Giving food is the best charity ! | Vana Parva - Section 199a | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
யாருக்குத் தானம் செய்யலாம் யாருக்குச் செய்யக்கூடாது, அன்னதானத்தின் மகிமை ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னன் யுதிஷ்டிரன், சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம், அரசமுனியான இந்திரத்யும்னன் சொர்க்கத்தை மீண்டும் அடைந்த கதையைக் கேட்ட பிறகு, அவன் {யுதிஷ்டிரன்} முனிவரிடம் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! பெரும் முனிவரே {மார்க்கண்டேயரே}, இந்திரனின் உலகங்களுக்குள் அனுமதி பெற்று ஒரு மனிதன், எப்படிப்பட்ட நிலைமைகளில் தானம் கொடுக்க வேண்டும்? ஒருவன் தானம் செய்து, அதன் பலன்களை எந்த வாழ்நிலைகளில் அனுபவிக்கிறான்? இல்லற வாழ்விலா? பிள்ளைப்பருவத்திலா?, இளமையிலா? முதுமையிலா?" என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "பயனற்ற வாழ்வு நான்கு{4} வகைப்படும். பயனற்ற தானம் பதினாறு{16} வகைப்படும்.
மகனில்லாதவன் வாழ்வு பயனற்றது {1};
அறம் வழுவுபவர்கள் வாழ்வு பயனற்றது {2);
அடுத்தவன் உணவில் வாழ்பவன் வாழ்வு பயனற்றது {3};
கடைசியாக, தனக்காக மட்டுமே சமைத்து, பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் உணவளிக்காமல், அவர்களுக்கு முன்பாக உணவருந்துபவன் வாழ்வும் பயனற்றது {4}.
மகனில்லாதவன் வாழ்வு பயனற்றது {1};
அறம் வழுவுபவர்கள் வாழ்வு பயனற்றது {2);
அடுத்தவன் உணவில் வாழ்பவன் வாழ்வு பயனற்றது {3};
கடைசியாக, தனக்காக மட்டுமே சமைத்து, பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் உணவளிக்காமல், அவர்களுக்கு முன்பாக உணவருந்துபவன் வாழ்வும் பயனற்றது {4}.
அறநோன்புகள் பயில்வதிலிருந்து விழுந்தவனுக்குச் செய்யப்படும் தானம் {1}, தவறாக ஈட்டிய செல்வத்தில் செய்யப்படும் தானம் {2} ஆகிய இரண்டும் பயனற்றதே. விழுந்த {அறம் வழுவிய} பிராமணன் {3}, திருடன் {4}, போலி ஆசான் {5} ஆகியோருக்குச் செய்யப்படும் தானமும் பயனற்றதே. பொய்யன் {6}, பாவி {7}, நன்றியில்லாதவன் {8}, கிராமத்தில் வசிக்கும் அனைத்து வகை மக்களுக்கும் வேள்வி செய்து கொடுப்பவன் {9}, வேதங்களை விற்பவன் 1 {10}, சூத்திரனுக்காகச் சமைப்பவன் {11}, பிறப்பால் அந்தணனாக இருந்து, தனது வகைக்குரிய தொழிலைச் செய்யாதவன் {12}, ஆகியோருக்கு அளிக்கப்படும் தானம் பயனற்றதே. ஒரு பெண் பூப்படைந்த பின்னர்த் திருமணம் செய்து கொள்பவன் {The one that has married a girl after the accession of puberty } {13}, பெண்கள் {14}, பாம்புடன் விளையாடுபவன் {15}, வீட்டு ஊழியம் செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன் {16} ஆகியோருக்குச் செய்யப்படும் தானமும் பயனற்றதே. இந்தப் பதினாறு {16} வகைத் தானங்களும் எச்சிறப்பையும் {எந்த பலனையும்} கொடுக்காது.
மனதில் இருள் சூழ்ந்த {அஞ்ஞானம் கொண்ட} மனிதன் ஒருவன், அச்சத்தாலோ, கோபத்தாலோ தானமளித்தால், தாயின் கருவறைக்குள் இருந்து அத்தகு தானத்திற்கான பலனை அனுபவிப்பது போல அனுபவிப்பான் {அதனால் எந்தப் பலனும் இருக்காது}. {எச்சூழ்நிலையிலும்} ஒரு மனிதன் அந்தணர்களுக்குத் தானமளித்தால், அவன் தனது முதிர்ந்த வயதில் அதன் கனியைச் சுவைக்கிறான். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சொர்க்கத்தின் வழியை அடைய வேண்டும் என்று விரும்பும் ஒருவன், எந்தச் சூழ்நிலையானாலும், தான் விரும்பும் அனைத்தையும் அந்தணர்களுக்குக் கொடுக்கலாம்" என்றார் {மார்க்கண்டேயர்}.
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "நால்வகை மனிதர்களிடமும் தானமேற்கும் அந்தணர்கள், அடுத்தவர்களையும் தங்களையும் எவ்வழியில் பாதுகாக்கிறார்கள்?" என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஜபம் 2, மந்திரங்கள் 3, ஹோமம் 4, வேத கல்வி ஆகியவற்றின் மூலம் அந்தணர்கள் ஒரு வேதப் படகைக் 5 கட்டுகிறார்கள். அதைக் கொண்டு, அவர்கள் தங்களையும் பிறரையும் காக்கின்றனர். அந்தணர்களைத் திருப்திசெய்யும் மனிதனிடம் தேவர்களும் திருப்தி அடைகிறார்கள். உண்மையில், ஓர் மனிதன், ஓர் அந்தணனின் கட்டளையின் பேரிலேயே சொர்க்கத்தை அடைகிறான்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உனது உடல் கபம் {சளி} உண்டுபண்ணும் மந்தமான சிலேத்தும உடலாகவே இருந்தாலும் கூட, நீ பித்ருக்கள், தேவர்கள் ஆகியோரை வழிபடுவதாலும், அந்தணர்களை மதிப்பதாலும், நிச்சயம் நித்திய அருள் இருக்கும் உலகங்களை நீ அடைவாய். அறத்தையும், சொர்க்கத்தையும் விரும்புபவன் அந்தணர்களைப் வணங்க வேண்டும். ஒருவன் சிரத்தங்களின் {சிரார்த்தங்களின்} போது, சபிக்கப்பட்டவர்களையும், விழுந்தவர்களையும் விலக்கினாலும்கூட, அந்தணர்களுக்குக் கவனமாக உணவளிக்க வேண்டும். அதீத வெள்ளையாக, அதீத கருப்பாக இருப்பவர்களையும், நோய்ப்பட்ட நகங்கள் {சொத்தை நகங்கள்} கொண்டோரையும், குஷ்டரோகிகளையும், ஏமாற்றுக்காரர்களையும், கைம்பெண்களுக்கோ, உயிருடன் இருக்கும் பல கணவர்களைக் கொண்ட பெண்ணுக்கோ முறைகேடாகப் பிறந்தவர்களையும், பிச்சை எடுத்துத் தங்களைத் தாங்கிக் கொள்பவர்களையும் {சிரார்த்தங்களின் போதும்} கவனமாக விலக்க வேண்டும். கண்டிக்கத்தக்க சிரார்த்தங்கள், அதைச் செய்யும் ஒருவனை எரிபொருளை உட்கொள்ளும் நெருப்பைப் போல உட்கொண்டுவிடும். சிரார்த்தங்களில் ஈடுபடுவோர், ஊமையாகவோ, குருடாகவோ, செவிடாகவோ இருந்தால், அவர்களுடன் வேதமறிந்த அந்தணர்கள் உடனிருப்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும்.
ஓ! யுதிஷ்டிரா, நீ யாருக்குத் தானமளிக்க வேண்டும் என்பதைச் சொல்கிறேன் கேள். வேதங்கள் அனைத்தையும் அறிந்தவன், எந்த அந்தணன், தானமளிப்பவனையும் தன்னையும் காப்பானோ அவனுக்குத் தானம் அளிக்க வேண்டும். எவன் கொடுப்பவனையும், தன்னையும் கரையேற்றுவானோ அந்தச் சக்தி உள்ளவனுக்கே தானமளிக்க வேண்டும். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, விருந்தினரை உபசரிப்பது என்ற தெளிந்த நெய்யை ஏற்பதைப் போல, மலர்கள், சந்தனம், மற்றும் பிற நறுமணப் பொருட்களைப் புனித நெருப்பு ஏற்பதில்லை. எனவே, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, நீ விருந்தினர்களை உபசரிக்க முயல வேண்டும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, விருந்தினர்கள் தங்கள் பாதங்களைக் கழுவி கொள்ள நீர் கொடுப்பது, (களைத்த) தங்கள் கால்களில் தடவி கொள்ள நெய் கொடுப்பது, இருள் நிறைந்த நேரங்களில் ஒளி கொடுப்பது, உணவு மற்றும் உறைவிடம் கொடுப்பது ஆகியவற்றைச் செய்யும் மனிதன் யமனிடம் செல்ல வேண்டியதில்லை. தேவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மலர்க்காணிக்கைகளை (வழிபாட்டிற்குப் பிறகு) அகற்றல், அந்தணன் உண்ட மிச்சத்தை அகற்றல், (ஒரு அந்தணனுக்காக) நறுமணத் தைலங்களுடன் காத்திருதல், அந்தணனின் உறுப்புகளைப் பிடித்துவிடல் ஆகிய ஒவ்வொன்றும், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, பசுதானத்தைவிட {பலன் கொடுக்கும்} தகுதியால் அதிகமானவை.
கபில பசுவை {காராம்பசுவை} தானமளிப்பவன், சந்தேகமற தன்னைக் காத்துக் கொள்கிறான். எனவே, ஒருவன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கபில பசுவை {காராம்பசுவை} அந்தணர்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். ஓ! பரதக் குலத்தவனே {யுதிஷ்டிரனே}, ஒருவன் நல்ல குலத்தில் பிறந்தவனுக்கும், வேதங்களை அறிந்தவனுக்கும், ஏழ்மையானவனுக்கும், மனைவி மக்கள் என்ற சுமையுடன் வாழும் இல்லற வாழ்வு வாழ்பவனுக்கும், தினமும் புனித நெருப்பை வணங்குபவனுக்கும், உனக்கு எந்தச் சேவையும் செய்யாதவனுக்கும் தானமளிக்க வேண்டும். நீ எப்போதும் இது போன்றவர்களுக்கே கொடுக்க வேண்டும். செழிப்புடன் இருப்பவர்களுக்குக் கொடுக்கக்கூடாது. ஓ! பரதக் குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, செழிப்பானவனுக்குக் கொடுப்பதில் என்ன தகுதி உண்டாகும்?
ஒரு அந்தணருக்கு ஒரு பசுக் கொடுக்கப்பட {தானம் செய்ய} வேண்டும். ஒரே பசுவை பலருக்குக் கொடுக்கக்கூடாது {தானம் செய்யக்கூடாது}. அப்படி ஒரு பசு (பலருக்கு) கொடுக்கப்பட்டால், அது விற்கப்படும்போது, தானமளித்தவன் தனது மூன்று தலைமுறைகளை இழக்கிறான். அப்படிப்பட்ட தானம், தானமளிப்பவனையோ, அதைப் பெறும் அந்தணரையோ பாதுகாப்பதில்லை. ஒருவன் எண்பது ரத்திக்கள் 6 தங்கத்தைத் தானமளித்தால், அது எப்போதும் நூறு தங்கக்கட்டிகளைத் தானமகளித்த தகுதியை ஈட்டிக் கொடுக்கும். ஏர் கலப்பையை இழுக்கும் திறம் பெற்ற பலம் வாய்ந்த காளையைத் தானமளிப்பவன், அனைத்து சிரமங்களிலிருந்தும் {துன்பங்களிலிருந்தும்} விடுபட்டு, கடைசியாகச் சொர்க்கத்தை அடைவான் என்பது நிச்சயம். கற்ற அந்தணனருக்கு நிலத்தைத் தானம் அளிப்பவன், தனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறப்பட்டவனாவான். கால்கள் அழுக்கடைந்து, பலவீனமடைந்த உறுப்புகளைக் கொண்ட களைத்த பயணி, தனக்கு உணவு தரக்கூடியவனின் பெயரைக் கேட்பான். அவனுக்குப் பெயரைச் சொல்லும் மனிதர்கள் உண்டு. அப்படிக் களைத்துப் போய் வருபவனுக்கு, உணவு தருபவன் பெயரைச் சொல்லும் விவேகி, உணவைத் தானமளிப்பவன் அடையும் அதே அளவு தகுதியை அடைவான்.
எனவே நீ, பிற வகைத் தானங்களைத் தவிர்த்து உணவைத் தானமாகக் கொடு {அன்னதானம் செய்}. உணவைத் தானம் செய்வதில் கிடைப்பதை விட (தானங்களால் எழும்} பெரிய தகுதிகள் கிடைப்பதில்லை. தனது சக்திக்குட்பட்டு ஒருவன் நன்கு சமைத்த சுத்தமான உணவைக் கொடுப்பானானால், அவனது செயலின் பலனாகப் பிரஜாபதியின் (பிரம்மனின்) தோழமையைப் பெறுகிறான். உணவை விட உயர்ந்தது எதுவுமில்லை. எனவே, உணவே {தானமளிக்கப்படுவதில்} முதன்மையானதாக, அனைத்துப் பொருட்களுக்கும் முதன்மையானதாகக் கொள்ளப்படுகிறது. உணவே பிரஜாபதிதான் என்றும் சொல்லப்படுகிறது. பிரஜாபதியே வருடமாகக் கருதப்படுகிறான். வருடமே வேள்வி. அனைத்தும் வேள்வியிலேயே நிலைபெற்றிருக்கின்றன. வேள்வியினாலே அனைத்து உயிரினங்களும், அசைவன மற்றும் அசையாதனவும் தங்கள் பிறப்பை அடைகின்றன. இதன் காரணமாகவே, உணவு அனைத்திலும் முதன்மையானது என்று நாம் கேள்விப்படுகிறோம். தடாகங்களையும், பெரும் நீர்நிலைகளையும், குளங்களையும், கிணறுகளையும், உறைவிடம் மற்றும் உணவையும் தானமளிப்பவனும், இனிமையான வார்த்தைகளைப் பேசுபவனும் யமனின் எச்சரிக்கைகளைக் கேட்க மாட்டார்கள் {யமன் எச்சரிக்கமாட்டான்}. எவன் தனது உழைப்பால் ஈட்டிய அரிசியையும், செல்வத்தையும், நன்னடத்தைக் கொண்ட அந்தணனுக்குத் தானமளிப்பானோ அவனிடம் இந்தப் பூமி திருப்தியுடன் இருக்கிறாள். அவள் அவன் மீது செல்வத்தைப் பொழிகிறாள். உணவைத் தானமளிப்பவன் {அன்னதானம் செய்பவன்} முதலில் நடக்கிறான், அவனுக்குப் பின்னால் உண்மை பேசுபவனும், கோராத நபர்களுக்குத் தானமளிப்பவனும் நடக்கிறார்கள். ஆனால் அந்த மூவரும் ஒரே இடத்திற்கே செல்கிறார்கள்" என்றார் {மார்க்கண்டேயர்}
1. வேதங்களைச் சொல்லி {வேதங்களைக்} கேட்பவர்களிடம் கூலி கேட்பவன்.↩
2. குறிப்பிட்ட மந்திரங்களை அமைதியாகச் சொல்வது. ↩
3. வழிபடுவதற்கு ஏற்ற குறிப்பிட்ட வகைச் சூத்திரம். அவை பெரும்பாலும் தாளத்தோடு கூடியதாக இருக்கும். இவை பெரும் சக்தி மிக்கவை என்று நம்பப்படுகிறது.↩
4. நெருப்பில் தெளிந்த நெய்யை ஊற்றும் வேள்விச் சடங்கு.↩
5. வேதமாயிநௌ =Vedamayi nou=வேதங்களாலான படகு.↩
6. {http://en.wikipedia.org/wiki/Ratti : 1 ரத்தி = 0.12125 கிராம், 8 ரத்தி = 1 கிராம், எனவே 80 ரத்திகள் = 10 கிராம் = 1.25 சவரன்}↩
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.