Madhu Kaitabha slained! | Vana Parva - Section 202 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
துந்துவைத் தன் மகன் குவலாஸ்வன் கொல்வான் என்று சொல்லி பிருகதஸ்வன் கானகம் சென்றது; துந்து யார் என்பது குறித்து யுதிஷ்டிரன் மார்க்கேண்டயரிடம் கேட்டது; மார்க்கண்டேயர் மது மற்றும் கைடபன் ஆகியோரின் கதையைச் சொன்னது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "உதங்கர் இப்படிச் சொன்னதைக் கேட்ட வெல்லப்பட முடியாத அரச முனி {பிருகதஸ்வன்}, கூப்பிய கரங்களுடன், ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உதங்கரிடம், "ஓ! அந்தணரே {உதங்கரே}, உமது இந்த வரவு வீண்போகாது. ஓ! புனிதமானவரே {உதங்கரே}, குவலாஸ்வன் என்ற பெயரால் அறியப்படும் இந்த எனது மகன் உறுதியும், செயல்பாடும் மிக்கவன். பராக்கிரமத்திலும் இவன் இவ்வுலகில் நிகரற்றவன். இரும்பு கதைகளைப் போன்ற கரங்களைக் கொண்ட இவனின் {குவலாஸ்வனின்} மகன்களின் துணையுடன், உமக்கு ஏற்புடைய அனைத்தையும் இவன் {குவலாஸ்வன்} சந்தேகமற சாதிப்பான். ஓ! அந்தணரே, நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன். நான் ஓய்வு பெற்றுச் செல்ல எனக்கு விடை கொடும்" என்று சொன்னான் {பிருகதஸ்வன்}. மன்னனால் {பிருகதஸ்வனால்} இப்படிச் சொல்லப்பட்ட அளவிட முடியாத சக்தி கொண்ட முனிவர் {உதங்கர்}, "அப்படியே ஆகட்டும்" என்றார். பிறகு அரச முனியான பிருகதஸ்வன், தனது மகனை {குவலாஸ்வனை} அழைத்து, உயரான்ம உதங்கரின் கட்டளைக்குக் கீழ்ப்படியச் சொல்லி, "இது உன்னால் செய்யப்பட வேண்டும்" என்று பரிந்துரை செய்து, அற்புதமான வனத்திற்குள் நுழைந்தான்" என்றார் {மார்க்கண்டேயர்}.
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "ஓ! புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, ஓ! துறவை செல்வமாகக் கொண்டவரே, இந்தப் பெரும் சக்தி படைத்த தைத்தியன் {அசுரன் துந்து} யார்? அவன் யாருடைய மகன்? யாருடைய பேரன்? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன். ஓ துறவை செல்வமாகக் கொண்டவரே, நான் இந்தப் பலமிக்கத் தைத்தியனைக் {துந்துவைக்} குறித்து இதற்கு முன் கேள்விப்படவில்லை. ஓ! புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, ஓ! துறவுச் செல்வத்தையும் பெரும் ஞானத்தையும் கொண்டவரே, நான் உண்மையிலேயே இவை அனைத்து விவரங்களையும் குறித்து விவரமாக அறிய விரும்புகிறேன்!" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஓ பெரும் ஞானம் கொண்டவனே, நான் உண்மையில் அதன் விவரங்களைச் சொல்லும்போது, ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, அனைத்தையும் நடந்தவாறே அறிந்து கொள். அசையும் மற்றும் அசையா உயிரினங்கள் அனைத்தும் அழிந்து போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, முழுப் படைப்புகளும் முடிவை அடைந்த போது, உலகம் முழுவதும் நீர்ப்பரப்பு பரந்து விரிந்திருந்தது. அண்டத்தின் ஊற்றுக் கண்ணும் படைப்பாளனுமான மங்காத நித்தியமானவனும், தவ வெற்றி பெற்ற முனிவர்களால் அண்டத்தின் பரமாத்மா என்று அழைக்கப்படுபவனும், பெரும் புனிதம் வாய்ந்தவனுமான விஷ்ணு, அளவிலா சக்தி கொண்ட பாம்பு சேசனின் அகலமான உடலில் யோகத் தூக்கத்தில் {யோகநித்திரையில்} கிடந்தான். அண்டத்தின் படைப்பாளனும், உயர்ந்த அருள் கொண்டவனும், அழிவை அறியாதவனுமான புனிதமான ஹரி அப்படி முழு உலகத்தையும் சுற்றிக் கொண்டு கிடக்கும் அந்தப் பாம்பின் உடலில் கிடந்து, அந்தப் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, சூரியனின் பிரகாசத்துக்கு இணையான பெரும் அழகு படைத்த தாமரை ஒன்று அவனது தொப்புளில் இருந்து உதித்தது.
சூரியனின் பிரகாசத்துக்கு ஒப்பான அந்தத் தாமரையில்தான், நான்கு கரங்களும், நான்கு முகங்களும், சுய சக்தியுடன் தொடர்ச்சியாக ஒப்பற்றவனாக இருப்பவனும், பெரும் பலமும், பராக்கிரமும் கொண்டவனும், உலகங்களின் தலைவனும், நான்கு வேதங்களுமான பெரும்பாட்டனான பிரம்மன் உதித்தான். பெரும் காந்தியும், கிரீடமும், கௌஸ்துப ரத்தினமும், ஊதா நிற பட்டும் அணிந்து பல யோஜனை நீளத்திற்குப் பாம்பின் உடலாலான அற்புதமான படுக்கையில் நீண்டு கிடப்பவன் {விஷ்ணு}, ஆயிரம் சூரியன்கள் சேர்ந்து ஒன்றாக ஆனது போல இருந்தான். சில காலங்களுக்குப் பிறகு பெரும் பராக்கிரமம் கொண்ட மது மற்றும் கைடபன் என்ற இரு தானவர்கள் அவனைக் {விஷ்ணுவைக்} கண்டனர். {அந்தக் கோலத்தில் இருந்த} ஹரியையும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டு தாமரையில் அமர்ந்திருந்த பெரும்பாட்டனையும் {பிரம்மனையும்} கண்ட மதுவும், கைடபனும் மிகவும் அலைந்த பிறகு, அளவிலா சக்தி கொண்ட பிரம்மனை பயமுறுத்தவும் அச்சுறுத்தவும் செய்தனர். அவர்களது தொடர் முயற்சிகளைக் கண்டு அச்சமுற்ற ஒப்பற்ற பிரம்மன் தனது இருக்கையிலேயே நடுங்க ஆரம்பித்தான். அவன் நடுங்கியதால், அவன் {பிரம்மன்} அமர்ந்திருந்த தாமரையின் தண்டும் நடுங்க ஆரம்பித்தது. தாமரைத்தண்டு நடுங்கியதால் கேசவன் {விஷ்ணு} விழித்துக் கொண்டான்.
துயில் கலைந்து எழுந்த கோவிந்தன் {விஷ்ணு} பெரும் சக்திமிக்க அந்தத் தானவர்களை {மது,கைடபர்களைக்} கண்டான். அவர்களைக் கண்ட அந்தத் தெய்வம் {விஷ்ணு}, "பலமிக்கவர்களே! வருக! நான் உங்களிடம் திருப்தி அடைந்திருக்கிறேன்! எனவே, நான் உங்களுக்கு அற்புதமான வரங்களை அருளுவேன்!" என்றான். இதனால் கர்வமுற்ற அந்தப் பலமிக்கத் தானவர்கள், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சிரித்துக் கொண்டே ரிஷிகேசனிடம் {விஷ்ணுவிடம்}, "ஓ! தெய்வீகமானவனே, {நீ} எங்களிடம் வரங்களைக் கேள். ஓ தலைமை தெய்வமே, நாங்கள் வரம் கொடுப்பவர்களாக இருக்கிறோம். உண்மையில், நாங்கள் உனக்கு ஒரு வரத்தை அருள்வோம்! எனவே, உனது மனதில் தோன்றும் எதையும் எங்களிடம் கேள்" என்றனர். இப்படி அவர்களால் சொல்லப்பட்ட அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, "வீரமிக்கவர்களே {மது,கைடபர்களே}, நான் உங்கள் வரத்தை ஏற்கிறேன். நான் ஒரு வரத்தை விரும்புகிறேன். நீங்கள் இருவரும் பெரும் சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு இணையான ஆண் மகன் வேறு யாரும் இல்லை. ஓ! கலங்காத பராக்கிரமம் கொண்டவர்களே {மதுகைடபர்களே}, என்னால் கொல்லப்பட உங்களைக் கொடுங்கள். உலகத்தின் நன்மைக்காக நான் சாதிக்க விரும்புவது அதையே" என்றான் {விஷ்ணு}.
அந்தத் தெய்வத்தின் {விஷ்ணுவின்} வார்த்தைகளைக் கேட்ட மதுவும் கைடபனும், "நாங்கள் எப்போதும் பொய் பேசியதில்லை; கேலிக்காகக் கூடப் பொய்மை பேசியதில்லை; அப்படியிருக்கும்போது மற்ற நேரங்களைக் குறித்து நாங்கள் என்ன சொல்வோம்! ஓ! ஆண்மக்களில் முதன்மையானவனே {புருஷோத்தமா} {விஷ்ணுவே}, உண்மை மற்றும் அறநெறிகளில் நாங்கள் எப்போதும் உறுதியுடன் இருந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள். பலத்தில், உருவங்களில், அழகில், அறத்தில், துறவில், தானத்தில், நடத்தையில், நற்பண்புகளில், தன்னடக்கத்தில் எங்கள் இருவருக்கும் இணையான வேறு ஒருவன் கிடையாது. ஓ! கேசவா {விஷ்ணுவே}, ஒரு பெரிய ஆபத்து எங்களை {இப்போது} அணுகியிருக்கிறது. நீ சொன்னதைச் சாதித்துக் கொள். யாராலும் காலத்தை வெல்ல முடியாது. ஆனால், ஓ! தலைவா {விஷ்ணுவே}, உன்னால் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் ஒன்றை விரும்புகிறோம். ஓ! அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவனும் சிறந்தவனும் ஆனவனே {விஷ்ணுவே}, உண்மையில் மேல்மறைவே இல்லாத {மறைவில்லாத} இடத்தில் எங்களைக் கொல்வாயாக. ஓ! அற்புதமான கண்களைக் கொண்டவனே {விஷ்ணுவே}, நாங்கள் உனது மகன்களாகவும் விரும்புகிறோம். ஓ! தேவர்களின் தலைவா {விஷ்ணுவே} இதுவே நாங்கள் விரும்பும் வரம் என்பதை அறிந்து கொள். ஓ! தெய்வமே, நீ எங்களிடம் முதலில் உறுதி கூறியது பொய்யாக வேண்டாம்" என்றனர். அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, அவர்களுக்கு முறுமொழியாக, "ஆம். நான் நீங்கள் விரும்பியபடியே செய்வேன். அனைத்தும் நீங்கள் விரும்பியவாறே நடக்கும்!" என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிறகு கோவிந்தன் {விஷ்ணு} சிந்தித்தான், மேல்மறைவு இல்லாத இடத்தை அவன் எங்கும் காணவில்லை. பூமியிலோ ஆகாயத்திலோ மேல்மறைவில்லாத இடத்தைக் காணாத அந்தத் தெய்வங்களில் முதன்மையானவன் {விஷ்ணு}, தனது தொடைகள் முழுதும் மறைவில்லாமல் இருப்பதைக் கண்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே வைத்து, அந்த ஒப்பற்ற தெய்வம் {விஷ்ணு}, தனது கூர்முனை கொண்ட சக்கரத்தால் மதுகைடபர்களின் தலைகளை அறுத்தான்"
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.