Parikshit and Susobhana! | Vana Parva - Section 191a | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
மார்க்கண்டேயர் தவளைக்கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்னது; பரிக்ஷித்து ஒரு பெண்ணை மணந்தது; அப்பெண் நீரில் மறைந்தது; அப்படி மறைந்ததற்குத் தவளைகளே காரணம் என்று பரிக்ஷித்துத் தவளைகளைக் கொல்ல உத்தரவிட்டது; தவளை மன்னன் ஆயு பரிக்ஷித்தைக் கண்டு, தனது மகளான சுசோபனையை அவனுக்கு மணமுடித்துக் கொடுத்தது....
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், "அந்தணர்களின் பெருமையைப் பலம்வாய்ந்த தவசியான மார்க்கண்டேயர் பாண்டுவின் மகன்களுக்கு விவரித்தது போன்றே நீர் எனக்கு முழுமையாக உரைப்பதே உமக்குத் தகும்"
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்} மார்க்கண்டேயரிடம், "அந்தணர்களின் பெருமைகளை எனக்கு நீர் விவரிப்பதே உமக்குத் தகும்" என்று கேட்டான். மார்க்கண்டேயர், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் அந்தணர்களின் நடத்தை எவ்வாறு இருந்தது என்பதைக் கேள்" என்றார்.
மேலும் மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்த ஒரு மன்னன், பரிக்ஷித் என்ற பெயரில் அயோத்தியாவில் இருந்தான். ஒருகாலத்தில் அந்தப் பரிக்ஷித் வேட்டையாடச் சென்றான். அவன் ஒரு மானைத் துரத்திக் கொண்டு சென்ற போது, அந்த விலங்கு {குதிரை}, அவனை (மனிதர்களின் வசிப்பிடங்களற்ற ஒரு இடத்துக்கு} நீண்ட தூரத்திற்கு இட்டுச் சென்றது. வெகு தூரம் சென்றதால் களைத்துப் போயிருந்த அவன் {மன்னன் பரிக்ஷித்}, பசியாலும் தாகத்தாலும் துன்புற்று அந்த நாட்டின் ஒரு பகுதியில் இருந்த இருள் நிறைந்த அடர்ந்த கானகத்துக்குச் சென்றான். அக்கானகத்தைக் கண்ட மன்னன் {பரிக்ஷித்}, அதற்குள் நுழைந்து காண்பதற்கினிய ஒரு குளத்தை அங்குக் கண்டான். அவனும் அந்த விலங்கும் {குதிரையும்} அங்குக் குளித்தனர். அங்குக் குளித்த குதிரை புத்துணர்ச்சி பெற்றது. அதன் முன் சில தாமரை இழைகளையும் தண்டுகளையும் இட்டபடி, அம்மன்னன் {பரிக்ஷித்} அந்தக் குளத்தின் அருகில் அமர்ந்தான்.
அங்கு அந்தக் குளத்தின் அருகில் அவன் {மன்னன் பரிக்ஷித்} இருந்தபோது, குறிப்பிட்ட வகை இனிமையான இசையைக் கேட்டான். அவ்விசையைக் கேட்ட அவன் தனக்குள், "இங்கு மனிதர்களின் கால்தடங்களை நான் காணவில்லை. இந்த இசை எங்கிருந்து யாரால் வருகிறது?" என்று நினைத்தான். அம்மன்னன் விரைவில் பூக்கள் சேகரித்துக் கொண்டு பாடிக்கொண்டிருந்த ஒரு அழகிய மங்கையைக் கண்டான். அம்மன்னன் {பரிக்ஷித்} அவளிடம், "அருளப்பட்டவளே, நீ யார்? நீ யாருடையவள்?" என்று கேட்டான். அதற்கு அவள், "நான் ஒரு கன்னிகை" என்றாள். அதற்கு அம்மன்னன், "நீ என்னுடையவள் ஆகும்படி நான் உன்னைக் கேட்கிறேன்" என்றான். அதற்கு அந்தக் கன்னிகை, "நீர் எனக்கு ஒரு உறுதிமொழி கொடுக்க வேண்டும், அப்போதுதான் என்னால் உம்முடையவள் ஆக முடியும். இல்லாவிட்டால் முடியாது" என்றாள். மன்னன் உறுதிமொழியைக் குறித்து அந்தப் பெண்ணிடம் கேட்க, அவள், "நீங்கள் எனது கண்களால் நீரைக் காணச் செய்யக்கூடாது" என்றாள். மன்னனும் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அவளை மணந்தான். இப்படி அவளை மணந்து கொண்ட பரிக்ஷித் (அவளுடன்} பெரும் மகிழ்ச்சியுடன் விளையாடி, அமைதியாக அவளுடன் அமர்ந்தான். மன்னன் அவளுடன் தங்கியிருந்தபோது, அவனது துருப்புகள் அந்த இடத்தை அடைந்தன. அந்த ஏகாதிபதியை {பரிக்ஷித்தை} கண்ட துருப்புகள் அவனைச் சூழ்ந்து கொண்டன. அவனது துருப்புகளின் இருப்பால் உற்சாகமடைந்த மன்னன், {பரிக்ஷித்} ஒரு அழகான வாகனத்தில் (புதிதாக) தான் மணந்த மனைவியுடன் சென்றான்.
தலை நகரை {அயோத்தியாவை} அடைந்த அவன் {மன்னன் பரிக்ஷித்} அவளுடன் தனிமையில் வாழ ஆரம்பித்தான். மன்னனுக்கு அருகாமையிலேயே இருந்தவர்கள் கூட அவனைக் காண முடியவில்லை. இதுகுறித்துத் தலைமை அமைச்சர் மன்னனைப் பார்த்துக் கொண்ட பெண்களிடம் கேட்டான். அவன், "நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான். அந்தப் பெண்கள், "நாங்கள் இங்கு ஒப்பற்ற அழகுடன் கூடிய ஒரு பெண்ணைக் காண்கிறோம். அவளுக்கு நீரைக் காண்பிப்பதில்லை என்ற உறுதிமொழி கொடுத்து அவளை மணந்து கொண்ட மன்னர் அவளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்" என்றனர். இந்த வார்த்தைகளைக் கேட்ட தலைமை அமைச்சர், பல மரங்களும், அபரிமிதமான மலர்களும் கனிகளும் நிறைந்த ஒரு செயற்கை கானகத்தை உண்டாக்கி, அந்தக் காட்டிற்குள்ளேயே ஒரு பெரிய குளத்தை வெட்டச் செய்து, ஒதுங்கிய இடத்தில் இருந்த அதில் {குளத்தில்} அமிர்தம் போன்ற நீர் இருந்தது.
அந்தக் குளம் முத்து வலைகளால் நன்கு மூடப்பட்டிருந்தது. ஒரு நாள் மன்னனைத் தனிமையில் சந்தித்த அவர் {தலைமை அமைச்சர்}, "இது நீரில்லாமல் இருக்கும் நல்ல காடு. நீர் இங்கு இன்பமாக விளையாடலாம்" என்றான். அமைச்சரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {பரிக்ஷித்} அந்தக் காட்டுக்குள் தனது புகழ்மிக்க மனைவியுடன் நுழைந்தான். அந்தக் காண்பதற்கினிய கானகத்தில் அவளுடன் விளையாடிய மன்னன், பசியாலும், தாகத்தாலும் துன்புற்று, களைத்துப் போனான். அம்மன்னன் {பரிக்ஷித்}, அங்கே ஒரு முல்லைக் கொடிப் பந்தலைக் கண்டு, தனது அன்பிற்குரியவளுடன் அந்தப் பந்தலுக்குள் நுழைந்தான். அங்கே அம்மன்னன், அமிர்தம் போன்ற பிரகாசத்துடன் தெளிவுடனும் நீர் நிரம்பிய ஒரு குளதைக் கண்டான். அந்தக் குளத்தின் கரையில் தன் மனைவியுட்ன அமர்ந்த அவன், தன் வணங்கத்தக்க மனைவியிடம், "இந்த நீரில் உற்சாகமாக மூழ்கு" என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட அவள் அந்தக் குளத்திற்குள் மூழ்கினாள். ஆனால் நீருக்குள் மூழ்கிய அவள் மறுபடியும் மேற்பரப்பில் காணப்படவில்லை. மன்னன் அவளைத் தேடினான், ஆனால் அவளைக் கண்டுபிடிக்க அவனால் முடியவில்லை.
பிறகு மன்னன் {பரிக்ஷித்}, அந்தக் குளத்தின் நீரையெல்லாம் வாரி இரைக்கச் சொன்னான், கடைசியாக ஒரு வளையின் வாயிலில் ஒரு தவளை அமர்ந்திருந்தது. இதனால் கோபம் கொண்ட மன்னன், "எனது ஆட்சிக்குட்பட்ட இடங்கள் அனைத்திலும் உள்ள தவளைகள் கொல்லப்படட்டும். யாரெல்லாம் என்னைச் சந்திக்க விரும்புகிறார்களோ அவர்கள் இறந்த தவளைகளுடன் என்னிடம் வரட்டும்" என்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்தான். இப்படித் தவளைகள் கொல்லப்பட்ட போது, அதற்கு அஞ்சிய அனைத்து தவளைகளும் தங்கள் மன்னனிடம் சென்று நடந்ததைச் சொல்லி முறையிட்டன. பிறகு தவளைகளின் மன்னன் தவசியின் ஆடைகளைத் தரித்துக் கொண்டு மன்னன் பரிக்ஷித்தின் முன்னிலையில் வந்து அந்த ஏகாதிபதியை அணுகிய பிறகு, "ஓ! மன்னா, கோபத்திற்கு ஆளாகாதே! அருள் புரிவாயாக. அப்பாவி தவளைகளைக் கொல்வது உனக்குத் தகாது" என்றது. [இங்கே இரு பாடல்கள் {ஸ்லோகங்கள்} வருகின்றன (அவை): - ஓ மங்கா புகழ் கொண்டவனே, தவளைகளைக் கொல்லாதே! உனது கோபத்தை அடக்கு! தங்கள் ஆன்மாவை அறியாமையில் வைத்திருப்பவர்களின் செழிப்பும் தவத்தகுதிகளும் குன்றும்! தவளைகளிடம் கோபம் கொள்வதில்லை என்ற உறுதிமொழியைக் கொடு! இப்படிப்பட்ட பாவத்தை இழைக்கும் உனக்கு என்ன தேவை இருக்கிறது! தவளைகளைக் கொல்வதால் உனது எந்தக் காரியம் நிறைவேறும்" என்று கேட்டது.
அன்புக்குரியவளின் மரணத்தால் மன்னன் பரிக்ஷித்தின் ஆன்மா துயரத்தில் நிரம்பியிருந்தது. அவன் {மன்னன் பரிக்ஷித்}, "நான் தவளைகளை மன்னிக்க மாட்டேன். மறுபுறம் அவைகளைக் கொல்வேன். இந்த இழிந்த தீயவைகள் {தவளைகள்} எனது அன்பிற்குரியவளை விழுங்கிவிட்டன. எனவே, என்னால் எப்போதும் கொல்லப்பட்ட இந்தத் தவளைகள் தகுந்தனவே. ஓ! கற்றவனே, இதில் உன் சார்பாக நீ தலையிடுவது உனக்குத் தகாது" என்றான். பரிக்ஷித்தின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தவளை மன்னன், மனதால் துன்புற்று, "ஓ மன்னா அருள்புரிவாயாக! நான் ஆயு என்ற பெயர் கொண்ட தவளைகள் மன்னனாவேன். உனது மனைவியாக இருந்தவள், எனது மகளான சுசோபனையே ஆவாள். உண்மையில், இது அவளது கெட்ட நடத்தையாலேயே நிகழ்ந்தது. இதற்கு முன், பல மன்னர்கள் அவளால் {இப்படி} ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அதற்கு அம்மன்னன் {பரிக்ஷித்}, நான் அவளை அடைய விரும்புகிறேன். நீர் அவளை எனக்கு அளிப்பீராக!" என்றான்.
அதன்பேரில் தவளைகள் மன்னன் {ஆயு} தனது மகளைப் பரிக்ஷித்துக்கு அளித்து, அவளிடம் {சுசோபனையிடம்}, "மன்னனுக்காகக் காத்திருந்து அவனுக்குச் சேவை செய்" என்றான். இப்படித் தனது மகளிடம் பேசிய அவன் {தவளை மன்னன்}, மேலும் அவளிடம் கோபமாக, "நீ பல மன்னர்களை ஏமாற்றியிருப்பதால், உனது உண்மையற்ற நடத்தையின் காரணமாக, உனது வாரிசுகள் அந்தணர்களிடம் மரியாதை குறைவாக நடப்பார்கள்" என்றான். ஆனால் அவளை அடைந்த மன்னர் மிகவும் மகிழ்ந்து, மூவுலகங்களும் கிடைத்தது போல இன்புற்று இருந்தான். அவன் {மன்னன் பரிக்ஷித்} தவளைகள் மன்னனை {ஆயுவை} மரியாதையுடன் உரிய முறையில் வணங்கி மகிழ்ச்சியால் ஏற்பட்ட கண்ணீருடனும் அடைபட்ட குரலுடனும், "நான் உம்மால் உதவி பெற்றேன்" என்றான். பிறகு தவளைகள் மன்னன் தனது மகளிடம் விடைபெற்று, அவன் எங்கிருந்து வந்தோனோ அங்கேயே சென்றான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.