Vrishadarbha and Seduka! | Vana Parva - Section 195 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
சேதுகன் மற்றும் விருஷதர்பனைச் சந்தித்த அந்தணரின் கதையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} மீண்டும் அம்முனிவரிடம் {மார்க்கண்டேயரிடம்}, "உயர்ந்த நற்பேறு பெற்ற அரசகுல க்ஷத்திரியர்களைக் குறித்து எங்களுக்குச் சொல்லும்" என்று கேட்டான். அதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடன்}, "விருஷதர்பன், சேதுகன் என்ற பெயரில் இரு மன்னர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் அறநெறிகள் அறிந்தவர்களாகவும், தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் பயன்படும் ஆயுதங்களை அறிந்தவர்களாகவும் இருந்தார்கள். விருஷதர்பன் தனது பிள்ளைப்பருவத்திலிருந்தே, தங்கத்தையும் வெள்ளியையும் தவிர அந்தணர்களுக்கு வேறு எந்த உலோகத்தையும் கொடுப்பதில்லை என்ற நோன்பை நோற்று வந்தான் என்பதைச் சேதுகன் அறிந்திருந்தான். ஒரு சமயம், தனது வேத கல்வியை முடித்திருந்த ஒரு அந்தணர் சேதுகனிடம் வந்து அவனுக்கு நல்வாழ்த்துகள் சொல்லி அவனிடம் இருந்த தனது ஆசானுக்காகச் செல்வத்தை இரந்து கேட்பதற்காக "எனக்கு ஆயிரம் குதிரைகளைக் கொடு" என்று கேட்டார்.
இப்படிக் கேட்கப்பட்ட சேதுகன் அவரிடம், "உமது ஆசானுக்கு இவற்றைக் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. எனவே, நீர் மன்னன் விருஷதர்பனிடம் செல்லும். ஓ! அந்தணரே, அவன் {விருஷதர்பனிடம்} அறம் உயர்ந்த மன்னனாவான். அவனிடம் சென்று இரந்து கேளும். அவன் உமது வேண்டுதலை அருள்வான். இது அவன் சொல்லாமல் {கமுக்கமகா {அ} ரகசியமாக} கடைப்பிடிக்கும் நோன்பாகும்" என்று சொன்னான். இதைக் கேட்ட அந்த அந்தணர் விருஷதர்பனிடம் சென்று ஆயிரம் குதிரைகளை இரந்து கேட்டார். இப்படி வேண்டிக் கொள்ளப்பட்ட மன்னன் {விருஷதர்பன்} அந்த அந்தணரை சாட்டையால் அடித்தான். அதற்கு அந்த அந்தணர், "அப்பாவியான என்னை, ஏன் இப்படி அடிக்கிறாய்?" என்று கேட்டார்.
அந்த அந்தணர் மன்னனை {விருஷதர்பனை} சபிக்கப் போகும் நேரத்தில் அவன் {மன்னன் விருஷதர்பன்} , "ஓ! அந்தணரே, நீர் கேட்டதைக் கொடுக்காதவனைச் சபிப்பீரா? அல்லது, இது சரியான அந்தண நடத்தைதானா?" என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர், "ஓ! மன்னர்களின் மன்னா {விருஷதர்பா}, சேதுகனால் அனுப்பப்பட்ட நான், இதற்காகவே {தானம் பெறவே} உன்னிடம் வந்தேன்" என்றார். மன்னன் {விருஷதர்பன்}, "இன்று முற்பகலில் வரும் காணிக்கை {வரிப்பணம்} யாவையும் நான் உமக்குத் தருவேன். என்னால் சாட்டையடி பட்ட மனிதனை, நான் எவ்வாறு வெறுங்கையுடன் அனுப்புவேன்?" என்றான். இப்படிச் சொன்ன அந்த மன்னன் {விருஷதர்பன்}, அன்று பகல் முழுதும், ஆயிரம் குதிரைகளின் மதிப்புக்கும் அதிகமாக வந்த வருமானத்தை அப்படியே அந்த அந்தணருக்குக் கொடுத்தான்".
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.