Utanka beheld Vishnu! | Vana Parva - Section 200 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
உதங்கரின் தவத்தைக் கண்டு திருப்தியுற்ற விஷ்ணு அவரைச் சந்தித்தல்; துந்து என்ற அசுரனைக் குறித்து உதங்கரிடம் விஷ்ணு சொல்லல் ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, அரசமுனியான இந்திரத்யும்னன் சொர்க்கமடைந்த வரலாற்றைச் சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம் இருந்து கேட்ட பாரதக் குலத்தின் காளையான யுதிஷ்டிரன் மீண்டும அந்தப் பெரும் தவத்தகுதியும், நீண்ட வாழ்நாளும் உடைய பாவமற்ற முனிவரிடம் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! அறம் சார்ந்தவரே {மார்க்கண்டேயரே}, தேவர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்களின் ஒட்டுமொத்தக்கூட்டத்தையும் நீர் அறிவீர். நீர் பலதரப்பட்ட அரச பரம்பரைகளையும், நித்திய வழி வந்த முனிவர்கள் பலரையும் அறிவீர். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, இவ்வுலகில் நீர் அறியாதது ஒன்றுமில்லை. ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, மனிதர்கள், பாம்புகள், ராட்சசர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், அப்சரசுகள் ஆகியோரின் பல கேட்பதற்கினிய கதைகளை அறிந்திருக்கிறீர். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்த ஒப்பற்ற மன்னன் குவலாஸ்வன் {Kuvalaswa} ஏன் தனது பெயரை துந்துமாரன் {Dhundhumara} என்று மாற்றிக் கொண்டான்? ஓ! பிருகு குலத்தில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}. பெரும் புத்திக்கூர்மை கொண்ட குவலாஸ்வன் ஏன் தனது பெயரை மாற்றிக் கொண்டான் என்பதை விவரமாக அறிய விரும்புகிறேன்" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படி யுதிஷ்டிரனால் கேட்கப்பட்ட பெரும் முனிவரான மார்க்கண்டேயர், ஓ! பாரதா {ஜனமேஜயா}, துந்துமாரனின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்!"
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் உனக்கு அனைத்தையும் சொல்வேன். நான் சொல்வதைக் கேள்! துந்துமாரனின் கதை அறநெறிகள் அடங்கியது. அதைக் கேள்! ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இக்ஷவாகு குலத்தைச் சார்ந்த மன்னன் குவலாஸ்வன், துந்துமாரன் என்று அறியப்படும் காரணத்தைக் கேள். ஓ! மகனே, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உதங்கர் என்ற பெயரில் கொண்டாடப்படும் முனிவர் ஒருவர் இருந்தார். ஓ! குரு குலத்தவனே {யுதிஷ்டிரா}, ஒரு இனிமையான வனத்தில் உதங்கரின் ஆசிரமம் இருந்தது. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, விஷ்ணுவின் கருணையைப் பெறுவதற்காக, முனிவர் உதங்கர் அங்கே கடுமையான தவத்தை எண்ணிலடங்கா வருடங்களுக்குச் செய்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த ஒப்பற்ற தலைவன் {விஷ்ணு} உதங்கருக்குக் காட்சியளித்தான்.
அந்தத் தெய்வத்தை {விஷ்ணுவைக்} கண்ட முனிவர் அடக்கத்துடன், அவனைத் {விஷ்ணுவைத்} திருப்தி செய்யப் பல பாடல்களைப் பாடினார். உதங்கர், "ஓ! பிரகாசம் மிக்கவனே {விஷ்ணுவே}, தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் அசைவன, அசையாதன, ஏன் பிரம்மனும், வேதங்களும் உட்பட அறியப்பட முடிந்த அனைத்து உயிரினங்களும், அனைத்துப் பொருட்களையும் நீ படைத்தவையே. ஓ! தேவா {விஷ்ணுவே}, ஆகாயமே உனது தலை, சூரியனும், சந்திரனும் உனது விழிகள்! ஓ! மங்காதவனே, காற்று உனது சுவாசம், நெருப்பு உனது சக்தி! அடிவானத்தின் திசைகள் அனைத்தும் உனது கரங்கள், பெருங்கடலே உனது வயிறு! ஓ! தேவா {விஷ்ணுவே}, குன்றுகளும் மலைகளும் உனது தொடைகள், வானம் உனது இடுப்பு, ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, பூமியே உனது பாதம், செடிகள் உனது உடலில் இருக்கும் ரோமங்களாகும். ஓ! தேவா {விஷ்ணுவே}, இந்திரன், சோமன், அக்னி, வருணன் உட்பட உண்மையில் அனைத்து தேவர்களும், அசுரர்களும், பெரும் பாம்புகளும், பலதரப்பட்ட பாடல்களால் உன்னைப் புகழ்ந்து கொண்டு உனக்காக அடக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
ஓ! அண்டத்தின் தலைவா {விஷ்ணுவே}, படைக்கப்பட்ட அனைத்திலும் நீ பரவியிருக்கிறாய் {ஊடுருவியிருக்கிறாய்}. உயர்ந்த சக்தியும், எப்போதும் தவத்தியானத்தில் மூழ்கியிருப்பவர்களுமான பெரும் முனிவர்கள் எப்போதும் உன்னை வழிபடுகிறார்கள். நீ திருப்தியடையும்போது, அண்டம் அமைதியில் இருக்கிறது. நீ கோபத்தில் இருக்கும்போதோ, அனைத்து ஆன்மாவையும் பயங்கரம் ஊடுருவுகிறது. ஓ! தலைவா {விஷ்ணுவே}, நீயே அனைத்துப் பயங்கரங்களையும் விலக்குபவன், நீயே மேன்மையானவன்! தேவர்கள் மற்றும் மனிதர்களின் மகிழ்ச்சிக்கு நீயே காரணமானவன்! ஓ! தலைவா {விஷ்ணுவே}, உனது மூவடிகளால், மூன்று உலகங்களையும் ஆக்கிரமித்தாய். அதிகாரத்தின் உச்சியில் இருந்த அசுரர்களை நீயே அழித்தாய்! ஓ! தேவா {விஷ்ணுவே}, உனது பராக்கிரமத்தினாலேயே, தேவர்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {விஷ்ணுவே}, உனது கோபமே நூற்றுக்கணக்கான பெரும் தைத்தியத் {அசுரத்} தலைவர்களை அழித்தது. நீயே படைப்பவனும், உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களையும் அழிப்பவனும் ஆவாய். உன்னை வணங்கியே தேவர்கள் மகிழ்ச்சியை அடைகின்றனர்". இப்படியே, ஓ! யுதிஷ்டிரா, உயர் ஆன்ம உதங்கர் புலன்களின் தலைவனைப் {விஷ்ணுவைப்} புகழ்ந்தார். ஆகையால், விஷ்ணு உதங்கரிடம், "நான் உன்னிடம் திருப்தி கொண்டேன். நீ விரும்பும் வரத்தைக் கேள்" என்றான். அதற்கு உதங்கர், "அண்டத்தின் தலைவனும், தெய்வீகப் படைப்பாளனும் நித்தியமானவனான ஹரியை என்னால் காண முடிந்தது. உண்மையில், இதுவே எனக்குப் பெரும் வரமாகும்!" என்றார் {உதங்கர்}.
இப்படிச் சொல்லப்பட்ட விஷ்ணு {உதங்கரிடம்}, "ஓ! மனிதர்களில் சிறந்தவனே {உதங்கா}, லாபத்தில் விருப்பமில்லாத்தன்மையையும், உனது அர்ப்பணிப்பையும் கண்டு நான் திருப்தியடைந்தேன். ஆனால், ஓ! அந்தணா, ஓ! மறுபிறப்பாளனே, நீ நிச்சயம் என்னிடம் ஒரு வரத்தைப் பெற வேண்டும்" என்றான். வரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஹரியின் {விஷ்ணுவின்} கோரிக்கையின்படி உதங்கர், ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, கரங்கள் கூப்பி ஒரு வரத்தை யாசித்தார். "ஓ! சிறப்புமிக்கவனே {விஷ்ணுவே}, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவனே, நீ என்னிடம் திருப்தியடைந்தாயானால், எனது இதயம் எப்போதும் அறம், உண்மை {சத்தியம்}, தன்னடக்கம் {சுய அடக்கம்} ஆகியவற்றைப் {உறுதியுடன்} பற்றி, எப்போதும் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கட்டும்" என்றார் {உதங்கர்}.
உதங்கின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, "ஓ! மறுபிறப்பாளனே, இவை அனைத்தும் எனது அருளால் நடைபெறும். சொர்க்கத்தில் வசிப்பவர்களுக்காவும் {தேவர்களுக்காகவும்}, மூவுலகங்களுக்காவும் நீ ஒரு பெரிய காரியத்தைச் சாதிக்க வேண்டியுள்ளது. அதற்கு உரிய யோக சக்தி உன்னிடம தோன்றும். மூவுலகங்களையும் அழிக்கும் நோக்குடன் துந்து என்ற பெயர் கொண்ட ஒரு பெரும் அசுரன் கடும் தவம் செய்து வருகிறான். அவ்வசுரனை யார் கொல்வார் என்பதைக் குறித்துக் கேள். ஓ! மகனே {உதங்கா}, ஒப்பற்ற சக்தியும், பெரும் பராக்கிரமும் கொண்ட ஒரு மன்னன் இக்ஷவாகு குலத்தில் பிருகதஸ்வன் என்ற பெயரில் அறியப்படுவான். அவன் {பிருகதஸ்வன்}, பெரும்புனிதமும், தன்னடக்கமும், புகழும், குவலாஸ்வன் என்ற பெயரும் கொண்ட மகனைப் பெறுவான். எனது யோக சக்தியில் எழும்பும் அந்த மன்னர்களில் சிறந்தவன் {குவலாஸ்வன்}, உன்னால் கட்டளையிடப்பட்டும், தூண்டப்பட்டும், ஓ! மறுபிறப்பாள முனிவா {உதங்கா}, அம்மன்னன் {குவலாஸ்வன்}, அசுரன் துந்துவைக் கொல்பவனாவான்" என்றான் {விஸ்ணு}. அந்த அந்தணரிடம் {உதங்கரிடம்} அப்படிச் சொன்ன விஷ்ணு அங்கேயே மறைந்து போனான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.