The distance to Yamaloka! | Vana Parva - Section 199b | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
யமலோகம் செல்லும் பாதையில் யார் யார் எப்படிச் செல்வார்கள் என்றும், அறம் மற்றும் அறநெறிகள் குறித்தும் மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவை யாவையும் தனது தம்பிகளுடன் சேர்ந்து கேட்ட யுதிஷ்டிரன், ஆவலால் உந்தப்பட்டு, மீண்டும் உயர் ஆன்ம மார்க்கண்டேயரிடம், "ஓ! பெரும் முனிவரே {மார்க்கண்டேயரே}, மனிதர்களின் உலகிலிருந்து யமனின் உலகம் இருக்கும் தூரம் எவ்வளவு? அதன் அளவு என்ன? எப்படி மனிதர்கள் அதைக் கடக்கிறார்கள்? எதன் மூலம் {கடப்பார்கள்}? ஓ! அனைத்தையும் எனக்குச் சொல்லும்!" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடன்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஓ! அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவர்களே, உங்கள் கேள்வி, ஒரு பெரும் மர்மத்துக்குத் தொடர்புடையது. அது புனிதமானது, முனிவர்களால் பாராட்டப்படுகிறது. இது அறம்சார்ந்ததும் ஆகும்; ஆகையால் நான் அது குறித்து உன்னிடம் பேசுவேன். மனிதர்களின் வசிப்பிடத்திலிருந்து யமனின் உலகம், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எண்பத்தாறாயிரம் {86,000} யோஜனையாகும்! அந்த வழி ஆகாயத்து மேல் இருக்கிறது. {அவ்வழியில்} நீரில்லாமல் காணப் பயங்கரமாக இருக்கும்; அச்சாலையில் எங்கும் மரத்தின் நிழலோ, நீரோ, களைத்துப் போன பயணி சிறிது நேரம் ஓய்வெடுக்கும்படியான இடமோ இருக்காது. பூமியில் உயிருடன் இருக்கும் ஆண், பெண் என அனைவரும் யமனின் தூதுவர்களால் வலுக்கட்டாயமாக அவ்வழியில் அனுப்பப்படுகிறார்கள்.
கடும் மன்னனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தணர்களுக்குக் குதிரைகளும், இன்ன பிற வசதிகளை {வாகனங்களை} தானம் செய்தவர்கள், அந்த வழியில், அந்த விலங்குகள் அல்லது வாகனங்கள் மேல் செல்கிறார்கள். குடை கொடுத்தவர்கள், அந்த நீண்ட வழியில் சூரியக் கதிர்களைக் குடைகளால் புறம்தள்ளி செல்கிறார்கள். உணவைத் தானமாகக் கொடுத்தவர்கள், பசியில்லாமல் செல்கிறார்கள், உணவை தானம் கொடுக்காதவர்களோ பசியால் துன்பப்பட்டுச் செல்கிறார்கள். ஆடைகளைக் கொடுத்தவர்கள், அவ்வழியில் செல்லும்போது நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆடைகளுடன் செல்கிறார்கள். ஆடைகள் கொடுக்காதவர்கள் நிர்வாணமாகச் செல்கின்றனர். தங்கத்தைத் தானமாகக் கொடுத்தவர்கள், ஆபரணங்கள் பூண்டு மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள். நிலம் கொடுத்தவர்கள், தங்கள் அனைத்து விருப்பங்களும் ஈடேறிச் செல்கிறார்கள். தானியங்களைக் கொடுத்தவர்கள், எந்தத் தேவையுமில்லாமல், எந்தத் துயரமும் இல்லாமல் செல்கிறார்கள். வீடுகளைக் கொடுத்தவர்கள், மகிழ்ச்சிகரமாகத் தேர்களில் செல்கிறார்கள். குடிக்க ஏதாவது கொடுத்த மனிதர்கள், தாகத்தால் துயரடையாமல் மகிழ்ச்சியான இதயங்களுடன் செல்கின்றனர். விளக்குகள் கொடுத்தவர்கள், தங்கள் முன்பு செல்லும் பாதை பிரகாசிக்கச் செல்கிறார்கள். பசுக்களைத் தானம் கொடுத்தவர்கள், தங்கள் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு மகிழ்ச்சியாகச் செல்கிறார்கள்.
ஒரு மாதம் உண்ணாநோன்பு {உபவாசம்} இருந்தவர்கள், அன்னங்களால் இழுக்கப்படும் தேரில் செல்கிறார்கள். ஆறு இரவுகள் உண்ணா நோன்பிருந்தவர்கள் மயில்களால் இழுக்கப்படும் தேரில் செல்கிறார்கள். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, ஒரு வேளை மட்டும் உண்டு, இடைவேளைகளில் உண்ணாமல் மூன்று இரவுகளைக் கழிப்பவன், நோயிலிருந்தும், துயரத்தில் இருந்து விடுபட்ட உலகத்திற்குச் செல்கிறான். யமனின் உலகத்தில் மகிழ்ச்சியை உண்டு பண்ணும் அற்புத குணம் நீருக்கு இருக்கிறது. நீரை தானமாகக் கொடுத்தவர்கள், அங்கே புஷ்போதகை என்ற பெயர் கொண்ட ஆற்றை அடைகிறார்கள். இவ்வுலகில் நீரைத் தானம் செய்தவர்கள், அந்த ஊற்றில் குளிர்ந்த அமுதம் போன்ற நீரைப் பருகுகிறார்கள். தீச்செயல்கள் செய்தவர்களுக்கு அங்கே சீழை {சீழ்} அடைகிறார்கள். இப்படியே, ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஆறு அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றுகிறது. எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (உன்னிடம் இருக்கும்) அந்தணர்களை உரிய முறையில் வணங்கு.
தான் நடந்த பாதையின் தூரத்தால் உறுப்புகள் பலவீனமடைந்து, நெடுஞ்சாலையின் புழுதி தன்மேல் பூசப்பட்டுச் செல்லும் ஒரு பயணி, அன்னதானம் செய்பவர் யார் என்று கேட்டு, நம்பிக்கையுடன் வீட்டுக்கு வருகிறான். அவனை மரியாதை மிகுந்த கவனிப்புடன் வணங்கு. உண்மையில் அவனே விருந்தினன்; அவனே அந்தணன் {பிராமணன்}. இந்திரனுடன் கூடிய தேவர்கள் அவனுக்கு முன்னே செல்கிறார்கள். அவன் வணங்கப்பட்டால், இந்திரனுடன் கூடிய தேவர்கள் திருப்தியடைகிறார்கள். அவன் வணங்கப்படாவிட்டால், தங்கள் தலைவனுடன் {இந்திரனுடன்} கூடிய தேவர்கள் உற்சாகமிழக்கிறார்கள். எனவே, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே (யுதிஷ்டிரா}, இந்த அந்தணர்களை உரிய முறையில் வணங்கு. நான் உன்னிடம் நூற்றுக்கணக்கான காரியங்களைப் பேசியிருக்கிறேன். மேலும் நீ என்ன கேட்க விரும்புகிறாய்?" என்றார் {மார்க்கண்டேயர்}.
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! குருவே, நீர் அறம் மற்றும் அறநெறிகளையும் அறிந்திருக்கிறீர். எனவே நான் திரும்பத் திரும்பக் கேட்க விரும்புவது அறம் மற்றும் அறநெறிகள் சார்ந்து நீர் சொல்லும் புனிதமானவற்றையே {கதைகளையே}" என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நித்தியமான விருப்பங்கள் மற்றும் அனைத்துப் பாவங்களைக் கழுவ வல்ல வேறு புனிதமான காரியத்தை நான் இப்போது சொல்கிறேன். உன்னிப்பாகக் கேள். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கபிலப் பசுவைத் {காராம்பசுவைத்} தானம் கொடுப்பதற்குச் சமமான தகுதியைக் கொடுக்க வல்ல ஜேஷ்ட-புஷ்கரம் {என்ற தீர்த்தம்} அந்தணர்களின் பாதங்களைக் கழுவுவதால் எழுகிறது. அந்தணனின் பாதம் தொட்ட நீரால் பூமி ஈரத்தன்மையுடன் இருக்கும் வரை, தாமரை இதழ்களால் ஆன குவளைகளில் பித்ருக்கள் நீர் குடிப்பார்கள். விருந்தினன் {நலவிசாரிப்புடன்} வரவேற்கப்பட்டால், நெருப்பு {அக்னி} தேவர்கள் மகிழ்கிறார்கள். அவனுக்கு ஆசனம் அளிக்கப்பட்டால், நூறு வேள்விகளைச் செய்த தேவனே {இந்திரனே} திருப்தியடைகிறான். அவனது பாதம் கழுவப்பட்டால், பித்ருக்கள் மகிழ்கிறார்கள்; அவனுக்கு உணவளிக்கப்பட்டால் பிரஜாபதி திருப்தியடைகிறான்.
பரிசுத்தமான ஆன்மாவுடன் {இதயத்துடன்} ஒருவன், பசு (பிரசவ வேதனையில் இருக்கும்போது}, பிரசவிப்பதற்கு முன்னால், கன்றின் கால்களும் தலையும் காணப்படும்போது {அப்பசுவைத்} தானம் செய்ய வேண்டும். கருப்பையில் இருந்து பூமியில் விழும் கன்றுடன் கூடிய பசு, பூமிதேவிக்குச் சமமாகக் கருதப்படுகிறது. எனவே, அப்படிப்பட்ட பசுவை தானம் செய்யும் ஒருவன், பூமியை தானம் கொடுத்த தகுதியை அடைகிறான். அப்படிப்பட்ட ஒரு பசுவைக் கொடுக்கும் ஒருவன், பல ஆயிரம் யுகங்களுக்கு, அதாவது அந்த விலங்கு மற்றும் அதன் குட்டியின் ஆகியவற்றின் உடலில் உள்ள ரோமங்களின் அளவு கொண்ட யுகங்களுக்குத் தேவலோகத்தில் வணங்கப்படுவான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தானமாகப் பெறப்பட்ட ஒன்றை, ஒருவன், உடனே அறம்சார்ந்த, நேர்மையான வேறு ஒரு மனிதனுக்கு அதைத் தானம் செய்தால், அவன் பெரும் தகுதியை அடைகிறான். சந்தேகமற, அவன் கடல்கள், குகைகள், மலைகள், கானகங்கள், வனங்கள் சூழ அனைத்து எல்லைகளையும் கொண்ட முழு உலகத்தையும் தானம் செய்த பலனைப் பெறுகிறான்.
முழங்கால்களுக்கு நடுவே கைகளை வைத்துக் கொண்டு, தட்டிலிருந்து எடுத்து அமைதியாக உண்ணும் அந்தணன், பிறரை மீட்பதில் வெற்றியடைவான். குடிப்பதை விலக்கிய அந்தணர்களும், குறையுள்ளவர்கள் என்று யாராலும் பேசப்படாதவர்களும், தினமும் சம்ஹிதைகளைப் படிப்பவர்களும், பிறரை மீட்பதற்கு இயன்றவர்கள். வேதம் கற்ற அந்தணனுக்குப் நீர்க்காணிக்கையான {பானபலியான} நெய்யையும், சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கொடுக்க வேண்டும். நீர்க்காணிக்கையாக {பானபலியாக} நெருப்பிலிடப்பட்ட தெளிந்த நெய் வீண்போவதில்லை. அதே போல வேதம் கற்ற அறம்சார்ந்த அந்தணர்களுக்குத் தானம் கொடுப்பதும் வீண் போகாது. அந்தணர்கள் கோபத்தைத் தங்கள் ஆயுதமாகக் கொண்டிருக்கின்றனர்; அவர்கள் எப்போதும் இரும்பு, எஃகாலான ஆயுதங்கள் கொண்டு போரிடுவதில்லை. உண்மையில் இந்திரன் தனது வஜ்ரத்தைக் கொண்டு அசுரர்களைக் கொல்வது போல, அந்தணர்கள் கோபத்தைக் கொண்டு கொல்கிறார்கள். இப்படியே அறம் மற்றும் அறநெறிகள் சம்பந்தமான சொற்பொழிவு இப்போது நிறைவடைகிறது. இதைக் கேட்ட நைமிஷ வன முனிவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தார்கள். அத்தவசிகளும் இதைக் கேட்டதால் துன்பத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் விடுபட்டார்கள். இதன் தொடர்ச்சியாக அவர்கள் தங்கள் அனைத்துப் பாவங்களையும் அழித்தார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதைக் கேட்கும் மனிதர்கள், மறுபிறப்பு எனும் கடமையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்." என்றார் {மார்க்கண்டேயர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.