Yayati and a Brahmana ! | Vana Parva - Section 194 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
யயாதியைச் சந்தித்த அந்தணரின் கதையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "மற்றுமொரு கதையைக் கேள். ஒருநாள் நகுஷனின் மகனான யயாதி, குடிமக்கள் சூழ தனது அரியணையில் அமர்ந்திருந்தான். அப்போது அங்கே ஒரு அந்தணர் தனது குருவுக்குச் செல்வம் கொடுக்கவேண்டி, கேட்டுக் கொள்வதற்காக மன்னனை அணுகினார். அந்த அந்தணர், "ஓ மன்னா {யயாதியே}, நான் {ஆசானுக்கு} உடன்பட்ட படி, நான் என் ஆசானுக்கான செல்வத்தை உன்னிடம் இரந்து கேட்கிறேன்" என்றார். அதற்கு மன்னன் {யயாதி}, "ஓ! புனிதமானவரே, உமது ஒப்பந்தம்தான் என்ன என்று எனக்குச் சொல்லும்" என்று கேட்டார்.
அதற்கு அந்த அந்தணர் {மன்னன் யயாதியிடம்}, "ஓ! மன்னா, இவ்வுலகத்தில், மனிதர்களிடம் ஒருவன் பிச்சை கேட்கும்போது, அப்படிப்பிச்சை எடுப்பவனை அலட்சியப்படுத்துவதில் {அவமதிப்பதில்} மகிழ்கிறார்கள். அதனால், ஓ! மன்னா {யயாதியே}, எதன் மீது நான் என் இதயத்தை நிலைக்க வைத்திருக்கிறேனோ அதையே கேட்கிறேன். என்ன உணர்வுகளுடன் நான் கேட்பதை நீ கொடுப்பாயோ?" என்றார். அதற்கு மன்னன் {யயாதி}, "எந்தப் பொருளையும் கொடுத்துவிட்டு, அதுகுறித்து நான் தற்பெருமை பேசுவதில்லை. என்னால் கொடுக்க முடியாத வேண்டுகோள்களை நான் கேட்பதில்லை. இருப்பினும், கொடுக்க முடிந்த வேண்டுதலைகளைக் கேட்டு, அவற்றைக் கொடுத்த பிறகு நான் எப்போதும் மகிழ்ந்தே வந்திருக்கிறேன். நான் உமக்கு ஆயிரம் பசுக்களைக் கொடுக்கிறேன். என்னிடம் தானம் கேட்கும் அந்தணர் எவரும் எனக்கு அன்பிற்குரியவரே. என்னிடம் இரந்து கேட்கும் மனிதரிடம் நான் கோபப்படுவதில்லை. ஒரு பொருளைக் கொடுத்த பிறகு அது குறித்து நான் வருந்துவதில்லை" என்றான். பிறகு அந்த அந்தணர் மன்னனிடம் {யயாதியிடம்} இருந்து ஆயிரம் பசுக்களைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றார்"
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.