I am Narayana! | Vana Parva - Section 188 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
சிறுவனாக இருந்த நாராயணன் தன்னைக் குறித்துச் சொல்லி மறைந்து போதல்; மார்க்கண்டேயர் அந்த நாராயணன் கிருஷ்ணனே என்று பாண்டவர்களுக்குச் சொல்லி, அவரிடம் புகலிடம் கோரச் சொல்லல்; கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல்...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிறகு அந்தத் தெய்வம், "ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, உண்மையில் தேவர்களும் என்னை அறிய மாட்டார்கள். இருப்பினும், நான் உம்மிடம் திருப்தி கொண்டிருப்பதால், இப்அண்டத்தை எப்படி உருவாக்கினேன் என்பதை உமக்குச் சொல்கிறேன்! ஓ! மறுபிறப்பாள முனிவரே {பிராமண முனிவரே மார்க்கண்டேயரே}, நீர் உமது மூதாதையர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து கொண்டு, எனது பாதுகாப்பையும் கோரினீர் {என்னைச் சரணடைந்தீர்}. நீர் என்னை உமது கண்களால் கண்டிருக்கிறீர்! உமது ஆன்மத் தகுதியும் அதிகமானதே! பழங்காலத்தில் நீர் என்பது நாரம் என்று அழைக்கப்பட்டது. நீரே எனது வசிப்பிடமாக {அயணமாக} இருப்பதால், நான் நாராயணன் (நீரை வசிப்பிடமாகக் கொண்டவன்) என்று அழைக்கப்படுகிறேன்.
ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {மார்க்கண்டேயரே} அனைத்துக்கும் மூலமாக, நித்தியமானவனாக, மாறாதவனாக இருக்கும் நானே நாராயணன். நானே அனைத்தையும் படைக்கிறேன்; நானே அனைத்தையும் அழிக்கிறேன். நானே விஷ்ணு, நானே பிரம்மன், நானே தேவர்கள் தலைவனான சக்ரன் {இந்திரன்}, நானே மன்னன் வைஸ்ரவணன், நானே இறந்த ஆவிகளின் தலைவனான யமன். நானே சிவன், நானே சோமன், நானே படைக்கப்பட்டவற்றுக்குத் தலைவனான காசியபர். மேலும், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, நானே தத்ரியும் விதத்ரியுமாவேன்; நானே உருவம் கொண்ட வேள்வியுமாவேன். நெருப்பே எனது வாய், பூமி எனது பாதம், சூரியனும் சந்திரனும் எனது கண்கள்; சொர்க்கம் எனது தலையில் இருக்கும் கிரீடம், ஆகாயமும், திசைப் புள்ளிகளும் எனது காதுகள்; எனது வேர்வையில் இருந்தே நீர் பிறக்கிறது. திசைப் புள்ளிகளுக்கு மத்தியில் இருப்பதே எனது உடல்; காற்றே எனது மனமாகும்.
நான் அபரிமிதமான பரிசுகள் கொடுத்து பல நூற்றுக்கணக்கான வேள்விகளைச் செய்திருக்கிறேன். நான் தேவர்களின் வேள்விகளில் எப்போதும் இருக்கிறேன்; வேதங்களை அறிந்து வேள்வியை நடத்துபவர்கள் எனக்குக் காணிக்கைகளைக் கொடுக்கின்றனர். இப்பூமியில் மனிதர்களை ஆளும் க்ஷத்திரியத் தலைவர்கள், சொர்க்கமடைய விரும்பி வேள்விகளைச் செய்கின்றனர். அதே மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளை அடைவதற்கு விரும்பியே வைசியர்களும் தங்கள் வேள்விகளைச் செய்கின்றனர். அனைவரும் அது போன்ற நேரங்களில் சடங்குகளுடன் என்னை வழிபடுகின்றனர். சேஷனின் உருவத்தைக் கொண்டு நான்கு கடல்களையும், மேருவையும், மந்தரத்தையும் கொண்ட பூமியை (எனது தலையில்) நானே தாங்குகிறேன்.
ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே, மார்க்கண்டேயரே}, பன்றி உரு கொண்டு, நீரில் மூழ்கிய பூமியை பழங்காலத்தில் உயர்த்தியவன் நானே. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, குதிரையின் வாயில் வரும் நெருப்பாக {வடவாமுகாக்னி} மாறி, நீரை {கடலை} குடித்து, மீண்டும் அவற்றை உருவாக்குவது நானே. என் சக்தியின் தொடர்ச்சியாக, எனது வாய், கரங்கள், தொடைகள், பாதங்கள் ஆகியவற்றில் இருந்து பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் படிப்படியாகத் தோன்றினார்கள். என்னிடமிருந்தே ரிக், சாமம், யஜூர், அதர்வன வேதங்கள் எழுந்தன. நேரம் வரும் போது இவை அனைத்தும் என்னுள்ளேயே நுழைகின்றன. தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் அந்தணர்களும், அமைதியையே உயர்ந்த பண்பாக மதிப்பவர்களும், தங்கள் ஆன்மாக்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், ஞானத்தை விரும்புபவர்களும், காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, புவிசார்ந்த பொருட்களைத் துறந்தவர்களும், தங்கள் பாவங்களை முழுமையாகக் கழுவிக் கொண்டவர்களும், கனிவும் நல்லொழுக்கமும் கொண்டு கர்வம் அகன்றவர்களும், ஆன்மா குறித்த முழு அறிவு கொண்டவர்களும் ஆழ்ந்த தியானத்துடன் என்னையே வழிபடுகிறார்கள்.
சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும் நெருப்பு {பிரளய கால நெருப்பு} நானே, அப்பெயரில் {சம்வர்த்தகம் என்ற பெயரில்} அழைக்கப்படும் காற்றும் நானே, அப்பட்டத்தைச் சூட்டியிருக்கும் {சம்வர்த்தகம் என்ற பட்டத்தைச் சூட்டியிருக்கும்} சூரியனும் நானே, அந்தப் பதவியைக் {சம்வர்த்தகம் என்ற பதவியைக்} கொண்ட நெருப்பும் நானே. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரங்கள் அனைத்தும் எனது தோலில் உள்ள துளைகள் {நுண்துளைகள்} என்பதை அறிவீராக. ரத்தினங்களின் சுரங்கங்களான கடலும், நான்கு திசைப்புள்ளிகளும், ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, எனது உடையும், படுக்கையும், இல்லமும் ஆகும் என்பதை அறிவீராக. தேவர்களின் காரியங்களுக்குச் சேவை செய்யவே அவை என்னால் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, காமம், கோபம், மகிழ்ச்சி, அச்சம், புத்திமயக்கம் {மோகம்} ஆகியனவும் என்னுடைய பல உருவங்களே என்பதை அறிவீராக.
ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, உண்மை, தானம், கடுந்தவம், அமைதி, எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமை {அஹிம்சை} ஆகியவற்றைப் பயில்வதால் மனிதர்கள் அடையும் எதுவும், அது போன்ற நற்காரியங்களும், எனது ஏற்பாட்டாலேயே அடையப்படுகின்றன. என் கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு, என் உடலுக்குள் திரியும் மனிதர்களின் உணர்வுகள் என்னால் அதிகப்படுத்தப்படுகின்றன. அவர்கள் தங்கள் விருப்பப்படி திரிவதில்லை, மாறாக என்னாலே அவர்கள் திரிய வைக்கப்படுகின்றனர். வேதங்கள் முழுமையும் கற்ற ஆன்ம அமைதி கொண்ட மறுபிறப்பாள அந்தணர்கள், தங்கள் கோபத்தை அடக்கி, பல்வேறுபட்ட வேள்விகளின் மூலம் உயர்ந்த வெகுமதியை அடைந்திருக்கின்றனர். இருப்பினும் அவ்வெகுமதியானது, பேராசை, குறுகிய மனம், அருளற்ற அசுத்தமான ஆன்மாக்கள் ஆகியற்றால் பீடிக்கப்பட்ட மதிப்பற்றவர்களாலும், தீச்செயல் செய்யும் மனிதர்களாலும் அடையமுடியாததாகும். எனவே, ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, ஆன்மாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பவர்களால் இவ்வெகுமதி அடையப்படும். மூடர்களாலும் அறியாமை கொண்டவர்களாலும் தவத்தால் மட்டுமே அடையக்கூடிய உயர்ந்த தகுதியின் கனியான அதை {அவ்வெகுமதியை} அடைய முடியாது.
ஓ! மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, அறமும், அறநெறிகளும் குறைந்து, பாவங்களும், ஒழுக்கமின்மையும் {அறநெறிமீறலும்} அதிகரிக்கும் நேரத்தில், நான் என்னைப் புதிய உருவங்களில் படைத்துக் கொள்கிறேன். ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, தேவர்களில் முதன்மையானவர்களாலும் கொல்லப்பட முடியாத தீங்கிழைக்கும் கடுமையானவர்களுமான தைத்தியர்களும் ராட்சசர்களும் பூமியில் பிறக்கும்போது, தீமைகளை அகற்றி, அமைதியை மீட்க நான் அறம்சார்ந்த மனிதர்களின் குடும்பங்களில் மனித உரு கொண்டு பிறக்கிறேன். என் மாயையால், நான் தேவர்களையும், மனிதர்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும், அனைத்து அசையாதவைகளையும் படைத்து, பிறகு அவை அனைத்தையும் (நேரம் வரும்போது) அழிக்கிறேன். அறம் மற்றும் நன்னெறிகளைக் காக்க நான் மனித உருவம் கொள்கிறேன். செயலுக்கான காலம் வரும்போது, மீண்டும் நான் கற்பனைக்கெட்டாத வடிவங்களை எடுக்கிறேன்.
கிருத யுகத்தில் நான் வெண்மையாகவும், திரேதா யுகத்தில் மஞ்சளாகவும், துவாபர யுகத்தில் சிவப்பாகவும், கலி யுகத்தில் கறுப்பாகவும் ஆகிறேன். கலி காலத்தில், நாலில் மூன்று பங்கு அறமீறல்கள் நடக்கின்றன. (கால் பங்கே அறநெறி இருக்கிறது). அந்த யுகத்தின் முடிவில், மரணத்தின் கடுமையான உருவத்தைக் கொண்டு நான் தனியாக அசைவன, அசையாதன ஆகியவற்றைக் கொண்ட மூன்று உலகங்களையும் அழிக்கிறேன். மூன்று அடிகளால் நான் முழு அண்டத்தையும் அடக்குகிறேன். நானே இப்அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறேன்; நானே மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறேன்; நானே கர்வபங்கம் செய்பவனாக இருக்கிறேன்; நான் எங்கும் இருக்கிறேன்; நான் எல்லையற்றவனாக இருக்கிறேன்; நான் புலன்களின் தலைவனாக இருக்கிறேன்; என் வலிமை பெரிதானது. ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, தனியாகவே நான் காலச்சக்கரத்தைச் சுழற்றுகிறேன்; நான் உருவமற்றவனாக இருக்கிறேன்; நான் அனைத்து உயிர்களையும் அழிப்பவனாக இருக்கிறேன்; எனது படைப்புகளின் அனைத்து முயற்சிகளுக்கும் நானே காரணனாக இருக்கிறேன். ஓ! முனிவர்களின் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, எனது ஆன்மா அனைத்து உயிரினங்களிலும் ஊடுருவியிருக்கிறது {அனைத்திலும் நான் வியாபித்திருக்கிறேன்}. ஆனால், ஓ! அனைத்து மறுபிறப்பாளர்களிலும் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, என்னை ஒருவரும் அறிவதில்லை. அனைத்து உலகங்களிலும் பக்தியுடனும் அர்பணிப்புடனும் நானே வணங்கப்படுகிறேன்.
ஓ! மறுபிறப்பாளரே {மார்க்கண்டேயரே}, எனது வயிற்றில் நீங்கள் என்னவெல்லாம் வலியை உணர்ந்திரோ, ஓ! பாவமற்றவரே {மார்க்கண்டேயரே, அவை அனைத்தும் உமது மகிழ்ச்சிக்காகவும், நற்பேறுக்காகவுமே என்பதை அறிவீராக. அவ்வுலகத்தில் என்னவெல்லாம் அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கண்டீரோ அவை அனைத்தும் எனது ஆன்மாவால், இருப்புக்குக் கொண்டு வந்து எழுப்பப்பட விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} எனது உடலில் பாதியாவான்; நான் நாராயணன் என்று அழைக்கப்படுகிறேன். நான் சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தாங்கி நிற்கிறேன். ஓ! மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, யுகங்களின் நீளத்தில் ஆயிரம் மடங்கு அளக்கக்கூடிய காலத்திற்கு, அண்டத்தின் ஆன்மாவான நான், உயிரினங்களை உணர்வற்றதாக இருக்கச் செய்து {பிரம்மனான நான்} உறங்குகிறேன். ஓ! மறுபிறப்பாள முனிவர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, இப்படியே அந்த முழுக் காலமும், நான் முதிர்ந்தவனாக இருந்தும் சிறுபிள்ளையின் உருவத்தில், பிரம்மன் விழிக்கும் வரை எப்போதும் இங்கேயே இருக்கிறேன்.
ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, நான் உம்மிடம் திருப்தி கொண்டிருக்கிறேன். ஓ! மறுபிறப்பாள முனிவர்களில் வழிபடத்தகுந்தவரே {மார்க்கண்டேயரே} பிரம்மமான நான் உமக்குத் திரும்பத் திரும்ப வரங்களை அளித்திருக்கிறேன். அசைவன, அசையாதன என அனைத்தும் அழிக்கப்பட்டதையும், ஒரே பெரும் நீர் பரப்பையும் கண்ட நீர் துன்பத்தால் தாக்கப்பட்டீர். நான் அதை அறிந்தேன், எனவேதான் நான் உமக்கு (எனது வயிற்றுக்குள் இருக்கும்) அண்டத்தைக் காட்டினேன். நீர் எனது உடலுக்குள் இருந்து முழு உலகத்தையும் கண்ட போது, உணர்விழந்து, ஆச்சரியத்தில் மூழ்கினீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, இதன் காரணமாகவே நீர் விரைவாக எனது வாய்வழியாக வெளியேற்றப்பட்டீர். நான் (இப்போது) உம்மிடம், தேவர்களாலும், அசுரர்களாலும் புரிந்து கொள்ள இயலாத ஆன்மாவைக் குறித்துச் சொன்னேன். பெரும் தவசியான, புனிதமான பிரம்மா விழிக்காத வரை, ஓ! மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் இங்கேயே வசிக்கலாம். அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} விழித்த பிறகு, ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, நான் தனியாக உடலுடன் கூடிய அனைத்து உயிர்களையும் படைத்து, ஆகாயம், பூமி, ஒளி, வளிமண்டலம், நீர் என உண்மையில் அனைத்து அசைவன மற்றும் அசையாதன ஆகிய (நீர் கண்டிருக்கக்கூடிய) உயிரினங்களையும் பூமியில் படைப்பேன்!" என்றான் {சிறுவனாக இருந்த நாராயணன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொன்ன அந்த அற்புத தெய்வம் {நாராயணன்}, ஓ! மகனே {யுதிஷ்டிரா}, எனது காட்சியில் இருந்து மறைந்து போனான்! பிறகு தான் நான் இந்தப் பலதரப்பட்ட அற்புதமான படைப்பு உயிர் பெறுவதைக் கண்டேன். ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, இந்த அற்புதமான அனைத்தையும் யுகத்தின் முடிவில், ஓ! அறம்சார்ந்த அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, சாட்சியாக இருந்து நான் கண்டேன். பழங்காலத்தில் என்னால் பார்க்கப்பட்ட, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தத் தெய்வம், உனது உறவினனாக இருக்கும் இந்த ஜனாதர்த்தனனே {கிருஷ்ணனே}. எனக்கு அளிக்கப்பட்ட வரத்தின் தொடர்ச்சியாகவே, எனது ஞாபக சக்தி குறையவில்லை. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, மரணத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் எனது வாழ்வின் காலம் மிக நீண்டது. பழமையான பெருந்தலைவனான இந்த ஹரியே, வலிமை நிறைந்த கரங்கள் கொண்டவனாக விருஷ்ணி குலத்தில் கிருஷ்ணனாகப் பிறந்து இவ்வுலகில் விளையாடிக் கொண்டிருப்பதைப் போலக் காணப்படுகிறான். இவனே தத்ரியும், விதத்ரியும் ஆவான். அனைத்து நித்தியமானவைகளையும் அழிப்பவன் இவனே. மார்பில் ஸ்ரீவத்சம் என்ற மருவைக் கொண்டவன் இவனே. அனைத்து உயிர்களின் தலைவனுக்குத் தலைவன் இவனே, உயர்ந்தவர்களில் உயர்ந்தவனான இவன் கோவிந்தன் என்று அழைக்கப்படுகிறான். மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்தி, எப்போதும் வெல்பவனும் அனைத்து தேவர்களிலும் முதன்மையானவனுமான இவனைக் கண்டதாலேயே எனக்குப் பழைய நினைவுகள் மீண்டும் வந்தன! இந்த மாதவனே {கிருஷ்ணனே}, அனைத்து உயிர்களுக்கும் தந்தையும் தாயுமானாவன்! குரு குலத்தின் காளைகளே {பாண்டவர்களே}, இந்தப் பாதுகாவலனிடம் உங்கள் பாதுகாப்பைக் கோருங்கள். {ரட்சகனான இவனைச் சரணடையுங்கள்}" என்றார் {மார்க்கண்டேயர்}
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட பிருதையின் மகன்களும், மனிதர்களில் காளையரான இரட்டையர்களும், திரௌபதியுடன் கூடி ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வணங்கினர். மதிப்புக்குத் தகுந்த மனிதர்களில் புலியான அவன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகன்களால் இப்படி மதிக்கப்பட்டதும், இனிமை நிறைந்த வார்த்தைகளால் அவர்களுக்கு ஆறுதல் கூறினான்"
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.