The reason for the name, Dhundhumara! | Vana Parva - Section 203 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
அசுரன் துந்து பிரம்மனிடம் வரம் பெறுவது; உதங்கரால் ஏவப்பட்டக் குவலாஸ்வன் தனது படைகளுடனும், தனது மகன்களுடனும் மணற்கடலுக்கு வருவது; குவலாஸ்வன் மகன்களைத் துந்து எரிப்பது; குவலாஸ்வன் துந்துவைக் கொல்வது; குவலாஸ்வன் துந்துமாரன் என்ற பெயரால் அழைக்கப்படுவது ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சிறப்புமிக்கத் துந்து, மதுகைடபர்களின் மகனாவான். பெரும் சக்தியும் பராக்கிரமும் கொண்ட அவன் {அசுரன் துந்து}, பெரும் துறவு நோற்று, கடும் தவம்புரிந்தான். அவன் ஒற்றைக்காலில் நின்று, வெறும் நரம்புகள் மட்டும் கொண்ட உடலாகத் தன்னைச் சுருக்கிக் கொண்டான். அவனிடம் திருப்தி கொண்ட பிரம்மன் அவனுக்கு {துந்துக்கு} ஒரு வரம் கொடுத்தான். அவன் {துந்து} தலைவனான பிரஜாபதியிடம் {பிரம்மனிடம்} கேட்ட வரம், "தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், பாம்புகள், கந்தர்வர்களில் யாராலும் நான் கொல்லப்படக்கூடாது. இதையே நான் வரமாக உம்மிடம் கேட்கிறேன்" என்பதாகும். அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, "உனது விருப்பத்தின்படியே ஆகட்டும். நீ உன் வழியே செல்" என்று மறுமொழி கூறினார்.
பெருந்தகப்பனால் {பிரம்மனால்} இப்படிச் சொல்லப்பட்ட பெரும் சக்தியும் பராக்கிரமமும் கொண்ட அந்தத் தானவன் {துந்து}, அந்தத் தெய்வத்தின் {பிரம்மனின்} காலைப் பற்றித் தனது தலையில் வைத்து, அந்தத் தெய்வத்தின் பாதங்களை மரியாதையுடன் தொட்டு தன் வழியே சென்றான். இப்படி வரத்தைப் பெற்ற துந்து, விரைவாகச் சென்று விஷ்ணுவை அணுகினான். அந்தத் தெய்வத்தால் {விஷ்ணுவால்} தனது தந்தைக்கு ஏற்பட்ட இறப்பை நினைத்து கோபத்துடன் சென்ற துந்து கந்தர்வர்களையும் தேவர்களையும் வீழ்த்தி, விஷ்ணுவின் தலைமையிலான தேவர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தினான். கடைசியாக, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அந்தத் தீய ஆன்மாவான அசுரன் {துந்து} உஜ்ஜாலகம் என்ற பெயரால் அறியப்பட்ட மணற்கடலுக்கு {பாலைவனத்திற்கு} வந்து உதங்கரின் ஆசிரமத்திற்குத் தன்னால் இயன்ற அளவுக்குத் துன்பத்தைக் கொடுக்க ஆரம்பித்தான்.
மதுகைடபர்களின் மகனான கடும் சக்தி படைத்த அந்தத் துந்து, மணலுக்கு அடியில் தனது சுரங்கக் குகைக்குள் படுத்துக் கொண்டு மூன்று உலகையும் அழிக்கும் நோக்குடன் பெரும் துறவுடன் கூடிய கடும் தவத்தைச் செய்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட உதங்க முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் கிடந்து அந்த அசுரன் {துந்து} சுவாசித்துக் கொண்டிருந்த போது, மன்னன் குவலாஸ்வன், அந்த அந்தணர் உதங்கரையும், தனது மகன்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, தனது படையுடன் அங்கே அணிவகுத்து வந்தான். மிகவும் சக்திவாய்ந்த தனது இருபத்தோராயிரம் {21,000} மகன்களுடன் எதிரிகளை அழிப்பவனான மன்னன் குவலாஸ்வன் அங்கு {உஜ்ஜாலகம் என்ற மணற்கடலுக்கு} வந்தான். உதங்கரின் கட்டளையின் பேரிலும், மூன்று உலகங்களுக்கும் நன்மை செய்யும் உந்துதலாலும் சிறப்புமிக்கத் தலைவனான விஷ்ணு, அவனை {மன்னன் குவலாஸ்வனை} தனது சக்தியால் நிறைத்தான். அந்த ஒப்பற்ற வீரன் {குவலாஸவன்} அப்படித் தனது வழியில் சென்று கொண்டிருந்த போது, வானத்தில் இருந்து ஒரு சத்தமான குரல், "அழிக்கப்பட முடியாத இந்த நற்பேறு பெற்றவன் {குவலாஸ்வன்}, இன்று துந்துவை அழிப்பவனாவான்" என்று திரும்பத் திரும்பச் சொன்னது.
தேவர்கள், அவன் {குவலாஸ்வன்} மீது பூமாரி பொழிந்தனர். யாரும் இசைக்காத போதே தெய்வீகப் பேரிகைகள் ஒலிக்கத் தொடங்கின. ஞானமிக்கவனின் {குவலாஸ்வனின்} அந்த அணிவகுப்பின் போது, குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. தேவர்களின் தலைவன் {இந்திரன்}, சாலைகளில் இருக்கும் தூசிகளை {அவை பறக்காதவாறு} நனைத்து மெல்லிய சாரலைப் பொழிந்தான். ஓ! யுதிஷ்டிரா, அசுரன் துந்து இருந்து இடத்திற்கு நேர் மேலே தேவர்களின் தேர்கள் காணப்பட்டன. ஆவலால் உந்தப்பட்ட, தேவர்கள், கந்தவர்கள் மற்றும் பெரும் முனிவர்கள் துந்துவுக்கும் குவலாஸ்வனுக்கும் இடையில் நடக்கும் மோதலைக் காண அங்கே வந்தனர். ஓ! குரு குலத்தவனே {யுதிஷ்டிரா}, நாராயணனின் சக்தியால் நிறைக்கப்பட்ட மன்னன் குவலாஸ்வன், தனது மகன்களின் துணையுடன், அந்த மணற்கடலைச் சூழ்ந்தான். அம்மன்னன் {குவலாஸ்வன்} அக்கானகத்தைத் தோண்ட ஆணையிட்டான். அம்மன்னனின் {குவலாஸ்வனின்} மகன்கள் ஏழு நாட்கள் அந்த மணற்கடலைத் தோண்டினார்கள். பிறகு, அவர்கள் அந்தப் பெரும் அசுரனான துந்துவைக் கண்டனர்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, சூரியனைப் போல தனது பெருத்த உடல் ஒளிர, அவ்வசுரன் மணலுக்குள் கிடந்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அப்பாலைவனத்தின் மேற்குப்பகுதியை மூடியவாறு கிடந்த துந்து, எல்லாப்புறங்களிலும் குவலாஸ்வனின் மகன்களால் சூழப்பட்டான். கூரிய கணைகளாலும், கதைகளாலும், கனத்த தடிகளாலும், குறுந்தடிகளாலும், கோடரிகளாலும், இரும்பு முட்களாலும், அம்புகளாலும், கூரிய முனை கொண்ட பளபளப்பான வாட்களாலும் அந்தப் பெரும் தானவன் {அவர்களால்} தாக்கப்பட்டான். இப்படி அடிக்கப்பட்ட அந்தப் பலத்த தானவன் பெரும் கோபத்துடன் சாய்ந்திருக்கும் நிலையில் இருந்து {கிடந்த கோலத்திலிருந்து} உயர்ந்து எழுந்தான். கோபத்திலிருந்த அந்த அசுரன் {துந்து} தன் மீது ஏவப்பட்ட அனைத்து ஆயுதங்களையும் விழுங்கத் தொடங்கினான். பிறகு அவை அனைத்தையும் தனது வாயிலிருந்து நெருப்புக் கோளங்களாகக் கக்கத் தொடங்கினான். அந்தச் சுடர்களைப் பார்க்க யுக முடிவின் போது தோன்றும் சம்வார்த்த நெருப்பைப் போல இருந்தது. ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா} பழங்காலத்தில் தலைவனான கபிலர், மன்னன் சகரனின் மகன்களை எரித்ததைப் போல, அவ்வசுரன் {துந்து} அந்நெருப்பால் மன்னனின் {குவலாஸ்வனின்} மகன்கள் அனைவரையும் எரித்தான். கோபம் மூண்ட அசுரன், தனது வாயிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால் மூவுலகங்களையும் மூடியபடி, இந்த அற்புதச் சாதனையை நொடிப்பொழுதில் சாதித்தான்.
ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, கோபத்தால் அசுரன் கக்கிய நெருப்பில் மன்னன் குவலாஸ்வனின் மகன்கள் அனைவரும் எரிந்து போன போது, மற்றுமொரு கும்பகர்ணனைப் போல விழித்தெழுந்த துந்துவை குவலாஸ்வன் அணுகினான். ஓ! ஏகாதிபதி, அம்மன்னனின் உடலில் இருந்து அதிக நீர் கொண்ட வலிமைமிக்க நீரோட்டம் உற்பத்தியானது. அந்நீரோட்டம் அசுரனால் வெளியிடப்பட்ட நெருப்பை அணைத்தது. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, யோக சக்தியால் நிரப்பப்பட்ட மன்னன் குவலாஸ்வன், தனது உடலில் உற்பத்தியான நீரால் அந்நெருப்பை அணைத்துவிட்டு, மூவுலகங்களின் அச்சத்தையும் போக்கும் வகையில், {அனைவராலும்} கொண்டாடப்படும் பிரம்மாயுதத்தால் {பிரம்மாஸ்திரத்தால்}, அத்தீய தைத்தியனை {அசுரன் துந்துவை} அழித்தான். தேவர்களின் எதிரியான அப்பெரும் அசுரனை அவ்வாயுதம் {பிரம்மாஸ்திரம்} கொண்டு எரித்ததால், அவன் {குவலாஸ்வன்} மூன்று உலகத்துக்கும் இரண்டாவது தலைவனைப் போல விளங்கினான். அசுரன் துந்துவைக் கொன்ற அந்த உயர் ஆன்ம மன்னன் குவலாஸ்வன் அன்றிலிருந்து துந்துமாரன் என்ற பெயரால் அறியப்பட்டான். அந்நேரத்தில் இருந்து அவன் போர்க்களத்தில் ஒப்பற்றவனாகக் கருதப்பட்டான். இந்த மோதலைச் சாட்சியாகக் கண்ட தேவர்களும் பெரும் முனிவர்களும் பெரிதும் திருப்தி கொண்டு அவனிடம் {துந்துமாரன் என்ற குவலாஸ்வனிடம்}, "எங்களிடம் ஒரு வரத்தைக் கேள்" என்றனர்.
இப்படித் தேவர்களால் கேட்கப்பட்ட மன்னன் {குவலாஸ்வன்} அவர்களை வணங்கி, ஆனந்தத்தில் நிறைந்து, கூப்பிய கரங்களுடன் அம்மன்னன் {குவலாஸ்வன்}, அவர்களிடம் {தேவர்களிடம்} "மேன்மையான அந்தணர்களுக்கு எப்போதும் செல்வத்தைத் தானமளிக்க என்னால் இயல வேண்டும்! அனைத்து எதிரிகளாலும் வெல்லமுடியாதவனாக நான் இருக்க வேண்டும்! எனக்கும் விஷ்ணுவுக்குமிடையில் நட்பு இருக்க வேண்டும்! எந்த உயிரனிடத்திடமும் எனக்கு வெறுப்பு இருக்கக் கூடாது! எனது இதயம் எப்போதும் அறத்திடம் இருக்க வேண்டும். (கடைசியாக), நான் எப்போதும் சொர்க்கத்தில் வசிப்பவனாக இருக்க வேண்டும்!" என்று கேட்டான். இதைக் கேட்ட தேவர்கள், முனிவர்கள், மற்றும் உதங்கர் ஆகியோர் மிகவும் திருப்தி கொண்டனர். அவர்கள் அனைவரும், "நீ விரும்பிய படியே ஆகட்டும்" என்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா} மேலும் பல உரைகளுடன் அவனை {துந்துமாரனை} வாழ்த்திய தேவர்களும், பெரும் முனிவர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். ஓ! யுதிஷ்டிரா, தனது மகன்களின் கொலைக்குப் பிறகும், மன்னன் குவலாஸ்வனுக்கு மூன்று மகன்கள் மீந்திருந்தனர். ஓ! பாரதக் குலத்தவனே {யுதிஷ்டிரா}, அவர்கள் திருடாஸ்வன், கபிலாஸ்வன், சந்திராஸ்வன் {பத்திராஸ்வன்} என அழைக்கப்பட்டனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களின் மூலமே, அளவிலா சக்தி கொண்ட இக்ஷவாகு குலத்தின் ஒப்பற்ற மன்னர்கள் தோன்றினர்"
"இப்படியே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, மது கைடபர்களின் மகனான துந்து என்ற பெயர் கொண்ட பெரும் தைத்தியன் குவலாஸ்வனால் கொல்லப்பட்டான். இதற்காகவே அம்மன்னன் {குவலாஸ்வன்} துந்துமாரன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். நிச்சயமாக அவன் ஏற்றுக் கொண்ட பெயர் வெற்றுப் பெயர் கிடையாது. அது {துந்துமாரன் என்ற அப்பெயர்} சொற்களின் நேரான பொருள் கொண்டதாகும்.
"நீ கேட்டபடியே புகழ்பெற்ற துந்துவின் மரணக் கதையையும் அதில் தொடர்புடைய மனிதர்கள் கதை அனைத்தையும் சொல்லிவிட்டேன். விஷ்ணுவின் புகழ் தொடர்பான இந்தப் புனித வரலாற்றைக் கேட்பவன் அறம் சார்ந்தவனாகிறான் {அறம் நோக்கித் தள்ளப்படுகிறான்}. அவன் மக்கள் செல்வத்தையும் {பிள்ளைப் பேறையும்} அடைகிறான். குறிப்பிட்ட மாதங்களில் {பாவ காலங்களில்} இக்கதையைக் கேட்பவர்களுக்கு நீண்ட வாழ்நாளும், பெரும் நற்பேறும் அருளப்படுகிறது. அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு, நோய்கள் குறித்த எந்த அச்சத்தையும் {அவர்கள்} விடுகிறார்கள்" என்றார் {மார்க்கண்டேயர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.