மனிதர்களின் ஐஸ்வரியத்தில் எந்த அக்கறையும் கொள்ளவில்லை. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவர்களது (வாழ்வின்) அந்தப் பகுதி அமைதியாகக் கடந்தது. பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துணையாகக் கொண்ட அவர்கள், நான்கு வருடங்களை ஒரு இரவைப் போலக் கழித்தனர். பாண்டவர்கள் (இந்த நான்கு வருடங்களையும்), முன்பே கழித்த ஆறு வருடங்களையும் சேர்த்து பத்து வருடங்களைச் சீராகக் கழித்தனர்.
பிறகு, வாயுத்தேவனின் உணர்ச்சி வேகமுள்ள மகனும் {பீமனும்}, ஜிஷ்ணுவும் {அர்ஜுனனும்}, வீரர்களான இரட்டையர்களும் {நகுலன், சகாதேவனும்} தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல அமர்ந்திருந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} முன்னால் அமர்ந்து, அவனிடம் நன்மையான இனிய வார்த்தைகளைப் பேசினர். "உமது வாக்குறுதியை வாய்க்கச் செய்வதற்கும், உமது நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவுமே, ஓ! குருக்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, கானகத்தைக் கைவிட்டு, சுயோதனனையும் {துரியோதனனையும்} அவனைத் தொடர்பவர்களையும் கொல்லச் செல்லாமல் இருக்கிறோம். மகிழ்ச்சியுடன் இருக்கும் தகுதியை நாம் பெற்றிருந்தாலும், மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறோம். (கானகத்தில்) நாம் (இந்நிலையில்) வாழும் பதினோறாவது {11} ஆண்டாகும் இது. இனி தீய மனமும் குணமும் கொண்டவர்களை ஏமாற்றி, தலைமறைவு காலத்தை {அஞ்ஞாதவாசத்தை) எளிதாக வாழ்வோம். உமது ஆணையின் பேரிலேயே, ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அச்சத்தில் இருந்து விடுபட்டு, மரியாதையைத் துறந்து நாம் காடுகளில் உலவி வருகிறோம். நமது குடியிருப்பு அருகில் இருப்பதைக் கண்டு (நம் எதிரிகள்), நாம் தொலைதூர நாடுகளுக்குச் சென்றிருப்போம் என்பதை நம்ப மாட்டார்கள். அங்கு அறியப்படாதவாறு வாழ்ந்த பிறகு, அந்தப் பொல்லாத மனிதர்களான சுயோதனன் {துரியோதனன்} மற்றும் அவனைத் தொடர்பவர்களைப் பழிதீர்த்து, அந்த மனிதர்களில் தாழ்ந்தவனை {துரியோதனனை} எளிதாக வேரறுத்து, அவனைக் கொன்று நமது நாட்டை மீட்டெடுப்போம். ஆகையால், ஓ! தர்மராஜா {யுதிஷ்டிரரே}, நீர் பூமிக்கு இறங்குவீராக. ஓ! மன்னா, சொர்க்கபுரி போல இருக்கும் இந்தப் பகுதியில் நாம் வசிப்போமேயானால், நாம் நமது கவலைகளை மறந்துவிடுவோம். அப்படி நேர்கையில், ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, நறுமணமிக்க மலரைப் போல அசையும் மற்றும் அசையாத உலகங்களில் உமது புகழ் அழிந்து போகும். குரு தலைவர்களிடம் இருந்து நாட்டை அடைந்தால், நீர் அதை (பெரும் புகழை) அடைந்து, பல்வேறு வேள்விகளைச் செய்வீர். இதை {இப்போது வாழும் இந்நிலையை} நீர் குபேரனிடம் இருந்து பெறுகிறீர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதை நீர் அடையலாம். இப்போது, ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, தவறிழைத்த எதிரிகளைத் தண்டிப்பது மற்றும் அழிப்பதை நோக்கி உமது மனதைச் செலுத்தும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இடியைத் தாங்குபவனே {இந்திரனே} உமது பராக்கிரமத்திற்கு முன்னால் நிற்க இயலாது. ஓ! தர்மராஜா {யுதிஷ்டிரரே} சுபர்ணத்தைத் தனது குறியாகக் கொண்டவனும் (கிருஷ்ணனும்), சினியின் பேரனும் (சாத்யகியும்), உமது நன்மையை விரும்புகிறார்கள். தேவர்களுடனேயே கூட மோதல் ஏற்பட்டு, அதில் அவர்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் வலியை அடைய மாட்டார்கள். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே} அர்ஜுனன் ஒப்பற்ற பலத்துடன் இருக்கிறான். நானும் அவ்வாறே இருக்கிறேன். ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே} யாதவர்களுடன் கூடிய கிருஷ்ணன் உமது நன்மையில் விருப்பம் கொண்டிருக்கிறான். நானும், போரில் சாதிக்கும் வீரர்களான இரட்டையர்களும் {நகுலன், சகாதேவன் ஆகியோரும்} அவ்வாறே இருக்கிறோம். நீர் செல்வம், செழிப்பு, மேன்மை ஆகியவற்றைப் பெறுவதற்காக நாங்கள் எதிரிகளுடன் மோதி அவர்களை அழிப்போம்" என்றான் {பீமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அறம், பொருள் ஆகியவற்றை அறிந்து, அளவில்லா பராக்கிரமத்துடன் இருக்கும், தர்மனின் பெருமைமிக்க அற்புதமான மகன் {யுதிஷ்டிரன்} அவர்களின் நோக்கத்தை அறிந்து, வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தை வலம் வந்தான். மாளிகைகளிடமும், நதிகளிடமும், தடாகங்களிடமும், அனைத்து ராட்சசர்களிடமும் விடைபெற்ற நீதிமானான யுதிஷ்டிரன், தாங்கள் (ஏற்கனவே) வந்த வழியை நோக்கினான். பிறகு மலையைப் பார்த்தபடி அந்த உயர் ஆன்ம, சுத்த மனம் படைத்தவன் அந்த மலைகளில் சிறந்த மலையிடம், "ஓ! மலைகளில் முதன்மையானவனே, எதிரிகளைக் கொன்று, எனது நாட்டை மீட்டு, எனது காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நான் எனது நண்பர்களுடன் தவம்பயின்று கட்டுப்பட்ட ஆன்மாவுடன் மீண்டும் உன்னைக் காண்பேன்" என்றான். இதை அவன் தீர்மானமாகவும் கொண்டான். தனது தம்பிகளுடனும், அந்தணர்களுடனும், அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்} அதே சாலை வழியே முன்னேறினான். கடோத்கசனும் அவனைத் தொடர்பவர்களும் அவர்களை மலைமுகடுகளில் சுமந்து சென்றனர். அவர்கள் பயணிக்கத் தொடங்கியதும், ஒரு தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவது போலக் கூறிய பெரும் முனிவரான லோமசர், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், சொர்க்கவாசிகளின் புனிதமான இருப்பிடத்திற்குச் சென்றார். பிறகு மனிதர்களில் முதன்மையான ஆர்ஷ்டிஷேணராலும் அறிவுறுத்தப்பட்ட பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, அழகான தீர்த்தங்களையும், ஆசிரமங்களையும், பல பெரிய தடாகங்களையும் கண்ட படி தனியாகச் சென்றார்கள்.