The wisdom of Nahusha! | Vana Parva - Section 180 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரனிடம் திருப்தி கொண்ட பாம்பின் உருவத்தில் இருந்த நகுஷன், பல விஷயங்களை யுதிஷ்டிரனுக்குத் தெளிவாக்குவது; நகுஷன் தனக்கு பாம்பின் உருவம் ஏற்படக் காரணமான நிகழ்ச்சியைச் சொல்வது; நகுஷன் பீமனை விட்டுவிட்டு சுய உருவம் கொண்டு சொர்க்கம் சென்றது...
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "இவ்வுலகில் நீ வேதங்களையும், வேதாங்கங்களையும் கற்றவனாக இருக்கிறாய். (எனவே) ஒருவன் முக்தியடைய என்ன செய்ய வேண்டும்? என்பதை எனக்குச் சொல்" என்றான்.
அந்தப் பாம்பு {நகுஷன்}, "ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, சரியான காரியங்களுக்குப் பிச்சை அளிப்பது {தானம்}, அன்பான வார்த்தைகள் பேசுவது {இன்சொல்}, உண்மை சொல்வது {சத்தியம்}, எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது {அஹிம்சை} ஆகியவற்றைச் செய்யும் மனிதன் சொர்க்கம் செல்கிறான் என்பது எனது நம்பிக்கை" என்று பதிலுரைத்தான் {நகுஷன்}.
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! பாம்பே, இரண்டில் எது உயர்ந்தது, உண்மையா? {சத்தியமா?} அல்லது பிச்சையளிப்பதா? {தானமளிப்பதா?} அன்பான நடத்தை {இன்சொல்}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாமை {அஹிம்சை} ஆகியவற்றின் பெரிய அல்லது சிறிய முக்கியத்துவத்தையும் எனக்குச் சொல்" என்று கேட்டான்.
அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்} , "உண்மை {சத்தியம்}, பிச்சையிடுதல் {தானமளித்தல்}, அன்பான பேச்சு {இன்சொல்}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாதிருப்பது {அஹிம்சை} ஆகியவற்றின் இந்தப் பண்பு ஒப்புமையிலான சிறப்புகள், அவற்றைச் செய்யும் நோக்கத்தின் ஈர்ப்பால் (பயன்பாட்டால்) {அளவிடப்பட்டு} அறியப்படுகிறது. (சில நேரங்களில்) தானச் செயல்கள் சிலவற்றை விட, உண்மை அதிகம் பாராட்டப்படுகிறது; தானங்களில் சில, உண்மை பேசுவதை விட வரவேற்கத்தக்கதாக இருக்கின்றன. அதே போல, ஓ! பெரும் வலிமைமிக்க மன்னா, பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாமல் இருப்பது {அஹிம்சை} நல்ல பேச்சை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது, அதேபோல நேர்மாறாகவும் தெரிகிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, விளைவுகளைச் சார்ந்து இருந்தாலும் அப்படியே ஆகிறது. இப்போது, உனக்குக் கேட்கவேண்டிய ஏதாவது இருந்தால், அனைத்தையும் கேள், நான் அவற்றை உனக்குத் தெளிவுபடுத்துவேன் {I shall enlighten thee}" என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}.
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! பாம்பே, சொர்க்கத்திற்குச் செல்லும் உடலற்றவன் {உடலை விட்டவன்}, புலன்களால் உணர்வது மற்றும் புலன்களால் செய்யப்படும் மாற்றமுடியாத கனிகளை {பலன்களை} (இங்கே புவியில்) அனுபவிப்பது ஆகியவற்றை நாம் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?" என்று கேட்டான்.
அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, "தனது செயல்களால், மனித இருப்பு, சொர்க்கவாழ்வு அல்லது தாழ்ந்த விலங்காய் பிறப்பு என மூன்று {3} நிலைகளை மனிதன் அடைவது காணப்படுகிறது. இவற்றில், சோம்பலற்று, எவருக்கும் தீங்கிழைக்காது, தானம் மற்றும் பிற அறங்களைக் கொண்ட மனிதன், மனிதர்களின் உலகைவிட்டு வெளியேறிய பிறகு, சொர்க்கத்திற்குச் செல்கிறான். இதற்கு நேர்மாறாகச் செய்வதன் மூலம், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்கள் மீண்டும் மனிதனாகவோ அல்லது தாழ்ந்த விலங்குகளாகவோ பிறக்கிறார்கள்.
ஓ! எனது மகனே {யுதிஷ்டிரனே}, குறிப்பாக இந்தத் தொடர்பில்தான், கோபம் மற்றும் காமம் மூலம் இயங்குபவனும், பேராசை மற்றும் துர்க்குணத்திற்குத் தன்னை அளித்தவனும், மனித நிலையில் இருந்து விழுந்து, தாழ்ந்த விலங்காக மறுபடியும் பிறக்கிறான். மேலும், தாழ்ந்த விலங்குகளும் மனித நிலைக்கு மாறுவதற்கு விதிக்கப்பட்டிருக்கின்றன; மாடு, குதிரை மற்றும் பிற விலங்குகள் தெய்வீக நிலையை அடைவதும் கவனிக்கப்பட்டுள்ளது.1 ஓ! எனது மகனே {யுதிஷ்டிரனே}, புலன் உணர்ச்சி கொண்ட ஒருவன், தனது செயல்களின் கனிகளை அறுத்து {செயல்களின் பலனைப் பெற்று}, இப்படி இந்த நிலைகளில் உடல் மாறிப் {வேறு உடலைப் பெற்று} பிறக்கிறான் {transmigrates}. ஆனால் மறுபிறப்பு பிறந்த ஞானி, நித்தியமான பரமாத்வாவில் தனது ஆன்மாவை இளைப்பாற்றுகிறான். உள்ளார்ந்த ஆவி {ஜீவாத்மா}, விதியால் கட்டப்பட்டு, தனது செயல்களின் கனிகளை அறுத்து, பிறப்புக்குப் பின் பிறப்பை அடைந்து கொண்டே இருக்கிறான். ஆனால், தனது செயல்களின் தொடர்பை இழந்த ஒருவன், பிறந்த அனைத்தினுடைய மாற்றமுடியாத விதியையும் உணர்கிறான்." என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}.
2
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! பாம்பே, ஒலி, தொடு உணர்வு, உருவம், மணம், சுவை ஆகியவற்றை ஒரு பிரிந்த ஆவி {பிரிந்த உயிர்} எவ்வாறு உணர்ந்து அறிகிறது என்பதில் குழப்பமில்லாமல் எனக்கு உண்மையைச் சொல்வாயாக. ஓ! உயர்ந்த மனம் கொண்டவனே {நகுஷனே}, நீ ஏன் காரியங்களை ஒரே சமயத்தில் அறிவதில்லை? ஓ! பாம்புகளில் சிறந்தவனே, {நகுஷனே} இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிப்பாயாக" என்று கேட்டான்.
அந்தப் பாம்பு {நகுஷன்- யுதிஷ்டிரனிடம்}, "ஓ! நீண்ட ஆயுள் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, ஆத்மா {ஆவி} என்று அழைக்கப்படும் பொருள், உடலுக்குள் குடியேறி, உணர்வு உறுப்புகளின் மூலம் வெளிப்பட்டு, காணப்படும் பொருட்களை உணர்ந்தறிகிறது. ஓ! பாரதக் குலத்தின் இளவரசனே {யுதிஷ்டிரா}, உணர்வு, மனம், புத்தி, ஆகியவை பொருட்களைக் காண்பதற்கு ஆன்மாவுக்குத் துணைபுரியும் கரணங்கள் {காரணிகள்} என்று அழைக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள். ஓ! எனது மகனே, நித்தியமான ஆவி {ஆன்மா}, மனதின் துணை கொண்டு, தனது கோளத்தை விட்டு வெளியே வந்து, புலன்கள் மூலம் செயல்பட்டு, அனைத்து உணர்வுகளையும் வாங்கிக் கொண்டு, வெற்றிகரமாக அனைத்தையும் {ஒலி, உருவம் {காட்சி}, மணம் போன்றவற்றைக்} காண்கிறது {உணர்கிறது}. ஓ! வீரமிக்கவனே {யுதிஷ்டிரனே}, உயிரினங்களின் மனமே அனைத்து உணர்வுகளுக்கும் {அறிவுக்கும்} காரணமாக இருக்கிறது. எனவே, அது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை உணர்ந்தறிய முடியாது. அந்த ஆவி {ஆன்மா}, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, புருவ மத்தியில் தனது இடத்தை அடைந்து, பலவிதமான பொருட்களை அறிய உயர்ந்த மற்றும் தாழ்ந்த அறிவாற்றலை அனுப்புகிறது. யோகிகள் அறிவார்ந்த கோட்பாட்டைச் செயல்படுத்திய பிறகு, ஆன்மாவின் செயல்கள் வெளிப்படுவதைக் காண்கின்றனர்" என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}.
அந்தப் பாம்பு {நகுஷன்- யுதிஷ்டிரனிடம்}, "ஓ! நீண்ட ஆயுள் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, ஆத்மா {ஆவி} என்று அழைக்கப்படும் பொருள், உடலுக்குள் குடியேறி, உணர்வு உறுப்புகளின் மூலம் வெளிப்பட்டு, காணப்படும் பொருட்களை உணர்ந்தறிகிறது. ஓ! பாரதக் குலத்தின் இளவரசனே {யுதிஷ்டிரா}, உணர்வு, மனம், புத்தி, ஆகியவை பொருட்களைக் காண்பதற்கு ஆன்மாவுக்குத் துணைபுரியும் கரணங்கள் {காரணிகள்} என்று அழைக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள். ஓ! எனது மகனே, நித்தியமான ஆவி {ஆன்மா}, மனதின் துணை கொண்டு, தனது கோளத்தை விட்டு வெளியே வந்து, புலன்கள் மூலம் செயல்பட்டு, அனைத்து உணர்வுகளையும் வாங்கிக் கொண்டு, வெற்றிகரமாக அனைத்தையும் {ஒலி, உருவம் {காட்சி}, மணம் போன்றவற்றைக்} காண்கிறது {உணர்கிறது}. ஓ! வீரமிக்கவனே {யுதிஷ்டிரனே}, உயிரினங்களின் மனமே அனைத்து உணர்வுகளுக்கும் {அறிவுக்கும்} காரணமாக இருக்கிறது. எனவே, அது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை உணர்ந்தறிய முடியாது. அந்த ஆவி {ஆன்மா}, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, புருவ மத்தியில் தனது இடத்தை அடைந்து, பலவிதமான பொருட்களை அறிய உயர்ந்த மற்றும் தாழ்ந்த அறிவாற்றலை அனுப்புகிறது. யோகிகள் அறிவார்ந்த கோட்பாட்டைச் செயல்படுத்திய பிறகு, ஆன்மாவின் செயல்கள் வெளிப்படுவதைக் காண்கின்றனர்" என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}.
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "மனம் மற்றும் புத்தியின் {அறிவாற்றலின்} தனித்துவமான பண்பு வேறுபாட்டை எனக்குக் கூறு. இவற்றின் ஞானமே பரமாத்மாவை தியானிக்கும் மனிதனுக்குத் தலைமை கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது" என்று சொன்னான்.
அந்தப் பாம்பு {நகுஷன்- யுதிஷ்டிரனிடம்}, "மாயையின் மூலம், ஆன்மா அறிவாற்றலுக்கு அடிபணிந்து போகிறது. ஆன்மாவுக்கு அடிபணிந்ததே அறிவாற்றல் என்பது அறியப்பட்டிருந்தாலும், பிந்தையது {அறிவாற்றல்} (பிறகு) இயக்குனராகிறது. உணர்வுகளின் செயல்களாலேயே அறிவாற்றல் செயல்படுத்தப்படுகிறது. மனம் என்பது சுயம்புவாகும். புத்தி (வலி, இன்பம் ஆகிய) எந்த உணர்வையும் விளைவிப்பதில்லை, ஆனால் மனம் அதைச் செய்யும். எனது மகனே {யுதிஷ்டிரா}, இதுவே மனதுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாடாகும். நீ இந்த விஷயத்தை அறிந்தவனாக இருக்கிறாய். இதில் உனது கருத்து என்ன?" என்று கேட்டான் {நகுஷன்}.
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, "ஓ! அறிவு மிக்கவனே, நீ, அறியத்தக்கது அனைத்தும் அறிந்து, நல்ல புத்திகூர்மையுடன் இருக்கிறாய். இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் நீ கேட்கிறாய்? நீ அனைத்தையும் அறிந்திருந்தாய்; அற்புதச் செயல்கள் பல செய்தாய்; மேலும் நீ சொர்க்கத்தில் வாழ்ந்தாய். அப்படியிருக்கும்போது மாயை உன்னை எப்படி ஆட்கொண்டது? இது குறித்து எனக்குப் பெருத்த சந்தேகம் இருக்கிறது" என்றான். அந்தப் பாம்பு {நகுஷன்}, செழிப்பு என்பது ஞானியையும், வீரமான மனிதனையும் கூட போதை கொள்ளச் செய்கிறது. ஆடம்பர வாழ்வு வாழ்பவர்கள் (விரைவில்) தங்கள் புத்தியை இழக்கிறார்கள். அதே போல நானும், ஓ! யுதிஷ்டிரா, செழிப்பால் ஏற்பட்ட மாய ஈர்ப்பால் ஆட்கொள்ளப்பட்டு, எனது உயர்ந்த நிலையில் இருந்து விழுந்தேன். {இப்போது} மீண்டும் எனது சுய உணர்வைப் பெற்று, உனக்கு இப்படித் தெளிவை உண்டாக்குகிறேன் ஓ! வெற்றிகரமான மன்னா {யுதிஷ்டிரா}, நீ எனக்கு நன்மையைச் செய்திருக்கிறாய். பக்திமானான உன்னுடன் விவாதித்ததில், எனது வலிநிறைந்த சாபம் சரி செய்யப்பட்டது.
பழங்காலத்தில், சொர்க்கத்தில், ஒரு தெய்வீகத் தேரில் நான் பயணித்துக் கொண்டிருந்தபோது கர்வத்தில் களிப்படைந்து, எதையும் நினைக்காதிருந்தேன் {எவரையும் மதிக்கவில்லை}. பிரம்மமுனிவர்கள், தேவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள், மற்றும் அனைத்து பிற மூவுலகவாசிகளிடமும் நான் கப்பம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, எனது கண்ணால் எந்த உயிரினத்தைப் பார்த்து, எனது பார்வையை அதில் நிலைக்க வைத்தாலும், உடனே அதன் பலத்தை நான் அழிக்கிறேன். ஆயிரக்கணக்கான பிரம்ம முனிவர்கள் {பிரம்மரிஷிகள்} எனது தேரை இழுப்பது வழக்கமாக இருந்தது. கடமையாற்றாமையே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் எனது உயர்ந்த செழிப்பில் இருந்து விழுவதற்குக் காரணமாக இருந்தது. அவர்களில் {அந்த பிரம்மரிஷிகளில்} அகஸ்தியர் ஒரு நாள் எனது வாகனத்தை இழுத்துக் கொண்டிருந்தார். எனது பாதம் அவரது உடலைத் தொட்டது; கோபம் கொண்ட அகஸ்தியர், "அழிவு உன்னை ஆட்கொள்ளட்டும், நீ பாம்பாகப் போ" என்று என்னைச் சபித்தார். ஆகையால், எனது புகழை இழந்து, அந்த அற்புதமான தேரில் இருந்து நான் கீழே விழுந்தேன். அப்படி விழுந்து கொண்டிருக்கும்போது, நான் பாம்பாக மாறி தலைகீழே விழுவதைக் கண்டேன்.
"ஓ! வழிபடத்தகுந்தவரே {அகஸ்தியரே} இந்தச் சாபம் அணைக்கப்படட்டும். மயக்கத்தால் இப்படி மூடனாகிய ஒருவனை நீர் மன்னிப்பதே தகும்" என்று நான் அந்த அந்தணரிடம் {அகஸ்தியரிடம்} மன்றாடினேன். நான் (சொர்க்கத்தில் இருந்து) வீசி எறியப்பட்ட போது, அவர் என்னிடம் அன்பாக, "அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன் உன்னை இந்தச் சாபத்தில் இருந்து காப்பாற்றுவான். இந்தப் பயங்கரமான கர்வத்தின் பாவம் அப்போது உன்னால் அடைக்கப்படும். நீ முக்தியடைவாய்" என்றார். (அவரது) தவச் சக்தியைக் கண்டு அதிசயத்தால் தாக்கப்பட்டேன். எனவே, பரமாத்மா மற்றும் பிராமணர்களின் தன்மைகள் குறித்து உன்னிடம் கேள்வி கேட்டேன். உண்மை {சத்தியம்}, தானம், தன்னடக்கம், தவம், எவ்வுயிருக்கும் தீங்கிழையாமை {அஹிம்சை}, அறம் நிலைத்தல் ஆகியவையே, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, எப்போதும் ஒரு மனிதன் முக்தியடைவதற்கான வழிகள். குடும்பத் தொடர்புகளால் உண்டான குலத்தால் அதை {முக்தியை} அடைய முடியாது. உனது இந்தத் தம்பியான வலிமைமிக்கப் பீமசேனன் நல்ல அதிர்ஷ்டத்தைச் சந்திப்பான். மகிழ்ச்சியானது உன்னில் நிலைத்திருக்கட்டும். நான் மீண்டும் சொர்க்கம் செல்ல வேண்டும்" என்று பதிலுரைத்தான் {நகுஷன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்தார், "இப்படிச் சொன்ன அந்த மன்னன் நகுஷன், தனது பாம்புருவை விட்டு தெய்வீக உருவம் கொண்டு மீண்டும் சொர்க்கம் சென்றான். புகழ்மிக்கவனும், பக்திமானுமான யுதிஷ்டிரனும், தௌமியர் மற்றும் தனது தம்பி பீமனுடன் தனது ஆசிரமத்திற்குச் சென்றான். பிறகு, அறம் சார்ந்த யுதிஷ்டிரன் (அங்கே) கூடியிருந்த அந்தணர்களுக்கு அனைத்தையும் விரிவாக உரைத்தான். இதைக் கேட்ட அவனது மூன்று தம்பிமாரும் {அர்ஜுனன், நகுலன், சகாதேவனும்}, அனைத்து அந்தணர்களும், புகழ்பெற்ற திரௌபதியும் கூட வெட்கினார்கள். அற்புதமான அந்த அனைத்து அந்தணர்களும், பாண்டவர்களின் நன்மையை விரும்பி, பீமனை அவனது மடத்தனத்திற்காக நிந்தித்தனர். இது போன்ற செயல்களை மீண்டும் செய்யக்கூடாது என்று அவர்கள் அவனிடம் {பீமனிடம்} கூறினர். ஆபத்தைவிட்டு அகன்ற வலிமைமிக்கப் பீமனைக் கண்ட பாண்டவர்கள் மிகவும் திருப்தி கொண்டு, அங்கே தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்."
****************** தீர்த்தயாத்ரா பர்வம் முற்றிற்று ******************
*****************************************************************************
1. உண்மையான மொழியில் சொல்ல வேண்டுமானால் அது தேவர்களின் நிலை. வேதகாலத்துக்குப் பிந்தைய இந்துமதத்தின் சாதாரணத் தேவர்கள், பழங்காலத்து கிரேக்க, இத்தாலிய {ரோமானிய} தேவர்களைப் போல அசாதாரண மனித வர்க்கமாக, பரமாத்மா மற்றும் பரப்பிரம்மனுக்கு எதிர் வேறுபாடு கொண்டவர்களாக இருப்பதை இங்கே சரியாகக் குறிப்பிடலாம். மரணத்திற்குப் பிறகு, ஒரு அறம் சார்ந்த மனிதன், தேவர்களாக அழைக்கப்படுபவர்களில் ஒருவராக மாற்றப்பட வேண்டியவனாவான் என்கிறார் கங்குலி↩
2. இது, ஆன்மாக்களின் மறுபிறப்பு குறித்து நன்கு அறியப்பட்ட பிரபலமான கோட்பாடாகும் என்கிறார் கங்குலி ↩
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.