The pigeon and the hawk that came to King Sivi! | Vana Parva - Section 196 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
புறாவுக்குத் தசையீந்த சிபியின் கதையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஒரு நாள், தேவர்கள் அனைவரும் கூடி, உசீனரனின் மகனான, மன்னன் சிபியின் அறம் மற்றும் நற்செயல்களைக் காண பூமிக்கு இறங்க வேண்டும் என்று தீர்மானித்தனர். ஒருவருக்கொருவர் "நல்லது" என்று சொல்லிக் கொண்ட அக்னியும், இந்திரனும் பூமிக்கு வந்தனர். புறாவின் உருவத்தில் இருந்த அக்னி, பருந்தின் உருவத்தில் தன்னைத் தொடர்ந்து விரட்டி வரும் இந்திரனிடம் இருந்து விலகிப் பறந்தோடி வந்தான். பிறகு அற்புதமான இருக்கையில் அமர்ந்திருந்த மன்னன் சிபியின் மடியில் அந்தப் புறா விழுந்தது. அப்போது அங்கிருந்த புரோகிதர், மன்னனிடம் {சிபியிடம்}, "பருந்துக்குப் பயந்தும், தனது உயிரைக் காக்க விரும்பியும், இந்தப் புறா உம்மிடம் பாதுகாப்பு நாடி வந்திருக்கிறது. ஒருவனின் உடல் மேல் புறா வந்து விழுவது என்பது பெரும் ஆபத்தை முன்னறிவிப்பது {தீய சகுனம்} எனக் கற்றோர் சொல்லியுள்ளனர். சகுனங்களைப் புரிந்து கொள்ளும் மன்னன், சுட்டிக்காட்டப்படும் ஆபத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளச் செல்வத்தைத் தானம் செய்யட்டும்" என்றார் {புரோகிதர்}.
அந்தப் புறாவும் {அக்னி தேவனும்} மன்னனிடம் {சிபியிடம்}, "பருந்துக்குப் பயந்தும், எனது உயிரைக் காக்க விரும்பியும் நான் உன்னிடம் பாதுகாப்பு நாடியே வந்தேன். நான் ஒரு முனிவன். புறாவின் உருவைக் கொண்டு, உன்னிடம் பாதுகாப்பை நாடுபவனாக நான் வந்திருக்கிறேன். உண்மையில், நான் எனது உயிராக உன்னையே தேடி வந்தேன். நான் வேதமறிந்தவன்; பிரம்மச்சரிய வாழ்வுமுறையை மேற்கொள்பவன்; தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு} மற்றும் தவ அறங்கள் கொண்டவன் என்பதை அறிந்து கொள். மேலும் நான் எனது ஆசான் விரும்பாததை எப்போதும் பேசாதவன் என்றும், உண்மையில் அனைத்து அறங்களையும் கொண்டவன் என்றும் அறிந்து கொள். நான் வேதங்களைத் திருப்பிச் சொல்வேன், எனக்கு அவற்றின் உரைநடை {யாப்பிலக்கணம்} தெரியும். வேதங்களை நான் எழுத்து எழுத்தாகக் கற்றிருக்கிறேன். நான் புறா அல்ல. ஓ! என்னைப் பருந்திடம் கொடுத்து விடாதே. கற்ற, தூய அந்தணனைத் தானமாகக் கொடுப்பது நல்ல தானமாகாது" என்றது.
புறா இப்படிச் சொன்னதும், பருந்து {இந்திரன்} அம்மன்னனிடம் {சிபியிடம்}, "இவ்வுலகில் வரும் உயிரினங்கள் அனைத்தும் ஒரே குறிப்பிட்ட வகையில் வருவதில்லை. படைப்பின் வரிசையில், முற்பிறவியில், நீ இந்தப் புறா மூலமே பிறந்தாய். ஓ! மன்னா {சிபியே}, (அது உனது தந்தையாக இருப்பினும்} இந்தப் புறாவைப் பாதுகாப்பதன் மூலம் எனது உணவில் தலையிடுவது உனக்குத் தகாது. இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {சிபி அந்த பருந்திடம்}, "இதற்கு முன், மனிதர்களின் தூய மொழியைப் பறவைகள் பேசுவதை யாராவது கண்டிருக்கிறார்களா? புறா சொல்வதையும், பருந்து சொல்வதையும் அறிந்த பிறகு, அறத்தின்படி நாம் இன்று எவ்வாறு செயல்படலாம்? பாதுகாப்பை நாடி வந்த பயந்த உயிரினத்தை, அதன் எதிரியிடம் கொடுப்பவன், தனதுக்குப் பாதுகாப்புத் தேவைப்படும்போது அதை அடைய மாட்டான். உண்மையில், அவனுக்காகவே மேகங்கள் சரியான காலங்களில் மழையைப் பொழியாது. விதைகள் தூவப்பட்டாலும், அவை அவனுக்காக முளைக்காது. தன்னிடம் பாதுகாப்பை நாடி வந்த பயந்த உயிரினத்தை, அதன் எதிரியிடம் கொடுப்பவன், பிள்ளைப்பருவத்திலேயே தனது வாரிசு சாவதைக் காண்பான். அத்தகைய மனிதனின் மூதாதையர்களால் சொர்க்கத்தில் வசிக்க முடியாது. உண்மையில், நெருப்பில் அழிக்கப்படும் தெளிந்த நெய்யினாலான அவிர்ப்பாகத்தைத் தேவர்களே ஏற்க மாட்டார்கள். தன்னிடம் பாதுகாப்பை நாடி வந்த பயந்த உயிரினத்தை, அதன் எதிரியிடம் கொடுப்பவன், இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களால் வஜ்ராயுதம் கொண்டு தாக்கப்படுவான். அவன் உண்ணும் உணவு புனிதமற்றதாக இருக்கும். அத்தகைய குறுகிய ஆன்மா கொண்டவன் விரைவில் சொர்க்கத்திலிருந்து விழுவான்.
ஓ! பருந்தே, சிபி குலத்தைச் சேர்ந்த மக்கள் உனக்கு முன்பாகச் சோற்றுடன் சமைக்கப்பட்ட காளையை இந்தப் புறாவுக்குப் பதிலாக வைக்க அனுமதி. நீ மகிழ்ச்சியாக வாழும் வகையில் அவர்கள் உன்னை இறைச்சி அபரிமிதமாகக் கிடைக்கும் இடத்திற்குச் சுமந்து செல்ல அனுமதி" என்று கேட்டான். இதைக் கேட்ட பருந்து {இந்திரன் -மன்னன் சிபியிடம்}, "ஓ! மன்னா {சிபியே}, இந்தப் புறாவுக்குப் பதிலாக நான் காளை மாட்டையோ, அல்லது, உண்மையில் எந்தப் பிற இறைச்சியையோ, அல்லது அளவில் அபரிமிதமான இறைச்சியையோ நான் கேட்க மாட்டேன். இது{புறா} எனக்குத் தேவர்களால் கொடுக்கப்பட்டது. எனவே, இதன் மரணம் இன்று என விதிக்கப்பட்டுள்ளதன் விளைவால் இந்த உயிரினமே எனது இன்றைய உணவாகும். எனவே, ஓ! ஏகாதிபதியே {சிபியே}, அதை என்னிடம் கொடு" என்று கேட்டது {பருந்து}.
பருந்தால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {சிபி}, "எனது மக்கள் கவனமாக அந்தக்காளையை முழு உறுப்புகளுடன் உன்னிடம் கொண்டு வர அனுமதி. அந்தக் காளை, பயத்தால் துன்பப்படும் இந்த உயிரினத்துக்கு மாற்றுப் பொருளாக இருக்க அனுமதி. அது {காளை} என் கண் முன்பாகவே உன்னிடம் சுமந்து வரப்படட்டும். ஓ! இந்தப் புறாவைக் கொல்லாதே! நான் எனது உயிரைக் கொடுத்தாலும் கொடுப்பேனேயன்றி, இந்தப் புறாவை உனக்குக் கொடுக்க மாட்டேன். ஓ! பருந்தே, இந்த உயிரினம் சோமச்சாறுடன் கூடிய வேள்வியைப் போலக் காணப்படுகிறது என்பதை நீ அறியவில்லையா? ஓ! அருளப்பட்டவனே {பருந்தே}, இதற்காக இவ்வளவு சிரமப்படுவதை நிறுத்து. எக்காரணம் கொண்டும் என்னால் இந்தப் புறாவை உனக்குத் தர முடியாது. அல்லது, ஓ! பருந்தே, உனக்குத் திருப்தியானால், உனக்கு ஏற்புடைய எதையும் நான் உனக்குச் செய்ய வேண்டுமானால், அதைச் செய்வதன் மூலம் சிபி குலத்தின் மக்கள் மகிழ்வடைந்து என்னைப் பாராட்டும்படியாக இருந்தால், அக்காரியத்தை எனக்குக் கட்டளையிடு. நீ என்னை என்ன செய்யச் சொல்கிறாயோ அதைச் செய்வேன் என நான் உனக்கு உறுதியளிக்கிறேன்" என்றான் {மன்னன் சிபி}.
மன்னனின் இம்முறையீட்டைக் கேட்ட பருந்து {இந்திரன் -மன்னன் சிபியிடம்}, "ஓ! மன்னா {சிபியே}, இந்தப் புறாவின் எடைக்குச் சமமான சதையை உனது வலது தொடையில் இருந்து நீ அறுத்துத் தந்தால், இந்தப் புறா உன்னால் பாதுகாக்கப்பட்டதாகும்; அப்படிச் செய்தாயானால் எனக்குஏற்புடையதைச் செய்தவனாவாய்; சிபி குலத்தின் மனிதர்கள் உன்னைப் புகழும் வண்ணம் நடந்து கொண்டவனாவாய்" என்றது {பருந்து}.
இதற்கு உடன்பட்ட மன்னன், தனது வலது தொடையில் இருந்து சதையை அறுத்து, புறாவாக்கு எதிராக {தராசில்} நிறுத்துப் பார்த்த்தான். ஆனால் புறா எடை மிகுந்ததாக இருந்தது. அதன்பேரில் மன்னன் தனது சதையின் மற்றுமொரு பகுதியை வெட்டி எடுத்தான். இருப்பினும் புறா எடைமிக்கதாகவே இருந்தது. பிறகு அம்மன்னன் தனது உடல் முழுவதும் இருந்து சதைகளை அறுத்துத் தராசில் வைத்தான். இருந்தாலும் அந்தப் புறா அதைவிட அதிகமான எடை இருந்தது. பிறகு மன்னன் தானே தராசு தட்டில் ஏறி அமர்ந்தான். இதனால் அவன் எந்த வருத்தத்தையும் உணரவில்லை. இதைக் கண்ட பருந்து "(புறா) காக்கப்பட்டது" என்று சொல்லி மறைந்து போனது.
அம்மன்னன் {சிபி} புறாவிடம், "ஓ! புறாவே, அந்தப் பருந்து யார் என்பதை இந்த சிபிக்கள் {சிபி குல மக்கள்} அறியட்டும். அண்டத்தின் தலைவனைத் தவிர வேறு யாராலும், அவன் செய்ததைப் போலச் செய்ய முடியாது. ஓ! புனிதமானவனே, எனது கேள்விக்கான விடையைச் சொல்" என்று கேட்டான். அப்புறா, "நான் புகையைப் பதாகையாகக் {கொடியாகக்} கொண்ட வைஸ்வநரன் என்று அழைக்கப்படும் அக்னியாவேன். வஜ்ரம் தாங்கிய சச்சியின் தலைவனே {இந்திரனே} பருந்தாக வந்தான். ஓ! சுரதையின் மகனே {மன்னன் சிபியே}, நீ மனிதர்களில் காளையாவாய். நாங்கள் உன்னை நன்கு அறியவே வந்தோம். ஓ! மன்னா {சிபியே}, என்னைக் காப்பதற்காக இந்த உனது உடலில் இருந்து இந்தச் சதைத்துண்டுகள் வாள் கொண்டு அறுத்து எடுக்கப்பட்டதால் உனது உடலில் வெட்டுக்காயங்களை உண்டாக்கிவிட்டன. நான் இந்தக் குறிகளை {காயக்குறிகள் இருக்கும் இடங்களை} மங்களகரமாவையாக, அழகானவையாக, தங்க நிறம் கொண்டவையாக, இனிய நறுமணம் கொண்டவையாக ஆக்குவேன். பெரும் புகழை ஈட்டி, தேவர்களாலும் முனிவர்களாலும் மதிக்கப்பட்டு, உனது குடிகளை நீண்ட காலம் ஆள்வாய். உனது விலாவில் இருந்து கபோதரோமன் என்ற பெயர் கொண்ட மகன் உதிப்பான். ஓ! மன்னா. நீ கபோதரோமன் என்ற பெயர் கொண்ட மகனை உனது உடலில் இருந்து பெறுவாய். அவன் {கபோதரோமன்} சுரதை குலத்தவரில் முதன்மையானவனாக, வீரனாகப் பெரும் அழகு படைத்தவனாகத் திகழ்வதைக் காண்பாய்.
இதே கதையை லோமசர் யுதிஷ்டிரனுக்கு வனபர்வத்தின் 131வது பகுதியில் சொல்கிறார். அதன் லிங்க்-link இதோ - புறாவுக்குத் தசையீந்த உசீநரன்! - வனபர்வம் பகுதி 131
இரு கதைகளுக்கும் சில பல வேறுபாடுகள் இருக்கின்றன.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.