Saturday, June 28, 2014

யுகமுடிவும் கல்கி அவதாரமும்! - வனபர்வம் பகுதி 189

The end of yuga and the Kalki avatar! | Vana Parva - Section 189 | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

கலிகாலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குத் தீர்க்கத்தரிசனமாகச் சொல்லல்; கலிகாலத்தின் முடிவில் வரும் கல்கி அவதாரம் குறித்து யுதிஷ்டிரனுக்கு மார்க்கண்டேயர் விளக்கியது...

வைசம்பாயனர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "குந்தியின் மகனான யுதிஷ்டிரன், பெருமுனிவரான மார்க்கண்டேயரிடம் எதிர்காலத்தில் வரப்போகும் பூமியின் அரசாங்கம் குறித்து மீண்டும் கேட்டான்.

யுதிஷ்டிரன், "ஓ! பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, ஓ! பிருகு குலத்தின் முனிவரே {மார்க்கண்டேயரே}, யுகத்தின் முடிவில் ஏற்படும் அனைத்தின் அழிவையும், மீள்பிறப்பையும் குறித்துக் கேட்டோம். உண்மையில் அவை அற்புதமாக இருந்தன. இருப்பினும், கலிகாலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்துக் கேட்க இன்னும் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். அறமும், அறநெறிகளும் நிலைகுலைந்த நேரத்தில், எதுதான் எஞ்சியிருக்கும்! அந்தக் காலத்தின் மனிதர்களின் பராக்கிரமம், உணவு மற்றும் அவர்களின் கேளிக்கைகள் {நடையுடைகள்} ஆகியன எவ்வாறு இருக்கும்? அந்த யுகத்தின் முடிவில், வாழ்வின் காலம்தான் எவ்வளவு? எந்த எல்லையை அடைந்த பிறகு, மீண்டும் புதிதாகக் கிருத காலம் தொடங்கும்? ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, இவையனைத்தையும் விவரமாகச் சொல்லும். இதுவரை நீர் சொன்னது அனைத்தும் வித்தியாசமாகவும் இனிமையாகவும் இருந்தன" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

இப்படிச்சொல்லப்பட்ட முனிவர்களில் முதன்மையானவர் {மார்க்கண்டேயர்}, விருஷ்ணி குலத்தின் புலிக்கும் {கிருஷ்ணனுக்கும்}, பாண்டுவின் மகன்களுக்கும் ஆனந்தம் உண்டாகும்படி தனது சொற்பொழிவை மீண்டும் தொடங்கினார். மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, என்னால் கேட்கப்பட்ட, காணப்பட்ட அனைத்தையும் சொல்கிறேன் கேள். ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களுக்குத் தேவனின் அருளால் நான் அறிந்ததைச் சொல்கிறேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, கிருதகாலத்தில் அனைத்தும், ஏமாற்று, சதி, தீமை, பேராசை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு இருந்தன. அறநெறி என்பது  முழுதாக நாலு கால் கொண்ட காளையைப் போல மனிதர்களிடையே இருந்தது. திரேதா காலத்தில், பாவம் ஒரு காலை எடுத்துவிட்டது, அறநெறி மூன்று கால்களைக் கொண்டிருந்தது. துவாபர யுகத்தில், பாவமும், அறநெறியும் பாதிப் பாதியாகக் கலந்திருக்கிறது; அதனால் அறநெறி என்பது இரண்டு கால்களே கொண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. இருண்ட காலத்தில் (கலி காலத்தில்), ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அறநெறியென்பது மூன்று பங்கு பாவத்துடன் கலந்து, மனிதர்களுக்கு அருகில் வாழ்கிறது. ஓ! யுதிஷ்டிரா, மனிதர்களின் வாழ்வின் காலமும், சக்தியும், புத்திக்கூர்மையும், உடல் பலமும் ஒவ்வொரு யுகமும் குறையும் என்பதை அறிந்து கொள்வாயாக.

ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் அறத்தையும், அறநெறிகளையும் ஏமாற்றுகரமாகப் பயில்வார்கள். பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் அறம் என்ற வலையைப்பின்னி தங்கள் சகாக்களை ஏமாற்றுவார்கள். கற்றலில் {கல்வியில்} பொய்ப்புகழ் கொண்ட மனிதர்கள், தங்கள் செயல்கள் மூலமாக உண்மையை {சத்தியத்தை} குறுக்கி மறைத்து வைக்க ஏற்பாடு செய்வார்கள். வாழ்நாள் குறைவதன் தொடர்ச்சியாக, அவர்களால் பெரிதாக ஞானத்தை அடைய இயலாது. புத்தி குறைவின் தொடர்ச்சியாக அவர்களுக்கு ஞானம் இருக்காது. இதனால் பொருளாசையும் பேராசையும் அவர்கள் அனைவரையும் மூழ்கடிக்கும். பேராசை, கோபம், அறியாமை, காமம் ஆகியவை கொண்ட மனிதர்கள், ஒருவர் இன்னொருவரின் உயிரை எடுக்க விரும்பி ஒருவருக்கொருவர் பகைமை பாரட்டுவார்கள். அறங்கள் குறுகி, தவத்தையும், உண்மையையும் கைவிடும் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களுக்குச் சமானமாகக் குறைக்கப்படுவார்கள். தாழ்ந்த வகை மனிதர்கள் அனைவரும், இடைநிலை மனிதர்களின் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள். இடைநிலை மனிதர்கள் அனைவரும் நிச்சயமாகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஓ! யுதிஷ்டிரா, யுகத்தின் முடிவில் உலகத்தில் நிலை இவ்வாறே இருக்கும்.

{கலி}யுக முடிவு காலத்தில், ஆடைகளில் மிகச் சிறந்தவையாகச் சணல் மற்றும் நாரால் நெய்யப்பட்ட கோணிகளால் (கோரதூஷகங்கள் = Paspalum frumentacea = Kora-dushakas} ஆன ஆடைகள் கருதப்படும். அந்தக் {கலி} காலத்தின் மனிதர்கள் தங்கள் மனைவியரை தங்கள் (ஒரே} நண்பராகக் கருதுவார்கள். பசுக்கள் இல்லாததால் மனிதர்கள் மீன்களையும், வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளின் பாலையும் உண்டு வாழ்வார்கள். அந்தக் காலத்தில் நோன்பு நோற்பவர்கள் கூடப் பேராசை கொண்டவர்களாக இருப்பார்கள். மனிதர்கள் ஒருவரை ஒருவர் எதிர்ப்பார்கள். ஒருவர் மற்றவரின் உயிரை எப்போதும் பறிப்பதற்காகக் காத்திருப்பார்கள். {அந்த} யுகத்தால் தள்ளப்பட்ட மனிதர்கள் நாத்திகர்களாகவும், திருடர்களாகவும் இருப்பார்கள். அக்காலத்தில், ஓடைகளின் கரைகளைக் கூடத் தங்கள் மண்வெட்டிகளால் தோண்டி, அதில் தானியங்களை விதைப்பார்கள். அந்த இடம் கூட அவர்களுக்கு அந்தக்காலத்தில் தரிசாகத்தான் இருக்கும். இறப்பவர்ளுக்கு {மனிதர்களுக்குத்} தேவர்களுக்கும் சடங்குகள் செய்வதில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்கள் கூடப் பேராசை கொண்டவர்களாகவும், அடுத்தவர்களின் உடைமைகளை அனுபவிப்பவர்களாகவும் இருப்பார்கள். தந்தை மகனுக்கு உரியதை அனுபவிப்பான், மகன் தந்தையின் உடைமைகளை அனுபவிப்பான். அக்காலத்தில் சாத்திரங்களால் விலக்கப்பட்ட இன்பங்களைக் கூட மனிதர்கள் அனுபவிப்பார்கள்.

அந்தணர்கள் வேதங்களை மரியாதைகுறைவாகப் பேசி, நோன்புகளை நோற்காமல், வீண் தர்க்கத்திற்கு அடிமையாகி, வேள்விகளையோ ஹோமங்களையோ செய்யாதிருப்பார்கள். யுக்திவாதங்களான போலி அறிவியலால் ஏமாற்றப்பட்டு, தாழ்ந்த குறுகிய அனைத்திலும் தங்கள் இதயத்தை நிலைக்கச் செய்வார்கள். பயிரிடுவதற்குத்தகாத தாழ்ந்த நிலங்களை {களர்நிலங்களை} உழுது, ஒரு வயது கொண்ட கன்றுகளையும் மாடுகளையும், கலப்பையை இழுக்கவும், சுமைகள் சுமக்கவும் பயன்படுத்துவார்கள். மகன்கள் தங்கள் தந்தைகளைக் கொல்வார்கள்; தந்தைகள் தங்கள் மகன்களைக் கொன்று எந்த மானக்கேடும் அடையாமல் இருப்பார்கள். இத்தகு செயல்கள் செய்து, துயரங்களில் இருந்து தங்களைக் காத்துக் கொண்டு, அதைப் {அச்செயலை} புகழவும் செய்வார்கள். முழு உலகமும் மிலேச்ச வகை நடத்தைகள், கருத்துகள், விழாக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வேள்விகள் நின்று போகும், மகிழ்ச்சி எங்குமிருக்காது. பொதுமகிழ்ச்சி என்பது மறைந்தே போகும். ஆதரவற்றவர்கள், நண்பர்களற்றவர்கள் ஆகியோரிடம் இருந்து அவர்களது உடைமைகளையும் அறிவையும் மனிதர்கள் திருடுவார்கள்.

குறைந்த சக்தியும் பலமும் கொண்டு, ஞானமற்று, பேராசையும், முட்டாள்த்தனமும் கொண்டு, பாவச் செயல்கள் செய்யும் மனிதர்கள், அலட்சியமான வார்த்தைகளைச் சொல்லி, தீயவர்கள் கொடுக்கும் பரிசுகளைப் பெற்றுக் கொள்வார்கள். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, பூமியின் மன்னர்களின் இதயம் ஞானமற்றுப் பாவத்திலேயே லயித்திருக்கும், அவர்கள் தங்கள் ஞானம் குறித்துக் கர்வமாகப் பேசி, ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி சவால் விடுப்பார்கள். அந்தக் காலத்தின் முடிவில் க்ஷத்திரியர்களும் பூமியின் முட்களாவார்கள். பேராசை கொண்டு, கர்வம் பெருகி, தீமை செய்து, (தங்கள் குடிகளைக்) காக்க விரும்பாமல், தண்டனை கொடுப்பதில் மட்டும் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். நல்லவர்கள், நேர்மையானவர்கள் ஆகியோர், துயரத்தால் அழுதாலும், அவர்களிடம் இரக்கம் காட்டாமல் தொடர்ச்சியாகத் தாக்கும் க்ஷத்திரியர்கள், அவர்களது மனைவியரையும், செல்வத்தையும் கொள்ளையடிப்பார்கள். எவனும் எந்தப் பெண்ணையும் (திருமணத்திற்காக) கேட்கமாட்டான். எவனும் எந்தப் பெண்ணை (திருமணத்திற்காக) கொடுக்கவும் மாட்டான். ஆனால் பெண்கள், யுகத்தின் முடிவு வரும்போது, தாங்களாகவே தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

அறியாமையில் மூழ்கிய ஆன்மாக் கொண்ட புவியின் மன்னர்கள், தாங்கள் கொண்டிருப்பதில் அதிருப்தி கொண்டு, அது போன்ற நேரத்தில் {கலிகாலத்தில்}, தங்கள் பலத்தைப் பிரயோகித்து எல்லா வழிகளிலும் குடிமக்களிடம் இருந்து திருடுவார்கள். சந்தேகமற முழு உலகமும் மிலேச்சமயமாகும். யுக முடிவின் போது, வலக்கை இடதையும், இடம் வலத்தையும் ஏமாற்றும். போலிப் புகழ் கொண்ட கல்வியாளர்கள் உண்மையைச் சுருக்குவார்கள். முதியவர்கள் புத்தியற்ற இளைஞர்களையும், இளைஞர்கள் மனத்தளர்ச்சி கொண்ட முதியவர்களையும் வஞ்சிப்பார்கள். கோழை, வீரன் என்ற போலிப்புகழ் பெற்றிருப்பான். வீரர்கள், கோழைகளைப் போல உற்சாகமற்று இருப்பார்கள். யுக முடிவின் போது, மனிதர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கையற்று இருப்பார்கள். பேராசையும், முட்டாள்தனமும் உலகம் முழுவதும் இருக்கும். அனைவரும் ஒரே வகை உணவை உண்பார்கள். பாவம் வளர்ந்து செழிப்படையும், அதே வேளையில் அறம் மங்கி, பிரகாசம் இழக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோர் தங்கள் வகைக்கு யாரையும் மிச்சம் வைக்காமல் மறைந்து போவார்கள். யுக முடிவின் போது, மனிதர்கள் அனைவரும், எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே வகையின் உறுப்பினர்களாவார்கள். தந்தைகள் மகன்களை மன்னிக்க மாட்டார்கள், பிள்ளைகள் தந்தைகளை மன்னிக்க மாட்டார்கள். முடிவு நெருங்கும்போது, மனைவியர் தங்கள் கணவர்களுக்காகக் காத்திருந்து சேவை செய்ய மாட்டார்கள்.

மேலும், இது போன்ற ஒரு நேரத்தில், மனிதர்கள், கோதுமை மற்றும் யவை {பார்லி} ஆகியவற்றை முதன்மையான உணவாகக் கொண்டிருக்கும் நாடுகளைத் தேடிச் செல்வார்கள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஆண்களும் பெண்களும், தங்கள் நடத்தைகளில் சுதந்திரமானவர்களாக இருந்து, அடுத்தவர் குறையைப் பொறுக்க முடியாதவர்களாக இருப்பார்கள். ஓ யுதிஷ்டிரா, இப்படி முழு உலகமும் மிலேச்சமயமாகும். மனிதர்கள் ஸ்ரார்த்தக் கொடை கொடுத்துத் தேவர்களைத் திருப்தி செய்வதை நிறுத்திவிடுவார்கள். எவரும் யாருடைய வார்த்தைகளையும் கேட்கமாட்டார்கள். ஒருவரும் மற்றவரால் குருவாகக் கருதப்பட மாட்டார்கள். ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, உலகம் முழுவதையும் அறிவிலித்தனம் எனும் இருள் மூழ்கடிக்கும். மனிதர்களின் வாழ்நாள் பதினாறு வருடங்களால் அளக்கப்படும், அந்த வயதை அடையும்போது இறப்பு அவர்களுக்கு ஏற்படும். ஐந்து அல்லது ஆறு வயதுடைய சிறுமிகள் பிள்ளைகளைப் பெறுவார்கள். ஏழு அல்லது எட்டு வயதுடைய சிறுவர்கள் தந்தைகளாவார்கள். ஓ! மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, யுக முடிவின் போது மனைவியானவள் கணவனிடமோ, கணவன் மனைவியிடமோ திருப்தியடைய மாட்டார்கள்.

மனிதர்களுக்கு உடைமைகள் குறைவாகவே இருக்கும், மனிதர்கள் போலியாக மதக்குறிகளைத் தாங்கி நிற்பார்கள். பொறாமையும், தீய குணமும் உலகம் முழுதும் நிறைந்திருக்கும். யாரும் யாருக்கும் (செல்வத்தையோ அல்லது வேறு எதையுமோ) தானம் செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். உலகத்தில் குடியேற்றும் இல்லாத பகுதிகள் {மக்கள் தொகை குறைந்த பகுதிகள்} பற்றாக்குறை மற்றும் பஞ்சத்தால் துன்புறும். நெடுஞ்சாலைகள் அனைத்தும், காமம் நிறைந்த தீய குணம் கொண்ட ஆண்களாலும், பெண்களாலும் நிறைந்திருக்கும். அது போன்ற நேரத்தில், பெண்கள் தங்கள் கணவர்கள் மீது வெறுப்பைக் காட்டி மகிழ்வார்கள். யுக முடிவு வரும்போது, சந்தேகமற மனிதர்கள் அனைவரும் மிலேச்ச முறையைக் கைக்கொண்டு, அவர்களிடம் இருந்து வேறுபாடு இல்லாமல் அனைத்தையும் உண்பவர்களாகி, தங்கள் செயல்கள் அனைத்திலும் கடுமையாக இருப்பார்கள். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா} பேராசையால் உந்தப்பட்ட மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி விற்கவும், வாங்கவும் {கொள்முதல் செய்தலையும்} செய்வார்கள். கட்டளைகளை {ஆசாரம்} அறியாத மனிதர்கள், சடங்குகளையும், விழாக்களையும் நடத்துவார்கள். யுக முடிவு நெருங்கும்போது நிச்சயம் மனிதர்கள் மேற்கண்டவாறே நடப்பார்கள்.

யுக முடிவு வரும்போது, தங்கள் தேவைகளால் உந்தப்பட்ட மனிதர்கள், கடுஞ்செயல் புரிந்து, ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசுவார்கள். மனிதர்கள் ஈவிரக்கம் இல்லாமல் மரங்களையும் தோப்புகளையும் அழிப்பார்கள். வாழ்வு குறித்த கவலையில் மூழ்கியபடியே மனிதர்கள் இருப்பார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பேராசையில் மூழ்கும் மனிதர்கள் அந்தணர்களைக் கொல்வார்கள். அதன்பிறகு, தங்களுக்குப் பொருத்தமான அவர்களது {அந்தணர்களின்} உடைமைகளை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். சூத்திரர்களால் ஒடுக்கப்படும் மறுபிறப்பாளர்கள், அச்சத்தால் துயருற்று, "ஓ", "அய்யோ" என்று கதறியபடி, பாதுகாக்க யாருமின்றி உலகத்தில் திரிவார்கள். யுக முடிவு வரும்போது, மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொல்லத் தொடங்கி, தீயவர்களாகவும், கடுமையானவர்களாகவும் ஆகி, விலங்கு வாழ்வு வாழ்வார்கள்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்கள் கூட, கள்வர்களால் துன்புற்று, காக்கைகளைப் போலப் பயத்தால் வேகமாகப் பறந்து, நதிகளிலும், மலைகளிலும், அடையமுடியாத கடினமான பகுதிகளிலும் தஞ்சமடைவார்கள். தீய ஆட்சியாளர்களால் கடுமையான வரிச்சுமைக்கு எப்போதும் உட்படுத்தப்படும் மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்கள், ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தப் பயங்கரமான நேரங்களில், அனைத்து பொறுமையையும் இழந்து, தகாத செயல்கள் புரிந்து, சூத்திரர்களின் சேவகர்கள் ஆவார்கள். சூத்திரர்கள் சாத்திரங்களை விளக்குவார்கள், அந்தணர்கள் அவர்களுக்காகக் காத்திருந்து அதைக் கேட்பார்கள். அது போன்ற விளக்கவுரைகளைக் கேட்டு, அவற்றைத் தங்கள் வழிகாட்டிகளாக எண்ணி, தங்கள் கடமைக்கான வழிகளை நிர்ணயிப்பார்கள். தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்களாவார்கள், அனைத்துப் பொருட்களின் வழிகளும் முரண்பாடாகவே இருக்கும். தேவர்களைக் கைவிடும் {துறந்த} மனிதர்கள், எலும்புகளையும், சுவரில் பதிக்கப்பட்ட பிற பீடங்களையும் வணங்குவார்கள். யுக முடிவின் போது, சூத்திரர்கள், பிராமணர்களுக்காகக் காத்திருந்து சேவை செய்வதை நிறுத்துவார்கள். பெரு முனிவர்களின் ஆசிரமங்கள், அந்தணர்களின் கல்விக்கூடங்கள், தேவர்களுக்குப் புனிதமான இடங்கள், வேள்வி மண்டபங்கள், புனிதமான குளங்கள் மற்றும் பூமி ஆகியவற்றை மறைத்து கல்லறைகளும், எலும்புகள் கொண்ட நினைவுச்சின்னங்களும், சிதைவடைந்த தூண்களுமே இருக்கும். தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள் எதுவும் அங்கே இருக்காது. இவை அனைத்தும் யுகமுடிவின் போது நடைபெறும், இவை அனைத்தும் யுக முடிவின் குறீயீடுகள் என்பதை அறிந்து கொள்வாயாக.

{கலி} யுக முடிவு வரும்போது, கடுமையாகும் மனிதர்கள், அறத்தை இழந்து, அனைத்தையும் உண்ணும் ஊனுண்ணிகளாகி {புலால் உண்பவர்களாகி}, போதைதரும் பானங்களுக்கு அடிமையாவார்கள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மலருக்குள் மலரும், கனிக்குள் கனியும் உண்டாகும் அப்போது யுகம் ஒரு முடிவுக்கு வரும். யுக முடிவு நெருங்கும்போது, காலமற்ற காலத்தில் மேகங்கள் மழையைப் பொழியும். அந்நேரத்தில், மனிதர்களின் விழாச் சடங்குகள் சரியான உரிய வரிசையில் நடக்காது. சூத்திரர்கள் பிராமணர்களுடன் மோதுவார்கள். உலகம் முழுவதும் மிலேச்சர்கள் நிறைந்ததாகும். வரிச்சுமையின் காரணமாக அந்தணர்கள் பயத்தில் அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடுவார்கள். மனிதர்களுக்குள் இருந்த வேற்றுமைகள் அனைத்தும் மறைந்து அவர்கள் நடத்தைகள் அனைத்தும் ஒன்றாகும். கௌரவப் பணிகள் மற்றும் அலுவல்களால் துன்புற்ற மனிதர்கள், வனம் நிறைந்த பகுதிகளுக்குப் பின்வாங்கி, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு வாழ்வார்கள். இப்படிப் பாதிப்படைந்த உலகத்தில், நடத்தையில் நேர்மையற்ற காட்சிகள் எங்கும் காணப்படும். சீடர்கள் குருவின் அறிவுரைகளை இல்லாமல் செய்து {ஏற்காமல்}, அவர்களை {குருக்களை} காயப்படுத்தக்கூட முயல்வார்கள். வறிய நிலையிலுள்ள குருக்களை மனிதர்கள் அவமதிப்பார்கள். நண்பர்கள், உறவினர்கள், சம்பந்திகள் ஆகியோர், ஒரு மனிதன் சேகரித்த செல்வத்துக்காக அவனிடம் நட்புடன் இருப்பார்கள்.

யுக முடிவு வரும்போது, அனைவரும் தேவையில் இருப்பார்கள். தொடுவானத்தின் அனைத்துப் புள்ளிகளும் சுடர்விட்டபடி இருக்கும். நட்சத்திரங்களும், நட்சத்திரக்கூட்டங்களும் ஒளியற்றே இருக்கும். கோள்களும் கோள் சேர்க்கைகளும் அமங்களமாக இருக்கும். காற்றின் பாதைகள் குழப்பமுற்று கலங்கிப் போகும், தீமையை முன் குறித்தபடி எண்ணிலடங்கா எரிகற்கள் வானத்தில் ஒளிர்ந்தபடி செல்லும். சூரியன், அதே வகைக் கொண்ட மேலும் ஆறு சூரியன்களுடன் தோன்றும். சுற்றிலும் முழக்கங்களும், நெருப்பும் ஏற்படும். சூரியன் எழும் மணியிலிருந்து மறைவது வரை ராகுவால் மறைக்கப்பட்டிருப்பான். ஆயிரம் கண் கொண்ட தெய்வம் {இந்திரன்}, காலமற்ற காலத்தில் மழையைப் பொழிவான். யுக முடிவு வரும்போது, பயிர்கள் அபரிமிதமாக வளராது. பெண்கள் எப்போதும் கூர்மையான பேச்சு கொண்டவர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும், அழுவதில் விருப்பமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் கணவர்களின் கட்டளைகளைப் பின்பற்றவே மாட்டார்கள்.

யுக முடிவு வரும்போது, மகன்கள் தந்தைகளையும், தாய்களையும் கொல்வார்கள். பெண்கள் கட்டுபாடற்றவர்களாகி, தங்கள் கணவர்களையும், மகன்களையும் கொல்வார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, யுக முடிவு வரும்போது, ராகு சூரியனை காலமற்ற காலத்தில் விழுங்குவான். அனைத்துப் புறங்களிலும் நெருப்புகள் சுடர்விட்டு எரியும். பயணிகளுக்கு, அவர்கள் கேட்டாலும் உணவும், குடிநீரும், உறைவிடமும் கிடைக்காததால், தங்கள் தேவைகளால் உந்தப்பட்டு வழியில் படுத்துக் கிடப்பார்கள். யுக முடிவு வரும்போது, காகங்கள், பாம்புகள், கழுகுகள், ராஜாளிகளும் பிற விலங்குகளும் பறவைகளும் முரண்பட்ட பயங்கராமன ஒலியெழுப்பும். யுக முடிவு வரும்போது, மனிதர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பணியாட்களைக் கைவிட்டுத் துறப்பார்கள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, யுகத்தின் முடிவு வரும்போது, மனிதர்கள், தாங்கள் தொழில் செய்யும் நாடுகள், திசைகள், நகரங்களை விட்டு, புதியவற்றை {புதிய நாடு, திசை, நகரம் ஆகியவற்றை} ஒன்றன் பின் ஒன்றாக அடைவார்கள். மனிதர்கள் "ஓ பிதாவே" {தந்தையே}, "ஓ சுதனே" {மகனே} என்று உச்சரித்தவாறு உலகமெங்கும் திரிந்து, அதே போன்ற இன்னும் பல பயங்கரமான அலறல்களை ஒலிப்பார்கள்.

அந்தப் பயங்கராமன காலங்கள் முடிந்த பிறகு, புதிய படைப்புகள் தொடங்கும். மனிதர்கள் மீண்டும் படைக்கப்பட்டுப் பிராமணர்களில் தொடங்கும் நால்வகையாகப் பிரிவார்கள். அந்நேரத்தில், மனிதர்கள் அதிகரிக்கவும், மகிழ்ச்சிக்குத்தக்க முன்ஜாக்கிரதையோடு, மீண்டும் அனுகூலம் பெற்றவர்களாவார்கள். சூரியன், சந்திரன், பிருஹஸ்பதி {குரு = வியாழன் = jupiter} ஆகியவை ஒரே ராசிக்குள் {கடக ராசிக்குள்} புகுந்து பூச நட்சத்திரத்தில் {எட்டாவது நட்சத்திரத்தில்} ஒன்றாக இருக்கும்போது கிருத காலம் தொடங்கும். காலத்துக்குகந்த மழை பொழிய மேகங்கள் கூடும். நட்சத்திரங்களும், நட்சத்திரக்கூட்டங்களும் மங்களகரமான நிலையை அடையும். கோள்களும், தங்கள் சுற்றுப்பாதையில் முறையாகச் சுழன்று, மிகவும் மங்களகரமாக நிலையை அடையும். சுற்றிலும் செழுமையும், அபரிமிதமான ஆரோக்கியமும் அமைதியும் இருக்கும். பிறகு, நியமிக்கப்பட்ட நேரத்தில் கல்கி என்ற பெயர் படைத்த அந்தணர் பிறப்பார். அவர் விஷ்ணுவைப் புகழ்ந்தபடி, பெரும் சக்தியும், புத்திக்கூர்மையும், பெரும் பராக்கிரமும் கொண்டவராக இருப்பார். அவர் ஒரு மங்களகரமான அந்தணக் குடும்பத்தில் சம்பலம் என்ற கிராமத்தில் பிறப்பார். வாகனங்கள், ஆயுதங்கள், வீரர்கள், தளவாடங்கள், பாதுகாப்புக் கவசங்கள் போன்றவை அவர் நினைக்கும்போது அவருக்குக் கிடைக்கும். அவர் {கல்கி} மன்னர்களுக்கெல்லாம் மன்னராகி, அறத்தின் பலத்தால் எப்போதும் வெற்றி பெறுபவராக இருப்பார். அவர் மீண்டும் வகைகளை {வர்ணங்களை} மீட்டு, உயிரினங்கள் நிறைந்த, போக்கில் முரண்பாடு கொண்ட பூமியில் அமைதியை ஏற்படுத்துவார். பெரும் அறிவாற்றல் கொண்ட அந்தப் பிரகாசமிக்க அந்தணர் {கல்கி} தோன்றியதும், அனைத்தையும் அழிப்பார். அவரே அனைத்தையும் அழிப்பவராகவும், புதிய யுகத்தைத் தொடங்கி வைப்பவராகவும் இருப்பார். பிராமணர்கள் சூழ இருக்கும் அந்த அந்தணர் {கல்கி}, தாழ்ந்த இழிவான மனிதர்கள் எங்கெல்லாம் தஞ்சமடைந்திருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று அந்த மிலேச்சர்கள் அனைவரையும் அடியோடு அழிப்பார். 

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top