The | Vana Parva - Section 181 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம்)
துவைத வனத்தில் வெயில் காலம் போய், மழைக்காலம் வந்தது; அதைத் தொடர்ந்து இலையுதிர்க்காலத்தையும் பாண்டவர்கள் துவைத வனத்தில் மகிழ்ச்சியாகக் கழித்தது; பிறகு யுதிஷ்டிரனும் பாண்டவர்களும் துவைத வனத்திலிருந்து காம்யக வனத்திற்கு மீண்டும் சென்றது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அவர்கள் {பாண்டவர்கள்} அவ்விடத்தில் வசித்து வந்த போது, வெயில் காலம் முடிவுக்கு வந்து, அசையும் அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் மழைக்காலம் வந்தது. உருளும் ஒலியுடன் கூடிய கரு மேகங்கள், சொர்க்கத்தையும் {வானத்தையும்}, திசைப்புள்ளிகளையும் மறைத்தன. இடைவிடாத மழை பகலிலும் இரவிலும் பெய்தது. நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான இதுபோன்ற மேகங்கள், பார்ப்பதற்கு மழைக்காலத்து மண்டபங்களைப் போலக் காட்சியளித்தன. சூரியனின் பிரகாசம் பூமியில் இருந்த மறைந்தது; அதன் இடத்தைக் கறையற்றப் பிரகாசம் கொண்ட மின்னல் பிடித்துக் கொண்டது. அதிகமான புற்கள் வளர்ந்து, களிப்புக் கொண்ட காட்டு ஈக்களோடும் ஊர்வனவற்றோடும் சேர்ந்த பூமியானவள் மழையில் அமைதியாகக் குளித்த வண்ணம் அதிக மகிழ்ச்சியை அடைந்தாள். அனைத்தையும் நீர் மறைத்திருந்ததால், எது சம தரை, எது சமமற்ற தரை என்பது தெரியவில்லை; அங்கே இருந்த ஆறுகளோ, மரங்களோ அல்லது மலைகளோ தெரியவில்லை.
வெயில் காலத்தின் முடிவில், கிளர்ந்தெழும் நீருடன் இருந்த ஆறுகள், அந்தக் கானகத்திற்கு அழகு சேர்த்த வண்ணம் பெரும் சக்தியோடு ஓடியது பாம்புகளின் சீற்றத்தைப் போலக் கேட்டது. மழை பெய்து கொண்டிருந்த போது, பன்றிகள், மான்கள் மற்றும் பறவைகள் பல தரப்பட்ட ஒலிகளை வெளியிடத் தொடங்கின. அந்தச் சத்தம் அந்தக் கானகத்திற்குள் கேட்டுக் கொண்டே இருந்தது. சாதகப் பறவைகளும், மயில்களும், ஆண் குயில்களும், உற்சாகம் கொண்ட தவளைகளும் மழையில் ஆனந்தமாக ஓடி விளையாடின. மணற்பாங்கான இடங்களிலும், பாலை நிலங்களிலும் சுற்றித்திரிந்த பாண்டவர்களுக்கு அந்த மழைக்காலம் பலவிதமான தோற்றங்கள் கொண்ட மேகங்களின் முழக்கத்தோடு இனிதாகக் கடந்து சென்றது.
பிறகு, ஆண் வாத்துகளும் {ganders}, நாரைகளும் நிறைந்த மகிழ்ச்சி நிறைந்த இலையுதிர் காலம் {autumn} வந்தது. அக்கானகத்தின் நிலப்பரப்பு முழுவதும் புற்களால் நிறைந்திருந்தது; தெளிந்த நீர் கொண்ட ஆறுகள் அமைதியாக ஓடின; ஆகாயத்தில் விண்மீன்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன. விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அந்த இலையுதிர் காலம், பெருந்தன்மை கொண்ட பாண்டவர்களுக்கு மகிழ்ச்சியானதாகவும், இனிமையானதாகவும் இருந்தது. சரஸ்வதி நதியின் கரையில் அவர்கள் உலவிய போது, ஆகாயம் முழுவதும் நாரைகள் நிறைந்திருந்தன. நீராடும் புனிதமான நீர்நிலைகள் அனைத்தும் அவற்றால் {நாரைகளால்} நிறைந்திருந்தன. {இதைக்கண்ட} அவர்களின் {பாண்டவர்களின்} மகிழ்ச்சி பெரிதாக இருந்தது. வலிமைமிக்க விற்களைத் தாங்கிய அந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, குறிப்பாக, தெளிந்த நீருடன் முழுமையாக ஓடும் சரஸ்வதி நதியைக் கண்டு மகிழ்ந்தார்கள்.
ஓ! ஜனமேஜயா, இலையுதிர்காலத்தில், கார்த்திகை மாதத்தின் முழு நிலவுடன் கூடிய புனிதமான இரவொன்றை அங்கே வசிக்கும் போது {சரஸ்வதி நதியின் அருகில்} அவர்கள் {பாண்டவர்கள்} கழித்தார்கள். பிறகு பரதனின் வழித்தோன்றல்களான அந்தப் பாண்டு மகன்கள் {பாண்டவர்கள்}, ஒரு மங்களகரமான காலத்தை, தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்து, பெருமையும் நேர்மையும் மிக்கத் தவசிகளுடன் கழித்தனர். தேய்பிறைத் தொடங்கியவுடன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேரோட்டிகள் மற்றும் சமையற்கலைஞர்களுடன் கூடிய பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, காம்யகம் என்ற பெயர் கொண்ட கானகத்திற்குள் நுழைந்தனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.