King Sivi and Suhotra ! | Vana Parva - Section 193 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
க்ஷத்திரிய பெருமையைச் சொல்வதற்காக மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்கு சிபி மற்றும் சுஹோத்திரன் ஆகியோர் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சியைச் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டுவின் மகன்கள் மீண்டும் மார்க்கண்டேயரிடம், "நீர் அந்தணர்களின் பெருமைகளை உரைத்தீர். இனி அரசவகை க்ஷத்திரியர்களின் பெருமைகளை நாங்கள் கேட்க விரும்புகிறோம்" என்று கேட்டனர். அவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட முனிவர் மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்}, "அரசவகை க்ஷத்திரியர்களின் பெருமைகளை இப்போது கேளுங்கள். குரு குலத்தைச் சேர்ந்த சுஹோத்திரன் என்ற பெயர் கொண்ட குறிப்பிட்ட மன்னன், பெரும் முனிவர்களை சந்திப்பதற்காக ஒரு பயணம் செய்தான். அப்படி அவன் {மன்னன் சுஹோத்திரன்} அந்தப் பயணத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, அவன் உசீநரனின் மகனான மன்னன் சிபி தேரில் அமர்ந்து வருவதைக் கண்டான். இருவரும் எதிர் எதிரே வந்து சந்தித்து வணங்கிக் கொண்டனர். ஒருவரோடு ஒருவர் சம நிலைமை கொண்டவர்கள் என்பதை அறிந்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் வழிவிடாமல் நின்றனர்.
அந்த நேரத்தில் அங்கே நாரதர் தோன்றினார். அங்கே நடந்ததைக் கண்ட அந்த தெய்வீக முனி {நாரதர்}, "ஒருவரின் வழியை மற்றவர் தடை செய்தவண்ணம் ஏன் இருவரும் நிற்கிறீர்கள்?" என்று கேட்டார். இப்படி நாரதரால் கேட்கப்பட்ட அவர்கள் {மன்னன் சுஹோத்திரனும், மன்னன் சிபியும்}, "ஓ! புனிதமானவரே {நாரதரே}, அப்படிச் சொல்லாதீர். பழங்காலத்து முனிவர்கள், மேன்மையானவனுக்கும், திறன்வாய்ந்தவனுக்கு வழிவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றனர். இருப்பினும், ஒருவரை ஒருவர் தடுத்து நிற்கும் நாங்கள் இருவரும் எல்லா வகையிலும் சமமானவர்களாகவே இருக்கிறோம். சரியாக ஆலோசித்தால் எங்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை" என்றனர்.
இப்படி அவர்களால் சொல்லப்பட்ட நாரதர் மூன்று சுலோகங்களைச் சொன்னார். (அவை இவையே), "ஓ! குரு குலத்தவனே {சுஹோத்திரா}, தீய நடத்தை கொண்டவன் எளியோரிடமும் கொடுமையாகவே நடந்து கொள்வான். எளிமையானவன் தீயவனிடமும் அடக்கத்துடனும் நேர்மையுடனும் நடந்து கொள்வான். நேர்மையானவன் நேர்மையற்றவர்களிடமும் நேர்மையாக நடந்து கொள்வான். அப்படி இருக்கும் போது நேர்மையானவன் மற்றொரு நேர்மையானவனிடம் ஏன் நேர்மையாக நடந்து கொள்ளக்கூடாது? நேர்மையானவன் தனக்குக் கிடைக்கும் சேவையை நூறு மடங்காக மதிக்கிறான். இது தேவர்களிடமும் வழக்கத்தில் இருக்கிறது அல்லவா? நற்குணங்கள் பெற்ற உசீநரனின் அரசமகன் {மன்னன் சிபி} நிச்சயமாக உன்னைவிட பெரியவனே. ஒருவன் உலோபியை {கஞ்சனை} தானத்தாலும், பொய்யனை உண்மையாலும், கொடுஞ்செயல் செய்பவனை பொறுமையாலும், நேர்மையற்றவனை நேர்மையாலும் வெல்ல வேண்டும். நீங்கள் இருவரும் பெரும் இதயம் கொண்டவர்களே {மேன்மையானவர்களே}. மேற்கண்ட சுலோகத்தின் பொருள் படி, உங்களில் ஒருவர் விலகி நிற்க வேண்டும்" என்று சொன்னார் {நாரதர்}.
இதைச் சொன்ன நாரதர் அமைதியானார். நாரதர் சொன்னதைக் கேட்ட குரு குலத்தின் மன்னன் {சுஹோத்திரன்}, சிபியை வலம் வந்து, அவனது எண்ணற்ற சாதனைகளைப் புகழ்ந்து, அவனுக்கு {மன்னன் சிபிக்கு} வழி கொடுத்து, தன் வழியே சென்றான். இப்படியே நாரதர் அரசவகை க்ஷத்திரியர்களின் உயர்ந்த அருளுடைமையை விவரித்தார்"
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.