Indradyumna! | Vana Parva - Section 198 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
சொர்க்கத்திலிருந்து விழுந்த இந்திரத்யும்னனை, ஆந்தையிடம் மார்க்கண்டேயர் அழைத்துச் செல்வது; ஆந்தை அவர்கள் இருவரையும் கொக்கிடம் அழைத்துச் சென்றது; கொக்கு ஆமையை அழைத்து "இந்திரத்யும்னன் யார்?" என்பதைக் கேட்பது; இந்திரத்யும்னன் மீண்டும் சொர்க்கமடைவது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டுவின் மகன்களும் {பாண்டவர்களும்}, முனிவர்களும் மார்க்கண்டேயரிடம், "உம்மைவிட நீண்ட வாழ்நாள் {ஆயுள்} அருளப்பட்டவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா?" என்று கேட்டனர். மார்க்கண்டேயர், "சந்தேகமற நிச்சயம் இருக்கிறார்கள். இந்திரத்யும்னன் என்ற பெயர்படைத்த ஒரு அரசமுனி, அறம் குறைந்ததால், "எனது சாதனைகள் அனைத்தும் தொலைந்தன" என்று கதறியவாறு சொர்க்கத்தில் இருந்து விழுந்தான். பிறகு அவன் {அரசமுனி இந்திரத்யும்னன்} என்னிடம் வந்து, "என்னை அறிவீரா?" என்று கேட்டான். நான் அவனிடம் {இந்திரத்யும்னனிடம்}, "அறத்தகுதியை அடையும் ஆவலில் நாங்கள் எங்களை எந்த வீட்டிற்குள்ளேயும் அடைத்து வைத்துக் கொள்வதில்லை. ஒரே கிராமத்திலோ, நகரத்திலோ {அதிகபட்சம்} ஒரு இரவு மட்டுமே வாழ்கிறோம். எனவே, எங்களைப் போன்றோர், உன்னை அறிய முடியாது. நாங்கள் நோற்கும் நோன்புகளும் உறுதிகளும் எங்களை உடலால் பலவீனமடையச் செய்கிறது. அதனால் எங்களால் உலகம் சார்ந்த எந்தக் காரியத்தையும், சொந்தமாக அறிந்து கொள்ள முடிவதில்லை. எனவே, எங்களைப் போன்ற ஒருவன், உன்னை அறிந்திருப்பது இயலாது" என்றார் {மார்க்கண்டேயர்}.
பிறகு அவன் {அரசமுனி இந்திரத்யும்னன்} என்னிடம் {மார்க்கண்டேயரிடம்}, "உம்மைவிட நீண்ட நாள் வாழ்ந்தவர் யாருமுண்டா?" என்று கேட்டான். நான் அவனிடம் {இந்திரத்யும்னனிடம்}, "இமயமலையில் பிராவாரகர்ணன் என்ற ஒரு ஆந்தை வாழ்கிறது. அது என்னைவிட முதிர்ந்தது. அது உன்னை அறிந்திருக்கலாம். இமயமலையில் அது வசிக்கும் பகுதி இங்கிருந்து மிகத் தொலைவில் உள்ளது" என்றேன். பிறகு அந்த இந்திரத்யும்னன் குதிரையாக மாறி, அந்த ஆந்தை வாழுமிடத்திற்கு என்னைச் சுமந்து சென்றான். அம்மன்னன் {இந்திரத்யும்னன்} அந்த ஆந்தையிடம், "நீ என்னை அறிவாயா?" என்று கேட்டான். அந்த ஆந்தை ஒருக்கணம் {ஒரு முகூர்த்த காலம் என்றும் சொல்லப்படுகிறது} யோசிப்பது போலத் தெரிந்தது. பிறகு, அது {ஆந்தையானது}, மன்னனிடம் {இந்திரத்யும்னனிடம்}, "நான் உன்னை அறியேன்" என்றது. அதன்பிறகு அந்த அரசமுனி இந்திரத்யும்னன், அந்த ஆந்தையிடம், "உன்னைவிட வயது முதிர்ந்தவர் வேறு யாரும் உள்ளனரா?" என்று கேட்டான். அதற்கு அந்த ஆந்தை, "இந்திரத்யும்னம் என்ற பெயரில் ஒரு தடாகம் இருக்கிறது. அந்தத் தடாகத்தில் நாதீஜங்கம் என்ற பெயரில் ஒரு கொக்கு வசிக்கிறது. அது எங்களை விட முதிர்ந்தது, நீர் அதனிடம் கேட்கலாம்" என்றது {ஆந்தை}.
இதன் பேரில் மன்னன் இந்திரத்யும்னன் என்னையும், ஆந்தையையும் சுமந்து கொண்டு நாதீஜங்கம் என்ற கொக்கு வசித்த தடாகத்திற்குச் சென்றான். நாங்கள் அந்தக் கொக்கிடம், "நீ மன்னன் இந்திரத்யும்னனை அறிவாயா?" என்று கேட்டோம். அதற்கு அந்தக் கொக்கும் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, "நான் மன்னன் இந்திரத்யும்னனை அறியேன்" என்றது. நாங்கள் அந்தக் கொக்கிடம், "உன்னை விட வயது முதிர்ந்தவர் யாராவது இருக்கின்றனரா?" என்று கேட்டோம். அதற்கு அது {அந்தக் கொக்கு}, "இதே தடாகத்திலேயே வசிக்கும் அகூபாரம் என்ற பெயர் கொண்ட ஆமை வசிக்கிறது. அது என்னைவிட முதிர்ந்தது. இம்மன்னனை {இந்திரத்யும்னனைக்} குறித்து அது அறிந்திருக்கலாம். எனவே அகூபாரத்தை விசாரியுங்கள்" என்று சொல்லி, ஆமையிடம் சென்று, "நாங்கள் உன்னிடம் ஒன்றைக் கேட்க நினைக்கிறோம். தயவு செய்து எங்களிடம் வா" என்றது.
இதைக் கேட்ட ஆமையும் தடாகத்தில் இருந்து வெளியே வந்து, நாங்கள் இருந்த கரையின் அந்தப்பகுதிக்கு வந்தது. அது {அகூபாரம் என்ற ஆமையானது} அந்த இடத்திற்கு வந்ததும் நாங்கள் அதனிடம், "நீ மன்னன் இந்திரத்யும்னனை அறிவாயா?" என்று கேட்டோம். அந்த ஆமை சிறிது நேரம் சிந்தித்தது. அதன் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன. இதய வருத்தத்துடன் நடுங்கியவாறு தனது உணர்வை இழக்கும் நிலைக்குச் சென்றது. பிறகு அது {அகூபாரம் என்ற ஆமையானது} கூப்பிய கரங்களுடன், "ஐயோ, நான் இவனை அறிய மாட்டேனா? வேள்வி நெருப்புக் கிண்டப்படும்போது ஆயிரம் முறை வேள்விக்குச்சிகளை {யூபஸ்தம்பங்களை} இவன் இங்கு நட்டிருக்கிறான். வேள்வியின் முடிவில் இவன் அந்தணர்களுக்குத் தானமளித்த பசுக்களின் குளம்படிகளால் தோண்டப்பட்டதே இத்தடாகம். நான் அதுமுதல் இங்கேயே வாழ்கிறேன்" என்றது {ஆமை}.
இவையனைத்தையும் ஆமை சொன்ன பிறகு, அங்கே தெய்வீக உலகங்களில் இருந்து ஒரு தேர் வந்தது. வானத்திலிருந்து ஒரு குரல் இந்திரத்யும்னனிடம், "வா, சொர்க்கத்தில் உனக்குத் தகுதியான இடத்தைப் பெறு! உனது சாதனைகள் பெரியன! உனது இடத்திற்கு நீ உற்சாகமாக வா!" என்றது.
இங்கே குறிப்பிட்ட செய்யுட்கள் {ஸ்லோகங்கள்} வருகின்றன. "அறச் செயல்களில் அறிக்கை உலகத்தில் பரவி சொர்க்கத்தை அடைகிறது. அந்த அறிக்கை எவ்வளவு காலம் நீடித்திருக்குமோ, அவ்வளவு காலம் அந்த அறச்செயலைச் செய்தவன் சொர்க்கத்தில் இருப்பான். ஒரு மனிதனின் தீச்செயல்கள் வதந்தியாகப் பரவும்போது, அவன் விழுந்து அந்தத் தீச்செயலின் அறிக்கை நீடிக்கும்வரை தாழ்ந்த உலகங்களிலேயே நீடிப்பான் என்று சொல்லப்படுகிறது. எனவே, சொர்க்கத்தை அடைய விரும்பும் மனிதன் தனது செயல்களில் அறத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அவன் பாவம்நிறைந்த இதயத்தைக் {மனதைக்} கைவிட்டு அறத்திடம் தஞ்சமடைய வேண்டும்" {என்பதே அச்சுலோகங்கள்}
இங்கே குறிப்பிட்ட செய்யுட்கள் {ஸ்லோகங்கள்} வருகின்றன. "அறச் செயல்களில் அறிக்கை உலகத்தில் பரவி சொர்க்கத்தை அடைகிறது. அந்த அறிக்கை எவ்வளவு காலம் நீடித்திருக்குமோ, அவ்வளவு காலம் அந்த அறச்செயலைச் செய்தவன் சொர்க்கத்தில் இருப்பான். ஒரு மனிதனின் தீச்செயல்கள் வதந்தியாகப் பரவும்போது, அவன் விழுந்து அந்தத் தீச்செயலின் அறிக்கை நீடிக்கும்வரை தாழ்ந்த உலகங்களிலேயே நீடிப்பான் என்று சொல்லப்படுகிறது. எனவே, சொர்க்கத்தை அடைய விரும்பும் மனிதன் தனது செயல்களில் அறத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அவன் பாவம்நிறைந்த இதயத்தைக் {மனதைக்} கைவிட்டு அறத்திடம் தஞ்சமடைய வேண்டும்" {என்பதே அச்சுலோகங்கள்}
இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {இந்திரத்யும்னன்}, "முதிர்ந்தவர்களான இவர்களை அவர்கள் இருப்பிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் வரை இந்தத் தேர் இங்கேயே நிற்கட்டும்" என்றான். பிறகு என்னையும், ஆந்தையான பிராவாரகர்ணனையும் எங்களுக்கு உரிய இடங்களில் விட்டுவிட்டு, அவன் {மன்னன் இந்திரத்யும்னன்} அந்தத் தேரில் பயணித்து, தனக்குத் தகுதியான இடத்தை அடைந்தான். நீண்ட வாழ்நாள் வாழ்ந்துள்ளதால், நான் இவை அனைத்தையும் சாட்சியாகக் கண்டேன்" என்றார் {மார்க்கண்டேயர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படியே மார்க்கண்டேயர் அனைத்தையும் பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} விவரித்தார். மார்க்கண்டேயர் முடித்ததும், பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, "நீர் அருளப்பட்டு இரும்! சொர்க்கத்திலிருந்து விழுந்திருந்த மன்னன் இந்திரத்யும்னனைச் சரியாகச் செயல்படச் செய்து, அவனது இடத்தை மீட்டெடுக்கச் செய்தீர்!" என்றனர். மார்க்கண்டேயர், "தேவகியின் மகனான கிருஷ்ணனும், நரகத்தில் மூழ்கிய நிருகன் என்ற அரசமுனியை இப்படியே எழுப்பி, அவனை {நிருகனை} சொர்க்கத்தை அடையச் செய்தான்!" என்றார் {மார்க்கண்டேயர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.