Kalki will enter forest! | Vana Parva - Section 190 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
கல்கியால் கலிகாலத்தின் தீமைகள் அகன்று புதிதாகக் கிருத காலம் மலரும் என்று மார்க்கண்டேயர் சொன்னது; விடாமல் அறம்பயிலும்படி மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொன்னது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "திருடர்கள் மற்றும் கொள்ளையர்களை வேரோடு அழித்த பிறகு, ஒரு பெரும் குதிரை வேள்வியில் {அசுவமேத வேள்வியில்}, இந்தப் பூமியை கல்கி அந்தணர்களுக்குக் கொடுப்பார். புனிதமான காரியங்களைச் செய்து சிறந்த புகழைக் கொண்ட கல்கி, சுயம்புவால் விதிக்கப்பட்ட மங்களகரமான புதிய அருளாட்சியை நிறுவிய பிறகு, காண்பதற்கினிய கானகத்திற்குள் புகுவார். பிராமணர்களால் திருடர்களும், கொள்ளையர்களும் வேரோடு ஒழிக்கப்பட்ட பிறகு, பூமியெங்கும் செழிப்பாக இருக்கும். இந்தப் பூமியில் உள்ள மக்கள் அனைவரும் அவரது {கல்கியின்} நடத்தையைப் பின்பற்றுவர். இந்த உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்த்திய பிறகு, பிராமணர்களில் புலியான கல்கி, மான் தோலையும், ஈட்டிகளையும், சூலங்களையும் அங்கேயே விட்டு, அந்தணர்களில் முதன்மையானவர்களால் புகழப்பட்டபடி பூமியெங்கும் சுற்றுவார். அவர் {கல்கி} அந்தணர்களுக்குத் தக்க மரியாதைகளைச் செய்து, திருடர்களையும் கொள்ளையர்களையும் கொல்வதிலேயே முழு நேரமும் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். அவர் {கல்கி}, திருடர்களையும், கொள்ளையர்களையும் கொன்று "ஓ! தந்தையே", "ஓ! தாயே", "ஓ! மகனே" என்று இதயத்திலிருந்து கதற வைப்பார். அதே போல, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, பாவங்கள் வேரோடு ஒழிக்கப்பட்டு, கிருத காலத்தின் தொடக்கத்தில் அறம் தழைக்கும். மனிதர்கள் மீண்டும் அறச் சடங்குகள் பயில ஆரம்பிப்பார்கள்.
கிருத காலத்தில், நன்றாகப் பதியமிட்ட தோட்டங்களும், வேள்வி மண்டபங்களும், பெரிய குளங்களும், அந்தணப் புராணங்களை வளர்க்கும் கல்விச்சாலைகளும், தடாகங்களும், கோவில்களும் எங்கும் மீண்டும் தோன்றும். விழாக்களும், வேள்விச்சடங்குகளும் மீண்டும் செய்யத்தொடங்கப் படும். அந்தணர்கள் நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் ஆவார்கள். மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்}, தவச்சடங்குகளுக்குத் தங்களை அர்ப்பணித்து முனிவர்களாவார்கள். இழிந்தவர்களால் நிரம்பியிருந்த தவசிகளின் ஆசிரமங்கள் மீண்டும் உண்மை நிறைந்த மனிதர்களின் இல்லங்களாகும். பொதுவாக மனிதர்கள் உண்மையை {சத்தியத்தை} போற்றவும் புகழவும் செய்வார்கள். நிலத்தில் தூவப்படும் விதைகள் அனைத்தும் முளைக்கும். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அனைத்து வகைப் பயிர்களும் எல்லாக் காலங்களிலும் வளரும். தானம், தவங்கள், நோன்புகள் ஆகியவற்றுக்கு மனிதர்கள் தங்களை அர்ப்பணிப்பார்கள். அந்தணர்கள் தியானத்துக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். அறம்சார்ந்த ஆன்மாக்களாலும், எப்போதும் உற்சாகமாக இருக்கும் மனிதர்களாலும் வேள்விகள் நடத்தப்படும். பூமியின் ஆட்சியாளர்கள் தங்கள் நாடுகளை அறம் சார்ந்து அரசாள்வார்கள். அப்படிப்பட்ட கிருத காலத்தில் வைசியர்கள் தங்கள் வகைக்கு உண்டான செயல்களுக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். அந்தணர்கள் ஆறு வகைக் கடமைகளுக்கு (கற்பது, கற்பிப்பது, தானாக முன்வந்து வேள்விகள் நடத்துவது, பிறர் செய்யும் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, அறப்பணிகள் செய்வது, பரிசுகளை ஏற்பது ஆகிய ஆறு வகைக் கடமைகளுக்குத்) தங்களை அர்ப்பணிப்பார்கள். க்ஷத்திரியர்கள் பராக்கிரமச் செயல்களுக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். சூத்திரர்கள், மூன்று (உயர்ந்த) வகையினருக்கும் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணிப்பார்கள்.
இவையே, ஓ! யுதிஷ்டிரா, கிருத, திரேதா, துவாபர மற்றும் தொடரும் {கலி} காலங்களின் வழிகளாகும். இப்போது நான் உனக்கு அனைத்தையும் விவரித்து விட்டேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, பலதரப்பட்ட யுகங்களால் அணைக்கப்படும் காலங்களைப் பொதுவாக நான் உனக்குச் சொல்லிவிட்டேன். முனிவர்களால் வழிபடப்படும் {வாயு} புராணத்தில் வாயுவால் சொல்லப்பட்ட கடந்த கால மற்றும் எதிர்கால நிலைகளை நான் இப்போது உனக்குச் சொன்னேன். இறப்பற்றவனான {சிரஞ்சீவியான} நான் உலகத்திற்கு விதிக்கப்பட்ட மற்றும் விதிக்கப்படாத வழிகளையும் பல முறை கண்டிருக்கிறேன். உண்மையில் நான் கண்ட அனைத்தையும், உணர்ந்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! மங்காத புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரா}, தர்மம் குறித்த உனது சந்தேகங்களை விலக்கவல்லதான வேறொன்றை நான் சொல்வேன். இனி நீ உன் தம்பிகளுடன் சேர்ந்து அதைக் கேள். ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, நீ உனது ஆன்மாவை அறத்தில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்த ஆன்மா கொண்ட மனிதன், இவ்வுலகிலும் மறு உலகிலும் அருளைப் பெறுகிறான். ஓ பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, நான் சொல்லப்போகும் மங்களகரமான வார்த்தைகளைக் கேள். ஒருபோதும் அந்தணர்களை அவமதிக்காதே. கோபம் கொண்ட அந்தணன், தனது நோன்புகளால் மூன்று உலகங்களையும் அழிக்க வல்லவன்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "மார்க்கண்டேயரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட புத்திக்கூர்மையும் பெரும் பிரகாசமும் படைத்த குருக்களின் அரசத் தலைவன் {யுதிஷ்டிரன்} பெரும் விவேகம் கொண்ட வார்த்தைகளைப் பேசலானான். {யுதிஷ்டிரன்}, "ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, நான் எனது குடிகளைக் காக்க வேண்டும் என்றால், நான் எதுபோன்ற நடத்தை வழிகளைப் பின்பற்ற வேண்டும்.? நான் எனது வகைக்கான {க்ஷத்திரியர்களின்} கடமைகளில் இருந்து வழுவாமல் இருக்க நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?" என்று கேட்டான்.
இதைக் கேட்ட மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "அனைத்து உயிரனங்களுக்கும் நன்மை செய்ய உன்னை நீ அர்ப்பணித்து, அவற்றிடம் கருணையோடு இரு. அனைத்து உயிரினங்களிடமும் அன்பு செலுத்து, எதையும் வெறுக்காதே. பேச்சில் உண்மையுடனும், எளிமையாகவும், ஆசைகளை முழுக் கட்டுக்குள் வைத்துக் கொண்டும், எப்போதும் உனது மக்களைப் பாதுகாப்பதில் உன்னை அர்ப்பணித்துக் கொள். அறம் பயின்று, பாவங்களைக் கைவிடு. மூதாதையரையும், தெய்வத்தையும் வழிபடு. அறியாமையிலும் கவனமின்மையாலும் நீ எதையெல்லாம் செய்தாயோ, அவற்றையெல்லாம் நீ செய்யும் அறப்பணிகளால் கழுவு. பெருமை மற்றும் கர்வத்தைக் கைவிட்டு, பணிவு மற்றும் நன்னடத்தையைக் கைக்கொள். முழு உலகத்தையும் அடிபணியச் செய்து இன்புற்றிரு, மகிழ்ச்சி உனதாகட்டும். இதுவே அறத்திற்கு உடன்படும் நடத்தை போக்காகும் {நடத்தையாகும்}. அறம் சார்ந்ததாக இதுவரை கருதப்பட்டு வந்ததையும், இனிமேல் கருதப்படப் போவதையும் நான் உனக்கு உரைத்துவிட்டேன். கடந்த காலம் சம்பந்தமாகவோ எதிரகாலம் சம்பந்தமாகவோ நீ அறியாதது எதுவுமில்லை. எனவே, ஓ! மகனே {யுதிஷ்டிரா}, தற்போதைய உனது இடர்க் காலத்தை மனதில் கொள்ளாதே. காலத்தால் துன்புறுத்தப்படும்போது, விவேகிகள் {ஞானம் கொண்டோர்} அதில் மூழ்கிப் போய்விடுவதில்லை. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {யுதிஷ்டிரா}, சொர்க்கவாசிகளும்கூட {தேவர்களும்கூட} காலத்தை விஞ்ச முடியாது. காலம் அனைத்து உயிரினங்களையும் துன்புறுத்துகிறது. ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, உண்மை {சத்தியம்} சம்பந்தமாக நான் சொன்னவற்றில் உனது மனது சந்தேகம் கொள்ள வேண்டாம். சந்தேகம் உனது இதயத்தை அடைய நீ அனுமதித்தால், உனது அறம் குறையும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நீ கொண்டாடப்படும் குடும்பமான குருக்களின் குடும்பத்தில் பிறந்திருக்கிறாய். அப்படிப்பட்ட நீ, நான் சொன்னவற்றை எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் கடைப்பிடிக்க வேண்டும்" என்று பதிலுரைத்தார் {மார்க்கண்டேயர்}.
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, உமது கட்டளையின் பேரில், காதுக்கு இனிமையான வகையில் நீர் எனக்குச் சொன்னவற்றின்படி நிச்சயமாக நடந்து கொள்வேன். ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, பேராசையும் காமமும் என்னிடம் கிடையாது. அச்சமோ, கர்வமோ, பெருமையோ என்னிடம் கிடையாது. எனவே, ஓ! தலைவா {மார்க்கண்டேயரே}, நான் நீர் எனக்குச் சொன்ன அனைத்தையும் கடைப்பிடிப்பேன்", என்று பதிலுரைத்தான்.
வைசம்பாயனர் {ஜனமேஜனிடம்} தொடர்ந்தார், "புத்திக்கூர்மையுடைய மார்க்கண்டேயரின் வார்த்தைகளைக் சாரங்கம் என்ற வில்லைத் தாங்கியிருப்பவனுடன் {கிருஷ்ணனுடன்} சேர்ந்து கேட்ட பாண்டுவின் மகன்களும் {பாண்டவர்கள்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அங்கே இருந்த அந்தணர்களில் காளைகளும், மற்றுப் பிறரும் மகிழ்ச்சியால் நிரம்பினார்கள். பழங்காலம் தொடர்பான இந்த அருள் நிறைந்த வார்த்தைகளை, ஞானத்தைக் கொடையாகக் கொண்ட மார்க்கண்டேயரிடம் இருந்து கேட்ட அவர்களின் இதயங்கள் ஆச்சரியத்தால் நிரம்பின".
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.